Sunday, 8 July 2007

சந்தர்ப்பவாதமும் வளைந்து கொடுப்பதும்

குடியரசுத்தலைவராக வருபவர் ‘‘வளைந்து கொடுப்பவராக இருக்க வேண்டும்’’ என அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கூறியதை எனது ‘‘கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா - ஆமா! ஆமா!,’’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கலாமே என்று வலைப்பதிவு நண்பர் ஜீவா ஒரு நையாண்டிச் சுவையோடு விமர்சனம் அனுப்பியிருக்கிறார்।கண்டுக்கிடாமல் இருப்பதை விட இப்படி எதிர்வினையாற்றுவது எவ்வளவோ நல்லது।ஆங்கிலத்தில் ‘‘ஃபிளெக்ஸிபிள்’’ என்ற வார்த்தைக்கு, நேர்மையான பொருள், ‘‘நிலைமைகளுக்கு ஏற்ப அனுசரித்துச் செல்வது,’’ ‘‘வறட்டுப் பிடிவாதமின்றி சகல பகுதியினரின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்பது’’ என்றே நான் புரிந்து கொள்கிறேன்। ‘‘வளைந்து கொடுப்பது’’ என்பது, இடம் நோக்கிப் பார்க்கையில் கச்சிதமான மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லை।புதிய, புதிய நிலைமைகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிற போது, அதற்கேற்ற அணுகுமுறையில்லாமல் வறட்டுப் பிடிவாதக்காரராக இருப்பது வெறும் கற்பனைக்கு சுகமானதாக, செயற்கையான தமிழ்சினிமா கதாநாயகன் போன்றதாக, வாழ்க்கைக்கு உதவாததாகவே முடியும்। இதன் அர்த்தம் சமரசம் செய்து கொள்வதல்ல। மாறாக வள்ளுவன் சொன்னது போல ஒரு செயலின் நல்லது கெட்டது இரண்டையும் ஆராய்ந்து, அவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அதற்குத் தக, மிகை நாடி மிக்க கொள்பவராக இருப்பதே ‘‘ஃபிளெக்ஸிபிள்।’’நாட்டின் குடியரசுத்தலைவர் இப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில், தேர்தல் நடக்க விருக்கிற இந்த ‘‘சந்தர்ப்பத்தில்’’ கருத்துத் தெரிவித்திருக்கிறார் அந்தத் தலைவர். அது அவரது சொந்தக் கருத்து மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துமாகும்.இப்படிப் பட்ட சுயநலம் சாராத ‘‘சந்தர்ப்பவாதங்கள்’’ பெருமைக்குரியதே. எந்த வார்த்தையை எந்தத் தொனியில் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம்.தொடரலாம் விவாதத்தை.

No comments: