.
உன்னைச் சுற்றி
வாழ்க்கைப் பக்கங்களை
விரித்து வைத்திருக்கிறது
உலகப் புத்தகம்
எந்தப் புத்தகத்தையும்
பார்க்கவே நேரமில்லை
படிக்க மட்டும்
முடியவா போகிறது?
புத்தகச் சாலையில்
ஒவ்வொரு பயணத்திலும்
எல்லை நீள்கிறது
எனது சாலைக்கு.
நாங்கள் மட்டும்தான்
படிக்கப் படைக்கப்பட்டோம்
நீங்களோ விளக்கு
பிடிக்க வார்க்கப்பட்டீர், என
வாசிப்பு வயலிலும்
வரப்பாய்ச் சுற்றி
மூச்சை நெரித்தது
வர்ண நூல்.
பணத்துக்கு ஏற்ற
படிப்பை எடுத்துக்கொள்ள
கடையில் தொங்கவிட்டது
வர்க்க நூல்.
பிரித்த நூல்களை
அறுத்து மனங்களை
இணைத்து வைக்கிறது
புத்தக நூல்.
இந்த நூலை நாமும்
கையிலெடுக்காமல் இருக்கும் வரை
திரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்
அந்த இரு நூல்களும்.
பழசோ புதுசோ
புத்தகம் ஒன்றை
படித்துக்கொண்டே இரு
அதற்கொரு ஈடுதான் ஏது?
மேசைக் கணினி முதல்
கையில் அடக்கமாய்
பேசும் கணினி வரையில்
புதுசு புதுசாய் வரும் போகும்.
புத்தம் புதிதாய்
அகத்தை ஆக்குவதில்
புத்தகம் என்றும்
நிலைத்து நிற்கும்.
எவ்வளவு தொலைவில்
எழுதியவர் இருப்பினும்
அவரின் அருகில் என்னை
அமர வைக்கிறது புத்தகம்.
அடுத்த அறையில்
இருப்பவரைக் கூட
அயல் தேசத்தவராய்
தள்ளி வைக்கிறது இணையம்.
எழுதும் கைகளுக்கு இணையம்
ஆதாரமாய்க் கை கொடுக்கும்
வாசிக்கும் கண்களுக்கு இணையம்
கண்ணாடியாய்த் தெளிய வைக்கும்.
இணையத்தின் சேவைகளை
மறுப்பவர் இங்கே எவரேதான்?
இருப்பினும் வீட்டில்
செல்வமாய்ச் சேர்வது புத்தகம்தான்.
இறுதியாய் ஒன்று...
புத்தகக் கொடி பிடிப்பது
என் புத்தகத்தை நீ படிக்க அல்ல
உன் புத்தகத்தை நான் படிக்க...
(உலக புத்தக தினத்தை வரவேற்று ஏப்ரல் 23 சனிக்கிழமையன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ‘கவிதை அலைகள்’ நிகழ்வில் வாசித்தளித்த எனது படைப்பு. பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க்ம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின,)
No comments:
Post a Comment