Thursday 2 December 2010

இன்றும் இது நடக்கிறது...


பலதார மணத்தை பாதுகாக்க ஒரு சட்டமா?

றுபதாயிரம் மனைவியர், ஒருத்தியின் மீதும் சந்தேகப்பட்டதில்லை அப்பன். ஒரே ஒரு மனைவி, ஆனால் அவள் மீது சந்தேகம் கொண்டான் மகன். இப்படியொரு குறுங் கவிதையை அண்மையில் படித்தேன். இதிகாச நாயகனின் இன்னொரு பக்கத்தைக் காட்டி ஆணிய வக்கிரத்தைச் சாடுகிற அந்தக் கவிதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர், இதுக்குத்தான் நிறைய மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள உரிமை வேணும்கிறது, என்று கூற, உடனிருந்த எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் ஆளுக்காள் பலதார முறை தொடர்பான நகைச்சுவைக் கதைகளைக் கூறத் தொடங்கினார்கள்.

என் முறை வந்தது. அமெரிக்க நையாண்டி எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தாராம். அங்கே பலதார முறை ஆதரவாளர் ஒருவர் இவருடன் விவாதிக்க வந்தாராம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்கான தன் தரப்பு வாதங்களை எல்லாம் அவர் அடுக்கினாராம். கடைசியில் பல தார மணம் கூடாது என்பதற்கு உங்கள் தரப்பு வாதம் என்ன என்று கேட்டாராம். எல்லோரும் மார்க் ட்வெய்ன் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்க அவர் எழுந்து, ஒரே ஒரு காரணம் போதும். எந்த மனுசனும் இரண்டு எசமானர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது, என்று சொன்னாராம், என்று நான் சொல்ல மறுபடி சிரிப்பலை எழுந்தது.

ஆனால், என் மனசுக்குள் ஒரு உறுத்தல் குடியேறியது. சிரிப்புக்காகக் கூட இதையெல்லாம் நியாயப்படுத்துவது போல் பேசலாமா என்ற உறுத்தல். ஒழுக்க நெறிக் கதைகள், கட்டுப்பாடுகள் என்று என்னென்னவோ இருந்தாலும் அதையெல்லாம் மிதித்துக்கொண்டு ஒரு ஆண் தன் மனைவிக்குத் தெரிந்தோ தெரியாமலோ பல பெண்களுடன் குடும்பம் நடத்துவது இன்றளவும் அவனது ஆண்மையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல குடும்பங்களைப் பராமரிப்பது அவனது பெருந்தன்மைக்கும் பொருளாதார வலிமைக்கும் சான்றாக்கப்படுகிறது.

இதுவே ஒரு பெண் பல ஆண்களுடன் பழகினால் அவளுக்கு சதைப்பசிக்காரி என்பது போன்ற பட்டங்கள் சூட்டப்படும். ஒழுக்க வாழ்வென்பது எல்லோருக்குமான விதிதான். ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றெல்லாம் போதிக்கப்பட்டாலும், நடைமுறையில் வேறு கதைதான். மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் வாழ நேரிடும் கதாநாயகனை மையப்படுத்தி, எப்படிப்பட்ட கட்டாயமான சூழலில், தவிர்க்க இயலாத நிலைமையில் அவன் அப்படியொரு முடிவை எடுத்தான் என்பதாக விளக்கி, கிட்டத்தட்ட அவனை ஒரு தியாகி அளவுக்கு உயர்த்துதாக எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன!

எனினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு சட்டத்தின் வடிவில் இருக்கவே செய்கிறது. பலதார மணம் என்பது இங்கே தண்டனைக்குரிய தண்டனை. தன்னை விட்டு வேறொருத்தியுடன் வாழ்வதாகத் தன் கணவன் மீது ஒரு பெண் புகார் கொடுத்தால், அவன் ஒரு அரசு ஊழியராகவும் இருந்தால் அவனுடைய வேலை போய்விடும், சிறைவாசமும் உண்டு. இப்படிப்பட்ட கடுமையான சட்டவிதிகள் இருந்தும் பல ஆண்களின் ராசலீலைகள் தொடர்கின்றன - அதற்கு முக்கியமான ஒரு காரணம் பெண் அவ்வளவு எளிதில் சட்டத்தின் துணையை நாடுவதில்லை என்ற நிலை. இரண்டாவது முக்கியக் காரணம் - ஆம்பளை இப்படி ஊர் மேயுறான்னா, பொம்பளைகிட்ட என்ன கோளாறோ, என்று வெகு எளிதாக பெண்ணையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிடுகிற சமூகம். வீட்டுச் சாப்பாடு சரியா இருந்தா ஆம்பளை ஏன் வெளியே சாப்பிடப்போறான், என்று, பெண்ணின் பாலியல் தகுதியைக் கூச்சமே இல்லாமல் கேள்விக்கு உட்படுத்திவிடுகிறார்கள். கடைசியில் இருக்கவே இருக்கிறது, ஆம்பளைன்னா அப்படி இப்படி இருக்கிறது வழக்கம்தான்; பொம்பளைதான் அனுசரிச்சு நடந்துக்கிட்டு அவனை மாத்தணும், என்கிற நெடுங்கால உபதேசம்.

பலதார மணத்திற்குத் தடை விதிக்கிற சட்டம் இருக்கிற நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், அதனை அங்கீகரிக்கிற சட்டம் இருக்கிற நாட்டில் எப்படியிருக்கும்? ஈரான் நாட்டில் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தி உலகம் பழைய நூற்றாண்டுகளுக்குத் திரும்பிச் செல்கிறதா என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே திருமணமான ஒரு ஆண் தன் மனைவியின் ஒப்புதல் இல்லாமலே வேறு பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கான முன்வரைவு ஒன்று ஈரான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் வரதட்சனைக்கு வரி விதிக்கும் ஏற்பாடும் இருக்கிறது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஆதரவான மதவாதிகளும் நியாயப்படுத்துகிறார்கள்.

ஈரானில் மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராடுவோர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இது நாட்டை மிகவும் பிற்போக்கானதாக மாற்றிவிடும் என்றும், பெண்களுக்குக் கிடைத்துள்ள ஓரளவு உரிமைகளையும் பறித்துவிடும் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகளைத் திரித்துக் கூறி தங்களது நோக்கத்திற்காகப் பயன்படுத்த முயல்கிறார்கள், என்கிறார் பெண்ணுரிமை இயக்கத்தில் முன்னணியில் நிற்கும் ஜாரா ரஹனாவார்த். இவரது கணவர் மீர் ஹூசைன் முசாவி - ஜனநாயக சீர்திருத்தங்களுக்காகப் போராடி வருகிற எதிர்க்கட்சித் தலைவர்.

சட்டத்தை ஆதரிப்பவர்கள் தரப்பில் இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குடும்பச் சூழல், பொருளாதாரம், உடல் நிலை போன்ற தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டம் பெரியதொரு வாய்ப்புக் கதவைத் திறந்துவிடுகிறது என்கிறார்கள்! ஈரான் பெண்களிடையே இந்தச் சட்டத்திற்குப் பெரும் ஆதரவு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரசாங்கம் நேர்மையாகப் பெண்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், ஆகப் பெரும்பாலானவர்கள் இதற்கு உடன்படவில்லை என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். அப்படியொரு கருத்துக்கணிப்புக்கு ஈரான் அரசு தயாராக இல்லை. ஒருவேளை கருத்துக்கணிப்பு என ஒன்று நடத்தப்பட்டாலும் கூட, பெரும்பாலோர் ஆதரிக்கிறார்கள் என்று அரசாங்கம் அறிவிப்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் - ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதே தேர்தல் மோசடிகள் மூலமாகத்தான் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

2008ம் ஆண்டிலேயே இது சட்டமாகியிருக்கும். ஆயினும் எதிர்க்கட்சிகளும் மனித உரிமை இயக்கங்களும் வலிமையாகக் குரல் கொடுத்ததால், மேற்கொண்டு விவாதிக்க விரும்புவதாகக் கூறி அப்போதைக்கு அதை நிறுத்திவைத்தார் ஈரான் குடியரசுத் தலைவர் மஹமூத் அஹமதிநேசாத். இப்போது மறுபடியும் இதனைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இஸ்லாம் கோட்பாடுகளிலேயே வரலாற்றிலும் பலதார வக்கிரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று பிற மதங்களைச் சேர்ந்த சிலர் பகையுணர்வோடு விமர்சிப்பதுண்டு. கடந்தகாலப் பண்பாட்டின் மிச்சசொச்சங்களை இன்றைய தங்களது சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிற வக்கிரப்பேர்வழிகள் எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறார்கள். பரப்பப்படுகிற எண்ணங்களுக்கு மாறாக முஸ்லிம் மக்களிடையே ஒருதாரப் பண்பாடுதான் ஒங்கியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக ஈரான் நாட்டில் பலதாரக் குடும்பங்கள் மிகக் குறைவுதான். இருப்பினும் அந்நாட்டு அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவருவதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? தற்கால அரசியல், பொருளாதாரச் சூழல்களை ஆராயாமல் இக்கேள்விக்கு மதவாத அடிப்படையில் மட்டும் விடை காண இயலாது.

உலகின் பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிற, இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கிற, பெட்ரோலிய எண்ணை உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிற நாடு ஈரான். புவிவரைபடத்தில் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள நாடுமாகும். ஆகவே, ஈரானின் எண்ணை வளத்தைத் தங்களது ஏகபோகப் பிடியில் வைத்திருக்க உலகச் சுரண்டல் கூட்டங்கள் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டே இருக்கின்றன.

உலக நாகரிக வளர்ச்சிக்குத் தலையாய பங்களித்துள்ள பாரசீகப் பண்பாட்டின் தாயகம் ஈரான்தான். பூமியில் மனித இனம் தோன்றி, வளர்ந்து மற்ற கண்டங்களுக்குப் பரவிய தொன்மைக் காலத்திற்குச் சென்றால், ஆரியர் இனத்தின் பூர்வீகமே பாரசீகம்தான் என்பது தெரியவரும். அப்போது அங்கே இஸ்லாமிய மதம் என்பதெல்லாம் கிடையாது, ஏன் பூமியின் எந்தப் பகுதியிலுமே இன்று நாம் காண்கிற மதங்கள் எதுவும் கிடையாது. மன்னராட்சிகளும், மன்னராட்சியைப் பாதுகாப்பதற்கான மதவாத அரசியலும் மற்ற நாடுகளைப் போலவே ஈரானிலும் கோலோச்சி வந்திருக்கின்றன. மிகப் பழைய காலத்திற்குச் செல்லாமல் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்தவற்றைப் பார்த்தாலே போதும், ஈரான் அரசின் இந்தப் பிற்போக்குப் பயணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

நேரடி மன்னராட்சியிலிருந்து விடுபட்டு குடியரசாட்சி நிறுவப்பட்டிருந்தது ஈரானில். இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1951ல் பிரதமர் முகமது மொசாதீக் அந்நாட்டு பெட்ரோலிய எண்ணை வளத்தையும், பெட்ரோலிய நிறுவனங்களையும் மக்களின் பேராதரவோடு தேசவுடைமையாக்கினார். ஈரானின் எண்ணை வயல்களை உறிஞ்சிக்கொண்டிருந்த அந்நிய முதலாளிகள் கொந்தளித்துப்போனார்கள். அவர்களின் ஆட்சிப் பிரதிநிதிகளான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் டிவைட் ஐசனோவர் இருவரும் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்தார்கள். 1953ல் அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்தது (1991ல் இராக் நாட்டிற்குள் ஊடுறுவியது போல). முகமது மொசாதீக் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவின் கட்டளைப்படி செயல்படக்கூடிய மன்னர் (ஷா) முகமது ரெஜா பஹலாவி சர்வாதிகாரியாக அமர்ந்தார். ஒரு பக்கம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் ஜனநாயக இயக்கங்கள் அனைத்தையும் அமெரிக்க அரசின் ஆதரவோடு ஒடுக்கினார். ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன; மன்னர் ஷா நாட்டை விட்டே ஓடினார். ஜனநாயக சக்திகளும் இடதுசாரிகளும் இணைந்தே போராடினார்கள் என்றாலும், முற்போக்கான இயக்கங்கள் வலிமையாக இல்லாத நிலையில், மதவாதத்தோடு கூடிய அயதுல்லா கோமேனி தலைமையில் ஆட்சியமைந்தது. 1979ல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்படுவதாக அறிவித்தார் கோமேனி. அரசின் உச்சநிலைத் தலைவர் (சுப்ரீம் லீடர்) அவர்தான் என்றும், அவருக்குக் கீழே குடியரசுத்தலைவர், அமைச்சகம், நாடாளுமன்றம் என்றும் புதிய அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்தது.

இன்றளவும் இதே நிலைதான் தொடர்கிறது. கோமேனியின் வாரிசாக உச்சநிலைத் தலைவர் பதவியில் இருப்பவர் அலி கமேனி. அவரது ஆசிர்வாதங்களோடு வலதுசாரிப் பிற்போக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறவர் மஹமூத் அஹமதிநேசாத். ஏற்கெனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியத் தலையீடுகளின் எதிர்வினையாகத்தான், அங்கே இப்படியொரு வலதுசாரி அரசு வந்தது. இன்று அமெரிக்க அரசு மறுபடியும் உலக அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்தவும், தன் வழிக்குக் கொண்டுவரவும் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துவருகிறது. இராக் போல் ஈரானையும் உருக்குலைக்க முயல்கிறது. இதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தமது முன்னோடிகளிடமிருந்து பெரிய அளவுக்கு மாறுபட்டுவிடவில்லை. ஈரான் அரசோ, ஆட்சியதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, முற்போக்கான நடவடிக்கைகளால் மக்களைத் திரட்டுவதற்கு மாறாக, குறுகிய மனம் படைத்தோரின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்து அவர்களது ஆதரவைப் பெறுகிற முயற்சியிலேயே இறங்கியுள்ளது. அந்த முயற்சியோடு இணைந்ததுதான் பலதார சட்டம்.

உலகச் சந்தையிலும் அரசியலிலும் தலைமைத் தாதாவாக வலம் வருகிற அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பு அராஜகம் மேலோங்க மேலோங்க, பல நாடுகளில் பிற்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தங்கள் பிடியை இறுக்கிக்கொள்கிறார்கள். ஈரானில் நடப்பதும் இதுவே.

பலதார முறையை சட்டப்பூர்வமாக்கிப் பெண்களை ஆண்களின் அடிமைகளாக்குவதோடு, வரதட்சனைக்கு வரி விதிப்பதன் மூலம் அந்தக் கொடுமைக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் திசையில் ஈரான் அரசு செல்கிறது. அதைத் தடுத்து நிறுத்த ஈரானிய பெண்ணுரிமை இயக்கங்கள் நடத்துகிற போராட்டம் அந்நாட்டின் ஜனநாயக மீட்சிக்கான போராட்டத்தோடும், உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தோடும் இணைந்திருக்கிறது. அந்தப் போராட்டம் வெல்லட்டும். மதவாத அரசியலுக்கு மாற்றான முற்போக்கு அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் பெண் விடுதலை இயக்கங்களுக்கும் அந்த வெற்றி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிரட்டும்.

No comments: