Thursday 3 November 2011

ஊடகங்களை உலுக்கும் ஒரு அதிர்வு



நாட்டில் சில அமைப்புகள் இருப்பது அவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏதாவது சலசலப்பை ஏற்படுத்துகிறபோதுதான் மக்களுக்குத் தெரியவரும். தேர்தல் ஆணையம் என இருப்பதும், அதற்கு இவ்வளவு அதிகாரங்கள் இருபப்பதும் முன்பு டி.என். சேஷன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகளால் தெரியவந்தது. அண்மையில் எஸ்.ஒய். குரேஷி குழுவினரால் தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும் என்பது மேலும் தெளிவாகப் புலப்பட்டது. அதே போலத்தான் இதுவரையில் பத்திரிகை வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த பத்திரிகை மன்றம் (பிரஸ் கவுன்சில்) குறித்து இன்று பலருக்கும் தெரியவந்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ ஊடகங்கள் குறித்து - குறிப்பாக மின்னணு ஊடகங்கள் குறித்து - தெரிவித்த கருத்துகள்தாம். அது கூட கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கும்; ஆனால் மின்னணு ஊடக நிறுவனங்கள் சார்பாக ஊடக ஆசிரியர்கள் அமைப்பு (எடிட்டர்ஸ் கில்டு) அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதன் மூலம் கட்ஜூ கூறியதைக் கவனிக்காதவர்களும் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரண் தப்பார் நேர்காணலில் அவர் அப்படி என்னதானப்பா சொல்லிவிட்டார் என்று கவனிக்க வைத்திருக்கிறது.

அவர் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்?

"... மக்கள் நலனுக்காக ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செயல்படவில்லை. சில நேரங்களில் மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன்... நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த இந்தியா இன்று நவீன தொழில் சார் சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வலி மிகுந்த காலகட்டம் இது. முன்பு ஐரோப்பா இத்தகைய மாற்றத்தைச் சந்தித்தபோது மக்களுக்கு அந்த வலியைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஊடகங்கள் செயல்பட்டன. இங்கே தலைகீழாக நடைபெறுகிறது...

"... பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகின்றன. நம் மக்களில் 80 விழுக்காட்டினர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் அந்தப் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து தீர்வு காணத் தூண்டாமல் திசைதிருப்புகின்றன. திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப்போட்டிகள், கிரிக்கெட் போன்ற விசயங்களைப் பெரிதாக்கி அவை மட்டுமே நாட்டுக்கே முக்கியமானவை என்பதுபோன்ற மன மயக்கத்தை ஏற்படுத்துகின்றன...
"அநேக நேரங்களில் ஊடகங்கள் மக்களைப் பிளவுபடுத்துகின்றன... ஒரு ஊரில் குண்டுவெடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்திற்குள், குண்டுவைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதீன் கூறுகிறது; அல்லது ஜய்ஸ் இ முகமத் கூறுகிறது, அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் கூறுகிறது என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை தொலைக்காட்சிகள் கூறுகின்றன. அதற்குள் எப்படித் தெரிந்தது என்றால் குறுந்தகவல் வந்தது, மின்னஞ்சல் வந்தது என்கிறார்கள். இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப இயலும். விஷமிகள் அனுப்பியிருக்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அதைப் பெரிதாகக் காட்டி, முஸ்லிம்கள் எல்லோருமே குண்டுவைக்கிற தீவிரவாதிகள்தான் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்தமாக அசுரர்கள் என்பது போலச் சித்தரிக்கின்றன...

"... அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்கு மாறாக சோதிடம், மூட நம்பிக்கை என அறிவியலுக்குப் புறம்பானவற்றைப் பரப்புகின்றன ஊடகங்கள். ஏற்கெனவே நம் நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் சாதி, மதம், மூடநம்பிக்கைகளில் சிக்கி மனதளவில் பின்தங்கியிருக்கிறார்கள். அந்த மாயைகளிலிருந்து மக்களை விடுவித்து முற்போக்கான எண்ணங்கள் வளர துண்ட வேண்டாமா? ஆனால் ஊடகங்கள் மக்களை மேலும் மடமையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றன..."

-இப்படியாக ஊடகங்களின் சமூகப் பொறுப்பின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் கட்ஜூ. இதுவரையில் ஊடகங்களை விமர்சிக்கிற கலை இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோர்தான் இத்தகைய கருத்துகளைக் கூறிவந்தார்கள். முதல் முறையாக, பத்திரிகைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கென்றே உள்ள ஒரு அமைப்பின் தலைவரே சொல்லியிருக்கிறார் என்பதால் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நடுநிலையாக இருக்க வேண்டிய ஒரு அமைப்பின் தலைவர் இப்படி வெளிப்படையாக ஊடகங்களை விமர்சிக்கலாமா என்று மேற்படி ஊடக ஆசிரியர்கள் அமைப்பு கேட்கிறது. ஊடகச் சுதந்திர ஆதரவாளர்களும் கேட்கிறார்கள். ஆனால், சுதந்திரம் என்றால் பொறுப்பற்றிருப்பது என்ற பொருளல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நிதிபதிகள் பொது நிகழ்ச்சிகளில் ஊழல், அரசின் பொறுப்பின்மை, சாதிப்பாகுபாடு, ஆணாதிக்க வக்கிரம் போன்றவற்றைச் சாடிப்பேசியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் நடுநிலை தவறிவிட்டார்கள் என்று விமர்சிக்க முடியுமா? தேர்தல் ஆணையத் தலைவர் பல கட்சிகளின் முறைகேடுகள் குறித்துக் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நடுநிலை தவறிவிட்டதாகக் கட்சிகள் அவரைத் தாக்க முடியுமா?

ஊடக நிறுவனங்களுக்கு மட்டும் கோபம் வருவது ஏன்? பத்திரிகைகள் மன்றத் தலைவர் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார், என்கிற அளவுக்கு ஆசிரியர்கள் அமைப்பு கூறியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் இந்திய ஊடகங்களின் சிறப்பான உரிமை, அதைப் பறிப்பதற்கு இவர் யார் என்பது போல தாக்கியிருக்கிறது. அவரது விமர்சனங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சாதகமாகச் செய்திகள் வெளியிட்ட விலைகொடுக்கப்பட்ட செய்திகள் (பெய்டு நியூஸ்) கலாச்சாரம் பற்றியும் கட்ஜூ கருத்துக்கூறியிருக்கிறார். இதைப் பற்றியும் ஆசிரியர்கள் அமைப்பு மறுப்பேதும் சொல்லவில்லை.

அவர் தனக்கு ஊடகங்கள் மீது மரியாதை இல்லை என்று கூட கரண் தப்பாரிடம் கூறியிருக்கிறார். பத்திரிகைகளுக்கான அமைப்புக்கே தலைவராக வந்தபின் இப்படிப்பட்ட சொற்களை அவர் தவிர்த்திருக்க வேண்டும்தான். ஆனால் அதனால் மட்டும் இவர்களுக்குக் கோபம் வந்துவிடவில்லை. ஆழமாகப் போய்ப்பார்த்தால்தான் இவர்களுடைய கோபம் அவரது மேற்படி கருத்துகளின் மேல் அல்ல என்பது தெரியும். வேறு என்ன கோபம்? மின்னணு ஊடகங்களுக்கும் ஒரு கண்காணிப்பு ஏற்பாடு தேவை என்று அவர் கூறியிருக்கிறார். தற்போதை பத்திரிகை மன்றத்தையே ஊடக மன்றமாக (மீடியா கவுன்சில்) மாற்றிவிடலாம் என்றும், அது குறித்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கட்ஜூ கூறியிருக்கிறார். இதுதான் இவர்களுக்கு இடிக்கிறது - கொஞ்சம் கடுமையாகவே.

தவறு செய்யும் ஊடகங்களுக்கான அரசு விளம்பரங்களைத் தடை செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மன்றத்திற்குத் தரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் ஊடக முதலாளிகளைக் கடுப்படித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒன்றும் கடினமானதல்ல.
பத்திரிகைகளைக் கண்காணிக்க ஒரு மன்றம் இருக்கலாம் என்றால் தொலைக்காட்சி, இணையத்தள ஏடுகள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ஏன் ஒரு அமைப்பு இருக்கக் கூடாது? எல்லாவற்றுக்குமாக ஒரே ஊடக மன்றம் ஏன் ஏற்படுத்தப்படக் கூடாது?

பத்திரிகைச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் என்ற பதங்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. ஆனால் இந்த இரண்டும் என்ன என்பது இதுவரையில் வரையறுக்கப்படவே இல்லை. இவற்றை வரைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்பாடு செய்த உலக அளவிலான மாநாடுகள் எந்த முடிவும் எடுக்க முடியாமல் கலைந்துவிட்டன. அதற்குக் காரணம், மேற்கத்திய ஊடக முதலாளிகள் - குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் - சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடுவது, பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டுமேயல்லாமல், பத்திரிகைகளின் பொறுப்புணர்வு குறித்து விவாதிக்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டதுதான்.

அதே வழியில்தான் இந்தியாவின் இன்றைய பெரு மூலதன ஊடக நிறுவனங்கள் செல்ல விரும்புகின்றன. எந்தச் செய்தியையும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவோம், அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது என்று வாதிடுகின்றன. தட்டிக்கேட்க ஒரு அமைப்பு இருக்குமானால், மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்து மூளைச்சலவை செய்வது போல் சிலரைத் திடீர் மகான்களாக்குவது, மக்களுக்காகவே இயங்குவோர் மீது அவநம்பிக்கைகளைப் பரப்புவது போன்ற தற்போதைய சேவைகளைத் தொடர முடியாமல் போகும் அல்லவா?

மார்க்கண்டேய கட்ஜூ கூறுவது போன்ற அதிகாரங்கள் அந்த அமைப்புக்குத் தரப்பட வேண்டுமா என்பதை வேண்டுமானால் விவாதிக்கலாம். ஆனால், பன்முகப் பண்பாடுகள் கொண்ட இந்தியாவில் இப்படியொரு கண்காணிப்பு அமைப்பு தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஊடகங்களுக்கு பயம் தேவை என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த பயம் மக்களை நினைத்தும் சமுதாயத்தை நினைத்துமே வர வேண்டும்.

அத்தகைய ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விவாதத்துக்கு ஏற்படுத்தும் அதிர்வலைகளை மார்க்கண்டேய கட்ஜூ ஏற்படுத்தியிருக்கிறார் என்பது உண்மை.

2 comments:

sabarisuriya said...

ADITHATU MAKKALI UNARVUKALAI VELI ULAKIRIKU THERIVIKKA UNGALAI PONTRA ORU SILA NACHATHIRANGALEY IRUKKITRANA

சுட்டபழம் said...

அண்ணே...இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்டாஙகக நல்லா அடிச்சு சொல்லச்சொல்லுங்கண்ணே....