Tuesday, 5 May 2026

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தேரவு அல்ல, ஆனால்...


 

“வாக்கு எண்ணிக்கையின் இந்தத் தொடக்கச் சுற்றில் வருகிற முன்னிலை நிலவரத் தகவல்களை வைத்து இப்படியேதான் கடைசி வரை இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர்பாராத தலைகீழ் மாற்றம் கூட ஏற்படக்கூடும்.”

நேற்று (மே 4) காலை இணையவழி நேர்காணலில் எனது கருத்தை இப்படித்தான் தொடங்கினேன். அப்படியேதான் நடந்திருக்கிறது. அடுத்தடுத்த உரையாடல்களில் கூறியவற்றின் சாரம்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம்தான். வரவேற்கத் தக்க மாற்றம்தானா என்று இப்போது சோதிடம் கணிக்க முடியாது. அது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவுவதற்குத் தேவையான இடங்களை முழுமையாகப் பெற முடியாத நிலையில், விஜய் எப்படி ஆட்சியை அமைக்கப் போகிறார், அதை எப்படி நடத்திச் செல்கிறார் என்பதைப் பொறுத்திருக்கிறது. மக்கள் மனம் மகிழத் தக்கதாக ஆட்சி இருக்குமானால் அதை வரவேற்பதில் எந்த மனத் தடையும் எனக்கில்லை.

ஆகவே, இவரால் அடிப்படை மாற்றங்கள் எதையும் செய்துவிட முடியாது, இந்த ஆட்சியால் பெருங்கேடுகளைச் சந்திக்க நேரிடும், ஒன்றிய ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்குப் பணிந்துவிடுவார், பெரிய அதிகாரத்திடம் சரணாகதி அடைந்துவிடுவார்….. என்றெல்லாம், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே இந்த இடத்தை நிறுவியிருப்பவரை, இந்தத் தகுதியை அளித்த மக்களை, குறிப்பாக இளம் தலைமுறையினரை, நான் சபிக்க மாட்டேன். ஏற்கெனவே இருந்து வருகிற அமைப்புகளின் மீதும் அவர்களது செயல்பாடுகளின் மீதும் ஏற்பட்டுள்ள ஒவ்வாமையைத்தான் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்.

ஆனால், ஆட்சியைக் கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும், தப்பாக இருந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையிலிருந்து விடுபடுங்கள். நம்பகமான, ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் என்று எல்லோரும் ஏற்கிற ஆட்சியாக அமைவதை நீங்களும் சேர்ந்து உறுதிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனாலும், அதிமுக–வையும், அதை முன்னால் நிறுத்திப் பின்னாலிருந்து ஊடுருவ முயன்ற பாஜக–வையும் இந்த மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இலக்கு என்னவென்றே தெளிவில்லாமல் உணர்ச்சிகரப் பேச்சை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் சீமான் கட்சியை நான்காவது முனை என்று கூடச் சொல்ல முடியாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் கூடத் தெரிவிக்கிறேன்.

முழு மனதுடன் வரவேற்கத் தக்கதாக அமைவதென்றால், மத நல்லிணக்கம், மாநில தன்னாட்சி, மொழி உரிமை, சமூகநீதி, கல்வி நியாயம் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாண்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த மாண்புகள் மீது அமிலம் ஊற்றும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

திமுக–வைத் தாக்கிப் பேசிய அளவுக்கு, விஜய் மேற்கொண்ட பரப்புரைகளிலோ இவற்றைப் பற்றி சன்னமாகக்கூட குரலெழுப்பவில்லை. கொள்கை எதிரியை வரவிடுவோமா என்று மேலோட்டமாகக் கேட்பார், கூட்டத்தினர் ஆரவாரமாக மாட்டோம் என்பார்கள். அத்தோடு சரி. இந்த அவதானிப்பிலிருந்தே இதை அவரிடமும் அவரைக் கொண்டாடுகிற மக்களிடமும் முன்வைக்கிறேன்.

ஏனென்றால், கிட்டத்தட்ட மொத்த வாக்காளர்களில் 65 சதவீதத்தினரின் முடிவுக்கு மாறாக உங்களுடைய 35 சதவீதம் இந்தத் தேர்வைச் செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, மொத்தமுள்ள 234இல் 108 இடங்களில்தான் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான 126 தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறது.

ஆகவே, ஏதோ இது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பெரும்பான்மைத் தீர்ப்பு என்று யாரும் கூற முடியாது. விஜய்க்கே கூட அந்த மயக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இது நம் நாட்டுத் தேர்தல் முறையில் இருக்கிற பெரும் ஊனத்தின் விளைவு. அனைத்துத் தொகுதி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஊனம் அது. இடதுசாரிகளும் வேறு கட்சிகளும் மட்டுமே தேர்தல் முறையில் அடிப்படைச் சீர்திருத்தம் தேவையென்று கோரி வருகின்றன.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், கறாரான பெரும்பான்மை ஏற்படாத நிலையில் குறைந்த வாக்குகள் பெறுவோரைக் கழித்துவிட்டு முதல் இரண்டு மூன்று இடங்களுக்கு வருகிறவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற மறுவாக்குப் பதிவு முறை, தேர்ந்தெடுக்கப்படுகிறவர் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமை போன்ற அந்தச் சீர்திருத்தங்களை தவெக–வும் வலியுறுத்துமானால் அது ஜனநாயகத்தை உண்மையான வலிமை உள்ளதாக்க உதவும்.

தேர்தல் முறை தொடர்பான எல்லா விவாதங்களிலும் இந்தச் சீர்திருத்தங்களை நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன் – ஏதோ இப்போது தவெக இந்த மாதிரியான வெற்றியைப் பெற்றிருப்பதற்காகச் சொல்லவில்லை.

வெற்றி வாய்ப்பை இழந்த, தமிழக நலனில் அக்கறை கொண்ட கட்சிகளைப் பொறுத்தமட்டில்,  இப்படிப்பட்ட தோல்விகள் அவர்களுக்குப் புதிதல்ல. கவர்ச்சிக்கு இரையாகிவிட்ட தற்குறிகளின் தவறு என்றெல்லாம் தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்

முக்கியமாக, மக்களிடம், இளையோரிடம் எப்படி நெருங்குவது, அவர்களின் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்று ஆராய வேண்டும். மக்கள் சந்திப்பு என்பது ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு, அங்கே வரக்கூடிய உறுப்பினர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உரையாற்றிவிட்டுப் போவதல்ல. அந்தப் புரிதலோடு சம்பிரதாய மக்கள் சந்திப்பாக இல்லாமல், உயிர்ப்புள்ள மக்கள் உறவாக உருவாக்கி வளர்க்க வேண்டும், வளர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக, பரபரப்புகளில் அயர்ந்துவிடாமல், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த இயக்கப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கம் போல இயல்பாகத் தொடர்கிற கம்யூனிஸ்ட்டுகளிடம் உரிமையோடு எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் என்றைக்குமே மக்களுக்கு உத்தரவாதமான, நம்பகமான அரசியல்–சமுதாய சக்தி நீங்கள்.

வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாகப் பதவியேற்கப் போகிறவர்களுக்கும், எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.