மறுபடியும் கருத்துத் திணிப்பு
*********************************
மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள்- கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு வேலையை. உலக நிதிமூலதனக் காத்துக் கறுப்பு இவர்களை விடாமல் பிடித்து ஆட்டுகிறது. அதன் தலைவிரியாட்டத்தை நிறுத்த வேண்டுமானால் இடது சாரிகளுக்கு இங்கே கிடைத்திருக்கிற - அரசியல் முடிவுகளில் ஓரளவுக்கேனும் தலையிடக் கூடிய - செல்வாக்கை எப்படியாவதுப் பறித்துப் படையலாக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என சற்றுத் தாமதமாகவாவது சரியான முடிவெடுத்தார் அப்துல் கலாம். அதற்குப் பிறகும் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு என்பதாக ஒன்றை நடத்தி அப்துல் கலாம்தான் அடுத்த குடியரசுத் தலைவராகவும் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக செய்தி ஒளிபரப்புகிறது. ஒரு 39000 பேரிடம் *ஆன் லைன்* மூலம் கருத்துப் பதிவு நடத்தப்பட்டதாம். ஆன் லைன் பயன்படுத்தி கருத்துப் பதிவு செய்யக் கூடியவர்கள் யாராக இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நடுத்தர வர்க்க புத்திக் குழப்பம் நிறைந்தவர்களாக அவர்கள் தங்களது கணினிகள் வாயிலாகக் கருத்துக்களை அனுப்ப அதன் முடிவாகப் பின்வரும் செய்தியை அந்த நிறுவனம் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
அணுகுண்டு புகழ் அப்துல் கலாம்தான் மறுபடியும் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று 69 சதவீதத்தினர் கூறியுள்ளனராம். அடுத்து ஆர்எஸ்எஸ் ஆளான பைரோன் சிங் செகாவத்துக்கு 17 சதவீதத்தினர் ஆதரவாம். ஐமுகூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளரான பிரதிபா பாட்டீலுக்கு ஆதரவு 14 சதவீதம்தானாம்.
வேறுபல ஏடுகளும் இதே போல் *மக்கள் கருத்து* வெளியிட்டு வருகின்றன. இந்த மூளைச் சலவை வேலையில் இரண்டு மூன்று அம்சங்கள் இருக்கின்றன.
ஒன்று - இடது சாரிகளின் செல்வாக்கை சகித்துக் கொள்ள முடியாத மூச்சுத்திணரல். ஒரு வேளை காங்கிரஸ் தலைமை முதலிலேயே பிரதிபா பெயரை முன்மொழிந்து அதை இடதுசாரிகள் ஏற்றிருந்தால் இவ்வளவு அலட்டியிருக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் சில பெயர்களை காங்கிரஸ் கூற- அவற்றை இடதுசாரிகள் ஏற்க மறுக்க- அப்புறம் பிரதிபா பெயர் முன்மொழியப்பட- அதை இடதுசாரிகள் முழுமனதோடு வரவேற்க- அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. அதுதான் இவர்களை இடிக்கிறது. இடதுசாரிகளின் சம்மதம் ஒரு முக்கியத் தேவையாகியிருப்பது பளிச்செனத் தெரிகிறது. இதை கார்ப்பரேட் மோகிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அடுத்து - கலாம் பெயரைத் திரும்பத் திரும்ப இழுப்பதன் மூலம் உணர்ச்சியைக் கிளறிவிட்டு ஒரு வெறுப்புணர்வை வளர்க்கிற பாசிசத் தந்திரம். போலியான தேசியவாத அரசியல் நடத்துவோரின் மலிவான உத்தி இது. சிந்திக்க விடாமல் மூளையை ஆக்கிரமிக்கிற அராஜகம். கலாம் மீது ஏற்கெனவே கட்டடமைக்கப்பட்டுள்ள தோற்றத்தை அரசியலாக்குகிற சாணக்கியம்.
ஒரு வேளை மேற்படி கருத்துக் கணிப்புகள் உண்மையானவை என்றே வைத்துக் கொள்வோம் - அதிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு என்ன? ரொம்ப அடிப்படையான கேள்வி இது. ஒரு பெண்ணின் தலைமையை ஏற்க மறுக்கும் ஆணாதிக்க மனநிலையின் அப்பட்டமான வெளிப்பாடுதான் இக் கருத்துக் கணிப்புகளில் பதிவாகியுள்ள சிந்தனை. விவாதம் அதை நோக்கிச் சென்றாக வேண்டும். அப்படிச் செல்லவிடாமல் திசைதிருப்புகிற சாமர்த்தியமும் இத்தகைய கருத்துக் கணிப்புகளில் பொதிந்திருக்கிறது.
ஒரு மாற்றத்திற்கான முதல் அடியை வெட்ட முயல்கிறவர்களின் உள்நோக்கங்கள் வெளியுலகத்திற்கு அம்பலமாக வேண்டும். முற்தேபாக்கு சிந்தனையாளர்கள் இதை ஒரு கடமையாகச் செய்தாக வேண்டும்.
-அ.குமரேசன்
No comments:
Post a Comment