ஆப்ஸ்டெட்ரிக் ஃபிஸ்டுலா என்றால் “மகப்பேறு புரைப்புண்” என்று புரிந்துகொள்கிறேன். தமிழில் இது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்று தெரியவில்லை. பிரசவப் புரை நோய்?
குழந்தைப் பிறப்பின்போது பிறப்புப் பாதையில் ஏற்படும் கிழிசல், பிளவு பெரிய புண்ணாக மாறிக் காலமெல்லாம் பெண்ணை வலியோடு துன்புறுத்திக்கொண்டே இருக்கும். குறிப்பாக சிறுநீர்ப்பாதைக்கும் மலப்பாதைக்கும் இடையே இந்தப் பிளவு ஏற்படுவதால், சிறுநீர் மலம் திடீர்த்திரெனக் கட்டுப்படுத்த இயலாததாக வெளியேறும்.
பிரசவ வலி முடிந்துபோக, அதற்குப் பின் தொடரும் வலி.
சிசு வெளியே வருவதற்கு மிக அதிக நேரம் ஆவது, காயம் ஏற்படுவது, இடுப்புப் பகுதி குறுகலாக இருப்பது ஆகிய காரணங்களால் புண் ஏற்பட்டு புரையோடிப் போகிறது. மருத்துவமனைக்குத் தாமதமாகக் கொண்டுசெல்லப்படுவதும், உடனடியாக சரியான சிகிச்சை கிடைக்காமல் போவதுமான காரணங்களும் இணைகின்றன. சிறுவயதுத் திருமணம் உள்ளிட்ட நிலைமைகளில் பதின்பருவத்திலேயே கருத்தரிப்பதும் இதற்கு இட்டுச்செல்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், சமூகத்தின் அவமதிப்புகளுக்கும் குடும்ப வசவுகளுக்கும் அஞ்சி வெளியே சொல்வதில்லை. இதனால் வேதனையோடு நடமாடுகிறார்கள். சிகிச்சையும் எடுத்துக்கொள்ள முடியாமல் போகிறது. மருந்துகள், அறுவை என மருத்துவ வழிகள் இருந்தும் பயனில்லாத நிலை. பொருளாதார இழப்புகளும் உளவியல் சிக்கல்களும் உத்தரவாதம்.
சிறு வயதிலிருந்தே ஊட்டச்சத்து குறைபாடு மகப்பேறு புரைப்புண் ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். ஆம், வறுமை நிலைமை ஒரு முக்கியமான குற்றவாளி. அந்தக் குற்றவாளியை நடமாட விட்டிருக்கிற பெரிய குற்றவாளி யார்? எதற்கெடுத்தாலும் இதையே சொல்கிறீர்களே என்று சிலர் கேட்பார்கள் என்றாலும், விதியின் மேல் பழிபோட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம் என்றாலும், உண்மையான பெரிய குற்றவாளி யாரெனெச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது – முதலாளித்துவ சுரண்டல் சமுதாயம்தான்.
இன்று (மே 23) உலக மகப்பேறு புரைப்புண் ஒழிப்பு தினம். இதற்கான விழிப்வுணர்வைப் பரப்ப வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை எப்போது அந்த மூலக் குற்றவாளி பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும்?
No comments:
Post a Comment