Monday, 27 April 2026

பண்பாட்டுத் தளமா, பொருளாதாரக் களமா?

எதிர்வினையும் இயக்கவிழியும் 

“விலைவாசி உயர்வு, வரிக் கெடுபிடி, மானிய வெட்டு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகள் மெலெழும்போதெல்லாம் உடனுக்குடன் எதிர்வினையாற்றுகிற நம் கட்சி, மொழி, சாதி போன்ற சமூகப் பிரச்சினைகள் முன்னுக்கு வருகிறபோது உடனுக்குடனோ அதே தீவிரத்துடனோ எதிர்வினையாற்றுவதில்லையே… ஏன்?”


முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில், பல்வேறு துறைகளில்  செயல்படும் தோழர்களுக்காக அரசியல் பயிலரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. வகுப்புரை முடிந்த பின், கேள்விகளை எழுத்துப்பூர்வமாக முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.  ‘தீக்கதிர்’ பிரதிநிதியாகக் கலந்துகொண்ட நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.


ஆசிரியராக வந்திருந்தவர், மாநிலச் செயற்குழு உறுப்பினரும் “டி.எல்.” என்றழைக்கப்பட்டவருமான தோழர் தே. லட்சுமணன். ஒவ்வொரு கேள்வியாக, கேட்டவரின் பெயரைக் குறிப்பிடாமல் வாசித்து, விளக்கங்க்ள் அளித்தார். என்னுடைய கேள்வியை, பெயர் சொல்லியே வாசித்துக் காட்டினார். ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பிறகு இவ்வாறு பதிலளித்தார்:


“உண்மைதான் தோழர். பலருடைய மனதிலும் இருக்கிற, ஆனால் கேட்கத்  தயங்குகிற ஒன்றைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். வர்க்கக் கட்சி என்ற முறையில் பொருளாதார அடிப்படையில்தான் சமுதாயம் கட்டப்படுகிறது என்ற மார்க்சியப் பார்வை நம் இயக்கத்திற்கு இருக்கிறது. ஆகவே பொருளாதார விவகாரங்களில் உடனடியாகத் தலையிடுவது இயல்பாகிவிட்டது. அதே வேளையில் பொருளாதாரம் என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல. சமுதாயக் கட்டுமானத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் அது இருக்கிறது என்கிறபோது, சமூகமும் பண்பாடும் சார்ந்த விவகாரங்களிலும் அதே அளவுக்குத் தலையிட்டாக வேண்டும்.


“இப்போதும் அந்தப் பிரச்சினைகளில் தலையிடத்தான் செய்கிறோம் என்றாலும், அதை மேலும் அழுத்தமாக, நீங்கள் சொல்கிற அந்தத் தோற்றம் மாறத்தக்க அளவுக்குச் செய்தாக வேண்டும். தற்போதைய நிலைமைக்குக் காரணங்கள் என்ன, புதிய அணுகுமுறைகள் என்ன என்பதையெல்லாம் நான் மட்டும் சொல்லிவிட முடியாது. நிச்சயமாக இதைக் தலைமைக்குழு கவனத்திற்குக் கொண்டு செல்வேன். கட்சித் தலைமையிலும் அனைத்து மட்டங்களிலும் விவாதித்துதான் அதையெல்லாம் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன், அந்த விவாதம் அக்கறையோடு  தொடங்கியிருக்கிறது. உறுதியாக அது பலனளிக்கும்.”


சில எடுத்துக்காட்டுகளையும் கூறி தனது பதிலை நிறைவு செய்தார். எனது வினாவுக்கு முக்கியத்துவம் அளித்தது, நேர்மையான விளக்கத்தை அளித்தது இரண்டுமாகச் சேர்ந்து அவர் மீதும் ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கானது.


இன்று பலரும் கேட்கிறார்கள், ஏன் அமைப்புக்கு உள்ளே இருப்பவர்கள் கூடக் கேட்கிறார்கள்: ”வர்க்கக் கட்சியாக இருந்துகொண்டு, சாதி ஆணவம், மதவாதம், பிராமணியம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, மொழித்திணிப்பு, மாநில உரிமை மீறல், சனாதனம்… போன்றவற்றிற்கு முன்னிலை அளித்து, பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது சரியா?”


கட்சிக்குள் நடந்த விவாதம் சரியான அணுகுமுறைகளை வகுப்பதற்கு இட்டுவந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. இந்தப் பிரச்சினைகளில் கூட அடியாதாரமாக இருப்பது பொருளாதாரம்தான். ஆனால், பொருளாதாரம் என்றால் வெறும் ரூபாய் பைசா சங்கதி மட்டுமல்ல என்ற புரிதலோடு கட்சியின் இன்றைய எதிர்வினைகள் அமைகின்றன. “எந்தப் பிரச்சினையானாலும் கடைசியில் பொருளாதாரத்துக்கு வந்துவிடுகிறீர்களே,’‘ என்று கேட்கிறவர்களையும் பார்க்க முடிகிறது.


பொருளாதாரமே அடிவாரம், சமூகப் பண்பாட்டுக் களங்கள் மேற்கட்டுமானம் என்பது ஓர் அறிவியல் உண்மை. பாழடைந்த கட்டடத்தைத் தகர்த்து மாற்றிக் கட்ட வேண்டுமானால், நேரடியாக அடிவாரத்தை இடிக்க முடியாது – அப்படிச் செய்தால் இடிபாடுகள் நம் மேலேயே விழுந்து புதைத்துவிடும். மேற்கூரை, உள்ளறை, சுற்றுச்சுவர் என்று இடித்துதான் அடிவாரத்துக்குப் போக வேண்டும். சமூகப் பண்பாட்டுத் தளங்களில் தலையிடுவதும் அப்படித்தான். 


பெருமிதத்தையும் நம்பிக்கையையும் தருகிற இந்த வளர்ச்சிப்போக்கு ஏதோ என் ஒருவனது  கேள்வியால்தான் உருவானது என்ற அறியாமை மமதை எனக்கில்லை. அவரவர் மொழியில், அவரவர் வழியில், அவரவர் வாய்ப்பில் இதைக் கேட்டிருக்கக்கூடிய எத்தனையோ தோழமைகளோடு எனது குரலும் இணைந்திருக்கிறது என்ற நிறைவுணர்வு இருக்கிறது.

[0]

‘தமிழ் தேசம்’ குழுவின் இணையவழிக் கூடுகையில் (ஏப்.26), “இன்றைய இளைஞர்களும் நாளைய தலைவர்களும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் க. உதயசங்கர் உரையாற்றினார். தொடர்ந்த கலந்துரையாடல் பொழுதில் வந்த ஒரு கருத்துக்கான எனது எதிர்வினையின் செதுக்கல் இது.

Saturday, 25 April 2026

உறக்கப் பறிமுதலில் உழைப்புச் சுரண்டல்



ஞ்சல் முறை தொடங்கப்பட்டபோது ஒருவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட மடல் குழலுடன் வேகமாகக் குறிப்பிட்ட இடம் நோக்கி ஓடுவார். அங்கே தயாராக நிற்கிற மற்றொருவரிடம் அதைத் தருவார். அவர் அதை வாங்கிக்கொண்டு அடுத்த இடத்திற்கு ஓடுவார். அங்கே இருப்பவர் அதைப் பெற்றுக்கொண்டு ஓடுவார். இப்படியே பட்டுவாடா முகவரியை அடைந்து அதை ஒப்படைப்பார்.

மூலதனம் சார்ந்த உற்பத்தி முறை வேரூன்றிய பிறகு, முதலாளிகளைப் பொறுத்த மட்டில் தொழிற்சாலையின் எந்திரங்கள் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தாக வேண்டும் – நின்றுவிட்டால் உலோகங்கள் துருப்பிடித்துவிடுமே! அதற்காகத் தொழிலாளர்களைக் குழுக்களாகப் பிரித்து நிற்க வைத்தார்கள். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நேரம் வரையில் வேலை செய்தபின் அவர்களை வெளியே அனுப்பிவிடடு, அடுத்த குழுவினரை எந்திரங்கள் முன் நிறுத்துவார்கள். மறுபடி அடுத்த குழுவை ஈடுபடுத்துவார்கள். 


“அஞ்சல் தொடர் ஓட்ட முறை” (ரிலே சிஸ்டம்) என்றே இது அடையாளப்படுத்தப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் காலைப் பணி, பகல் பணி, இரவுப் பணி என சுழல் முறை (ஷிப்ட் சிஸ்டம்) என்றாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்குத்தான் இரவுப் பணி. முதலாளிகளோ, எந்த நேரத்தில் உறங்குவது உடலுக்கு ஆரோக்கியமோ அந்த இரவு நேரத்தில் நன்றாக உறங்குவார்கள். நிறுவனத்தில் விபத்து போன்ற ஏதாவது நெருக்கடியில் மட்டும்  ஆலைக்கு வருவார்கள். முதலாளிகள் அல்லாத பல்வேறு மட்டங்களிலான மேலாளர்கள் தொடங்கி தொழிலாளர்கள் வரையில் சுழல் முறையில் வேலைக்கு வர வேண்டியவர்கள்தான்.


இரவுத் தூக்கத்தை இழந்தால் என்ன, அவர்கள் பகலில் நன்றாக உறங்கி எழலாமே என்று முதலாளிகளும், இந்த ஏற்பாட்டிற்காக வக்காலத்து வாங்கிய அரசியலாரும் அறிஞர்களும் அதிகாரிகளும் நியாயப்படுத்தினார்கள். இந்த ஏற்பாட்டில், உறக்கத்திற்கென்றே இயற்கையாய் அமைந்ததாகிய இராப் பொழுது, இரவுப் பணித் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இது அவர்களின் உடல் நலத்தை வெகுவாகச் சீர்குலைக்கிறது. காலப் போக்கில் அவர்கள் நலிவடைகிறார்கள்.


பகலில்தான் உறங்கியாக வேண்டுமென்ற நிலையில் தொழிலாளர்கள் இழப்பது உடல் நலத்தை மட்டுமல்ல. தங்களின் சமூக உறவுகள் சார்ந்த வாழ்க்கையையும் இழக்கிறார்கள். உழைப்பதும் ஊதியம் பெறுவதும் உயிரோடு இருப்பதற்காக மட்டுமில்லையே, அந்த  சமூக வாழ்க்கைக்காகவும்தானே? இந்த வேலை நேர ஏற்பாடு அதையும் சீர்குலைக்கிறது. காலப்போக்கில் அவர்கள் தனிமைப்படுகிறார்கள். தான், தன் குடும்பம் என்று சுருக்கப்படுகிறார்கள்.


உழைப்புச் சுரண்டலோடு இணைந்த இந்தப் பணி நிலைமைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே தயார்ப்படுத்தப்படுகிறார்கள். சிறார் வயதுக்கே உரிய ஆட்ட பாட்டத்தோடு அயர்ந்து தூங்குகிறவர்கள் எழுப்பிவிடப்படுவார்கள். “இப்படித் தூங்கிப் பழகிவிட்டால் நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகிற இடத்திலும் இப்படித்தான் இருப்பாய். கெட்ட பெயர் எடுத்துவிடுவாய். முன்னேற மாட்டாய்,” என்று கண்டிப்புக் காட்டப்படும். அதிலும், நம் ஊரில் பெண் குழந்தைகள் என்றால், “இப்படித் தூங்கினால் நாளை கல்யாணமாகிப் போகிற இடத்திலும் இப்படித்தான் இருப்பாய். புகுந்த வீட்டில் கெட்ட பெயர் வாங்குவாய்,” என்று வசைப்பாடு கொட்டப்படும்.


இது ஒரு குறிப்பிட்ட முதலாளி கெட்டவரா, நல்லவரா என்பதைப் பொறுத்ததல்ல. சந்தைப் போட்டியில் எந்த முதலாளியும் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் இந்த அமைப்பிலிருந்தே பிதுக்கித் தள்ளப்பட்டுடவிடுவார். விசுவாச வேலைக்கான மனநிலையைத் தயார்ப்படுத்துவதை பெற்றோர்கள் செய்கிறார்கள், மற்ற பெரியவர்கள் செய்கிறார்கள்.  இப்படித் தயார்ப்படுத்துகிற உரையாடல் பொறுப்பை சமூகமயமாக்கியதில்தான் முதலாளியத்தின், மூலதனத்தின் வெற்றி இருக்கிறது.


சுரண்டலுக்கு எதிரான சிந்தனைகளை, தொழிலாளர் உரிமைக்கான எழுச்சிகளை, அடிப்படை மாற்றங்களுக்கான முனைப்புகளை இதே போன்ற சமூக உரையாடலாக்குவதில்தான் வர்க்கப் போராட்டத்தின் வெற்றி இருக்கிறது. அந்த உரையாடலை உருவாக்குவதில் உழைக்கும் வர்க்க இயக்கம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கருதுகிறேன், வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

[0][0][0]

இன்று (ஏப்ரல் 25) காலையில் நடைபெற்ற இணையவழி கூடுகையில்,  கார்ல் மார்க்ஸ் படைத்தளித்த ‘மூலதனம்’ நூலின், முதல் பாகம், பத்தாவது அத்தியாயம் வாசிப்பும் கலந்துரையாடலும் மேற்கொண்டோம். அப்போது நான் கூறியதை சீர்மையான பதிவுதான் இது. இயக்கத்தை அடையாளங்கண்டு அறிமுகமான நாட்களில் படித்தபோது கிடைத்த புரிதல்களுக்கும், அனுபவங்களின் துணையோடு இன்று மறுவாசிப்பில் ஈடுபடுகிறபோது கிடைக்கிற நெருக்கமான தெளிவுகளுக்கும் எவ்வளவு வேறுபாடு! அப்போது முதல் இப்போது வரையில் தொடர்கிறது மார்க்சியத்தின் பால் உறுதிப்பாடு. (சித்தரித்தபடி சித்திரம்: ஜெமினி ஏஐ)


Sunday, 19 April 2026

நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்துக்கு எத்தனை இடம் தரலாம் என்றால்…


                                        காலை நடையில் பூங்கா நிழலில்


“இன்னிக்கு சினிமா, புத்தகம் இப்படி எதையாச்சும் பத்திப் பேசுவோம்னு நினைச்சேன். ஆனா அரசியல் பேச வைக்கிறீங்களே?”


“எல்லாத்திலேயும் அரசியல் இருக்குதுன்னு எங்களுக்குச் சொன்னதே நீங்கதானே!”


காலை நடை நேர நிறைவுக் கட்டமான பூங்கா உரையாடலில், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டது பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரலையில் காட்டமாகப் பேசியிருப்பது பற்றியும் இரண்டு நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அப்போதுதான் நான் மேற்கண்டவாறு கேட்க, அதற்கடுத்துக் கண்டவாறு சொல்லி ஒருவர் என்னை மடக்கினார்.


“முதல்ல என்ன புரிஞ்சிக்கணும்னா, இது மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட முன்வரைவுங்கிறதே பாசாங்குதான். உண்மையான நோக்கம் தொகுதி மறுவரையறைதான்.”


“சார் சொல்றது கரெக்ட்தான், ரியலாவே விமன்’ஸ் ரிசர்வேஷன்தான் நோக்கம்னா, ஏற்கெனவே பார்லிமென்ட்டுல பாஸ் பண்ணி இன்னமும் இம்ப்ளிமென்ட் பண்ணாம வெச்சிருக்காங்களே, அந்தச் சட்டத்தை இப்ப நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே?”


எனக்கு வேலை வைக்காமல் இந்த  விளக்கத்தைக் கொடுத்த நண்பரை நன்றியுடன் நோக்கினேன்.


“ஒன்ஸ் இது சட்டமாயிடுச்சின்னா, எதிர்காலத்திலே டீலிமிட்டேஷன் பண்ணி எம்.பி.  சீட்களை எவ்வளவு அதிகமாக்கினாலும் அந்த மொத்த எண்ணிக்கையிலே தர்ட்டி த்ரீ பெர்சன்ட் பெண்களுக்குத்தான்னு கன்ஃபர்ம் ஆயிடுமே…”


இதையும் அவர்தான் கூறினார். சிலருக்கு இது புதிய தகவலாக இருப்பது அவர்களின் முகத்தின் கேள்விக்குறியாக வெளிப்பட்டது.


“இதுல ஒரு வரலாறே இருக்குது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வரைவு மொதமொதல்ல 1996ஆம் ஆண்டுல  தேவ கவுடா தலைமையில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்களவையில் தாக்கல் செஞ்சுது. அது பல காரணங்களால காலாவதியாயிடுச்சு. அப்புறம் பார்த்தீங்கன்னா 1998, 1999, 2002. 2003… இப்படி வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்துச்சு. ஒருமித்த கருத்து ஏற்படலை. 2010ல மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் மாநிலங்களவையில் தாக்கல் செஞ்சது, அதிலே நிறைவேறிடிச்சு.  மக்களவையில் தாக்கல் செய்யப்படலை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு  2023 செப்டம்பர்ல இவங்க வழக்கப்படி நாரி சக்தி வந்தன் அதினியம்னு சமஸ்கிருதப் பெயர்ல தாக்கல் செஞ்சாங்க,  ரெண்டு அவைகள்லேயுமே அது நிறைவேறிடுச்சு. குடியரசுத் தலைவரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். ஆனா நடைமுறைப்படுத்தாமலே வைச்சிருந்தாங்க. பெண்கள் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்கிறது பத்தி பிரதமர் முழங்கி முழங்கிப் பேசுறாரே, அதுல உண்மையாவே அக்கறை இருந்திருந்தா 2024 தேர்தல்ல செயல்படுத்தியிருக்கலாம். அதைச் செஞ்சிருந்தாங்கன்னா மக்களவையிலே 33 சதவீத இடங்களுக்குப் பெண்கள் இப்பவே வந்திருப்பாங்க.”


“ஓ… இவங்க நிறைவேத்தின சட்டத்தை இவங்களே நடைமுறைப்படுத்தலையா? அப்படின்னா இப்ப ஒன்ஸ் அகெய்ன் விமன்ஸ் பில் கொண்டு வந்ததுல கிளியரா பாலிட்டிக்ஸ் இருக்குதுங்க அங்க்கிள்.”


தினமும் எங்களோடு நடையிலும் மரத்தடிப் பேச்சின்போதும் கலந்துகொள்கிற, ஆனால் கருத்துச் சொல்லாத சகோதரி இதைச் சொன்னார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“டீ லிமிட்டேஷன் பில் பாஸ் ஆகியிருந்தா தமிழ்நாட்டுக்கு அதிகமாக எம்.பி. சீட் கிடைச்சிருக்கும்னு நேத்து பிஎம் பேசினாரு. அதிமுக தலைவர் அதைத்தான்  சொல்றாரு. எல்லா மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கிறதுதான் நோக்கம்னும் மோடி சொன்னாரு. அதை எதிர்க்கட்சிகள்லாம் சேர்ந்து தடுத்துட்டாங்கன்னாரு.”


இது அந்தப் பெண்ணின் இணையர்.


“சம வாய்ப்பா? முதல்ல இப்படி  அதிகாரப் பூர்வ ஒலிபரப்பு, ஒளிபரப்பு ஏற்பாடுகளோட நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்ல? அதே வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கொடுத்திருக்கணும்ல.,. நாங்க ஏன் எதிர்க்கிறோம்னு அவங்க விளக்கியிருப்பாங்கல்ல?”


“அப்படியொரு நியாயமான ஏற்பாடு வந்தாதான் நம்ம டெமாக்ரசியே ஹெல்த்தியாயிடுமே… ஹூம்…”


“எனக்கொரு டவுட்… எதிர்க்கட்சிகள் ஆதரிக்க மாட்டாங்க, வேணும்கிற மெஜாரிட்டி கிடைக்காது, மசோதா தோத்துப் போயிடும்னு அவங்களுக்குத் தெரியாதா?”


“ஏன் தெரியாது… தெரிஞ்சுதான் செஞ்சாங்க. அவங்க ஒண்ணும் ஏமாந்து போகலை. இதையே ஒரு குற்றச்சாட்டா சொல்லிச் சொல்லி, எதிர்க்கட்சிகளை ரிடிகியூல் பண்ணலாம், அவங்களைப் பத்தித் தப்பான எண்ணத்தை ஏற்படுத்தலாம்கிற திட்டம் இதிலே இருக்குதுன்னுதான் அனலிஸ்ட்டுகள் சொல்றாங்க.”


இதைச் சொன்ன நண்பரைப் பார்த்து அங்கீகரித்துத் தலையசைத்தேன். எழுவதற்குத் தயாரானபோது மூளையில் ஒன்று முளைத்தது.


“மாநிலங்களுக்கு சம வாய்ப்புங்கிறது உண்மைன்னா, எனக்கு இந்த நொடியில ஒரு புதுக் கருத்து தோணுது… என்னோட சொந்தக் கருத்து… இந்தியா ஒரே நாடா உருவானதே விடுதலைப் போராட்டத்தாலேதான். சம வாய்ப்புன்னா, பெரிய மாநிலம், சின்ன மாநிலம்னு வேறுபாடு இல்லாம, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரே எண்ணிக்கையிலே நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்னு ஒரு மாற்றத்தைச் செய்யலாமே… இப்ப இருக்கிற ஒன்றிய ஆட்சிக்காக மட்டுமில்லாம எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கருத்தை முன்வைக்கிறேன்….”


“அதாவது தமிழ்நாட்டுக்கு ஐம்பது சீட்டுன்னா, கேரளத்துக்கும் ஐம்பது, உத்தரப் பிரதேசத்துக்கும் ஐம்பது, காஷ்மீருக்கும் ஐம்பது, திரிபுராவுக்கும் ஐம்பது, பெங்காலுக்கும் ஐம்பது, மஹாராஷ்டிராவுக்கும் குஜராத்துக்கும் ஐம்பது ஐம்பது, நாகாலாந்துக்கும் மணிப்பூருக்கும் ஐம்பது ஐம்பது… ஓ… அதிரடியா இருக்கே!”


“சார் சொல்றது ஒரு சிஸ்டமாவே ஆகுதுன்னு வெச்சுக்குவோம், பாப்புலேஷன் அதிகமா இருக்கிற மாநிலத்துக்கு அதிகமான மெம்பர், பாப்புலேஷன் கம்மியா இருக்கிற மாநிலத்துக்குக் கொஞ்சமான மெம்பர்னு இருக்கிற இப்பத்திய  நிலைமை இல்லாமப் போயிடும். அதிகமான மெம்பர்ஸ் இருக்கிற மாநிலங்களோட கண்ணோட்டங்கள்தான் பார்லிமென்ட்டுல ஸ்ட்ராங்கா இருக்கும்கிற நிலைமை மாறிடும்…  உண்மையான பெரும்பான்மையோட சட்டங்கள் நிறைவேறும்… ஆகா, கற்பனை பண்றதுக்கே நல்லா இருக்கே!”

“ஆனா, நம்ம பாண்டிச்சேரி மாதிரி யூனியன் டெரிட்டரிகளுக்கு என்ன பண்றது? அவங்களுக்கும் இதே எண்ணிக்கைதானா?”


நான் எதிரபார்க்காத கேள்வி இது. என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தபோது–


“முதல்ல இந்த சிஸ்டத்தை ஏத்துக்கிடட்டும்.  யூனியன் பிரதேசங்களுக்கு என்ன நியாயமான ஏற்பாடுன்னு விவாதிச்சு, எக்ஸ்பெர்ட்டுகள்ட்ட ஒபினியன் வாங்கி நல்ல முடிவு எடுக்க முடியாதா என்ன…”


தொடக்கத்தில், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியதுதானே என்று கேட்டவர்தான் இவ்வாறு கூறி உரையாடலை நிறைவு செய்தார். எங்களின் புதிய உற்சாகத்தைப் புதிரோடு பார்த்தார் நாங்கள் எழுந்து நடந்து சென்றடைந்த தேநீர்க் கடையின் உரிமையாளர்.
 


Saturday, 18 April 2026

சவால் முடிவில் சுதந்திரம்! 'மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா'


 

                                இந்தித் திரைப்படம் – 2014


ருவர் விந்தி விந்தி நடப்பதை, திக்கித் திக்கிப் பேசுவதை, திரும்பத் திரும்ப “என்ன சொன்னாய்” என்று காதில் கைவைத்துக் கேட்பதை, குறுக்கும் நெடுக்குமாய்க் காரணமின்றி நடப்பதை… நகைப்புக்குரிய நடத்தைகளாகச் சித்தரித்த திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. சமூக வக்கரிப்பின் அந்தப் பிரதிபலிப்புகளுக்கு மாற்றாக, சமூக மனசாட்சிக்கான குரலாகவும்  படங்கள் வருகின்றன. அத்தகைய ஒரு கலைப் படைப்புதான் 2014இல் இந்தியாவில் உருவாகி உலக அரங்குகளுக்குச் சென்ற ‘மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா’.

மார்கரிட்டா என்பது ஒரு மது. அதனை நேரடியாக அல்லாமல் உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) மூலம் அருந்துவது ஒரு சவால். ஆயினும் இறுதியில் அந்த பானத்திற்குரிய சுவை சுகமான அனுபவமாகிவிடும். அதே  போல ஒரு மாற்றுத் திறனாளி தனது இயற்கையான உணர்வுகளுக்கு ஏற்படும் சவால்களை மீறிச் சிறகடிப்பதை இந்தப் படம் பேசுகிறது.

தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் துடிப்பான இளம்பெண் லைலா. மூளை முடக்குவாதம் இருப்பதால், கைகளைப் பயன்படுத்துவது, தெளிவாகப் பேசுவது உள்ளிட்ட உடற்செயல்பாடுகள் கடினமானவை; சக்கர நாற்காலியில்தான் அவளது உலகம் பயணிக்கிறது. ஆனால், இசையமைக்கும் திறனும் எழுத்தார்வமும் உள்ள அவளது மனம் எதற்கும் கட்டுப்படாதது. அந்த மனதில் அந்த வயதுக்கே உரிய காதல் உணர்வும் பாலியல் விருப்பமும் குடிகொள்கின்றன. இந்த இடத்திற்கு வருவதன் மூலம், மாற்றுத் திறனாளிகளின் உடல் நிலைகளுக்கு அப்பால் உணர்வுச் சிக்கல்கள் பற்றிய கவன ஈர்ப்பைக் கோருகிறது படம்.

கல்லூரி இசைக்குழுவில் ஒரு மாணவனைக் காதலிக்கிறாள் லைலா. அதை  வெளிப்படுத்தும்போது  நிராகரிக்கப்படுகிறாள். அந்த வலி தன்னை முடக்கிவிட அவள் அனுமதிக்கவில்லை. அது அவளுடைய எல்லையை விரிவுபடுத்துகிறது.

மேல் படிப்பிற்காக நியூயார்க் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறாள். ஒப்பீட்டளவில் அங்கே கிடைக்கும் சுதந்திரம், இந்தியச் சூழலில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் வெளிகளை அவளுக்குப் புரிய வைக்கிறது. படம் பார்க்கிறவர்களுக்கும்தான்.

நியூயார்க்கில் லைலாவுக்கு, பார்வை மாற்றுத் திறனாளியும் பாகிஸ்தான்–பங்களாதேஷ் பெற்றோருக்குப் பிறந்தவளுமான கானும் நெருங்கிய தோழியாகிறாள். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.  நாகரிக சமுதாயம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ள தற்பாலின ஈர்ப்புக்கு, இவர்களும் அப்பாற்பட்டவர்களல்ல என்று காட்டப்படுகிறது. அந்த உறவு அளவோடு, கலைக் கண்ணியத்துடன் படமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது. தோழியை அழைத்துக்கொண்டு தில்லி வரும் லைலா, பெற்றோரிடம் அறிமுகப்படுத்த, அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகிறாள் கானும்.

அதேவேளையில், அமெரிக்காவில் தன்னுடன் புரிதலோடு பழகும் ஜாதேர் என்ற இளைஞன் மீதும் லைலாவுக்குக் காதல் ஏற்படுகிறது. இதை மறைக்காமல் தெரிவிக்கிறபோது, கானும் காழ்ப்புணர்வுக்கு ஆளாகிறாள். “இதை எதுக்கு என்னிடம் சொன்ன,” என்று அவள் கேட்க, “உன்னிடம் எதையும் மறைக்க விரும்பல,” என்று இவள் பதிலளிக்கிற இடம் தோழமைக்கே உரியது.

மகளை ஒரு குழந்தையாகவே கருதும் தாய் சுபாங்கினி கபூர், அவளுடைய புதிய மாற்றங்களையும், சுதந்திர வேட்கையையும் கண்டு தவிக்கிறார். அவற்றை ஏற்கத் தடுமாறுகிறார். கோபமான சண்டையாகவும் மாறுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் கடைசி மணித்துளிகளுக்காகக் காத்திருக்கும்போது, லைலாவிடம், “நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போய்விடு,” என்கிறார். அவர் சரியான புரிதலுக்கும் பரிவுக்கும் வந்துவிட்டதை, அவ்வாறு விளக்குகிற வசனம் ஏதுமில்லாமலே புரிந்துகொள்கிறோம். தாய்–மகள் பிணைப்பும் பிரிவும் உணர்வுப்பூர்வமானது.

நியூயார்க்குக்குத் வரும் லைலா, தந்தையிடம் “அப்பா இன்னிக்கு நான் வெளியே போகணும்,” என்று கூறுகிறாள். “எங்கே” என்று அவர் கேட்கிறபோது, “எனக்கு ஒரு டேட் இருக்கு,”  என்கிறாள். காதல் இணையுடன் ஊர் சுற்றப் போவதை அவள் இப்படித் தெரிவித்ததும், பயணத்திற்குத் தந்தை உதவுகிறார். அமெரிக்காவின் இந்தச் சமூக ஏற்புக்கு இந்தியத் தகப்பனும் பழகிவிட்டதை அந்த இடம் சித்தரிக்கிறது. அவள் தனது “டேட்டிங்”  துணையாக யாரைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பது சுவாரசியமான முடிவு. விடுதலையும், சுயமரியாதையைத் தொலைக்காத சுயநேசமும் கலந்த சுதந்திரத்தின் அழகிய வெளிப்பாடு அது.

லைலாவாக கல்கி கோய்ச்லின் நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதற்காக அவர் சக்கர நாற்காலியிலேயே வாழ்வது, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு முறையையும் உடல் மொழியையும் பயிலுவது என ஆறு மாதங்கள் தீவிரப் பயிற்சி எடுத்தாராம். தோழியாகவும் காதலியாகவும் வரும் சயானி குப்தா நடிப்பும் அப்படித்தான். பார்வை மாற்றுத் திறனாளிகளின் பள்ளிக்குச் சென்று, அவர்களின் கண்கள் நிலைகொள்வது, பொருள்களைத் தடவிப் பார்த்துக் கண்டறிவது உள்ளிட்ட செயல்முறைகளைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கினாராம். தாயாக ரேவதி தன் பல்லாண்டு அனுபவத்துடன் நுட்பமான உணர்வுகளை முகமாற்றங்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையை எழுதி இயக்கியவர் சோனாலி போஸ். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரி மாலினி சிப் என்பவர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.  சிறந்த எழுத்தாளர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான களப் போராளி. ஒருமுறை அவர் சோனாலியிடம், "மக்கள் என்னை ஒரு மாற்றுத்திறனாளியாகப் பார்க்கிறார்கள், ஆனால் ஒரு மனுசியாக எனக்கிருக்கும் உணர்வுகளை யாரும் கவனிப்பதில்லை," என்று கூறினார். குறிப்பாக, "எனக்கு ஒரு 'செக்ஸ் லைஃப்'  இருக்கக் கூடாதா," என்ற அவரது நேரடியான கேள்வி தன்னைப் பெரிதும் பாதித்தது என்றும், இந்தக் கதையின் கரு விளைந்த இடம் அதுதான் என்றும் சோனாலி கூறியிருக்கிறார்.

கதையை உயிர்ப்புள்ள காட்சி வடிவமாக்குவதில் ஒளிப்பதிவாளர் ஆனி மிசாவா, கதை நகர்வுகளோடு ஒன்ற வைப்பதில் இசையமைப்பாளர் மைக்கி  க்ளேரி, பார்வையாளர்கள் இணைந்து பயணிக்கச் செய்வதில் தொகுப்பாளர் மோனிஷா பால்தவா ஆகியோர் பங்களிப்பு அருமையான துணையாகியிருக்கின்றன. துணிந்து இப்படத்தில் முதலீடு செய்த விஸ்காம் 18 மோஷன் பிக்சர்ஸ், இஷான் டாக்கீஸ் நிறுவனங்கள் பாராட்டுக்குரியவை. ஒட்டுமொத்த ஒத்துழைப்பில் படத்திற்கும் கோய்ச்லின், மைக்கி க்ளேரி உள்ளிட்ட கலைஞர்களுக்கும் தேசிய திரைப்பட விழா உள்பட  பன்னாட்டு மேடைகளிலும் விருதுகள் வந்து சேர்ந்தன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஃபிரேம்லைன்’ என்ற உலக எல்.ஜி.பி.டி.க்யூ. திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் சிறப்பு விருதை இந்தப் படம் வென்றது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்தபோது, தமிழில் 2019இல்  ராம் இயக்கத்தில், மம்மூட்டி,  சமுத்திரகனி, குழந்தை நட்சத்திரம் சாதனா, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி மீரா ஆகியோர் நடிப்பில் வந்த ‘பேரன்பு’ படம் நினைவுக்கு வந்தது. தாயின் அரவணைப்பை இழந்த பெண் குழந்தையின் பாலியல் தேவையைப் புரிந்துகொண்டு, அதை எப்படி நிறைவேற்றுவது ஒரு தகப்பன் தவிக்கிற கதை அது. “மார்கரிட்டா படத்தைப் பார்த்தபோது இத்தகைய கதைகளை இந்தியச் சமுதாயத்திற்காக உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தேன்,” என்று ராம் கூறியதும் நினைவுக்கு வந்தது.

‘மார்கரிட்டா’ வசதியான நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த லைலாக்களைப் பற்றி யோசிக்க வைத்ததென்றால், ‘பேரன்பு’ வாடகைக் கார் ஓட்டுரான அமுதன் போன்ற எளிய குடும்பங்களைச் சேர்ந்த பாப்பாக்கள் பற்றிச் சிந்திக்க வைத்தது. இரண்டுமே திரையரங்க வெளியீடுகளிலும் வெற்றி பெற்றன. இன்னும் வரட்டும் இத்தகைய படைப்புகள். 

[0]

ஊனமுற்றோர் உரிமைக்குரல்காலாண்டிதழில் (ஏப்ரல், மே, ஜூன் –2026) எனது கட்டுரை


Saturday, 11 April 2026

ஜனநாயகன்: நிழல் சண்டையும் நிஜக் கவலையும்


வெக தலைவர் விஜய் நடித்த கடைசிப் படம் என்ற அறிவிப்பால் மிகுந்த எதிர்பார்பையும், வசூல் பரப்பையும் ஏற்படுத்தியிருப்பது ‘ஜனநாயகன்’. அதற்கு இன்னமும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. விஜய் கட்சியின் தலைவர்கள் அரசியல் காரணத்தைக் கூறுகிறபோது, தமிழ்நாட்டுத் தேர்தல் கள பரப்புரையாக திமுக மீதும் குற்றம் சாட்டுகின்றனர். மற்ற பிரச்சினைகளில் கொள்கை எதிரி எனப்படுவோரை மேம்போக்காகத் தொட்டும் தொடாமலும் கடக்கிறவர்கள், இந்தத் திரைப்பட வியாபார விசயத்தில் மட்டும் பாஜக தலைவர்களையும் குற்றம் சாட்டுகிறார்கள். என்ன கொள்கையோ என்ன எதிரியோ.

இந்நிலையில் அதன் சில காட்சிகள் திருட்டுத்தனமாகக் கசியவிடப்பட்டுள்ளன. அது வணிக ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் செயல் என்ற கண்டனம்  கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ப. ரஞ்சித் உள்ளிட்ட பல கலைஞர்களிடமிருந்தும் இதர ஆளுமைகளிடமிருந்தும் வந்துள்ளது.

அதே வேளையில், கசிந்திருக்கும் அந்தச் சில காட்சிகளில் கூட குறிப்பிட்ட சிறுபான்மை மதம் சார்ந்தவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தச் சித்தரிப்பும் கூட சமூக அறமற்ற செயல் என்ற ஆதங்கம் இயக்குநர் அமீர் உள்ளிட்டோரிடமிருந்து வந்துள்ளது.

கசிவுக் காட்சிகளை நான் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவுமில்லை. ஆனால். அமீர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு நிச்சயமாக இடமிருக்கிறது என்பதைத் திரையுலக வட்டாரத் தகவல்களும் சமூக ஊடகப் பகிர்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. 

இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் மறுதயாரிப்பு என்று கூறப்படுகிறது. தனது கடைசிப் படத்திற்கு ஒரு அசலான ஆக்கத்தை, அருமையான கற்பனைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு படநிறுவன வாசற்படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க் கதைஞர்களிடமிருந்து பெற விஜய் அக்கறைப்படாதது விசனப்படத் தக்கதுதான்.

“மூலப் படத்தில் வில்லன் கதாபாத்திரமும் அவனோடு தொடர்புடைய சில காட்சிகளும் குறிப்பிட்ட மத அடையாளத்தோடு சித்தரித்திருப்பவார்கள். தமிழில் இயக்குநர் ஹெச். வினோத் சமூகப் பொறுப்புணர்வுடன் வில்லனை மத அடையாளமில்லாமல் பொதுவாகச் சித்தரித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கசிந்த காட்சிகள் அதற்கு மாறாக இருப்பதுதான் அமீர் போன்றவர்களின் அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது,” என்கிறார் திரைச் செய்தியாளரான ஒரு  நண்பர்.

தீவிரவாதம் என்றாலே குறிப்பிட்ட மத அடையாளத்தைத் தூக்கலாகக் காட்டுகிற உத்தியைத் தமிழ் சினிமாவிலும் ஒரு மலிவான ஏற்பாடாக எப்போதோ தொடங்கிவிட்டார்கள். ஆயுதம் ஏந்துகிறவர்களின் தோற்றம், பயன்படுத்தும் குறியீடுகள் எல்லாமாகச் சேர்ந்து, நாயக பிம்பக் கட்டுமானத்துக்காக என, புரிதலும் பொறுப்பும் இல்லாத  பழைய வில்லன் பிம்பக் கட்டுமானம் இன்னமும் தொடர்கிறது. வணிக ரேஸ் மைதானத்தில் வெற்றிக் குதிரை என்று நம்பவைக்கப்பட்டுள்ள இந்தச் சூத்திரத்தைப் புதிய, இளைய இயக்குநர்களும் தொடர்வது ஒரு கலையவலம்தான். அந்த அவலத்தின் அடியில், நல்ல கலையாக்கத் திறனுடன், கற்பனை வளத்துடன், மக்களின் நல்லிணக்க வாழ்வில் நாட்டமும் சமூக மாற்றத்திற்கான பொறுப்ணர்வும் கொண்ட பல படைப்பாளிகள் புதையுண்டு திணறுகிற கொடுமையும் இருக்கிறது.

மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் ஒரு தலைவரின் படத்தில், குறிப்பிட்ட பிரிவினரைத் தாழ்த்திக் காட்டும் காட்சிகள் இடம்பெறுவது முரணாக இருக்கிறது என்பதே விமர்சிப்பவர்களின் வாதம். விஜய் படங்களை விரும்பிப் பார்த்து வந்திருப்பவன், குறைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டியும் வந்திருப்பவன், ‘மெர்சல்’ படம் விவகாரத்துக்கு உள்ளாக்கப்பட்டபோது தமுஎகச நடத்திய கண்டனக் கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் அவர்களது வாதம் எனக்குச் சங்கடத்தைத் தருகிறது. திரைப்பட ரசனையைத் தாண்டி சமூகத் தாக்கம் பற்றிய கவலை தொற்றிக்கொள்கிறது. என்ன வேலை இது மிஸ்டர் ஜனநாயகன் என்று கேட்க வைக்கிறது.

சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதற்கு, படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய சித்தரிப்புகள் குறித்து தணிக்கைக் குழு விளக்கம் கேட்டிருப்பது ஒரு காரணமாகப் பேசப்படுகிறது. அந்த சர்ச்சைகளும் கசிந்தால் தேவலை. பிளவுக் கருத்துகளையும் பகைமைப் பார்வைகளையும் திட்டமிட்டே புகுத்திய சில படங்களுக்குச் சான்றிதழ் வழங்கத் தயங்காத தணிக்கைக் குழு இந்தப் படத்தில் இவ்வளவு கறார் காட்டுவது ஏன் என்ற கேள்வி பின்தொடர்கிறது.

இந்த முரண்களோடு இன்னொன்றையும் கவனிக்கிறேன். உள்ளடக்கம் சார்ந்து சமூக அக்கறையோடு விமர்சிக்கிறவர்கள் காட்சிகள் கசியவிடப்பட்ட அநீதியையும் கண்டிக்கிறார்கள். கசியவிடப்பட்டதைக் கண்டிக்கிற யாரும் அந்த உள்ளடக்க அநீதிக்குள் போகவில்லை.

தொழில்நெறி என்ற முறையில்  சொல்வதானால் – படக்காட்சிகள் கசியவிடப்பட்டது வன்மையான கண்டனத்திற்கு உரியது. கலைநெறி என்ற முறையில் சொல்வதானால் – பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் பற்றிய எதிர்மறை பிம்பத்தை வலுப்படுத்தும் மலிவான வணிக உத்தி இந்தப் படத்திலும் இருக்கிறதென்றால் அது எதிர்க்கப்பட வேண்டியது.

[இன்றைய காலை நடை நேர நிறைவுக் கட்டத்தில் பூங்கா மர நிழல் இருக்கையில் நீண்ட நேரம் அமரவைத்துவிட்ட உரையாடலில் நான் சொன்னவற்றின் பிழிவு]

[0]

முகநூல் பதிவு (ஏப்ரல் 11, 2026)



Tuesday, 7 April 2026

சுதந்திரச் சிறகை விரிக்கும் ‘சிரய்யா’


     புதிய வலைத் தொடர்


பையன் அம்மாவிடம்  கேட்கிறான்: “இந்த விலங்குக்கு ஏனம்மா கழுத்து இவ்வளவு நீளமா இருக்குது?“ தாய்  பதிலளிக்கிறார்: “பாலைவனத்துல புதர்களுக்குள்ள கழுத்தை நீட்டி இலை தழைகளைக் கடித்துச் சாப்பிடறதுக்கு வசதியா இப்படி இருக்குதுடா செல்லம்.”


தொடர்ந்து அவன் வினவுகிறான்: “இதோட கண்ணு முன்னாடி எதுக்கும்மா ஏதோ உறை போட்ட மாதிரி சதை தொங்குது?” தாய் விடையளிக்கிறார்: “அதுவாடா கண்ணா, பாலைவனத்துல எப்பவும் காத்துல சூடான மணல் பறந்துக்கிட்டே இருக்கும்ல… அது கண்ணுக்குள்ள போகாமத் தடுக்கிறதுக்குத்தான் இப்படி தடை போட்டிருக்கு.”


“சரி, இதோட கால் அடிப்பக்கத்தைப் பாருங்கம்மா, மத்த விலங்குகளைப் போல இல்லாம கவுத்துப் போட்ட தோசைக்கல்லு மாதிரி, நல்லாவே இல்லையே…” “இல்லடா தங்கம், பாலைவனத்துல எங்க பார்த்தாலும் மணல் தரைதானே, அதுல கால் புதையாம இருக்கிறதுக்கு இதுதான் உதவுது.”


“இந்த மான், குதிரை மாதிரி விலங்குக்கெல்லாம் முதுகு நேரா அழகா இருக்குதுல்ல, இதுக்கு  என்னமோ பானையைக் கவுத்து வச்ச மாதிரி கூம்பியிருக்குது பாருங்கம்மா.” “பட்டூ, அதுக்குள்ளதான் தண்ணீர் சேமிக்கிற அறை இருக்குது. பாலைவனத்துல எல்லா இடத்துலேயும் தண்ணீர் கிடைக்காதுல்ல, அப்ப இதுக்குள்ள இருக்கிற தண்ணீரையே பயன்படுத்திக்கிடும்.”


“ஓ, பாலைவனத்துல வாழுறதுக்கு ஏத்த மாதிரிதான் இதோட உடம்பு இப்படியெல்லாம் இருக்குது, அப்படித்தானே அம்மா?“ “ஆமா. சரியா புரிஞ்சிக்கிட்டியே என் புத்திசாலிக் கண்ணு,” என்று, மகனின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்ன மகிழ்ச்சியோடு தலையை வருடினார். ஆனால், அடுத்ததாக அவனிடமிருந்து வந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவராக அதிர்ந்துபோய்த் திகைத்தார்.


சிறுவன் கேட்டான்: “அப்படின்னா இதை ஏம்மா இங்க வச்சிருக்காங்க?”  அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ஒட்டகத்தைப் பற்றி. அது வைக்கப்பட்டிருந்த இடம் உயிரியல் பூங்கா என்று நாசூக்காகப் பெயர்  மாற்றப்பட்ட மிருகக்காட்சி சாலை.


பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கில நகைச்சுவைத் தொகுப்பொன்றில் படித்த இந்தக் குட்டிக் கதையை, அண்மையில் ஓடிடி (ஜியோ ஹாட்ஸ்டார்) தளத்தில் வெளியாகியுள்ள “சிரய்யா” என்ற வலைத்தொடர் நினைவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒட்டகம் போலவே, ஆகாயத்தில் பறப்பதற்கான சிறகுகள் இருந்தும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் கிளிகளுக்கு அவற்றால் பயனில்லை. எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உரிய நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தாலும், இனிய வார்த்தைகளால் கொஞ்சப்பட்டாலும் கூண்டு கூண்டுதானே? வாய் இருந்தும் பேச அனுமதிக்கப்படாத, கண் இருந்தும் சுற்றிலும் பார்க்கும் சுதந்திரம் ஏற்கப்படாத, கை இருந்தும் உயர்த்த விடப்படாத, தலை இருந்தும் “வேண்டாம்” என்று மறுத்து இடம் வலமாக அசைக்க முடியாத

 பெண்கள் அந்த ஒட்டகத்தையும் கிளியையும் போன்றவர்கள்தானே? 



“சிரய்யா” என்றால் இந்தியில் “பறவை” என்று நேரடிப் பொருள். உருவகப் பொருளாக “சிறகடிப்பு” என்றும் கொள்ளலாம்.  தனக்கு நாட்டமோ, மனநிலையோ, உடன்பாடோ இல்லாத செயல்களுக்கு – உடலுறவு உள்பட – வல்லடியாகக் கட்டாயப்படுத்தப்படும் பெண் “வேண்டாம்” என்றோ, “முடியாது” என்றோ மறுக்கிற சுதந்திரச் சிறகடிப்பு பற்றிப் பேசுகிறது 6 அத்தியாயங்கள் கொண்ட  இந்தத் தொடர்.


மும்பை நகரில் ஒரு உயர் நடுத்தரக் குடும்பம். வீட்டின் தலைவர் சுகுமார் பிரம்மர் ஒரு கவிஞர், இதிகாச விளக்கமளிப்பவர். அந்தக் கதைகளில் வரும் பெண்களின் ஆளுமையைப் பற்றி வகுப்பெடுப்பவர். அவருடைய மூத்த மகன் வினய் குமார். அவனுக்கு மனைவியாய், வீட்டின் மூத்த மருமகளாய் வருபவள் கம்லேஷ். “புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு கண்ணே” என்று சமூகம் என்னவெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறதோ அதையெல்லாம் கடைப்பிடிக்கிறவள். கணவனின் தம்பி அருண். அவனைத் தன் மகன் போலக் கருதி அன்பையும் கவனிப்பையும் செலுத்தி வளர்க்கிறாள் கம்லேஷ்.


மண வயதை அடைகிறவனுக்கு எனக் குடும்பமே சேர்ந்து பார்த்து முடிவு செய்கிறவள் பூஜா. புதிய சிந்தனைகளோடும் ஈடுபாடுகளோடும் வளர்ந்தவள். எந்த அளவுக்கு என்றால், திருமணம் முடிவான பிறகு ஒரு நாள்  ஆட்டோவில் செல்லும் கம்லேஷ், சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கிற ஆர்ப்பாட்டத்தில் பூஜாவும் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.  திருநர், தற்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகளுக்கான போராட்டம் அது (திருநர் உரிமைகளை மறுக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நேரத்தில் பொருத்தமான காட்சிதான்!).


திருமண நாளின் முதலிரவில், உடல் நலத்திலும், மன நிலையிலும் தயாராக இல்லாத பூஜாவைப் படுக்கையில் சாய்த்து வலுக்கட்டாயமாகத் திரும்பத் திரும்ப உறவுகொள்கிறான் அருண். காலையில் மொட்டை மாடியில் தனியாகக் கண்ணீர் மல்க நிற்கும் பூஜாவை நெருங்கி, நடந்தது என்னவென்று கேட்கிறாள் மூத்தவள். தனது  ஒப்புதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி, “என்னை அவன் ரேப் செய்துவிட்டான்” என்கிறாள் இளையவள்.


இதைக் கூடவா ஒரு பெண் பிரச்சினையாக்குவாள் என்று நினைக்கும் கம்லேஷ்  சினத்தோடு கன்னத்தில் அறைகிறாள்.  தாய் வீட்டுக்குச் செல்லும் பூஜாவைப் பெற்றோர் புரிந்துகொள்ளாமல் திருப்பி அனுப்புகிறார்கள். தேனிலவுக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று பிரம்மர் குடும்பத்தினர் அதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதுவோ அவளுக்கு இம்சை நிலவாகிறது. அதைத் தவிர்ப்பதற்குச் சொல்லும் காரணத்தை உண்மையாக்குவதற்காகத் தனக்குத் தானே ரத்தக் காயம் ஏற்படுத்திக்கொள்கிறவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.


