Wednesday, 28 May 2025

அப்படிக் கேட்டவர்களுக்கு அவர்கள் சொன்ன பதில்



ங்கள் கொண்டாட்ட முகங்களைப் பார்க்கத்தான்  வந்தேன். இங்கேயோ உங்களின் போராட்ட முகங்களையும் சேர்த்துப் பார்க்கிறேன். தப்பிய குற்றவாளிகளையும் பிடிக்கும் வரை “விட மாட்டோம் விட மாட்டோம்” என்ற உங்கள் முழக்கத்தில் எத்தனை போராட்ட உறுதி!


பொள்ளாச்சிக் கொடுமை பற்றிய செய்திகளை ஒரு பத்திரிகையாளராகவும் நாட்டின் குடிமக்களில் ஒருவராகவும் பின்தொடர்ந்து வந்தபோது ஒன்றைக் கவனித்தேன். சமூக ஊடகங்களில் பலர் பதிவு செய்தார்கள், வெளியேயும் பேசினார்கள். “பொண்ணுக பொண்ணுகளா இருந்தா ஏன் இப்படியெல்லாம் நடக்கப்போகுது?” “பொண்ணுக வெளியே போகாம வீட்டிலேயே இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா?” “பொண்ணுக ஆசைப்படாம இருந்தா இப்படியெல்லாம் நடக்காதே?”


இந்த வழக்கில் மட்டுமில்லை, பெண்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சினை வந்தாலும் அடங்கியிருக்கச் சொல்கிறவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதாக இருந்ததுதான் தொடக்கத்தில் நீங்கள் போட்ட ஆட்டம்! என்ன ஆட்டம் அது! அடங்க மாட்டோம் என்ற அந்த ஆட்டத்தில் உங்களின் கொண்டாட்டம், உரிமை, சுதந்திரம் எல்லாம் வெளிப்பட்டதைப் பார்த்தேன். எனக்கு அதில் ஒரே ஒரு வருத்தம், அது போல என்னாலும் ஆட முடியலையே! ஆனால் உணர்வுப்பூர்வமாக மனசுக்குள் நானும் ஜிங்கு ஜிங்குனு குத்தாட்டம் போட்டேன்!




வரவேற்கத் தக்க தீர்ப்பு வந்ததன் பின்னணியில் தடயங்களையெல்லாம் சேகரித்து விசாரணையை முறையாக நடத்திய புலனாய்வாளர்கள், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய வழக்குரைஞர்கள், கவனமாக உள்வாங்கிய நீதிபதி என எல்லோருக்கும் பங்கிருக்கிறது. அவர்களுக்குப் பாராட்டுகள்.


திசைதிருப்பல் முயற்சிகளை மீறி வழக்கு நடைமுறைகளும், விசாரணைகளும் வாதங்களும் சிறப்பாக அமைந்ததற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் பெண்கள் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டம். மேலோட்டமாகக் கடத்திவிட முடியாது என்ற கட்டாயத்தை ஏற்படுத்திய போராட்டம் அது. போராடும் எல்லாப் பெண்களுக்கும் நம்பிக்கையளித்து வழிகாட்டியிருக்கிற உங்களுக்கு வாழ்த்துகள். 




“ஒன்றிணைந்தோம், நீதி கிடைக்கப் பெற்றோம்!  ஒன்று கூடுவோம், பெற வேண்டிய நீதியை உறுதி செய்வோம்! ,” என்று இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழிலும், பின்னாலிருக்கும் பதாகையிலும் என்று இருப்பது மிகமிகப் பொருத்தம். கூடுதலாக நான் சேர்த்துச் சொல்கிறேன், பெண் சுயமரியாதைக்கும், பாலின சமத்துவத்துக்குமான தொடர் இயக்கங்களில் ஒன்றுகூடுவோம் –  ஆண்களும்.


ஒரு விருப்பத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கே ஒரு வரலாறாகிவிட்டது, அதன் பின்னணியிலிருந்து தீர்ப்பு வரையில் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும், மாணவப் பருவத்திலேயே பாலின சமத்துவ எண்ணங்களை விதைக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது பள்ளிகளில் ஒரு வரலாற்றுப் பாடமாக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு இதைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதில் சிக்கல் இருக்குமானால், ஆசிரியர்கள் தாங்களாக இதைச் செய்ய வேண்டும்.


[0]


“பொள்ளாச்சி வெற்றியின் கடந்து வந்த பாதையும் செல்ல வேண்டிய தொலைவும்” என்ற தலைப்பில் அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சென்னையில் நேற்று (மே 27) நடத்திய “ஒன்று கூடல்” நிகழ்வில் எனது வாழ்த்துரை.


(முதல் படம்: உரிய நடவடிக்கை கோரி 2019இல் கோவையில் பெண்கள் நடத்திய மனிதச் சங்கிலி இயக்கம். இரண்டாவது படம், இந்த ஒன்று கூடல் நிகழ்வில் ‘தீக்கதிர்’ செய்தியாளர் கவி மணி எடுத்தது.)


No comments: