பொதுவாகவே பீதி ஒரு நல்ல வியாபாரப் பொருள். சமூகத்தில் ஏதாவது ஒரு பீதி கிளம்பிடும்போதெல்லாம் பல தரப்பினரும் பலனடைகிறார்கள்... பீதி வசப் பட்டவர்களைத் தவிர்த்து.
எல்லாக் காலத்திலுமே எங்கிருந்தாவது யாராலாவது ஏதாவது ஒரு பீதி கிளப்பி விடப் பட்டுதான் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அப்படிப் பரவிய பீதிகளில் ஒன்று கூட உண்மை நடப்பாக மாறியதில்லை. ஒரு பீதியால் ஏற்பட்ட பரபரப்பும் மனக் கலவரமும் அரவமிழந்து அடங்கி சில காலம் ஆன பிறகு இன்னொரு பீதி வீதிக்கு வந்துவிடும். ரூம் போட்டு யோசித்துக் கிளப்புவார்கள் போலும்.
மதுரை அருகில் திருமங்கலம் நகரில் குடியிருந்து பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் திடீரென எல்லா வீடுகளிலும் வாயிற் கூரைகளில் தும்பைப்பூ செடிகளைக் கொத்தாக, பூச்செண்டு போலச் செருகி, அதற்கடியில் கொஞ்சம் குங்குமம் வைத்தார்கள். ஊருக்குள் ‘‘ராக்காச்சி’’ வரப்போவதாகவும், காப்புச் செய்துகொள்ளாத வீடுக ளுக்குள் அவள் புகுந்து அங்கே இருக்கிறவர்களை அறைந்து விடு வாள் என்றும், அறை வாங்கியவர்கள் ரத்தம் கக்கிச் செத்துவிடுவார் கள் என்றும் யாரைக் கேட்டாலும் சொன்னார்கள்.
எங்கள் வீட்டுக்கூரையிலும் தும்பைக் கொத்து செருகப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த ரம்ஜான் கொண்டாடுகிற வீட்டிலோ, எதிர் வரிசையில் இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற வீட்டிலோ எதற்காகத் தும்பைக்கொத்து தேவைப்படவில்லை என்று கேட்கிற புத்தி அப்போது எனக்கு வரவில்லை.
பள்ளியில் கோடை விடுமுறை விட்டதும் நெல்லை மாவட்டத்தில் எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம். அங்கேயும் பல வீடுகளின் கூரைகளில் தும்பைக் கொத்துகள் காய்ந்துபோய்க் காட்சிய ளித்தன. பல ஊர்களிலும் ராக்காச்சி வலம் வந்திருக்கிறாள் என்பதும், தும்பைக்கொத்துகளால் அவள் துரத்தப்பட்டிருக்கிறாள் என்பதும் தெரியவந்தது. தும்பைக் கொத்து வைக்காத வீடுகளில் ஏதாவது வில்லங்கம் நடந்ததா என்பது மட்டும் யாருக்குமே தெரியவரவில்லை.
ராக்காச்சி போன்ற கதைகள் பழைய நம்பிக்கைகள் சார்ந்த “ஓல்டு ஃபேஷன்” பீதிகள். நவீன தொழில்நுட்பம் சார்ந்த “லேட்டஸ்ட் ஃபேஷன்” பீதிகள் அவ்வப்போது இன்பச்சுற்றுலா வருவதுண்டு. விண்வெளியில் சுற்றிவந்த ஒரு செயற்கைக்கோள் தனது சுற்றுப் பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, அது குறிப்பிட்ட நாளில் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும், அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று வரைபடத்தோடு செய்திகள் வந்தன. அவ்வளவுதான் குறிப் பிட்ட நாளில் காலையிலிருந்தே பலரும் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்துகொண்டார்கள். வீட்டு மேலேயே விழுந்தால் என்ன ஆகும் என்று அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா தெரியவில்லை.
ராக்காச்சி போல இந்த சேட்டலைட் மதச்சார்புள்ளது அல்ல என்பதால், தங்கள் ஊரை மட்டும் அதன் தாக்குதலிலிருந்து காப்பாற்றுமாறு அவரவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். அது பூமியின் காற்று மண்டலத்தில் நுழைகிறபோது எரிந்துவிடும், எஞ்சிய பகுதி கடலில் விழும், அப்படியே தரையில் விழுந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்று அறிவியல் இயக்கங் கள் சொன்னது, ஊடகங்கள் மற்றும் பூசை நடத்துவோரின் பரபரப்பு இரைச்சல்களைக் கடந்து மக்கள் காதுகளில் சன்னாகவே ஒலித்தது.
இந்த 2012ம் ஆண்டு தொடங்கியதே உலகளாவிய பீதி வியாபாரத்தோடுதான். மயன் காலண்டர் கணிப்புப் படி இந்த ஆண்டுடன் உலகத்தின் கதை முடியப்போகிறது என்றார்கள். இந்தியக் காலக்கணிப்பின்படி கலியுகம் தொடங்குவதாகவும், தற்போதைய உலகத்தின் அழிவுடன்தான் அது தொடங்கும் என கூறப்பட்டிருப்பதாகவும் காலத்திற்கே ஜாதகம் கணித்தார்கள்.
கலியுகத்தில் மக்கள் அவரவர் கடமையை மறந்து செயல்படுவார்கள், அத்து மீறிச் செயல்படுவார் கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதாவது, மேல் வர்ணத்தவர்க்குத் தொண்டாற்றுகிற நான்காம் வர்ணத்தில் தள்ளப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்களும் தங்களுக் கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகளோடு நிற்க மாட்டார்கள், பெண்கள் குடும்ப விளக்குகளாக மட்டும் பணிவிடை செய்துகொண்டிருக்க மாட்டார்கள் என்று பொருள். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்வது, இறைவன் வகுத்த இனிய காலகட்டத்தின் அழிவாம்! இன்று தலித் அமைப்புகள், மாதர் இயக்கங்கள் ஆகியவற்றின் உரிமைக்குரல் உரத்து ஒலிக்கிறது. கலிகாலம் தொடங்கிவிட்டது போலும்! இது ஆதிக்கக் கூட்டங்களுக்கு பீதியைத் தருவதில் வியப்பில்லைதான்.
இன்றைய வலைத்தள யுகத்தில் பீதி உற்பத்தி அமோகமாக நடக்கிறது. நியாயமான அச்ச உணர் வுக்கும், உள்நோக்கமுள்ள பிரச்சாரத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டாக வேண்டியி ருக்கிறது. எங்கேயாவது கடலோரத்தில் ஒரு பூகம்பம் என்று செய்தி வந்தால் போதும், சமூக வலைத் தளங்களில் மின்னல் வேகத்தில் அந்தத் தகவல் பரவுகிறது. கூடவே, அந்த பூகம்பத்தால் சுனாமி வரக்கூடும், சுனாமியால் ஊரே அழியலாம், அணு உலைகள் வெடிக்கும் அபாயம் என்றெல்லாம் பதற்றம்
பற்றவைக்கப்படுகிறது. அண்மையில் இந்தோனேசியா பூகம்பத்தையொட்டி வலைத் தளங்களில் கூடங்குளம் தொடர்பாக அப்படியொரு சுனாமி அலை கிளப்பிவிடப்பட்டது. அறிவிய லாளர்கள் வசைபாடலுக்கு உள்ளானார்கள். பயன்படுத்தப்பட்ட சொற்களில் எதிரொலித்தது சுனாமியால் அணு உலைக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையா, அப்படி ஏதாவது ஏற்பட் டால் நல்லது - கூடங்குளம் திட்ட ஆதரவாளர்களை வாயை அடக்கலாமே என்ற எதிர்பார்ப்பா என்ற பீதிதான் எனக்கு ஏற்பட்டது.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது கூட, “சென்னையில் ரத்தக்காட்டேறியா” என்ற தலைப்புடன் ஒரு மாலைப் பத்திரிகையின் சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்தேன். என்கவுன்டர் சாகசங்களைத்தான் அப்படிச் சொல்கிறார்களோ என்ற எண்ணம் எழுந்ததில் பீதி ஏற்பட்டு, எதற்கடா வம்பு என்று அந்த எண்ணத்தை அழித்தேன்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் வள்ளுவர். நியாயமான பீதிகளும் உண்டு. எங்கே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சொதப்பல்களால் பலம்பெற்று மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமோ, அத்வானியோ மோடியோ பிரதமராகிவிடுவார்களோ என்ற பீதி இரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது போன்ற பீதிகள், அப்படிப்பட்ட துயரநிலை வந்துவிடாமல் தடுக்க மக்களிடையே இறங்கி அரசியல் பணியாற்றத் தூண்டுகிறது.
இயற்கைப் பேரிடர்களும் அதைச் சார்ந்த பாதிப்புகளும் எதிர்பாராத தருணத்தில் கொஞ்சமும் ஊகிக்க முடியாத சூழலில்தான் நிகழ்கின்றன. ஆயினும் எந்த ஒரு திடீர் நிலைமையையும் எதிர் கொள்ளும் மனத்திண்மை தேவைதான். அந்த மனத்திண்மை இப்படிப்பட்ட பீதிச் சேவைகளால் வளராது. வெறும் பதற்றம் அறிவியல் கண்ணோட்டத்துடன் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவாது.
காலங்காலமாகக் கிளப்பிவிடப்பட்டு வந்துள்ள பீதிகள் சுவையான கதைகளாகவே முடிந்திருக்கின்றன. இனி வரும் காலத்திலேனும் பழைய - புதிய ராக்காச்சிகளால் எவரையும் அச்சுறுத்த இயலாது என்ற அறிவுலகம் கட்டப்பட வேண்டும். அந்த உலகத்தில் பீதிகள் பீதி கொண்டு ஓட்டமெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment