வரலாறு, புனைவு, மாயமெய்மை இம்மூன்றின் பின்னலை வாசிப்பனுவமாக்குகிறது ‘இஸ்தான்புல் பேரங்காடி’ நாவல். புகழ்பெற்ற படைப்பாளி ஃபூவாட் செவிமை துருக்கிய மொழியில் ‘கப்பாலிசார்ஷி’ (வணிக வளாகம்) என்ற தலைப்பில் எழுதியதன் தமிழாக்கம் இது.
இன்றைய நவீன மால்களுக்கு முன்னோடியாக 500 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது அந்த வளாகம். உதுமான் பேரரசின் மன்னர் இரண்டாம் மெஹ்மூத், புதிய தலைநகரத்தின் வலிமைக்குப் பொருளாதார வளர்ச்சியின் தேவையை உணர்ந்தவராக வளாகத்திற்குத் திட்டமிடுகிறார். வரலாற்றின் இந்த முனையிலிருந்து, மாயமெய்மை ரசனைக்குமான விருந்து மண்டபமாக நாவலைக் கட்டியிருக்கிறார் ஃபூவாட்.
பளிங்குக் கற்களுடன் ஒரு சரக்குப் படகு கடலில் மூழ்குகிறது. காப்பாற்றப்படும் பளிங்கு வணிகர் ஏற்பட்ட இழப்பால் மனநலம் பாதிக்கப்பட்டு நகரில் சுற்றித் திரிகிறார்.
சிற்பி நசார் உஸ்தா அந்தக் கற்களுக்காகக் காத்திருக்க, அவரிடம், மீட்கப்பட்ட ஒரே ஒரு பளிங்குப் பாளம் தரப்படுகிறது. சில மந்திரங்களை அவர் பயன்படுத்த, அதிலிருந்து பல பாளங்கள் உருவாகின்றன.
கலை வேலைப்பாட்டாளர் ஓஸ்மான் ஒரு கல்லில் இதய வடிவம் அமைந்திருப்பதைக் கண்டு, தன் காதலி பற்றிய நினைவுகளில் ஆழ்கிறார். நசார், ஓஸ்மான் தலைமையில் தொழிலாளர்களின் உழைப்பால் உருவான வளாகம் நகரத்துக்குக் கம்பீரம் சேர்க்கிறது. இப்படியான நிதான ஓட்டத்தில் பேரரசின் வரலாறு கடக்கப்படுகிறது. அதன் வீழ்ச்சி தொடங்கப் போவதும் தொட்டுக் காட்டப்படுகிறது.
மதகுரு முல்லா ஜிவான் எஃபெண்டி இதுவரையில் ஆன்மிகத்தை மையமாகக் கொண்டிருந்த சூழலுக்கு மாறாக வெளிநாட்டவர்களின் நுழைவாலும் புதிய நுகர்பொருள்களின் வருகையாலும் வணிகப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட சமூக மாற்றம் நிகழ்வதைச் சந்திக்கிறார். மனிதர்கள் கூட்டு வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் நமக்குப் புரியவருகிறது.
நாவல் நெடுக வருகிற தத்துவஞானி பிர் பல நூற்றாண்டுகளைக் கண்டவர்! வாழ்க்கை நடப்புகளுக்கு தத்துவ விளக்கமளிக்க அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார் நாவலாசிரியர்.
தனது இறுதிநாள் நெருங்கிவிட்டதை உணரும் பிர் ஒரு விருந்துக்கு வெவ்வேறு தத்துவச் சார்புடையோரை அழைக்கிறார். அக்காட்சி ஏசு கிறிஸ்துவின் கடைசி விருந்து ஓவியத்தை நினைவூட்டுகிறது. அதை வரைந்த லியனார்டோ டா வின்சி நாவலில் வந்துபோகிறார்!
வரலாற்றை அரண்மனையோடு சுருக்கிவிடாமல், பளிங்குக் கற்களைப் பிணைக்கும் கலவையாகத் தொழிலாளர்களின் வியர்வை கொட்டப்பட்டதையும் பேசியிருக்கிறார் ஃபூவாட்.
வார்த்தைகளையும் வாக்கியங்களையும் மட்டுமல்லாமல் வார்த்தவரின் எண்ணங்களையும் உள்வாங்கிக்கொண்டு மொழிபெயர்த்திருப்பது முனைவர் ரெஜினா சந்திராவின் உழைப்பில் பளிங்காக ஒளிர்கிறது. பன்னாட்டுப் புத்தகத் திருவிழாப் பரிமாற்றங்களின் பயனுறு தன்மைக்கு ஒரு சான்றாகிறது இந்நூல்.
இஸ்தான்புல் பேரங்காடி
துருக்கிய மூலம்: ஃபூவாட் செவிமை
தமிழில்: ரெஜினா சந்திரா
வெளியீடு: எமரால்ட் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 398 விலை: ரூ.500
தொடர்புக்கு: +91 44 28193206, 9840696574
மின்னஞ்சல்: info@emeraldpublishers.com
[0][0][0]
‘இந்து தமிழ் திசை’ நாளேட்டின் நவம்பர் 28, 2026 இதழ் ‘நூல்வெளி’ பகுதியில் இந்த நாவல் குறித்து நான் எழுதியுள்ள அறிமுகம்

No comments:
Post a Comment