Wednesday, 29 May 2013

மாவோயிஸ்ட் சிக்கல் வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?

மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகள் சத்திஸ்கர் மாநிலத்திற்கு மட்டும் உரியதல்ல. பல மாநிலங்களிலும் பரவியிருக்கிற தேசியப் பிரச்சனை அது. மே 25 அன்று சத்திஸ்கரின் பஸ்தார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கடுமையான கண்டனத்திற்கு உரிய வெறித்தனமான செயல். கோபத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன, கோபத்தை வெளிப்பத்தியிருக்கும் கொலைவழி ஒரு சதவீதம் கூட ஏற்க இயலாதது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் ஊர்வலத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத்தவறியிருக்கிறது மாநில பாரதிய ஜனதா கட்சி அரசு. பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததை மாநில முதலமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த அளவில் இதில் மாநில பாஜக அரசுக்குப் பொறுப்பிருக்கிறது.

ஆனால், மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை இந்த அளவுக்கு வளர்ந்ததில் மத்திய அரசுக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது. இன்றைய மன்மோகன் சிங் அரசை மட்டும் சொல்லவில்லை, முந்தைய வாஜ்பாய் அரசு, அதற்கும் முந்தைய அரசுகள் என எல்லா மத்திய ஆட்சியாளர்களுக்கும் ஒட்டுமொத்த மத்திய அரசுக் கட்டமைப்புக்கும் இதில் பொறுப்பிருக்கிறது.

மத்திய அரசு மக்கள் மீது திணித்த பொருளாதாரக் கொள்கைகள் பழங்குடி மக்களையும் தலித் மக்களையும் அந்நியப்படுத்துவதாக இருந்தன. கனிம வளம் மிக்க அவர்களது நிலங்களைக் கைப்பற்றி டாட்டாக்களுக்கும் பிர்லாக்களுக்கும் அம்பானிகளுக்கும் தாரை வார்த்தது மத்திய அரசு. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இந்த மக்களின் வாழ்வதாரங்கள் பறிக்கப்பட்டன, அவர்களது பரம்பறை வன உரிமைகள் நசுக்கப்பட்டன. அந்த மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலைவசதி போன்ற தேவைகள் புறக்கணிக்கப்பட்டன. இப்படிப்பட்ட துரோகங்களால் ஏற்பட்ட ஏமாற்றமும் ஏக்கமும் ஆத்திரமும் அதிதீவிரவாதம் பேசும் மாவோயிஸ்ட்டுகளுக்கு விளைநிலமாகியது.

இடதுசாரி அதிதீவிரவாதம் ஒரு இளம்பருவக் கோளாறு என்றார் லெனின். தவறான தத்துவத்தைக் கைக்கொண்டவர்கள் இந்த அதிதீவிரவாதிகள். இந்தியா விடுதலை பெற்ற நாடு என்பதையே ஏற்காதவர்கள். இந்தியாவில் முதலாளித்துவம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, நாட்டின் அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது என்ற உண்மை நிலைமைகளை மதிப்பிடத் தவறியவர்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் கமிஷன் ஏஜென்டுகளான தரகு முதலாளிகள்தான் இந்திய மக்களின் வர்க்க எதிரிகள் என்று கணித்தவர்கள். அந்த எதிரியை ஒழிக்கவென சாகசவாதப் பாதையாக ஆயுதங்களைத் தூக்கியவர்கள். போராளிகள், தியாகிகள் என்றாலும் அந்தப் போராட்டத்தையும் தியாகத்தையும் சரியான இலக்கின்றி வீணாக்குகிறவர்கள்.

இல்லாத அந்த எதிரியை எதிர்த்துப் போராடக்கிளம்பினார்கள். இல்லாத எதிரியோடு எப்படி மோதுவது? ஆகவே உள்ளூரில் ஒரு போஸ்ட்மேன், ஊராட்சிமன்ற உறுப்பினர், சாதாரண போலிஸ் கான்ஸ்டபிள்... என இவர்களைத்தான் அந்த வர்க்க எதிரியின் ஆட்கள் என கொலை செய்யத் தொடங்கினார்கள். அரசால் கைவிடப்பட்டிருந்த கிராமங்களைத் தங்களது ஆதிக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். அந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் வந்தால் கூட அதை அரசின் ஆயுத வண்டியாக சித்தரித்து வெடிவைத்துத் தகர்தார்கள். பள்ளிக்கூடங்களை முடக்கினார்கள்...

மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொள்வதற்காக அரசு உதவியுடன் அமைக்கப்பட்ட சல்வா ஜூடூம் அமைப்போ, காவல்துறையை விடவும் மோசமாக கிராம மக்களின் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தது. பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற எல்லாவகையான அத்துமீறல்களையும் சல்வா ஜூடூம் ஆட்கள் செயல்படுத்தினார்கள். இது கிராம மகக்ளை மேலும் தனிமைப்படுத்தியது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, ஆயுதப் படை போன்ற சல்வா ஜூடூம் சட்டவிரோதமான அமைப்பு என்று தீர்ப்பளித்த பின்னர்தான் அது கலைக்கப்பட்டது.

இப்போதும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, நிலம் கையகப்படுத்துதல் சட்ட முன்வரைவு ஒன்றை மன்மோகன் சிங் அரசு தயாரித்திருக்கிறது. பாஜக-வின் அமளி ஒத்துழைப்புடன் முடக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த சட்ட முன்வரைவு மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. ஏற்கெனவே சட்டத்திற்குப் புறம்பாகக் கைப்பற்றப்பட்ட வன மக்கள் நிலங்களை, இனி சட்டப்படி சில பணக்கட்டுகளை வீசிக் கையகப்படுத்தவும், பின்னர் அவற்றை உள்நாட்டு - வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் சுரண்டலுக்கு ஒப்படைப்பதுமே இந்தச் சட்ட முன்வரைவின் நோக்கம். இது சட்டமாகுமானால், பழங்குடி மக்களும் தலித் மக்களும் மேலும் மேலும் அந்நியப்படுததப்படுவதற்கும், அதைப் பயன்படுத்திக்கொண்டு மாவோயிஸட்டுகள் தங்களது வன்முறை ஆதிக்க அரசியலைத் தொடர்வதற்குமே
ஏதுவாகும்.

மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் இறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்றாலும், தேர்தல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் இதை வைத்து பிணவாத அரசியல் செய்கிற முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடக்கூடாது.

வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாவோயிஸ்ட் பிரச்சனையைப் பார்ப்பது தவறு. மத்திய திட்டக்குழுவே கூட இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் பார்க்கக்கூடாது என்று கூறியிருக்கிறது. அப்படிப் பார்ப்பதால்தான் ராணுவத்தை அனுப்புவது, பாதுகாப்புப் படையை அனுப்புவது என்ற நடவடிக்கைகளில் அரசு இறங்குகிறது. நேருக்கு நேராக சீருடையோடு மோதுகிற எதிரிப்படையோடு சண்டைபோடுவதற்குப் பயிற்சி பெற்ற ராணுவத்தால் கிராம சமூகங்களோடு கலந்து செயல்படுகிற மாவோயிஸ்ட்டுகளைக் கையாள முடியாது. மக்கள் துன்புறுத்தப்படுவதற்குத்தான் ராணுவக் கெடுபிடிகள் இட்டுச் செல்லும். இதை ஒரு அடிப்படையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனையாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வழிமுறைகளை வகுக்க வேண்டும். சும்மா சில நூறு கோடி ரூபாய்களை அந்த வட்டாரங்களில் வீசினால் போதும் என்று அரசு கருதுவதும் தவறு. தற்போதைய ஊழல் கட்டமைப்பில் அந்தப் பணத்தில் கடைசித் துளிகள் மட்டுமே மக்களைச் சென்றடையும்.


வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, கிராம மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிற, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிற நடவடிக்கைகள், ஜனநாயக அரசியல் செயல்பாடுகள் என மிகப்பெரிய, மிக நீண்டகாலம் ஆகக்கூடிய பன்முக அணுகுமுறைகள் வகுக்கப்பட்டாக வேண்டும். இனியும் காலம் தாழ்ததாமல் தொடங்கியாக வேண்டிய இந்த அணுகுமுறைகளை, இதில் அக்கறையுள்ள அனைத்து சக்கிகளோடும் கூடி விவாதித்து வகுக்கிற அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்குத் தேவை.

(சத்திஸ்கர் தாக்குதலைத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில், கிடைத்த நேரத்திற்குள், நான் முன்வைத்த கருத்துகளின் சாறு)

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் தோழரே!
என்ன ஆச்சு? மார்ச், ஏப்ரல் மாதத்தில் காணாமல் போய்விட்டீர்கள்! இந்த மே மாத இறுதியிலாவது வந்தீர்களே!
மகிழ்ச்சி, தொடருங்கள்.
அவ்வப்போது நீங்கள் எழுதும் பத்திரிகைக் கட்டுரைகளை இட்டாலே போதுமே! அதிலென்ன சிக்கல்?
தொடர்ந்து எழுதுங்கள் - தோழமையுடன்.
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை http://valarumkavithai.blogspot.in/