காஷ்மீரின் பஹல்காம் படுகொலைகள், பயங்கரவாதக் குழுவின் பதுங்கிடங்களில் விமானப்படையின் துல்லியத் தாக்குதல், ஒரே மனிதராக எழுந்து இந்திய மக்கள் வெளிப்படுத்திய ஒருமைப்பாடு… இவற்றுக்கிடையே உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, பெரிய அளவுக்குப் பேசப்படாத, நடவடிக்கை சத்திஸ்கரின் அபுஜ்மத் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் மீதான தாக்குதல். பல நாட்களாகவே அந்தப் பகுதியில் துணை ராணுவமும் மாநிலக் காவல்துறையும் கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளன. மே 21 நடவடிக்கையில் குறைந்தது 27 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பசவராஜூ என்று அழைக்கப்பட்டவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் நம்பல்லா கேசவ் ராவ்.
மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நாடாக மாற்றுவது என்ற அறிவிப்புடன் 2019ஆம் ஆண்டில் ‘ஆபரேஷன் ஜீரோ’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. சுமார் 10,000 துணை ராணுவத்தினர் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநில காவல் துறையிலிருந்து 2,000 பேர் இறக்கிவிடப்பட்டனர். அதன் கீழ், கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் ககர்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. ககர் என்ற பகுதியை இலக்கு வைத்த நடவடிக்கை அது. இந்த ஆண்டு மார்ச் 20 அன்று பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்பட்டு 30 பேர் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 16 அன்று கங்கர் பகுதியில் 29 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 17 மாதங்களில் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும், சரணடைந்தவர்கள் எண்ணிக்கையும் பெரிதும் அதிகரித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2024ஆம் ஆண்டில் மட்டும் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ள பல ஊடகங்கள், கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே மாவோயிஸ்ட்டுகள்தானா, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டார்களா என்று கேட்டுள்ளன.
என்கவுன்டர் என்றால்…
நடவடிக்கையின்போது நடந்த மோதல்களில் இந்தச் சாவுகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது ஆள்பலம், ஆயுதபலம் ஆகிய இரண்டிலும் குறைவாக இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட “என்கவுன்டர்” தாக்குதல்களே என்று மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன. என்கவுன்டர் என்றால் இரு தரப்பினரின் சந்திப்பு என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. நடைமுறையில் இரு தரப்பினரின் மோதலைக் குறிப்பிடுவதற்கு அந்தச் சொல் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இங்கே, காவல் துறையினர் எதிர்த் தரப்பை ஆயுதமின்றி நிறுத்திய பிறகு சுட்டுக் கொல்வதுதான் என்கவுன்டர் என்றாகிவிட்டது.
அப்படிப்பட்ட என்கவுன்டர்தான் இப்போது மாவோயிஸ்ட்டுகள் மீது நடத்தப்பட்டடதாகக் கூறப்படுகிறது. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு மாறாக இப்படிக் கொலை செய்வதா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) உள்பட பல கட்சிகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. “மாவோயிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பல முறை விடுத்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன. மத்திய அரசும் பாஜக தலைமையிலான சத்திஸ்கர் அரசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வரவில்லை,” என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கூறியிருக்கிறது.
“ஒன்றிய உள்துறை அமைச்சர் காலக்கெடுவை மறுபடி வலியுறுத்தியதும், சத்திஸ்கர் முதலமைச்சர் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையில்லை என்று அறிவித்ததும் மனித உயிர்கள் பறிக்கப்படுவதைக் கொண்டாடும் ஒரு பாசிச மனநிலையைப் பிரதிபலிக்கின்றன,” என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது. மேலும், “மாவோயிஸ்ட் கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற போதிலும், அரசு உடனடியாக அவர்களுடைய பேச்சுவார்த்தை வேண்டுகோளை ஏற்கவும், துணை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் வலியுறுத்துகிறோம்,” என்று அக்கட்சி குறிப்பிட்டிருப்பதும் கவனத்திற்குரியது.
“மாவோயிஸ்ட் தலைவரைக் கைது செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் சுட்டுக்கொன்றது, ஜனநாயக நெறிகளில் அரசுக்கு எந்த அளவுக்கு உறுதிப்பாடு இருக்கிறது என்ற கவலைகளை ஏற்படுத்துகிறது. என்கவுன்டர்கள் குறித்து ஒரு சுயேச்சையான நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று சிபிஐ வலியுறுத்தியிருக்கிறது. என்கவுன்டர்களைக் கண்டித்துள்ள மற்ற கட்சிகள், அமைப்புகளும் இதே போன்றுதான் அறிவித்திருக்கின்றன.
பேச்சுவார்த்தை வேண்டுகோள்
மேற்படி ஆபரேஷன்கள் தொடங்கியதிலிருந்தே பல முறை மாவோயிஸ்ட்டுகள் பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அண்மை நாட்களில் ஏற்பட்ட இழப்புகளைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் மேலும் முனைப்புடன் வைக்கப்படுகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபய், “நாங்கள் எப்போதுமே அமைதிப் பேச்சுக்குத் தயார். அதற்கு சாதகமான சூழலை (மத்திய/மாநில அரசுகள்) உருவாக்க வேண்டும்,” என்று கோரியிருக்கிறார்.
ஆபரேஷன் கொலைகளை நிறுத்த வேண்டும், புதிய ஆயுதப்படை முகாம்கள் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். குடிமைச் சமூகக் குழுக்களும் மக்கள் இயக்கங்களுமாக சுமார் 300 அமைப்புகள் உடனடி சண்டை நிறுத்தத்திற்கும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தெலங்கானாவில் அமைக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதிபதி சந்திரகுமார், உறுப்பினர் பேராசியர் ஹரகோபால் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, தெலங்கானா–சத்திஸ்கர் எல்லைப்பகுதியில் துணை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தை நடத்துமாறும் மத்திய அரசை வலியுறுத்தக் கேட்டுக்கொண்டனர். மாவோயிஸ்ட் பிரச்சினையை சட்டம்–ஒழுங்கு விவகாரமாகப் பார்க்கக்கூடாது, அதுவொரு சமூகப் பிரச்சினை என்று அவர்களிடம் கூறிய முதலமைச்சர், சண்டை நிறுத்தம் பற்றியோ, ஒன்றிய அரசுடன் பேசுவது பற்றியோ எதுவும் சொல்லாமல் அனுப்பிவிட்டார்.
இது பழக்கமாகிவிட்டால்
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டிற்கு பேட்டியளித்த மனித உரிமைச் செயல்பாட்டாளருமான ஹரகோபால், “மாவோயிஸ்ட் இயக்கத்தால் எழுந்துள்ள கேள்விகளுக்கு என்கவுன்டர்கள் மூலம் பதிலளித்துவிட முடியாது. துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது அரசுக்கு வழக்கமாகிவிட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னது போல மாவோயிஸ்ட் கட்சியை “ஒழித்துவிட்ட” பிறகும் கூட நிறுத்த முடியாமல் போகக்கூடும். இதே படைபலம் பின்னர் எதிர்க்கட்சிகள் மீதும், கருத்து மாறுபடுவோர் மீதும், குடிமைச் சமூகத்தின் மீதும் திருப்பிவிடப்படலாம்,” என்று கூறினார்.
இதற்கு முந்தைய காலங்களிலும் மாவோயிஸ்ட், மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் குழுக்களிடமிருந்து பேச்சு வார்த்தை வேண்டுகோள்கள் வந்ததுண்டு. முந்தைய அரசுகளும் அவற்றைப் புறக்கணிக்கவே செய்தன. நடந்த ஓரிரு பேச்சுவார்த்தைகளும் நிலையான மாற்றத்திற்கு வழியமைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, உள்நாட்டுக் கலகம் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை கோரி வன்முறைகளில் ஈடுபட்ட அமைப்புகளுடன் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பேச்சு நடத்தின. ஆனால், அதே அளவுக்கு, மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் பேச்சு நடத்த முன்வரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் ‘வீக் ஷனம்’ தெலுங்குப் பத்திரிகையின் ஆசிரியரும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் கவனித்து வருபவருமான என். வேணுகோபால். “தலைவர்கள் வீழலாம். ஆனால் கோபம்? அநீதிகள் நீடிக்கிற வரையில் இப்படிப்பட்ட இயக்கங்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அவற்றை நாம் மாவோயிசம் என்று சொல்லாமல் போகலாம், ஆனால் அந்த இயக்கங்கள் இருக்கும்” என்றும் கூறுகிறார் அந்தக் கவிஞர் (‘தி வயர்‘).
கதவு மூடல்?
அடுத்த ஆண்டு மார்ச் 26க்குள் “ஜீரோ மாவோயிஸ்ட் நாடாக இந்தியாவை மாற்றுவோம்” என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கான கதவை மூடிவிட்டதாகக் கருதப்படுகிறது. பலருடைய எண்ண ஓட்டம் இதுதான்: “மாவோயிஸ்ட்டுகள் முன்நிபந்தனை விதிக்கக்கூடாது என்று கூறுகிற அரசு, அவர்கள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும், சரணடைய வேண்டும் என்று முன்நிபந்தனை விதிக்கிறது. கோதாவில் மிக வலிமையுடன் இருக்கிறவர்தானே முதலில் விட்டுத் தருவார், அந்தப் பெருந்தன்மைப் பண்பை அரசு வெளிப்படுத்தலாமே? இரு தரப்பினரும் இப்படி பிடிவாதமாக இருப்பது எங்கே கொண்டுபோய் விடுமோ?”
மாவோயிஸ்ட்டுகள் எங்கேயிருந்து வந்தார்கள் என்று பார்க்லாம். உலகம் முழுவதுமே நிலவும் சமுதாய சமத்துவமின்மை, சிறு பகுதியினரின் நிலக் குவிப்பு, பெரும் பகுதியினரிடம் காணி நிலமும் இல்லாமை, அவலங்களின் மூல(தன)மாகிய உழைப்புச் சுரண்டல், அரசுகளுக்குச் சுரண்டல் கூட்டங்களுடன் உள்ள உடந்தை உறவு ஆகிய நிலைமைகள்தான் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு அடிமனை. இந்தியாவில் இவற்றுடன், தனித்துவமான சாதிப் பாகுபாடும் சேர்ந்திருக்கிறது.
ஒரு சமுதாயத்தின் ஆளும் வர்க்கம் (ஆளும் கட்சியல்ல) எது, அதன் தன்மையும் வலிமையும் என்ன, மக்களின் தயார் நிலை எப்படி இருக்கிறது… இவற்றை ஆராய்வதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வழிமுறைகளை வகுக்கின்றன. எங்கே தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும், எங்கே ஆயுதம் ஏந்தி எதிரிகளோடு மோத வேண்டும் என்று தீர்மானிக்கின்றன. இந்தியாவில் நாடாளுமன்றப் பங்கேற்பு என்ற, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான இடைக்காலப் பாதையை ஒரே அமைப்பாக இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் தேர்ந்தெடுத்தது. அந்தப் பாதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), 1964இல் அதிலிருந்து பிரிந்து உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ–எம்), இரண்டும் செல்கின்றன. இந்தப் பிரிவு ஏன் ஏற்பட்டது என்பது வேறு வரலாறு. இப்போது இவ்விரு கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளில் கூட்டாகவே செயல்படுகின்றன.
விலகிய பாதை
மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இந்த நாடாளுமன்றப் பாதையை, மேற்கு வங்கத்தில் சாரு மஜூம்தார், கனு சன்யால், மற்றும் ஜங்கல் சந்தால் உள்ளிட்டோர் எதிர்த்து வந்தனர். சீனாவில் மாவோ என்றழைக்கப்பட்ட மா சே துங் தலைமையில் நடைபெற்றது போன்ற ஆயுதக் கிளர்ச்சியே தீர்வு என்று நம்பினர். 1967 மே 23இல், நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஒரு நிலப் பிரச்சினையில் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சிக்கு இந்த மூவரும் தலைமை தாங்கினர். காவல்துறையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், மே 26இல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையிரின் துப்பாக்கிச் சூட்டிற்கு, பழங்குடிப் பெண்களும் குழந்தைகளும் உ ட்பட 11 பேர் பலியாகினர்.
1969இல் நக்சல்பாரி கிளர்ச்சியில் பங்கேற்றவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) (சிபிஐ–எம்எல்) என்ற அமைப்பைத் தொடங்கினர். கிராமத்தை மையமாக வைத்து, குறிப்பிட்ட வட்டாரத்தைக் கைப்பற்றி, நகரப் பகுதிகளை முற்றுகையிடுவது, தேர்தல் பாதையில் செல்லாமல் ஆயுதங்களால் தாக்கும் வழியில் செல்வது, சீனாவில் நடந்தது போல நீண்ட காலம் தாக்குப் பிடித்து ஆயுதங்களால் அரசுப் படைகளை பலவீனப்படுத்தும் “மக்கள் போர்” என்ற வழியைப் பின்பற்றுவது என்ற அணுகுமுறைகள் வகுக்கப்பட்டன.
இதெல்லாம் நடந்துவிடும் என்று நம்புகிற அளவுக்கு இந்திய ஆளும் வர்க்கத்தையும் அதன் வலிமையையும் மக்கள் தயார்நிலையையும் மதிப்பிட்டிருந்தார்கள் என்பதே இதன் பொருள். இந்தக் கோட்பாடுகளை வகுத்ததில் சாரு மஜூம்தார் தலையாய பங்கு வகித்தார். நக்சல்பாரி கிராமத்திலிருந்து புறப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்த நக்சல்பாரிகள், நக்சலைட்டுகள், நக்சல்கள் என்ற சொல்லாடல்கள் உருவாக்கப்பட்டன.
“தேர்தல் பாதை திருடர் பாதை” என்று விமர்சித்தும், வாக்களிக்காதீர் என்று கேட்டுக்கொண்டும், தேர்தல்கள் வரும்போதெல்லாம் சுவர்களில் எழுதி வைத்தார்கள். பெரும்பகுதி மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு வாக்குச் சாவடிகளுக்குப் போனார்கள்.
தொடக்கத்தில் வலுவாகவே இருந்த இக்கட்சி நாளடைவில் பல சிறு குழுக்களாக உடைந்து பிரிந்து வலுவீனமடைந்தது. கோட்பாட்டு மாறுபாடுகள், அமைப்பு சார்ந்த பிரச்சினைகள், இவற்றோடு அரசாங்கத்தின் கடுமையான ஒடுக்குமுறைகள் காரணமாகவும் அந்த உடைப்புகள் நிகழ்ந்தன. அடிப்படையில் மக்கள் ஆதரவு விரிவாகக் கிடைக்கவில்லை என்ற காரணமும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் மீதும், அரசாங்க அமைப்புகள் மீதும் பல அதிருப்திகள் இருந்தாலும், நம் மக்களில் பெரும்பான்மையோர் தேர்தல் பாதையைப் புறக்கணித்துவிடவில்லை. இதைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள் மாவோயிஸ்ட்டுகள்.
சிவப்புத் தாழ்வாரம்
2004ஆம் ஆண்டில் பல குழுக்கள் ஒன்றாக இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சியை உருவாக்கின. இதுதான் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் செயல்படுகிற முக்கியமான மாவோயிஸ்ட் கட்சியாகும். இத்தகைய அமைப்புகள் குறிப்பாக சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பழங்குடியினர் மிகுதியாக வசிக்கும் பகுதிகளிலும் பரவியுள்ளன. இந்தப் பகுதிகள் "சிவப்புத் தாழ்வாரம்" (ரெட் காரிடார்) என்று அடையாளப்படுத்தப்படுகின்றன.
இந்திய அரசை வீழ்த்துகிற போர் என்று, பல இடங்களில் அரசுப் பணியாளர்களை வர்க்க எதிரியின் ஆட்களாகக் கருதித் தாக்குவது, காவல்துறையினரின் வாகனங்களைக் கண்ணி வெடிகளால் தகர்ப்பது, கிராமங்களிலும் பழங்குடிப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கான திட்டப் பணிகளைத் தடுப்பது என்ற வழிகளில் சில குழுக்கள் இறங்கின. 2009 ஜூன் 22 அன்று இந்திய அரசு இக்கட்சியை, 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. ஆயுத வழியில் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுவது என்ற பாதையில், 2000ஆவது ஆண்டிலிருந்து இன்று வரையில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று ‘சௌத் ஆசியன் டெரரிசம் போர்ட்டல்’ என்ற இணையப் பதிவகம் தெரிவிக்கிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரியும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டவருமான எம்.ஏ. கணபதி, “அடிப்படையில் ஒரு சித்தாந்தப் போராட்டம்தான் மாவோயிஸ்ட் இயக்கம். ஆனால் இன்று அது தனது ஈர்ப்பை இழந்துவிட்டது. படித்த இளைஞர்களுக்கு அதில் ஆர்வமில்லை,” என்று கூறுகிறார். “மக்களிடையே விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. கைப்பேசி, சமூக ஊடகப் பயன்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. வெளி உலகத் தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. புதிய சமூக மெய்நடப்புகளுடன் இணையாமல் மாவோயிஸ்ட்டுகள் காடுகளுக்குள் பதுங்கியிருந்து செயல்பட முடியாது,” என்கிறார் அவர் (பிபிசி).
உள்துறை அமைச்சக அறிக்கை, மாவோயிஸ்ட் தொடர்பான வன்முறை நிகழ்வுகளின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 1,136 ஆக இருந்தது, 2023இல் அது 48% சரிவடைந்து 594 ஆகக் குறைந்துவிட்டது, சாவு எண்ணிக்கை 397 ஆக இருந்தது 65% சரிந்து 138 ஆகக் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கிறது. பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு 2022இல் நடந்ததை விட 2023இல் சிறிது அதிகரித்திருக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இடது தீவிரவாத வன்முறைகளைப் பொறுத்தவரையில் 2023இல் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளானது சத்திஸ்கர்தான். நாடு முழுதும் நடந்த அத்தகைய வன்முறைகளில் 63% அந்த மாநிலத்தில்தான் நடந்தன. மொத்த உயிரிழப்புகளில் 66% அங்கேதான் நிகழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக வருவது ஜார்கண்ட் (வன்முறைகள் 27%, சாவுகள் 23%) என்றும் அமைச்சக அறிக்கை கூறுகிறது. மஹாராஷ்டிரா, ஒடிஷா, மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்கள் பின்னால் வருகின்றன.
கனிமக் கோணம்!
இந்தப் பின்னணியில், மாவோயிஸ்ட்டுகள் மீது தொடரும் நடவடிக்கைகளுக்கு வேறொரு கோணத்தைக் காட்டுகிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், அதுதான் கனிம வளம் என்ற கோணம்! ஏராளமான கனிம வளத்தைப் பெற்றிருப்பது சத்திஸ்கர் மண். நாட்டிலேயே வெள்ளீயச் செறிவுகளும், அதற்கான வார்ப்பு மணலும் உற்பத்தியாகிற ஒரே மாநிலம் அதுதான். நாட்டின் மொத்த வெள்ளியக் கனிமத்தில் 36% அங்கு இருக்கிறது. உயர் ரக கச்சா இரும்பு (20%), நிலக்கரி (18%), டோலோமைட் (11%) ஆகியவையும் அந்த மாநிலத்தில் அமோகம். வைரம், பளிங்கு வளமும் 4% இருக்கிறது.
ஆகவே அந்த வளங்களில் பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. ஆனால் “ஜல் ஜங்கள் ஜமீன்” (நீர், வனம், நிலம்) வளங்கள் மக்களுக்கே சொந்தம் என்ற கருத்தாக்கத்தோடு பழங்குடி மக்களின் ஆதரவைத் திரட்டி வைத்திருந்த மாவோயிஸ்ட் இயக்கம் சுவராக நிற்க, பன்னாட்டு நிறுவனங்களால் நுழைய முடியாமல் இருந்தது.
இப்போது, அந்த இயக்கம் வலுவிழந்துள்ள நிலையில், அந்த வளங்களுக்கான சுரங்கங்களை அந்த நிறுவனங்கள் தோண்டத் தொடங்கும், அதற்கான ஏல விற்பனைகள் வேகம் பிடிக்கும். ஆகவே, வன்முறையற்ற அமைதிக்காகத்தான் என்கவுன்டர்கள் நடந்தனவா என்ற கேள்வி எழுகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் என்கவுன்டர்களிலிருந்து கனிமவளங்களும், மக்கள் வாழ்வும் பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி தொடர்கிறது.
இலக்குகள் நிறைவேற
நவீன, நாகரிக உலக சமுதாயத்தில் வன்முறைப் பாதைகளில் இனியும் இலக்குகளை அடைய முடியாது. இதனை, துணிவும் தியாகமும் தரிசாகப் போக விட்டுக்கொண்டிருக்கிற மாவோயிஸ்ட் இயக்கம் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் உணர்ந்தாக வேண்டும். எந்த மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்கிறார்களோ அந்த மக்களின் நலனின் உண்மையிலேயே முழு அக்கறை இருக்குமானால் பாதையை மாற்றிக்கொள்ளவும், வெகுமக்கள் இயக்கங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் இணையவும் தயாராக வேண்டும்.
மறுபடி மறுபடி இந்தச் சூழல்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும் என்பதால், வெறும் என்கவுன்டர்களால் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது என்பதை அரசும் புரிந்துகொண்டாக வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுகள் காண்பதற்கு முன்வர வேண்டும். சாதியப் பாகுபாடு உள்ளிட்ட நிலைமைகளை மாற்ற உண்மையாக அக்கறை கொள்ள வேண்டும்.
ஜீரோ என்கவுன்டர் நாடாக மாற்றுவதற்குக் கால வரம்பு நிர்ணயித்தால், அதை நோக்கிச் செல்லலாம் – எல்லோருமாக.
[0]
‘விகடன் டிஜிட்டல்’ தளத்தில் இன்று (மே 31) எனது கட்டுரை