Tuesday 28 September 2010

அரியப்படுகிறதா அறியும் உரிமை?


(செப்டம்பர் 28: அறிந்துகொள்வதற்கான உரிமை நாள்)


"ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை; தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது." -இது ஒரு ரஷ்யப் பழமொழி. எதையும் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கே அடிப்படை. நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் ஏன் விடிகிறது, ஏன் இருட்டுகிறது, ஏன் மழை பொழிகிறது, ஏன் வெயில் கொளுத்துகிறது என்றெல்லாம் துருவி துருவி, தெரிந்துகொள்ள முயலாமல் இருந்திருப்பார்களானால் மானுடப் பரிணாமத்தின் வளர்ச்சி இன்றும் கூட இயற்கை நிகழ்வுகளுக்கு அஞ்சியஞ்சிக் காடுகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவே தேங்கிப்போயிருக்கும்.

ஆகவேதான் அறிந்துகொள்வது என்பது மனித நாகரீகக்கூறாக மட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமையாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நெடும் போராட்டங்களின் வெற்றியாகவே இந்த அங்கீகாரம் கிடைத்தது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான சவால்கள் மேலோங்குகிறபோதெல்லாம், தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்ட ஒடுக்குமுறையில் இறங்குகையில் முதலில் கைவைப்பது குடிமக்களின் இந்த உரிமையில்தான். இந்தியாவில் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நினைத்தால் கூட பத்திரிகைகளில் குறிப்பிட்ட செய்திகள் வெளிவராமல் தடுக்க முடிந்தது என்பதை மறக்க முடியுமா என்ன?

அப்படி அவசரநிலை ஆட்சி என ஒன்று இல்லாத காலத்திலும் கூட, அரசாங்க ரகசியக் காப்புச் சட்டம் என்பது போன்ற பல பெயர்களில் பல தகவல்கள் மறைக்கப்படுவதுண்டு. ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள் என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்கள் இருந்தாலும், நடைமுறையில் அந்த எசமானர்களுக்குத் தெரியாமலேதான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உலகம் முழுவதுமே இப்படியாக இருந்த நிலையில்தான் தகவல்களை அறிவது ஒரு உரிமை என்ற முழக்கத்தோடு போராட்ட இயக்கங்கள் வெடித்தன. அந்த வெடிப்பு, அந்த உரிமையை ஐ.நா. சபை அங்கீகரிக்கவும், அதன் உறுப்பு நாடுகள் இதற்கான சட்டம் கொண்டு வருமாறு தீர்மானம் நிறைவேற்றவும் வழிவகுத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 அன்று அறிந்துகொள்வதற்கான உரிமை நாள் என்று அனுசரிக்கப்படுகிறது. பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரில் 2002 ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத்தில், உலகந்தழுவிய அளவில் தகவல் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்யப்பட்டது.தகவல் பெறுவதற்கான வாய்ப்பு ஒவ்வொருவரின் உரிமை; தகவல் அளிப்பதே அடிப்படை விதியாக இருக்க வேண்டும், ரகசியம் என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்; பொதுமக்கள் சார்ந்த அனைத்து அரசு அமைப்புகளுக்கும் இது பொருந்தும்; தகவல் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகவும், விரைவாகவும், இலவசமாகவும் இருக்க வேண்டும்; வேண்டுகோள் விடுப்போருக்கு உதவுவது அதிகாரிகளின் கடமை; தகவல் மறுக்கப்படுமானால் நியாயமான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்; ரகசியம் காக்கப்படுவதில் பொதுநலனுக்கே முன்னுரிமை; ஒரு பாதகமான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; அரசு அமைப்புகள் மையமான தகவல்களை முனைப்புடன் வெளியிட வேண்டும்; ஒரு சுதந்திரமான அமைப்பினால் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்... ஆகிய இந்த அடிப்படைக் கொள்கைகளை இந்த நாளில் மக்களிடையே எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் நடந்த போராட்ட இயக்கத்தின் வெற்றியாக 2005ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமற்ற ஏற்பாடாக மாற்றுவதற்கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் முயன்றார்கள். பல துறைகளை இந்தச் சட்டத்திற்கு உட்படாததாக அறிவிக்கவும், ஒரு நீர்த்துப்போன சட்டமாக மாற்றவும் அதிகார வர்க்கமும் பல வழிகளைக் கையாண்டது. ஆயினும், இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஆட்சி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த முதலாம் ஐமுகூ அரசு, ஒரேயடியாக நீர்த்துப்போகச் செய்ய முடியாமல் தற்போதுள்ள சட்டத்தைக் கொண்டுவந்தது.அப்படியும் - பாதுகாப்புத்துறை, உளவுத்துறை போன்றவை இந்தச் சட்டத்தின் கையில் அகப்படாமல் விலக்கிவைக்கப்பட்டுள்ளன. அண்மையில் உச்சநீதிமன்றம் தனக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்ல, அதெல்லாம் பொருந்தும் என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்த சுவையான நிகழ்ச்சியும் நடந்தது.

சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தேசிய தகவல் உரிமை ஆணையம், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குப் போதுமான ஊழியர்கள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் இந்த ஆணையங்கள் முறையாகவும், வீரியமாகவும் செயல்படுவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. இதனை மனித உரிமை இயக்கங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை

சட்டப்படி அரசு அலுவலகங்களில் தகவல் அலுவலர்கள் என நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு சட்டம் பற்றிய போதிய பயிற்சி இல்லை. ஆகவே, பொதுமக்களிடமிருந்தோ, அமைப்புகளிடமிருந்தோ தகவல்கள் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு பதிலளிக்காமலே விடுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. எப்படிப்பட்ட தகவல்களை தெரிவிக்கலாம், அல்லது தெரிவிக்கக்கூடாது என்பதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட தகவல்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டியவையாக இருந்தாலும் கூட, உயரதிகாரிகள் அல்லது அந்த உண்மைகள் தெரியக்கூடாது என்று விரும்புகிற சில சக்திகளின் நிர்ப்பந்தங்களால் அந்தத் தகவல்களை மறைப்பது, இழுத்தடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடக்கின்றன. தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் படித்துப் புரிந்துகொண்டு ஈடுபாட்டுடன் அந்த மேசைகளில் அமர்ந்திருப்போர் மட்டுமே ஒரு கடமை உணர்வுடன் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு.

பல இடங்களில், வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கே, தகவல் அலுவலர்களாகவும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக, பெரிதும் அடிபடுவது தகவல் தெரிவிக்கும் அலுவல்தான் என்று இதற்காக அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தகவல் ஆணையத்தின் ஆணைகளை, பல்வேறு அலுவலகங்களின் தகவல் அலுவலர்கள் மதிப்பதில்லை; அந்த ஆணைகளை எதிர்த்து வழக்குப் போடுவதும் நடக்கிறது. தகவல் தர மறுத்த ஒரு அலுவலரை ஆணையம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு அபராதம் விதித்து ஆணை வந்தபோது அவர் குறிப்பிட்ட தகவலைத் தர முன்வந்தார்! தன்னைப் பற்றிய விமர்சனத்திற்குக் கவலைப்படாமல், பணம் போய்விடுமே என்ற கவலையுடன் அவர் நடந்துகொண்டது எந்த அளவுக்கு இப்படிப்பட்ட அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்தியது, என்றார் அப்படிப் படியேறி இறங்கச் சளைக்காத ஒரு செய்தியாளர்.

இப்படிப்பட்ட நிலையில் மாநிலத் தகவல் ஆணையத்தில் நான்கைந்து முறை மேல்முறையீடு செய்தாக வேண்டிய நிலை உள்ளது என்று தமிழ்நாடு தகவல் உரிமைக்கான பிரச்சார அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். தகவல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் ஆணைய அலுவலகத்தில் வைக்ப்படாதது, அவ்வப்போது ஆணையமே மக்களுக்காக சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கையேடுகளை வெளியிட வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெரிய நகரங்களிலாவது ஊடக வெளிச்சம் உடனடியாகப் பாய்வதால் இந்தச் சட்டத்தின் பலன் மக்களுக்கு ஓரளவுக்காவது கிடைக்கிறது. சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும் சட்டத்தின் துணையை நாடுவோர் மதிக்கப்படுவதே இல்லை. அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம ஊராட்சிக்கு, ஊரில் தொடங்கப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களின் கதி என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பிய ஒரு இளைஞர், அந்த ஊராட்சித் தலைவரின் ஆட்களால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானது. இப்படித் தாக்குவதும், மிரட்டுவதும் பல இடங்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சட்டம் குறித்து இன்னும் பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஆட்சி பீடத்தில் இருப்போரும், அதிகார வர்க்கத்தினரும் நினைக்கிறார்களோ? நாடு முழுவதும் இவர்களைப் பயன்படுத்தி ஆதாயம் அடைகிற பெரியதொரு சுயநலக் கூட்டம் அதைத்தான் விரும்புகிறதோ?அப்படியானால், மக்களின் அடிப்படையான அறியும் உரிமை அரிக்கப்படுகிறது என்றே அர்த்தம்.

அந்த அரிமானத்தைத் தடுக்கும் ஆற்றல் மக்கள் சக்திக்குத்தான் இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டியெழுப்பிட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களிடம் வலிமையாக எடுத்துச் சென்றாக வேண்டும்.

('தீக்கதிர்' 28-9-2010 இதழில் வந்துள்ள எனது கட்டுரை)

No comments: