Saturday 26 November 2011

பெட்ரோல் விலைக்கு காரணம் சனிப்பார்வை!


பிரதமரை விசிலடிக்க வைக்கும் விளக்கம்!


பெ
ட்ரோல், டீசல் விலைகளை கன்னாபின்னா என்று உயர்த்துகிற மன்மோகன் சிங் அரசுக்கு, “உலகச் சந்தையில் எண்ணை விலை உயருகிறபோது இந்தியாவிலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கூட்டாளிக் கட்சிகளும் கூட தாங்கள் மக்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், எல்லோரையும் ஏற்க வைக்கிற வழி என்ன என்பது தெரியாமல் பிரதமரும் மற்றவர்களும் விழி பிதுங்குகிறார்கள். யாராலும் மறுக்க முடியாத விளக்கம் ஒன்றைச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இவர்களுக்கு இருக்கக் கூடும்.

அந்த ஏக்கத்தைப் போக்குவதற்கு ஒருவர் புறப்பட்டிருக்கிறார். சற்றே வளைந்த நேர்கோடு போல மட்டுமே புன்னகை செய்து வந்திருக்கிற மன்மோகன் சிங் “ஹய்யா” என்று விசிலடிக்காத குறையாகக் குதூகலிக்கும் ஆலோசனை அவரிடமிருந்து  வந்திருக்கிறது. அந்த ஆலோசனையை அரசு கடைப்பிடிக்குமானால் பொது மக்களிலும் கூட ஆகப் பெரும்பாலானோர், “ஓ இதுதான் காரணமா, அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்,” என்று அடங்கிப் போவார்கள்!

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் சனி பகவான் பார்வைதான்! அன்னாருடைய நாட்டாமை காரணமாகத்தான் பெட்ரோலியா பொருள்களின் விலை எகிறுகிறது! கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கிற எக்கச்சக்கமான சுங்கவரி, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை, பல்வேறு மட்டங்களில் விதிக்கப்படும் வரிகள், மாநில அரசுகளின் விற்பனை வரி, எண்ணை விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுவது ஆகிய எதுவுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல! எல்லாம் கிரக சாரம்! இந்த விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிற அவர் ஒரு சோதிட வல்லுநர்!

‘ஜோதிட ரத்னா’ என்ற (யாரோ கொடுத்த, அல்லது தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட) பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ள “முனைவர்” க.ப.வித்யாதரன் என்பார் இந்த வானிலை ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுகிறார்.

“எரிபொருள் விலை குறையுமா?” - இப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியிருக்கிற பதில் வருமாறு:

“எரிபொருள் விலை டிசம்பர் 21க்குப் பிறகு இன்னும் விண்ணைத் தொடும் அளவிற்கெல்லாம் வரும். பெட்ரோலைப் பற்றி பேசப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. 100 ரூபாயைக் கூட எட்ட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சனி கனிம, கரிம பொருட்களுக்கு உரிய கிரகம். அவர் இதற்குமேல் பற்றாக்குறையைத்தான் எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவார்.”

கேள்வியை கேட்டது ‘தமிழ்.வெப்துனியா.காம்’ என்ற ஒரு இணைய ஏடு. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக மக்களுக்குக் கிடைத்திருக்கிற இணையம் என்ற நவீன வசதியை எவ்வளவு எளிதாக, கூச்சமே இல்லாமல் இப்படியொரு அறிவியல் மறுப்புச் சிந்தனைக்குப் பயன்படுத்துகிறார்கள்!

இதே இணைய ஏடு அரசின் இப்படிப்பட்ட முடிவுகளை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்டதுண்டு. சனிப் பார்வையால்தான் விலை உயர்கிறது என்றால் அதை எதிர்த்துக் கட்டுரை வெளியிடலாமோ?

பெட்ரோல் விலையோடு மட்டும் இந்த ஜோதிட ரத்னாவின் கணிப்பு முடிந்துவிடவில்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தும், அத்வானிஜி ரதயாத்திரை நடத்தியும் ஒழித்துக்கட்ட விரும்புகிற ஊழல் விவகாரம் குறித்தும் இவரது கிரகக் கணக்கு விளக்கம் தருகிறது.
“இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்?” -இது தமிழ்.வெப்துனியா கேட்டுள்ள கேள்வி.

ஜோதிட ரத்னா வித்யாதரன் கூறியுள்ள பதில் இது:  “தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார்...”
-இப்படியாக சொல்லிக்கொண்டே போகிறார்.

இடசாரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக, அரசு அலுவலகங்களிலிருந்து அவ்வளவு லேசில் பெயராது என்றிருந்த தகவல்களைப் பெற முடியும் என்பதற்கான தகவல் உரிமைச் சட்டம் வந்தது. அதுவும் மன்மோகன் சிங் அரசின் முதல் சுற்று ஆட்சி இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்ததால், அவர்கள் மக்கள் நலனையும் உரிமையையும் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தோடு, தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தாக வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியதால்தான் இது நடந்தது. ஆனால் இந்த முனைவர் சொல்கிறார் தெரியுமா?

“இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும். தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நாள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது. அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள். நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.”

பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுவதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது, என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு துலாம், சனி, கன்னி என்று ஓட்டுவதில் நியாயமான விஷயம் எதுவும் இல்லை. கிரகங்களின் சஞ்சாரத்தால்தான் எழுச்சிகள் ஏற்படுகின்றன, தவறு செய்பவர்களுக்குத் தண்டனைகள் கிடைக்கின்றன என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வது என்றால், மக்களின் குமுறல் எதுவும் இல்லாத இடத்தில் கடகமும் புதனும் புகுந்து விவகாரம் செய்து பார்க்கட்டுமே!

அரசியல், சமூக நிகழ்வுகளையும், அன்றாடச் செய்திகளையும் கவனிக்கக் கூடிய எவரும் ஊகித்துத் சொல்லக் கூடிய கணிப்புகளைத்தான் இந்த ஜோதிட ரத்னாக்கள் கூறுகிறார்கள். கூடவே ஆங்காங்கே சனியின் பார்வை, கன்னியின் கண்வீச்சு, துலாம் நிலை, புதனின் இடம் என்று ஒட்ட வைத்துக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அனுபவத்தின்  அடிப்படையில் ஊகிக்கக் கூடியவர்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாதபட்சத்தில் இப்படி ராசிபலன் கணிக்கிற லாபகரமான சுய தொழிலில் ஈடுபடலாம்! என்ன, யாரையாவது பிடித்து ஜோதிடஸ்ரீ, ஜோதிடப்புலி, ஜோதிடரத்ன, ஜோதிடமரகத, ஜோதிடப்பவள என்றெல்லாம் பட்டங்களை ஒட்டவைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்! அதற்குக் கொஞ்சம் செலவாகும்!

சோதிடம் என்றால் சோதனையின்போது திடம் சொல்வது என்று முன்பொருமுறை கவிஞர் கண்ணதாசன் கூறினார். ஆனால் இது சும்மா திடம் சொல்கிற பிரச்சனை மட்டுமல்ல. நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கிற இடத்தைப்  பொறுத்துதான் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் முதல், சொந்த வீட்டு விவகாரங்கள் வரை எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன என்று சோதிடம் சொல்வதன் அடி ஆழத்தில், நடந்துகொண்டிருக்கிற எதையும் மாற்றமுடியாது என்ற தலைவிதித் தத்துவம் மக்களின் தலையில் அழுத்தமாகக் குடியேற்றப்படுகிறது. மாறுதல் ஒன்றைத் தவிர எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்ற உண்மைத் தத்துவம் மறைக்கப்படுகிறது.

அடிப்படையில், மக்களின் இன்றைய நிலைமைகள் எதுவும் மாறக்கூடாது, எவரும் தட்டிக்கேட்கிறவர்களாகப் பரிணமிக்கக்கூடாது என்ற சுரண்டல் கூட்டத்தின் விருப்பத்தையும், ஆதிக்க சக்திகளின் ஆசையையும் நிறைவேற்றுகிற ஏவலாக சோதிடம் பயன்படுத்தப்படுகிறது.

“சோதிடந்தனை இகழ்” என்றான் முண்டாசுக் கவிஞன். சோதிடத்தை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்திக் கொடுக்கிற கைங்கர்யமும் இகழத்தக்கதுதான்.


(‘தீக்கதிர்’ 27-11-2011 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகிற கட்டுரை)

No comments: