Thursday 7 February 2013

பொழுதுபோக்கின் விஸ்வரூபம்?


டம் திரையரங்கிற்கு வருகிற முதல்நாளே பார்த்துவிடுகிற பழக்கம் விட்டுப்போய் வெகுநாளாகிவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏற்பட்ட கட்டாயம் போலத்தான் எனக்கும்.

ஒரு கலைப்படைப்பு வெளிவந்து அதை மக்கள் துய்க்கிற உரிமையை எந்த ஒரு அமைப்பும் செய்யக்கூடாது, எந்தவொரு அரசாங்கமும் செய்யக்கூடாது என்பதே என் கருத்து. அந்த வகையில் கமல்ஹாசனின் படம் நேரடியாக வர முடியாமல் தடுக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. ‘ஃபயர்’ படத்தை யாரும் பார்க்கவிடாமல் தடுத்த. ‘வாட்டர்’ கதைக்குப் படப்பிடிப்பே நடத்தவிடாமல் விரட்டியடித்த சங் பரிவாரக் கும்பல்களைக் கண்டித்த அதே தொனியில்தான் இதையும் ஏற்க மறுத்தேன்.

உயர்நீதிமன்றம் அரசின் தடையை விலக்கி ஆணையிட படம் முதலில் திரையிடப்பட்டபோது பார்க்க முடியாமல் போனது. அந்த முதல் காட்சியோடு உயர்நீதிமன்றத்தின் மறுதடை வந்துவிட்டது. ஒரு மதவாத மோதல் அளவுக்கு விவாதங்கள் போய்க்கொண்டிருந்ததால் வெறொரு ஏற்பாட்டில் படம் பார்த்துவிட்டேன். ஆயினும், பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக செய்திகள் வந்த நிலையில், சில காட்சிகளைத் திருத்த கமல் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துகொண்டிருந்த நிலையில், அந்த இறுதிப்படுத்தப்பட்ட படத்தைப் பார்க்காமல் விமர்சனம் எழுதுவது முறையல்ல என்று காத்திருந்தேன். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்து, இணக்கமான பேச்சுக்கு வழிசெய்ததற்காகத் தமிழக அரசுக்கு கமல்ஹாசன் நன்றி கூறி, கோடிக்கணக்கில் செலவிட்டிருந்தாலும் கிடைத்திருகக முடியாத பரபரப்பு விளம்பரத்தோடு இரண்டாம் முறையாகப் படம் திரையரங்குகளுக்கு வந்த இன்றைய (பிப்,7) நாளிலேயே முக்கியத்துவம் கருதி இரண்டாவது தடவையாகப் படத்தைப் பார்த்தேன்.

கதை என்ன என்பதெல்லாம் பத்திரிகைகளின் விமர்சனங்கள், முகநூல் பதிவுகள் மூலம் பலருக்கும் தெரிந்துவிட்டது. அதை இங்கேயும் சொல்ல வேண்டியதில்லை. படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டாக வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதே நேரத்தில் படைப்பாளிகளுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தேன். எப்போதுமே வர்த்தக சினிமா வட்டத்திற்குள் நின்றுகொண்டே கொஞ்சம் மாறுபட்ட அனுபவங்களையும் தர முயன்று வந்திருக்கிற கமல் மீது உள்ள ரசனை கலந்த மரியாதையோடு அந்த சமூகப் பொறுப்பு அவருடைய இந்தப் படைப்பில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கவனமுடன் பார்த்தேன்.

ஒரு சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்து ரசிப்பதற்கும் வியப்பதற்கும் படத்தில் நிறையவே தூவல் வேலைகள் இருக்கின்றன. காட்சிகளுக்கிடையான தர்க்கப்பூர்வமான இணைப்பு, எதுவும் தொங்கலாகிவிடாத கச்சிதமான கோர்ப்பு, அரங்க வேலைப்பாடுகள், பொருத்தமான முகங்கள், ஒப்பனை தெரியாத ஒப்பனை, நேர்த்தியான ஒளிப்பதிவு, மிரள வைக்கும் அந்த முதல் சண்டைக் காட்சி, மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவை என்று சொல்வதற்கு நிறையவே இருக்கின்றன.
நடன ஆசிரியராக, ஜிஹாதி குழுவில் ஒருவனாக, இந்திய உளவுத்துறை அதிகாரியாக கமலின் மாறுபட்ட நடிப்பும் விருந்துதான்.

இவை மட்டும்தான் இந்தப் படமா? பரபரப்புகள் எழுந்திராவிட்டால் இது ஒரு சாதாரணமான பொழுதுபோக்கு மசாலாப்படம், அவ்வளவுதான், அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை என்று முகநூல் நண்பர்கள் பலரும் பதிவிட்டிருக்கிறார்கள். அவ்வளவுதானா? உலகம் முழுவதும் இன்று பயங்கரவாதம் என்றால் மீசையில்லாத தாடி முகங்களும், அவர்களது கைகளில் உள்ள துப்பாக்கிகளும், அவர்களது இடுப்பில் கட்டிய வெடிகுண்டுகளும் மட்டுமே என்ற எண்ணம் பளிச்சென ஏற்படுகிறதே - அந்த எண்ணத்தை இறுக்கமாகவும் பரவலாகவும் ஏற்படுத்தியதில் ஹாலிவுட் தயாரிப்புகளாக வந்த ஏராளமான, சாதாரணமான, பொழுதுபோக்கு மசாலாப்படங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அரசியல், ஊடகம் என பல வகைகளிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாமிய மக்கள் பற்றிய சித்தரிப்பை அந்த ஹாலிவுட் மசாலாப் படங்கள் கெட்டிப்படுத்தியிருக்கின்றன.

அதே கைங்கர்யத்தைத்தான் ‘விஸ்வரூபம்’ செய்கிறது. கமல் திட்டமிட்டு இதைச் செய்தாரா? இந்தக் கைங்கர்யத்தை அவர் திட்டமிட்டுத் தவிர்க்கத் தவறிவிட்டார். இவ்வளவு நுணுக்கமாகத் திரைக்கதை அமைத்தவர், திட்டமிட்டிருந்தாரானால் படம் வேறு வகையில் அமைந்திருக்கும். ஜிஹாதிகளின் மனிதத்தன்மையற்ற தண்டனைகளையும், சித்திரவதைகளையும் அவ்வளவு விளக்கமாகக் காட்டியவர், ஏற்கெனவே மொபைல் போன் வழியாகவும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டிருக்கிற காணொளிப்படங்களை நடிகர்கள் மூலம் பார்ப்பவர் நெஞ்சங்களில் “எவ்வளவு ஈவிரக்கமில்லாமல் நடந்துகொள்கிறார்கள்” என்ற பதைப்பை ஏற்படுத்தியவர் ஜிஹாதிகளின் அந்த அமெரிக்க எதிர்ப்புக்குப் பின்னால் உள்ள நியாயங்களையும் அழுத்தமாகக் காட்டியிருப்பார்.

மனிதநேயத்தை நேசிப்பவர்கள் ஜிஹாதிகளின் வழிமுறைகளை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். அரசாங்கம், அதன் அமைப்புகள் ஆகியவற்றோடு நேரடியாக மோதுவதற்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் வெறித்தனம், அதன் மூலம் அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாக எண்ணிக்கொள்ளும் முதிர்ச்சியற்ற அரசியல் கணக்கு இரண்டுமே வன்மையான கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உரியவை. அதனால்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட மனித நேய சக்திகள் இந்த பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறார்கள்.  அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டாத போராட்ட வழிமுறை உண்மையில் எதிரிக்குத்தான் சாதகம்.

ஆனால் அந்த அமெரிக்க எதிர்ப்புணர்வின் ஆழமான அரசியல், பொருளாதார அடக்குமுறைப் பின்னணிகள் உரக்கச் சொல்லப்பட வேண்டியவை. இந்தப் படத்தில் ஆப்கானிஸ்தான் குடியிருப்புகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசுகிற காட்சி வருகிறது, ஆனால், அது அங்கே சிறைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரை மீட்பதற்காகத்தான். புஷ் படத்தின் மீது துப்பாக்கித் தோட்டாக்களை ஜிஹாதிகள் பாய்ச்சுகிறார்கள். அவ்வளவு கோபம் ஏன் என்பது தொட்டுக்காட்டப்படவில்லை. “நாம அல்லாவுக்காகப் போர் செய்யுறோம், அவங்க ஆயிலுக்காகப் போர் செய்றாங்க” என்ற வசனம் போகிற போக்கில் உதிர்க்கப்படுவது, இப்படி விமர்சிப்பவர்களுக்காக “இல்லையே, அதையும் நாங்கள் தொட்டுக்காட்டியிருக்கோமே” என்று சொல்லிக்கொள்ள இணைக்கப்பட்ட வசனமாகவே இருக்கிறது.

போதாக்குறைக்கு அமெரிக்க ராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள் என்று ஜிஹாதி ஒருவரே சொல்கிற வசனம் வேறு வருகிறது. இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ராணுவத்தின் குண்டுகளுக்கு இரையான குழந்தைகள் பற்றிய செய்திகளை கமல் சார் படிக்கவே இல்லையோ?

உலகளாவிய பயங்கரவாத மூலஸ்தானமே அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் சிஐஏ தலைமையகமும் பென்டகன் வளாகமும்தான் என்ற உண்மையை ஹாலிவுட் மசாலாப் படங்கள் மறைக்கலாம். ஒரு கோலிவுட் படம் ஏன் மறைக்க வேண்டும்? அமெரிக்க லாபப் பசி வேந்தர்களின் உலக ஆக்கிரமிப்பு நோக்கத்திற்குத் தோதாக, சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்ட பிறகு, பயங்கரவாதம் என்ற பொது எதிரி கற்பிக்கப்பட்டதை ஹாலிவுட் பொழுதுபோக்குப் படங்கள் சொல்லத் தயங்கலாம். கோலிவுட் படம் அதை ஏன் சொல்லத் தயங்க வேண்டும்? ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானில் இன்னபிற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து ஒடுக்கப்படுகிற மனித நேய முஸ்லிம்கள்தான் மிகுதி. அவர்களை அடையாளப்படுத்த ஹாலிவுட் படங்கள் முன்வராமல் போகலாம். கோலிவுட் படம் ஏன் முன்வராமல் போக வேண்டும்?

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் வெளிநாட்டுப் படங்களின் பட்டியலிலாவது விஸ்வரூபத்தைச் சேர்த்துவிடும் முயற்சியா?

நாயகனை தொழுகை நடத்துகிறவனாகக் காட்டுவதும் ஒரு சமாதானம்தான். உள்ளூர் ஆதிக்க மதவாதிகள், முஸ்லிம்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் “இந்தியாவில் இருப்பதானால் இந்துவாக இரு, இல்லாவிட்டால் இந்துவுக்குக் கட்டுப்பட்டு இரு” என்றுதான் சொல்கிறார்கள். நாயகன் விசுவாசமான இந்திய சிப்பாய் என்பது அந்த ஆதிக்க மதவாதிகளை திருப்திப்படுத்தக்கூடும். காயம்பட்டிருக்கிற சிறுபான்மையினருக்கு மனநிறைவளிக்காது.

கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம், கலை வெளிப்பாட்டின் சமூகப் பொறுப்பு இரண்டுமே பிரித்துப் பார்க்க இயலாத சம முக்கியத்துவம் வாய்ந்தவை. “வெளிநாட்டுக்குப் போயிடுவேன்” என்பது போன்ற உணர்ச்சிவசப் பேட்டிகளாலும், சமரசப் பேச்சுகளாலும் முன்னதைத் தக்கவைத்துக்கொண்ட உலகநாயகன் பின்னதை ரொம்ப ரொம்ப பின்னுக்குத் தள்ளிவிட்டாரே...

3 comments:

எஸ்.கருணா said...

நுட்பமான விமர்சனம் தோழர்.

kashyapan said...

அசாக் அவர்களே! வெறும் திரைப்பட விமசரிசனமில்லாமல், அரசியல்,கலை,பண்பாட்டுத்துறையில் ,சட்டம்,மற்றும் நிர்வாகத்துறை பற்றிய மிக நீண்ட கட்டுரையைஎதிர்பார்த்தேன் ! காலமிருக்கிறது! காத்திருக்கிறேன்! ---காஸ்யபன்.

Anonymous said...

குமரேசன், அதென்ன இந்து அமைப்புகளை சுட்டிக் காட்டும் போது, சங்பரிவார கும்பல், அதே முஸ்லீம் அமைப்புகளை சுட்டிக்காட்டும் போது இஸ்லாமிய அமைப்புகள், நீங்க எல்லாம் பத்திரிகையாளரா இருக்கவே லாயக்கில்லாத ஆள்,