மருத்துவர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவலும், அதைத் தொடர்ந்து பெண்ணுரிமை இயக்கத்தினர் உள்பட பலரிடம் விசாரித்தறியும் உண்மைகளுமாகச் சேர்ந்து கம்லேஷ் புதுப் பரிணாமம் எடுக்கிறாள். எந்த அளவுக்கு என்றால், அருணைச் சிறையில் தள்ள முடிவு செய்கிறாள்.


அவள் அப்படிப் புதுப்பிறவி எடுத்ததில், “குற்றத்தைச் செய்பவன் மட்டுமல்ல, அதை வேடிக்கை பார்க்கிறவர்கள், பொருட்படுத்தாமல் விடுகிறவர்கள், கண்டிக்காமல் மௌனமாக இருப்பவர்கள் எல்லோருமே குற்றத்தின் பங்காளிகள்தான்” என்ற கருத்துக்கும் பங்கிருக்கிறது. ‘மகாபாரதம்‘ கதையிலிருந்து முன்னொரு நாள் அதை அவளுக்கு எடுத்துக் கூறியவர் மாமனார்தான். இப்போதோ, கவிதைகளில் முற்போக்காகக் காட்டிக்கொண்டு, கடைந்தெடுத்த ஆண் மையக் கலாச்சாரத்தின் உச்சத்தில் நிற்கிறார்! பழமையில் நின்ற மருமகள் புதுமைப் பெண்ணாவதும், முற்போக்காகப் பேசிய மாமனார் பிற்போக்குவாதிதான் என்று வெளிப்படுவதும் விறுவிறுப்புச் சேர்க்கின்ற திருப்பங்கள்.


அடுத்தடுத்து என்ன நடக்கிறதென்ற கதையைச் சொல்லப் போவதில்லை. அதைச் சொல்வது, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகிற இந்த இந்தி வலைத் தொடரை வீட்டில் அமர்ந்து பார்க்கிற ஆர்வத்தைக் குறைத்துவிடக்கூடும்.


செய்தி படிப்பது உள்ளிட்ட மனைவியின் புதிய ஆர்வங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் வினய், திருமண நாளிலிருந்தே அவளிடம் “ஐ லவ் யூ” சொல்லக் கூச்சப்பட்டு எல்லோரின் பரிகாசத்துக்கு உள்ளளாகிறான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதைத் தானாக முன்வந்து சொல்கிறான். அவன் அப்படிச் சொல்கிற சூழல் உணர்ச்சிகரமானது.


பாலியல் வன்கொடுமைக்குக் கடும் தண்டனைகள் அளிக்கும் சட்டங்கள் இருப்பினும், மண உறவு சார்ந்த அத்துமீறல் ஒரு வல்லுறவுக் குற்றம் என்று இந்தியச் சட்டம் வரையறுக்கவில்லை. கொடுமைகளை அனுபவிக்கும் பல பெண்கள் நீதிமன்றத்தை நாடாமல் இருப்பதற்குக் காரணம், குடும்ப கௌரவத்தைக் காக்க வேண்டும் என்ற கெடுபிடிகள் மட்டுமல்ல, சட்டம் துணை செய்யாது என்பதும்தான். இதை எடுத்துக் காட்டுகிற முதல் இந்திய வலைத் தொடராக ‘சிரய்யா’ வந்திருக்கிறது.


நேரடியாகச் சட்டம் இல்லை என்ற நிலையில், நிச்சயமாகக் கைது செய்ய இட்டுச் செல்லக்கூடிய வரதட்சனை தடைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் போடலாம் என்று வழி சொல்கிறார் கம்லேஷ்சின் தாத்தாவான மூத்த வழக்குரைஞர். பூஜா அதற்குத் தயாராக இருக்கிறபோது, நேர் வழியில்தான் இதைக் கையாள வேண்டும் என்று கம்லேஷ் உறுதியாக நிற்பது பெண்மைக்கு மரியாதை.


மருமகள்கள் அடங்கிப் போவதைப் பார்த்து, “உங்களுக்குச் சட்டத்தின் உதவி இல்லையென்றால் என்ன? அதை விட வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதுதான் உங்கள் குரல்,” என்று உசுப்பிவிடுகிறார் பாட்டி. தன் காலத்தில் சாத்தியமில்லாமல் போனது இப்போதாவது நடப்பாகட்டும் என்ற எண்ணத்துடன் இப்படிக் கைகாட்டுகிற பாட்டியைப் படம் பார்க்கிற எல்லாப் பெண்களுக்கும் பிடித்துப் போகும். அவர் எதிர்பார்த்தபடி இருவரும் வாய் திறக்கிறார்கள், சிறகை விரிக்கிறார்கள்.


குடும்ப விழாவில் கூடியிருக்கும் பெண்களும் ஆண்களும் பிரம்மர் பேச்சைக் கேட்டுக் கலைந்து செல்ல எழுகிறார்கள். அப்போது கம்லேஷ் மற்றொரு குரலாயுதத்தைச் சுழற்றுகிறாள். “என் சம்மதம் இல்லாமல் கணவன் என்னைத் தொட்டதேயில்லை என்று மனசாட்சியோடு சொல்லக்கூடிய பெண்கள் மட்டும் இங்கேயிருந்து வெளியேறுங்கள்,” என்கிறாள்.


கம்லேஷ் பாத்திரத்தில் திவ்யா தத்தா, பூஜாவாக பிரசன்னா பிஷ்த் இருவர் நடிப்பும் கைகுலுக்கிப் பாராட்டத் தக்கது. சஞ்ஜய் மிஸ்ரா (பிரம்மர்), ஃபைசல் ரஷீத் (வினய் குமார்), சித்தார்த் ஷா (அருண்) ஆகியோர் பங்களிப்பும் கச்சிதம்.


26 முதல் 39 நிமிடங்கள் வரையில் ஓடுகிற ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கலையாக்கமாகச் சுவைப்பதற்கும், கருத்தாக்கமாகச் சிந்திப்பதற்கும் ஏற்ற வகையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷஷாந்த் ஷா. கதையை எழுதியிருப்பவர் சௌம்யாபிரதா ரக்ஸித். சுபங்கர் பார் ஒளிப்பதிவு, ராஜ நாராயன் தேவ் இசையமைப்பு, அஸீம் சின்ஹா படத்தொகுப்பு ஆகியவை சேர்ந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் ஸ்ரீகாந்த் மோதா, மஹேந்திரா சோனி இருவரும் இந்தச் சிறகடிப்புக்கான ஆகாய வெளியை விரித்திருக்கிறார்கள்.


பழைய பாதையிலிருந்து விலகும் நேற்றைய தலைமுறை, புதிய பாதையமைக்கும் இன்றைய தலைமுறை, புதுப் பாதையில் நடைபோடப் போகும் நாளைய தலைமுறை – இந்தக் கூட்டணியின் அணிவகுப்பில் நம்பிக்கைச் செய்தியோடு தொடர் நிறைவடைகிறது.


[0]

மகளிர் சிந்தனைஏப்ரல் 2026 இதழில் எனது கட்டுரை