Monday, 6 September 2010

கடவுள் அவதரித்தது எப்படி?

கம்யூனிசம் என்றால் - 8

பயிர்கள் உள்ளிட்ட உயிர்களின் தாயாகிய நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட நிலத்திற்கான உரிமை, அதில் வேலை செய்கிறவர்களின் கடமை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகார அமைப்பாக அரசு என்பது உருவானதை சென்ற கட்டுரையில் பார்த்தோம். வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட பலர் மறுப்பார்கள் அல்லவா? நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்று சிலர் எதிர்ப்பார்கள் அல்லவா?
அவர்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான், இதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட சக்தியால் தீர்மானிக்கப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்படுகிறது. ஒருவன் மிகப் பெரிய நிலத்துக்கும் சொத்துக்களுக்கும் உடைமையாளனாக இருப்பதும், இன்னொருவன் இத்தணூண்டு நிலம் மட்டுமே வைத்திருப்பதும், இன்னொருவன் அது கூட இல்லாதவனாக இவர்களை நம்பி வாழவேண்டியாக இருப்பதும், பெண்கள் இதற்குக் கட்டுப்பட்டு நிலம் உடைய அல்லது இல்லாத ஆணைச் சார்ந்திருப்பதும் அந்த மாபெரும் சக்தியால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையே என்ற கருத்து புகுத்தப்படுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் இது எப்படி நடந்தது என்றால், வனங்களில் இயற்கையாக வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடிமக்கள் அடித்துவிரட்டப்பட்டார்கள். அவர்களுடைய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய வன மக்கள் அசுரர்கள் என்றும் அரக்கர்கள் என்றும் ஆக்கிரமிப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டார்கள். நிலத்தின் பயனைப் புரிந்துகொண்டு அந்தக் காலத்திய நவீன ஆயுதபலத்தாலும் வேறு வகையான தந்திரங்களாலும் வனமக்களை அடக்கி, வனநிலங்களைக் கைப்பற்றியவர்கள் தங்களைத் தேவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். புராணக்கதைகளில் அசுரர்களாகிய வனமக்களும் அவர்களுடைய தலைவர்களும் கெட்டவர்களாக இருப்பதும், தேவர்களாகிய ஆக்கிரமிப்பாளர்கள் நல்லவர்களாக இருப்பதும் இப்படித்தான். (இன்றும் கூட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வன நிலங்களை ஆக்கிரமிக்கின்றன; அதை எதிர்க்கிற பழங்குடி மக்கள் தொழில்வளர்ச்சியைத் தடுக்கிற நாகரிகமற்றவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள்; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசாங்கம் தனது காவல்படையை வனங்களுக்கு அனுப்பி பழங்குடி மக்களைத் தாக்கி வெளியேற்றுகிறது. ஜனநாயக உரிமைகள் உணரப்படுகிறது இந்தக் காலத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று ஊகிப்பது கடினமல்ல).

மனிதர்கள் வனங்களில் திரியத்தொடங்கிய காலத்திலிருந்தே ஒரு குழப்பம் ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. முதுமையடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ, விலங்குகளால் தாக்கப்பட்டோ, சக மனிதர்களால் தாக்கப்பட்டோ மரணம் ஏற்படுகிறது. இறந்தபின் என்ன ஆகும்? ஒவ்வொரு உடலிலும் உயிர் என்ற ஒன்று தனியாக இருப்பதாகவும், உடலிலிருந்து அது பிரிவதுதான் மரணம் என்றும் நினைத்தார்கள். உடலிலிருந்து உயிர் வெளியேறிய பின் ஆவியாக சுற்றிவரும் என்றும், அது திரும்பிவரலாம் என்றும் நம்ப ஆரம்பித்தார்கள். அந்த ஆவி திரும்பிவந்தால் மறுபடியும் குடியேறுவதற்காக உடல்களை பத்திரமாக வைத்திருக்கத் தொடங்கினார்கள். ஆவிகள்தான் பேய்களாக மாறி மனிதர்களுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று கருதினார்கள். ஆவிகளின் கோபத்தைத் தணிப்பதற்காக, இறந்தவர்களின் சடலங்களுக்கு அருகில் அவர்கள் விரும்பிய பொருள்கள், உணவு போன்றவற்றை வைத்தார்கள். இப்படியாகத்தான் படையல் என்பது உருவானது.

இந்தப் பேய் நம்பிக்கை காலப்போக்கில் கடவுள் நம்பிக்கையாக மாற்றப்பட்டது. நல்ல ஆவிகள், கெட்ட ஆவிகள், அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க பரம்பொருள் என்ற அடிப்படையில் கடவுள் நம்பிக்கை என்பது மனித மனங்களில் கட்டப்பட்டது. தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆழமான நம்பிக்கை வளர்ந்தது. ஆம் பேய்தான் கடவுளாக அவதரித்தது!

கடவுளை நம்புவதும், கடவுளின் கட்டளைப்படியே எல்லாம் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்வதும், அவன் எழுதிவைத்தபடியே ஒருவர் வசதியாக வாழ இன்னொருவர் பிச்சைக்காரராக வாடுகிறார் எனப் புரிந்துகொள்வதும் நல்லொழுக்கம் என போதிக்கப்பட்டன. இதையெல்லாம் நம்பமுடியாமல் கேள்வி கேட்டால் அது ஒழுக்கக்கேடு என்று கற்பிக்கப்பட்டது. கற்பனையாக உருவாக்கப்பட்ட அந்த சக்திக்குக் கடவுள் என்று பெயர் சூட்டப்படுகிறது. அந்தக் கடவுள் என்ற கற்பனை மீது பயத்தை ஏற்படுத்தும் கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த பயம்தான் பக்தி. அந்தக் கதைகள்தான் புராணங்கள். யார் யார் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள்தான் வேதங்கள். அந்தப் புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த வட்டாரத்து சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஏற்பாடுதான் மதம்.

இந்த ஏற்பாட்டில் எவ்வளவு நுட்பமாக உழைப்புச் சுரண்டல் மறைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இந்த உழைப்புச் சுரண்டலின் இன்னொரு அருவருப்பான, புராணங்களை விடவும் கறாரான, மதங்களை விடவும் இறுக்கமான சமூக ஏற்பாடுதான் சாதி. சாதி பற்றி அடுத்தடுத்துப் பார்ப்போம்.

No comments: