ஒரு நிறுவனம்
இரண்டு குடும்பங்கள்
மூன்று உயிர்கள்
அ. குமரேசன்
கடவுளை யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் கடவுளை வர்ணிக்கும் வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. இல்லாத ஒன்றைப் பற்றி என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை, அதனால் கடவுளைப் பற்றி என்னென்னவோ கதைகள் உலகம் முழுவதும் சுற்றி வருகின்றன. இந்த பத்திரிகை தர்மம், பத்திரிகைச் சுதந்திரம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதெல்லாம் கூட கடவுள் போன்றதுதான். இவற்றைப் பற்றியும் புனிதமயப்படுத்தப்பட்ட, உணர்ச்சிகரமான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிறைய உள்ளன. ஆனால் அவையெல்லாம் கற்பிதங்கள்தானேயன்றி திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டவை அல்ல. அவரவர் வசதிக்கேற்ப செய்துகொள்ளப்பட்ட பலவகைக் கற்பிதங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.
இந்த மே மாதம் 9ம் தேதி மதுரையில் ‘தினகரன்’ நாளேட்டின் அலுவலகம் மு.க. அழகிரி ஆதரவு திமுக-வினரால் தாக்கப்பட்டு, கட்டிடத்தின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டு... உச்சமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்ட கொடுமைக்கும் இங்கு விவாதிக்க எடுத்துக் கொள்ளப்படும் ‘ஊடகச் சுதந்திரம்-ஊடக தர்மம்’ விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டு பேர் நெருப்பிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு கண்ணாடி அறைக்குள் புகுந்து பதுங்கியதே அவர்கள் புகை மண்டலத்தில் மூச்சுத்திணறி உயிரிழக்கக் காரணமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. எப்படியானாலும் அது கொலைதான். என்ன ஒரு காரணத்தைச் சொல்லியும் அந்தக் கொலையையும் தாக்குதலையும் நியாயப்படுத்திவிட முடியாது. முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதும், மதுரை மேயர் உள்ளிட்ட சிலர் சரணடைந்திருப்பதும், சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இதே வேகத்தில் நியாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் பின்னணியில், எமே 12 அன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் நோக்கி நடத்த முயன்ற ஊர்வலத்துக்கு அரசும் காவல்துறையும் தடை விதித்திருக்கத் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஊர்வலத்தை அனுமதித்திருந்தால் பல்வேறு ஊடகங்களிலிருந்து வந்திருந்த செய்தியாளர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டுள்ளது என்ற எண்ணம் வலுப்பட்டிருக்கும்.
இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடந்ததா, ஒருவரது ஆணைப்படி நடந்ததா, அவரிடம் நல்ல பெயர் வாங்க அவரது விசுவாசிகள் தாங்களாக வன்முறையில் ஈடுபட்டார்களா, சிலர் சித்தரிப்பது போல் இது ஒரு குடும்பச் சண்டை விவகாரமா, இரண்டு குடும்பங்களின் சண்டையா, அரியாசனத்துக்கான வாரிசு மோதலில் அந்த மூன்று அப்பாவிகள் பலியானார்களா... இதைப்பற்றி அலசுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அது இனி சிபிஐ வேலை.இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் எழுந்துள்ள, ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டில் ஊடகங்களின் பொறுப்பு ஆகிய சிந்தனைகள் குறித்தே இங்கு விவாதிக்கப்படுகிறது.
உணர்ச்சிவசப்பட்டுள்ள நேரத்தில் இதையெல்லாம் விவாதிக்கத்தான் வேண்டுமா என்றால் விவாதிக்கத்தான் வேண்டும். ஒரு உடனடிப் பிரச்சனையிலிருந்து ஒரு பொதுப்பிரச்சனை தொடர்பான விவாதமாகக் கொண்டு செல்வது தேவையானது.‘தினகரன்’ ஏடு நாளொரு கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. ‘நீல்சன்’ என்ற நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்பதாகக் கூறிக் கொண்டு அந்தக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழக மக்கள், தமிழகத்துக்குள்ளேயே அந்தந்த மாவட்ட மக்கள் என்பதாகப் பிரித்துக் கொண்டு அந்த ‘ஆய்வு’ முடிவுகள் வெளியிடப் படுகின்றன.
மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் ஆழமானவை! சமுதாய முன்னேற்றத்துக்கு உதவக் கூடியவை!ஆமாம், பொது இடத்தில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடிக்கலாமா, சிறந்த கருத்தடை சாதனம் எது, பெண்ணுக்கு ஏற்ற உடை எது, அதிகமானவர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் யார், வாழ்க்கைத் துணையிடம் பொய் சொன்னதுண்டா... இப்படியாகப்பட்ட கேள்விகள்.
எந்த ஒரு பிரச்சனையிலும் கருத்தை உருவாக்காமல், மக்களிடையே ஏற்கெனவே ஊறிப்போயிருக்கிற கருத்துக்களை மேலும் வலுப்படுத்துவதன்றி இக்கேள்விகளால் என்ன பயன்? லயோலா கல்லூரியின் பண்பாடு மக்கள் தொடர்புத் துறையினரும் காட்சித் தொடர்பியல் துறையினரும் ஆண்டுதோறும் நடத்துகிற ஆய்வுகளில், மக்களிடையே எந்த அளவுக்கு மூடநம்பிக்கைகள் பரவியுள்ளன, சாதிமதப் பிடிப்பு எவ்வாறு உள்ளது, சமூக நீதி பற்றிய உணர்வுகள் எப்படி உள்ளன, திரைப்படங்கள் மற்றும் நடிகர்களின் தாக்கம், அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு, அரசுக் கொள்கைகள் பற்றி மக்களின் எண்ணம்... என்ற கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துக்கள் தொகுக்கப்படுகின்றன. இதே போல் வேறு பல அமைப்புகளும் கருத்துக் கணிப்பு நடத்தி புதிய அணுகுமுறைகளை வகுக்க உதவுகின்றன. தினகரனில் வந்து கொண்டிருக்கிற ‘ஆய்வுகள்’ அப்படிப்பட்டவைதான் என சொல்ல முடியுமா?
சுற்றிவளைத்து ஒரு வாதத்துக்காக சில கேள்விகள் சமூக ஆய்வாளர்களுக்கும் இயக்கங்களுக்கும் பயன்படக்கூடியவை என்று சொல்லிக் கொள்ளலாம். உதாரணமாக, பள்ளிப் படிப்புக்குப் பிறகு தமது பிள்ளைகள் என்னவாவதற்குப் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்பது போன்ற கேள்விகள் மக்களின் மனநிலையை மதிப்பிட உதவும் எனலாம். ஆனால், சும்மா பயண நேரத்தில் வறுத்த வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டே பொழுது போவதற்காக சுவாரசியமாகப் பேசியபடி மறந்து போவதற்கு உதவுவதாகத்தான் தினகரன்-நீல்சன் கேள்விகள் உள்ளன.
படிக்கவும் வேலைக்கும் என வீட்டிலிருந்து வெளியே வருகிற பெண்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால், பெரும்பான்மை ஆதரவு சுடிதார் உடைக்கே கிடைக்கும். ஆனால் வெளிப்படையாகக் கேட்டால் புடவைதான் தங்களது தேர்வு என்பார்கள். இது போன்ற விசயங்களில் கூட பெண் தனது கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்திவிட முடியாத நிலைமை அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. இந்நிலையில் பெண்ணின் எளிதான பயன்பாட்டிற்கும், பொது இடக் கண்ணியத்திற்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற உடை எது என்று கேட்டிருந்தால் இக்காலத்துப் பெண்கள் சுடிதார் அல்லது பேண்ட்-சட்டையைத்தான் குறிப்பிட்டிருப்பார்கள். பண்பாட்டுக் காவலர்கள் பற்றிய அச்சம்தான் அவர்களது வாயை அடைக்கிறது.
ஆக இத்தகைய கேள்விகளின் நோக்கம் பயன் விளைவிக்காத, வெறும் பரபரப்பு மதிப்பீடும், வியாபாரமும்தான் என்பது தெளிவாகிறது. தமிழகத்தின் - ஏன் - இந்தியாவின் ராபர்ட் முர்டோச் போல ‘சன்’ நிறுவனம் ஊடக ஏகபோகமாக உருவாக முயல்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை வானொலி... என்று அதன் ஆக்டோபஸ் கரங்கள் துழாவுகின்றன. (இப்போது திரைப்படத்துறையிலும் கரத்தை நீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மீட்டர் வட்டிக்காரர்களின் பிடியிலும் பெரிய நிறுவனங்களின் பையிலும் சிக்கிக்கொண்டிருக்கிற தமிழ் சினிமா முற்போக்கான உள்ளடக்கங்களோடு வருவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் சன் குழுமம் போன்ற ஒரு ஏகபோக நிறுவனம் ஆதிக்கம் செலுத்தத் துவங்குமானால் நம் திரைப்படங்களின் உள்ளடக்கம் எப்படியெல்லாம் சிதைக்கப்படுமோ என்ற கவலை ஏற்படத்தான் செய்கிறது. தொலைக்காட்சி மெகாசீரியல்களின் கதி தெரியும் என்பதால் அந்தக் கவலை அச்சமாகவும் அவதாரம் கொள்கிறது. )
இந்தப் பரபரப்பு வணிக தர்மம்தான், ‘மக்கள் மனசு’ என்ற பெயரில் மலிவான ஒரு உத்தியாக இப்படியொரு ‘மெகா சர்வே’ நடத்த வைத்திருக்கிறது. அத்தோடு அரசியல் உள்நோக்கமும், அரசியலைப் பயன்படுத்திக் கொள்கிற வெளிநோக்கமும் சேர்ந்துகொண்டுவிட்டன. இந்த ஏகபோக வணிகம் மற்றும் அரசியல் நோக்கக் கூட்டுதான் மத்திய அரசில் உள்ள தமிழக அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார் என்றொரு கேள்விக்கான ‘மக்கள் கருத்தை’ வெளியிடச் செய்தது. கூட்டணி உணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டதைத் தாம் ஏற்கவில்லை என்று முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்தார். அதன் பின்னரும், கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்று ஒரு ‘ஆய்வு’ முடிவை தினகரன் மே 9 அன்று வெளியிட்டது. அன்றைக்கும் அதைத் தொடர்ந்தும் நடந்த நிகழ்ச்சிகள் பரவலாகத் தெரிந்ததுதான்.மீண்டும் இங்கே வலியுறுத்த வேண்டிய கருத்து - நிச்சயமாக யாரும் மதுரை வன்முறையை நியாயப்படுத்துவதற்கில்லை. என்ன செய்தாலும் மீட்கவே முடியாது அந்த மூன்று தொழிலாளர்களின் உயிர்களை. அரசியலுக்காகவோ, சொந்த செல்வாக்குக்காகவோ வன்முறையைக் கையாள்வதையும், கொலை செய்வதையும் நாகரிக சமுதாயம் அங்கீகரிக்காது. அபத்தமான கருத்து, உள்நோக்கமுள்ள கணிப்பு என்றாலும் தண்டனை தருகிற அதிகாரம் நிச்சயம் அடியாட்களின் கும்பலுக்கு இல்லை. கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை அனுமதிப்பதற்கில்லை.
ஆயினும் சில அடிப்படையான கேள்விகள் எழுகின்றன: ஒரு கார்ப்பரேட் லாப தாகத்துக்கு இதில் சம்பந்தமே இல்லையா? அந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள என்ன செய்தாலும் அது வியாபார தர்மமே என்ற ஏகபோக நியதிக்கு இதில் பொறுப்பே இல்லையா? முதலாளித்துவ லாப வேட்டை யாகத்துக்கு தொழிலாளியின் வியர்வை மட்டுமல்ல, தேவைப்பட்டால் ரத்தமும் வார்க்கப்படும் என்பது உண்மையா இல்லையா? விளம்பரங்களை வாரித்தரும் வள்ளல்களாகிய கொக்கோ கோலா, பெப்சி முதல் சிவப்பழகு கிரீம் நிறுவனங்கள் வரை இந்த நாட்டுக்குத் தேவையா என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் ஒரு போதும் கேட்கப்பட மாட்டா என்பதும் சரியா இல்லையா?
விவாதிக்கப்பட வேண்டியது ஒரு தினகரன் அத்தியாயம் மட்டுமல்ல. மறுபடியும் கட்டுரையின் துவக்கப் பகுதிக்குச் செல்லலாம். பத்திரிகைச் சுதந்திரம்-பத்திரிகை தர்மம் என்பவை வரையறுக்கப்படவில்லை என்று பார்த்தோமல்லவா? அதற்கான சில முயற்சிகளை ஐ.நா. சபை செய்து பார்த்தது. பல சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆயினும் அந்த வரையறுப்பு நடக்கவில்லை. ஏன் தெரியுமா? அன்றைய சோவியத் யூனியன் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் பத்திரிகையாளர்கள் பத்திரிகைச் சுதந்திரம் பற்றி மட்டும் பேசினால் போதாது, ஊடகங்களின் சமுதாயப் பொறுப்பு குறித்தும் வரையறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு ஏகபோக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளோ அதை ஏற்கவில்லை. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம், பொறுப்பு பற்றி வரையறுக்கத் தேவையில்லை என்று அவர்கள் முட்டுக்கட்டை போட்டனர். லாப வெறியில் ஊறிக் கெட்டிப்பட்டுள்ள அந்தக் கட்டைதான் இன்றளவும் உண்மையான சமூக அக்கறையோடு பேனா பிடிப்பவர்களின் தலைகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment