Sunday, 29 November 2026

கலையின் திசைகளில் கரங்கள் நீளும் ஆக்டோபஸ்

 


வலைத்தொடர்


தீக்கதிர் ஞாயிறு இதழ் (29 நவம்பர் 2026) வண்ணக்கதிர் இணைப்பில் எனது கட்டுரை


“இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும்” நிலையை அடைகிறபோது இரண்டு வினாக்களை எதிர்கொள்ள நேரிடும்: உன் மகன் என்பதால் பாராட்ட வருவாயா? உன் மகன் என்பதாலேயே பாராட்டாமல்  விடுவாயா? கடந்தகாலத் தயக்கப் போர்வையை விலக்கிக்கொண்டு உள்ளிருக்கும் ரசிகனும் திறனாய்வாளனும் எழுகிறார்கள்.


பொதுவாகத் திரைப்படம், நாவல் திறனாய்வுகளில் கதையோட்டத்தைச் சுட்டிக்காட்டலாமே தவிர, கதையையே சொல்லிவிடக் கூடாதெனும் கொள்கையைக் கடைப்பிடிப்பவன் நான். குறிப்பாக, எல்லோரும் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய ஆக்கமெனில் கதையை முழுதாகச் சொல்லி அவர்களது ஆர்வ உரிமையை மட்டுப்படுத்திவிடக் கூடாது. சமூகக்கேடான கருத்துகளைப் பரப்புகிறது என்று நினைத்தால் கதையைக் காட்டிக்கொடுக்கிற பழக்கமும் இருந்தது. பின்னாட்களின் படிப்பினைகளில், அதைக்கூட பார்வையாளர்கள் முடிவு செய்கிற அனுபவ உரிமையைத் தடுக்கலாகாதென்ற ஞானம் பிறந்தது.


‘ஆக்டோபஸ்’ எப்படி? அண்மைக் காலமாகத் தமிழ் சினிமாவை சமூக அக்கறையும், குறுகிய வட்டத்தோடு சுருங்கிவிடாமல் வெகுமக்கள் ரசனை மீதான மரியாதை கொண்ட படைப்பாக்கம் என்ற கருப்பு ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து வந்திருக்கிறது சினிமம் குழுமத்தின் இந்த வலைத்தொடர்.


கதையை முழுதாகவோ முக்கால்வாசியோ பல பத்திரிகைகளும் சமூக ஊடகங்களும் சொல்லிவிட்டன. ஆகவே கதைச் சுருக்கத்தை இங்கேயும் சொல்ல வேண்டியதில்லை. ஜீ5 தமிழ் ஓடிடி தளத்திற்கு வந்துவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் தனித்தனி அங்கங்களாக அல்லது மொத்தமாகப் பார்க்கலாம்.


ஒரு சிறிய தெருவில் குடியிருக்கும் அனைத்துக் குடும்பங்களின் அன்பையும் ஈட்டுகிற நிகிதா, அவளுடைய கணவனின் கொடுமைகளுக்கு உள்ளாகிற தொடக்கத்தால், குடும்ப வன்முறை தொடர்பான கதை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அடுத்தடுத்த அங்கங்களில் ஒரு திருப்பம், மற்றொரு திருப்பம், மேலுமொரு திருப்பம் என்று ஒரு மர்மக் கதைக்கான புதிர்ச்சுவை மொத்தத் தொடரிலும் நிரம்புகிறது.


ஒரு விறுவிறுப்பு ரசனைக்குரிய ஆக்கத்தில், பெண்ணின் சுயம் தொடங்கி, யாரையும் விட்டுவைக்காத சாதி ஆணவம் வரையில்  இத்தனை கூர்மையான சமூக விமர்சனத்தை முன்வைக்க முடியும் என்று நிறுவுகின்றன ஆக்டோபஸ் கரங்கள்.


அவ்வப்போது ஒரு ஷாலினி, அவளுடைய காதல்வெறிக் கூட்டாளி பரத் காட்சிகள் வருகின்றன. மையக்கதையோடு அந்தக் கிளைக்கதைக்கு உள்ள தொடர்பை முன்னதாகவே கோடி காட்டத் தவறியதால் கால வரிசைக் குழப்பம் ஏற்படுகிறதோ? இல்லை, அந்தக் குழப்பமே கூடத் திரையனுபவத்தின் ஒரு பகுதிதான். அது  ஊகிக்கவியலாத ஒரு கட்டத்திற்கான அதிர்ச்சிக்கும், அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கவியலாத ஒரு சமூக உண்மைக்கான குற்றவுணர்வுக்கும் இட்டுச்செல்கிறது. நிகிதாவை “நம்ம பொண்ணு” என்று அந்தக் குடும்பங்கள் ஏற்றுக்கொண்டு அவளுக்காக அதிகாரப்பூர்வமற்ற புலனாய்வாளர்களாக மாறுவதன் உளவியலையும் புரிந்துகொள்ளச் செய்கிறது.


புலனாய்வுப் படைத் தலைவரான அர்ச்சனா தனது காணொளித்தளக் கூட்டாளியின் முன்மொழிவைக் கோபத்துடன் புறக்கணிப்பது இயல்பான காதலுக்கு எதிராகக் கட்டமைக்கப்படும் கருத்தியலின் தாக்கம்தான். அதை அவளே உணர்கிற இடம் அந்தக் கருத்தியலை வீழ்த்திடும் மாற்றம்தான்.


குறிப்பிடத்தக்க ஒன்று கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு. அதற்கு நியாயம் செய்வதாக,  இவரைச் சொன்னால் அவரைக் குறைப்பதாகிவிடுமே என்று யோசிக்க வைத்திடும் வகையில் அவரவர் பாத்திரங்களின் தன்மையை உள்வாங்கிய நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் அர்ச்சனா ரவிச்சந்திரன், அஸ்வின் குமார், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர், வேல், சரித்திரன், எஸ்.கே.பி., சிவா அரவிந்த், சத்யா மருதாணி, பரணி, சுபத்ரா, பகவதி, பாலாஜி வேணுகோபால் உள்ளிட்ட கலைஞர்கள். 


வெளிச்சத்திற்குள் இருட்டையும், இருட்டுக்குள் வெளிச்சத்தையும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர். கண்ணா. அதற்கு இசைத் துடிப்பைச் சேர்த்திருக்கிறார் தீபன் சக்ரவர்த்தி. இதற்கு இப்படித்தான் என்ற திட்டத்தோடு தொகுத்திருக்கிறார் ராம் பாண்டியன். கூர்ந்த பார்வையோடு கதையாக்கம், இயல்பான உரையாடல், நேர்த்தியான உருவாக்கம் என்று அமைந்திருக்கிறது ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கம்.


நல்ல  தொடர் என்று மட்டும் சொன்னால் ஒரு நல்ல தொடர் அவ்வளவுதான். இதுவோ பெருமைக்குரிய ஓர் ஆக்கம். படக்குழுவினர், அவர்களோடு தொடர்புடையோரின் பெருமையாக மட்டுமல்ல, தமிழ்த்திரையின் பெருமையாகவும். தேவையான கருத்தை எடுத்தாண்ட துணிவுக்காகவும், அதை எப்படித் தருவது என்ற தெளிவுக்காகவும்.

No comments: