Friday 21 October 2011

ஒரு மோதல் பின்னணியில் உலகமய வேட்டை


ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டம் கோபால்கார் நகரில் சென்ற மாதம் 14ம் தேதி இரு பிரிவு மக்களிடையே மதக்கலவரம் மூண்டதாகவும், காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. தொடச்சியான பல நிகழ்வுகளில் அந்தச் செய்தி பலருக்கு மறந்திருக்கக்கூடும். அல்லது அந்த வட்டாரங்களில் வழக்கமாக நடைபெறுகிற மதக்கலவரங்களில் ஒன்று என்பதாக அது ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும்.

சிலர் அதனை, நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்த்திருக்கக்கூடிய நிகழ்வு என்பதாக மட்டும் சித்தரிக்க முயல்கிறார்கள். நிர்வாகக் கோளாறு இருந்ததென்னவோ உண்மை. ஆனால் அது பிரச்சனையைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட கோளாறு மட்டுமல்ல. பிரச்சனைக்கே அடிப்படையாக, மத்திய மாநில அரசுகளின் கொள்கை இதன் பின்னணியில் இருக்கிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் கவனித்தாக வேண்டிய பிரச்சனைகள் இவை.

மேலோட்டமாக வந்த செய்திகள் இவ்வாறு தெரிவிக்கின்றன: கோபால்கார் பகுதியில் உள்ள ஒரு சிறிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் குஜ்ஜார் மக்களுக்கும் மியோ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறியது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மியோ சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
சுமார் 18 ஏக்கர் வரை இருக்கக்கூடிய குறிப்பிட்ட நிலப்பகுதியை இரு தரப்பு மக்களுமே தங்களது பொது இடமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆயினும் அண்மையில் நகர நிர்வாகம் அந்த இடத்தை மியோ சமூகத்தினருக்கே சொந்தமானது என்று அறிவித்தது. கல்லறைத் தோட்டமாக அந்த இடத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பொதுவாக இரு தரப்பு மக்களிடையே மாமன் மச்சான் என்று உறவுமுறை சொல்லி அழைக்கக்கூடிய அளவுக்கு சுமூகமான உறவு நிலவி வந்திருக்கிறது. ஆனால், இந்த இடம் மியோ மக்களுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, குறுகிய மதவாதக் கண்ணோட்டத்துடன் சிலர் குஜ்ஜார் மக்களிடையேயும் ஜாட் மக்களிடையேயும் மியோ மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினர்.

ஊரில் ஒரு பதட்டநிலை உருவாவதை நகர நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை, மாநில அரசும் பொறுப்புடன் இப்பிரச்சனையைக் கையாளவில்லை. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்கிறது என்பதால், இப்படிப்பட்ட விவகாரங்களில் வழக்கம்போல் அரசியல் ஆதாய நோக்கத்துடன் அந்தக் கட்சியின் அரசு பிரச்சனையில் தலையிடத் தவறியதில் வியப்புமில்லை.

குறிப்பிட்ட நாளில் கோபால்கார் மசூதியில் மியோ மக்கள் குழுமியிருந்திருக்கிறார்கள். ஒரு பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்தான் அவர்கள் அங்கே கூடியிருப்பதாக ஒரு வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அதை நம்பி மசூதியைச் சுற்றி உள்ளூரையும் பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த குஜ்ஜார் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏற்கெனவே இரு தரப்பினருக்கும் இடையே பதட்ட நிலை இருந்து வரும் நிலையில், இப்படியொரு வதந்தி பரவியபோது நகர நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் உரிய கவனத்துடன் செயல்படவில்லை. திடீரென்று கல்வீச்சு, கைகலப்பு, காவல்துறை துப்பாக்கிச் சூடு... என அடுத்தடுத்த நிகழ்வுகள் செய்தியாகியுள்ளன.

செய்தியாகாத சில தகவல்களும் உண்டு. பியுசிஎல் அமைப்பு அனுப்பிய உண்மையறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் அவை. குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ஷாய்ல் மாயாராம் தி ஹிண்டு நாளேட்டின் அக்.20 இதழில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார். இறந்த 9 பேரும் மியோ மக்கள். அவர்களில் 3 பேர் உடலில் மட்டுமே தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. இதர 6 பேர் உடல்களிலும், காயமடைந்தோர் உடல்களிலும் கத்திக்குத்துக் காயங்களே இருந்தன. எனவே தாக்குதலுக்கான திட்டமிட்ட ஏற்பாடு எந்தப்பக்கத்தில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும், காவல்துறையினர் முறைப்படி கண்ணீர்ப்புகை, தடியடி என்றெல்லாம் கையாண்டுவிட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கவில்லை. நேரடியாகத் துப்பாக்கிச் சூடுதான். காவல்துறையில் எந்த அளவுக்கு மதவாதம் ஊருவியிருக்கிறது என்பதையும், மாநில காங்கிரஸ் அரசால் திருத்த முடியவில்லை என்பதையுமே இது காட்டுகிறது.

செய்தியாக வராத, இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் ஒருபோதும் செய்தியாக்கத் துணியாத மற்றொரு பின்னணியும் இருக்கிறது. கோபால்கார் நகரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் குஜ்ஜார், ஜாட், அஹிர் என்ற இந்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் மியோ எனப்படும் இஸ்லாமிய மக்களும் நெடுங்காலமாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். மாமன் மச்சான் என்று அழைக்கிற அளவுக்கு நல்லுறவு உண்டு. அப்படி இருந்த இரு சமூகங்களிடையே இப்போது கடுமையான கசப்பும், சந்தேகமும் வளர்ந்திருப்பதற்கு அடிப்படையான ஒரு பின்னணி அது.

நிலம்! மனை! பட்டா உரிமை! - இந்த மூன்றோடும் தொடர்புள்ள பிரச்சனை அது. இன்று அனைத்து மாநிலங்களிலும் நிலத்திற்கான தேவை, அதை வளைப்பதற்கான வெறித்தனமான முயற்சிகள், அதற்காக மீறப்படும் சட்டங்கள், அதிலே புகுந்துவிளையாடும் லஞ்ச லாவண்யங்கள், அதற்கு அசராதவர்கள் மீது ஏவப்படும் மிரட்டல்கள், அதற்கும் பின்வாங்காதவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொலைவெறித் தாக்குதல்கள்...

இத்தனையும் எதற்காக என்றால், நிலங்களை வளைத்துப்போட அலையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக! அவர்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக! உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகளின் நவீன வர்த்தக வளாகங்களுக்காக!

இதற்காக விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும், குடியிருப்பு நிலங்களும் வளைக்கப்படுகின்றன. இது மனை வர்த்தகத்தைப் கோடிக்கணக்கில் பெரும் பணம் புழங்குகிற, ஈவிரக்கமற்ற முறையில் மனித உரிமைகள் மீறப்படுகிற தொழிலாக்கியுள்ளது. மெகாசிட்டி, குளோபல் சிட்டி என்ற பெயர்களில் உருவாகிற புதிய நகர்ப்பகுதிகளின் அடிவாரமாக உள்ளூர் மக்களின் தேவைகளைக் காலில் போட்டு நசுக்குகிற உலகமய - தாராளமய வேட்டைகள் இருக்கின்றன. கத்தியின்றி ரத்தமின்றி நடக்கிற நவீன காலனியாதிக்கம் இருக்கிறது. தமிழகத்தில் எந்த அளவுக்கு மனை விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் பின்னணியில் எப்பேற்பட்ட அதிகார சக்திகள் இருந்தன - இருக்கின்றன, இதற்காக எப்படி எளிய மக்களின் கனவுகள் புதைகுழிக்கு அனுப்பப்படுகின்றன, சில நேரங்களில் இதற்கு உடன்படாதவர்களே புதைகுழிக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதெல்லாம் அண்மைக்கால அனுபவங்கள் அல்லவா...

இதே போன்ற சூழலில்தான் கோபால்கார் பகுதியிலும் நில ஆக்கிரமிப்புகள் அரங்கேறி வருகின்றன. துண்டு துக்காணி நிலங்களுக்கும் கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறது. இருக்கிற நிலத்தையாவது பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு எளிய மக்கள் தள்ளப்படுகிறார்கள். உருவாகும் எந்தவொரு பதட்ட நிலையையும் தங்களுடைய பகைமை நோக்கங்களுக்காகத் தடம் மாற்றிவிடும் மதவெறிக்கும்பல்கள் உற்சாகமடைகின்றன. உலகமயம் என்ற சொல் நாகரிகமானதாகத் தெரிகிறது. அது எவ்வளவு அநாகரிகமாக மக்கள் உயிரோடு விளையாடுகிறது...

  • (தீக்கதிர் நாளேடு 2110.2011 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

No comments: