Saturday, 25 December 2010

சுனாமிக்குப் பிறகும் சுழன்றடிக்கப்படும் பெண்கள்


அதென்ன மறுகர்ப்ப அறுவை சிகிச்சை?


தமிழக மக்களும் அந்தமான் மக்களும் சந்தித்த, தங்கள் ஆயுட்காலம் முழுவதும் மறக்கவே முடியாத அந்த ஆழிப்பேரலையையும் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகளையும் யார்தான் மறந்துவிட முடியும்? 2004ல் தமிழகத்தில் சுமார் 8,000 பேர், அந்தமானில் 1,300 பேர், புதுவையில் 700 பேர், ஆந்திராவில் 100 பேர், கேரளத்தில் 200 பேர் என பலி கொண்டது அந்த சுனாமி.

சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள், தொழில்களை இழந்தவர்களுக்கு பொருளாதார உதவிகள், சொந்தக் குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கண்முன் பலி கொடுத்து உள்ளம் நைந்து போனவர்களுக்கு உளவியல் வழிகாட்டல்கள் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் உண்மையிலேயே எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இந்நிலையில் சுனாமியால் சுழன்றடிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பான புதியதொரு தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான அணுகுமுறைகள் எந்த அளவிற்கு நம் சமுதாயத்தில் கரடுதட்டிப்போயிருக்கின்றன என்பதை அந்தத் தகவல் சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் வன்முறைகள், சமூக மோதல்கள் என்றெல்லாம் வருகிறபோது அதிகமான தாக்குதல்களுக்கு இலக்காகிறவர்கள் பெண்கள்தான். இயற்கைச் சீற்றங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. சுனாமியைப் பொறுத்தவரையில், மறுகர்ப்ப (ரீகேனலைசிங்) அறுவை சிகிச்சை என்ற வடிவில் இந்தத் தாக்குதல் வந்துள்ளது.

ஒருமுறை கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் மீண்டும் கர்ப்பம் தறிக்க விரும்பினால் உயிர் அணுக்களும் கரு முட்டைகளும் சந்திப்பதற்கான பாதையைத் திறந்து விடுகிற ஒரு சிகிச்சைதான் மறுகர்ப்ப அறுவை. மருத்துவ அறிவியலாளர்கள் நல்ல நோக்கத்துடன்தான் இத்தகைய நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இது ஒரு வகையில், குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்கிற உரிமையைப் பெண்ணுக்கு உறுதிப்படுத்துகிறது என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால், ஆணாதிக்கம் வக்கிரங்கள் சற்றும் மட்டுப்படாத சமுதாயத்தில் இந்த அறிவியல் நுட்பமும் கூட இப்போது பெண்ணை அடக்குகிற மூக்கணாங்கயிறாகவே பயன்படுத்தப்படுகிறது. உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி இம்மாதம் 10ம் தேதியன்று சென்னையில் சுனாமி பின்னணியில் பெண்களுக்கு மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் ஏற்படும் தாக்கங்கள் என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. சிநேகா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களது துயரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

கடலின் பசிக்குக் குழந்தைகளைப் பறிகொடுத்த பல பெற்றோர் தங்களுக்குப் புதிதாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்பது இயல்பு. இதற்கு உதவியாக சுனாமி பாதித்த பகுதிகளில் இந்த சிகிச்சையை பெண்களுக்கு மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வழக்கமான இயற்கைச் சீற்றங்களைப் போல அல்லாமல் கடுமையான உளவியல் சிக்கல்களையும் சுனாமி ஏற்படுத்தியிருக்கிற நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்த பிறகுதான் இந்த சிகிச்சை தொடங்கியிருக்க வேண்டும் என சமூகப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் கள ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலே இந்த சிகிச்சைக்கு வழி திறக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏற்கெனவே நொந்துபோயிருக்கிற பெண்கள் மேலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஏற்கெனவே குழந்தைப் பேற்றின்போது அனுபவித்த வலி உள்ளிட்ட கசப்பான அனுபவங்களால், இந்த சிகிச்சை இப்போது வேண்டாம் என்று மறுக்கக் கூடிய பெண்களை, தங்களது உடல் புதிய கர்ப்பத்திற்குத் தாங்காது என்று அஞ்சுகிற பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள் மறுகர்ப்பத்திற்கு வற்புறுத்துகிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு உடன்படாவிட்டால், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அச்சுறுத்துகிறார்கள். கணவன்மார்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் கூட கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி நடந்தால் தங்கள் நிலை என்னவாகும் என்ற கவலை இந்தப் பெண்களை வாட்டுகிறது.

மறுகர்ப்ப அறுவை சிகிச்சையால் 50 விழுக்காடு அளவிற்குக் கூட பலன் கிடைத்ததில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் ஆரிய நாட்டுத் தெரு, அக்கறைப் பேட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேர் மட்டுமே மீண்டும் கருத்தரித்தார்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் 10 பெண்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதில் ஒருவர் கூட கருவுறவில்லை. கீச்சன் குப்பம் கிராமத்தில் 52 பெண்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் கருவுற்றவர்கள் 5 பேர் மட்டுமே. மறுகர்ப்ப அறுவை சிகிச்சையின் பலன் குறித்து எவ்வித ஆய்வும் நடத்தப்படாமலே அவசர அவசரமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் கருத்தறிக்கவில்லை என்ற பிரச்சனையோடு முடிந்துவிடவில்லை. மாறாக, ஏற்கெனவே மன உளைச்சலில் வாடும் இந்தப் பெண்களை மேலும் வதைப்பதாக முடிகிறது. சும்மாவே ஒரு குடும்பத்தில் வாரிசு உருவாகவில்லை என்றால், ஆணின் உடலில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் பெண் மட்டுமே பொறுப்பாளியாக்கப்பட்டு அவளுக்கு மலடி என்று பட்டம் சூட்டப்படுவதுண்டு. இப்போது மறு கர்ப்ப சிகிச்சைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு உருவாகவில்லை என்றால் அவள் குடும்பத்தினரின் மோசமான சாடல்களுக்கு உள்ளாக வேண்டியவளாகிறாள்.

“சுனாமிக்கு என் குழந்தைகள் இரண்டு பேரும் பலியானபோது என்னுடைய ராசி தான் அதற்குக் காரணம் என்று என் கணவனும் மாமியார் மாமனாரும் உறவினர்களும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். இப்போதோ என்னை வேண்டாத விருந்தாளியாக குடும்பத்தில் தள்ளி வைக்கப்பார்க்கிறார்கள்,” என்று ஒரு பெண் கண்ணீருடன் தெரிவித்தது மனதைக் குடைந்தது.

இது கடுமையான உடல்சீர்குலைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. பொதுவாக டியூபெக்டமி என்ற அறுவை சிகிச்சைதான் பெண்களுக்கான கர்ப்பத்தடை முறையாகக் கையாளப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள், கருத்தடுப்பு உறைகள் போன்ற வழிமுறைகள் பெருமளவிற்குப் பின்பற்றப்படுவதில்லை. ஆண்களுக்கான வாசக்டமி முறை ஒன்று இருந்தாலும் கூட மிகப் பெரும்பாலான ஆண்கள் அதை மேற்கொள்வதில்லை. கருவை சுமப்பதானாலும், தடுப்பதானாலும் பெண்ணின் சுமையாகவே மாற்றப்படுகிறது.

டியூபெக்டமி அறுவை சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைவதுண்டு. கருத்தடை செய்து கொண்ட பிறகும் குழந்தை பிறந்துவிட்டது என்ற புகார்கள் அவ்வப்போது எழுவதைக் காணலாம். பல மருத்துவர்கள் இதனால் வரும் சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காக, கருக்குழாயைத் தேவையான நீளத்திற்கும் அதிகமாகத் துண்டித்துவிடுவதுண்டு. அப்படிக் கூடுதலாகக் கருக்குழாய் துண்டிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த மாற்று சிகிச்சையால் பலன் ஏற்படுவதில்லை. அதுமட்டுமல்ல இத்தகைய பெண்களுக்கு இது கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. முறையற்ற மாதவிலக்கு, அதிகமான ரத்தக் கசிவு, பசியின்மை, தொடர்ச்சியான அடிவயிற்று வலி, தலைசுற்றல், முதுகுவலி, தலைவலி, இடுப்பில் வலி, நெஞ்சு வலி, மயக்கம், உடல் பருமன் போன்ற உடல் பாதிப்புகளும் மன உளைச்சலுமே இவர்களுக்கு மிச்சமாகின்றன.

சுனாமியை நினைவுகூர்கிறபோது, இந்தப் பிரச்சனைகள் தொடர்பான முழு ஆய்வுகளுக்கு அரசாங்கமே ஏற்பாடு செய்ய வேண்டும். மறுகர்ப்ப அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வது அல்லது மறுப்பது பெண்ணின் உரிமை என்ற செய்தி வலுவாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த உரிமைக்கு அரசின் ஆதரவும் சமுக இயக்கங்களின் துணையும் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

(‘தீக்கதிர்’ 26.12.2010 இதழில் எனது கட்டுரை)

No comments: