Monday, 25 June 2007

real

விண்ணில் வீசிய வெறி
**************************
அந்த பிரிட்டிஷ் ஏர் வே விமானம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படத் தயாராக இருக்கிறது. அதன் சாதாரண வகுப்புக்கு வருகிற ஒரு வெள்ளைக்காப் பெண் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு வந்ததும் கடுப்பாகிறார். விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.
*எஸ் மேடம். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? ஏதாவது பிரச்சனையா?* என்று கேட்டபடி அருகில் வருகிறார் பணிப்பெண்.
*பார்த்தலே பிரச்சனை தெரியலையா? என் சீட்டுக்கு பக்கத்தில் இந்த கறுப்பரை உட்கார வைத்திருக்கிறீர்கள். பொருத்தமில்லாத மனிதருடன் எப்படி சேர்ந்து உட்கார்ந்து பயணம் செய்ய முடியும்? உடனடியா எனக்கு வேற சீட் ஏற்பாடு பண்ணுங்க. * -வெள்ளைக்காரப் பெண் ஆத்திரத்தோடு இரைந்து சொல்கிறார்.
*ஓகே மேடம். கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இந்த வகுப்பு நிரம்பிடிச்சின்னு நினைக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு வேறு மாற்று சீட் ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்* என்று கூறும் பணிப்பெண் உடனடியாக அந்த இடத்தைவிட்டு நகர்கிறார். சிறிது நேரத்தில் திரும்பி வருகிறார்.
*மேடம் நான் சொன்னது போலவே இன்த வகுப்பில் ஒரு சீட் கூட காலியாக இல்லை. முதல் வகுப்பில் தான் ஒரு சீட்டு இருக்கிறது. உங்கள் பிரச்சனை குறித்து விமானத்தின் கேப்டனுடன் பேசினேன். அவரும் உங்கள் கருத்தை ஒப்புக்கொண்டார்.* என்கிறார் பணிப்பெண்.
அந்த வெள்ளைக்காரப் பெண் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் பணிப்பெண்*பொதுவாக நாங்கள் சாதாரண வகுப்புப் பயணிகளுக்கு முதல்வகுப்பில் இடம் தருவதில்லை. இருத்தாலும் இந்தப் பிரச்சனையின் தனித்துவம் கருதி ஒரு சிறப்புச்சலுகையாக மாற்று இடம் வழங்க எங்கள் கேப்டன் பணித்திருக்கிறார்* எனக் கூறுகிறார்.
அந்த கறுப்பினத்தவரிடம் திரும்புகிற பணிப்பெண்* சார் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் பெட்டியை எடுத்துக் கொண்டு என்னோடு வாருங்கள். முதல் வகுப்பில் உங்களுக்காக ஒரு சீட் காலியாக இருக்கிறது* என்று அழைக்கிறார். வெள்ளைக்காரப் பெண்ணின் முகம் மேலும் வெளுக்கிறது. முதலில் அதிர்ச்சியடைந்திருந்த சாதாரண வகுப்பின் மற்ற பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அந்தக் கறுப்பு மனிதரை முதல் வகுப்புக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
-உண்மையில் நடந்த நிகழ்வு இது
_ஆதாரம்: உலக தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியீடு
தமிழில்: அ.கு.

No comments: