Tuesday, 3 July 2007

‘நிதானமிகு’ நடுநிலையாளரின் நிஜமான சொரூபங்கள்

அ.குமரேசன்

‘‘ராஜஸ்தான் ஒரு குஜராத்தாக மாறும்.’’-இப்படிச் சொன்னவர் யார்? குடியரசுத்தலைவர் தேர்தலில் ‘‘சுயேச்சை’’ வேட்பாளராகப் போட்டியிடுகிறவரும் தற்போதைய துணைத் தலைவருமான பைரோன் சிங் ஷெகாவத்! குஜராத் போல ராஜஸ்தானிலும் பால் உற்பத்தி பெருகும் என்ற அர்த்தத்தில் அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதில் எந்த ஐயமும் தேவையில்லை. 2002ம் ஆண்டில் ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சராக சுற்றிக்கொண்டிருந்தபோது, மறுபடியும் பாஜக ஆட்சியை எப்படியாவது அங்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது ஷெகாவத் சொன்ன வார்த்தைகள் இவை.அவரது முழு வாக்கியத்தையும் தெரிந்துகொண்டால் இன்னும் தெளிவாகும்:‘‘முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துகிற வேலையையும், இந்துக்களுக்கு விரோதமான கொள்கைகளையும் மாநில (காங்கிரஸ்) அரசு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் ராஜஸ் தானில் குஜராத் போன்ற நிலைமை ஏற்படும்.’’ (ஏப்ரல் 23 அன்று கங்காபூர் நகரில் நடந்த பாஜக கூட்டத்தில் பைரோன் சிங் ஷெகாவத் பேசியது . ஆதாரம் ‘தி ஹிண்டு’, ஏப்ரல் 30, 2002)

கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டி திடீரென நெருப்புக்கு இரையாக அதில் இருந்த கோயில் சுற்றுலாப் பயணிகள் அதில 58 பேர் உயிரிழந்தார்கள். அதைச் செய்தது முஸ்லிம்கள்தான் எனக் கிளப்பிவிட்டு குஜராத் முழுவதும் வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சங் பரிவாரம். ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் - குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட - கொன்று குவிக்கப்பட்டனர். நாடு முழுவதும் ஒற்றை மதவெறி ஆட்சியை நிறுவுவதற்கான சோதனைத் தளமாக குஜராத் மாற்றப்பட்ட அந்தப்படுகொலைகளும் உடைமை அழிப்புகளும் ராஜஸ்தானுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அப்பட்டமாக மிரட்டினார் ஷெகாவத். இவரைத்தான் ஒரு ‘‘நிதானமான’’ இந்துத்வா ஆள் என்றும், நடுநிலையாளர் என்றும் பாஜக தலைவர்களும் அதன் கூட்டணியில் உள்ளவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனம் முழுக்க சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்வா வெறுப்பும் பகைமையும் ஊறிப்போனவர் இவர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராகக் களம் காண்கிற பிரதிபா பாட்டீல் பற்றி சில ஊழல் புகார்களை எடுத்துவிட்டுப் பார்த்தது பாஜக. செய்திகளாகக் கூட வராத அந்தப் புகார்கள் மக்களிடம் எடுபடவில்லை. கண்ணாடி வீட்டிற்குள் அம்மணமாக நின்றுகொண்டு வெளியே உள்ளவர்களைப் பார்த்து ‘‘ஷேம் ஷேம் பப்பி ஷேம்’’ என்று கிண்டல் செய்வது போன்றதுதான் பாஜக இப்படி பிரதிபா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீசுகிற செயல். ஏனென்றால் இவர்களது ‘‘நிதானமிகு’’ சுயேச்சை வேட்பாளர் அரசியலுக்குள் நுழைந்ததே ஒரு ஊழலின் பின்னணியில்தான்!

60 ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தான் காவல் துறையில் ஒரு காவலராக (கான்ஸ்டபிள்) இருந்தவர் ஷெகாவத். நாடு விடுதலையடைந்த எட்டாவது நாளில் 1947 ஆகஸ்ட் 23 அன்று) அந்த வேலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக்கான காரணம் - லஞ்சம் வாங்கினார் அல்லது முறைகேடாக நடந்துகொண்டார் என்பதுதான்! இடை நீக்கக் காலம் முடிந்து மறுபடி வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றாலும் சில நாட்களில் வேலையை விட்டு விலகி முழு நேர அரசியலில் குதித்தார்.

ராஜஸ்தானின் முதலமைச்சராக 1977-80, 1990-92, 19993-98 ஆகிய காலகட்டங்களில் மூன்று முறை பதவியில் இருந்தவர் ஷெகாவத். ஒரு பக்கம் அரசு எந்திரத்தை மதவெறிமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை இக்கால கட்டங்களில் எடுத்து இந்துத்வா கூடாரத்தை வளர்த்தார். இன்னொரு பக்கம் ஊழல்களை வளர்த்தார்.

உதாரணத்திற்கு இவர் நெருக்கமாக சம்பந்தப்பட்ட ஒரு ஊழல் விவகாரம்: இவர் முதலமைச்சராக இருந்த போது, 1994ம் ஆண்டில் இவரது மருமகன் நர்பத் சிங் ராஜ்வி, நில ஆவணங்களில் மோசடி செய்து, சுமார் 560 ஏக்கர் நிலம் தனக்குச் சொந்தமானதுதான் என்று கணக்குக் காட்டினார். பிகானூர் பகுதியில் விவசாயத்துக்காகவும் குடிநீருக்காகவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. இந்திரா காந்தி கால்வாய் என்ற அந்தத்திட்டத்திற்காக அரசு கையகப் படுத்திய நிலத்தில் குறிப்பிட்ட பகுதி தனக்குச் சொந்தமானது எனக் கூறி அதற்கான இழப்பீட்டுத் தொகையாக கோடிக்கணக்கில் கோரினார். அப்புறம் அந்த நிலம் அவருக்குச் சொந்தமானது அல்ல என்பதும், இழப்பீட்டுத் தொகையை ஆட்டை போடுவதற்காக, அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தன்னுடையது என அரசாங்க ஆவணங்களில் மோசடியாகப் பதிவு செய்தார் என்பதும் அம்பலமானது. ராஜ்வியின் தந்தை ஒரு வட்டாட்சியராக இருந்தவர். அவர்தான் ஆவணங்களில் தகிடுதத்தம் செய்து, பிகானூர் மாவட்டத்தின் மோம்வாலா என்ற கிராமத்தில் அந்த 560 ஏக்கர் நிலம் தனது மகனின் சொத்து என பதிவு செய்தார். திருடர்கள் ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொள்வது போல, அந்த ஆவணத் தேதிகள், ராஜ்வி பிறப்பதற்கும் முந்தைய தேதிகளாக திருத்தப்பட்டிருந்ததால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது!அந்த விவகாரத்தில், தனது ஒரே மகளின் கணவரைக் காப்பாற்றவே அன்றைய முதல்வரான ஷெகாவத் முயன்றார். அது மட்டுமல்ல மேற்படி நில ஆவண மோசடிப் பேர்வழி இப்போது ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே அரசில் ஒரு அமைச்சராக இருக்கிறார்!

ஷெகாவத்தின் மற்றொரு நெருங்கிய உறவினர், முதலமைச்சர் குடும்பம் என்பதைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தில் ஏகப்பட்ட நிலத்தைச் சுருட்டுவதற்கு ஆவணங்களில் திருகுதாளம் செய்தார். அதற்குத் தோதாக நிலக்குத்தகை தொடர்பான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்று சில ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஷெகாவத். 1992ல் இந்த விவகாரம் அக்கறையுள்ள சில ஊடகங்களால் வெளியே வந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுரேந்திர வியாஸ் என்பவர் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாணுக்குக் கடிதம் எழுதி, மேற்படி சட்ட மசோதாவை நிறுத்திவைக்கக் கோரினார்.

இந்த மாதிரியான ஊழல் மட்டுமல்ல, வேறு ‘‘ஒரு மாதிரியான’’ நடவடிக்கைகளும் ஷெகாவத் ஆட்சியில் அரங்கேறின. அப்போது அவருக்கு நெருக்கமானவராக இருந்தவர் ஷாலினி சர்மா என்பவர். அல்வார் பகுதியில் பாஜக வட்டாரத் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டு மேலிடத்துக்குச் சென்ற பெண் அவர். சமூக நலத் துறையின் துணைத் தலைவராக ஷெகாவத்தால் நியமிக்கப்பட்டவர். ஆனால் சில நாட்களில் அவரும் அவரது கணவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு - ஒரு பள்ளி ஆசிரியையை சில மேல்மட்டத் தலைவர்கள், மந்திரிகள், எம்எல்ஏ-க்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் காமப் பசிக்கு இரையாக்கினார்கள் என்பது! விவகாரம் அம்பலமானதால் வேறு வழியின்றிப்போக அந்த லட்சியத் தம்பதியைக் கைது செய்ய வேண்டியதாயிற்று. அப்புறம் பார்த்தால், அவர்கள் இதே தொழிலாக இருந்து, பல மேலிடத்தவர்களுக்குப் பல பெண்களை அனுப்பி வைத்தது தெரிய வந்தது. ஆனாலும் ஷாலினியும் அவரது கணவரும் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஷாலினியைப் பெரிய ஆளாக வளர்த்துவிட்டது ஷெகாவத்தும் ராஜ்வியும்தான் என்று எழுந்த குற்றச்சாட்டு அத்தோடு அமுக்கப் பட்டது.

குடியரசுத்துணைத்தலைவராக ஷெகாவத் மிக ‘‘நடுநிலையாக ’’ நடந்துகொண்டார் என்றும் அதற்காக அவரை இப்போது ஆதரிக்க வேண்டும் என்றும் சிலர் கூசாமல் கூறுகிறார்கள். 2002-2003ம் ஆண்டுகளில் அவர் டில்லியிலிருந்து அடிக்கடி ராஜஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது குறைந்தது 16 முறை அவர் ஜோத்பூர், கோட்டா, உதய்ப்பூர், ஜெய்ப்பூர், துங்கர்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ‘டிரிப்’ அடித்தார். குடியரசுத் துணைத்தலைவர் என்ற முறையில் தாம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராகச் செயல்பட வேண்டும் என்ற குறைந்தபட்ச நெறிமுறையை அப்பட்டமாக மீறி பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளர் போல, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டார்.

இவ்வளவு ஏன்? ஆர்எஸ்எஸ் நடத்தும் ‘ஆர்கனைசர்’ ஏட்டின் 2006, மார்ச் 26 இதழ் கோல்வாக்கர் சிறப்பிதழாக வெளியானபோது, அவரைப் புகழ்ந்து அதில் கட்டுரை எழுதினார் ஷெகாவத். மக்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் எனப் பாகுபடுத்தி, சூத்திரர்களையும், தலித்துகளையும், எந்த வர்ணமானாலும் அனைத்துப் பெண்களையும் இழிவுபடுத்தும் மனுதர்மம்தான் நாட்டின் அரசமைப்புச் சட்டமாக ஏற்கப்பட வேண்டும் எனக் கூறியவர் கோல்வாக்கர். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப் பட்ட அரசமைப்புச் சட்ட நிர்ணயக் குழுவை ஏற்க முடியாது என்றவர். அந்த கோல்வாக்கரைத்தான், மிகச் சிறந்த தேசியவாதி என்றும், நாட்டுப்பற்றாளர் என்றும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் எழுதினார் - மக்கள் அனைவரும் சமம் எனக் கூறும் அரசமைப்பு சாசனத்தைப் பாதுகாக்கிற பொறுப்பில் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத். இவர் இப்போது குடியரசுத் தலைவராகவே வரத் துடிப்பது ஏனென்று விளக்க வேண்டியதில்லை.

நாட்டின் வரலாற்றில் ஒரு பெண் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ள சூழலில், இந்த ஷெகாவத், பிரதிபா பாட்டீலை எதிர்த்துப் போட்டியிடுவதில், இந்துத்வாவின் அடிப்படையான பெண்ணடிமைச் சிந்தனையும் இருக்கிறது. இவர் முதலமைச்சராகக் கோலோச்சிய 1993-98 காலகட்டம்தான், ராஜஸ்தானில் வன்புணர்ச்சி உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மிக அதிகமாக நடந்த காலகட்டம். பாலியல் கொடுமைகள் எட்டு மடங்காக அதிகரித்த காலகட்டம். மாதர் அமைப்புகளைச் சேர்ந்தோர் இதை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அப்போது ஷெகாவத் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘அங்கும் இங்குமாக நடக்கிற ஒன்றிரண்டு கற்பழிப்புச் சம்பவங்கள் குறித்து ஏன் இவ்வளவு கூச்சல் போடுகிறார்கள்?...’’ என்று கேட்டார்! ஷாலினி சர்மா போன்றவர்களை வளர்த்துவிட்டவருக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியாததில் என்ன வியப்பு இருக்க முடியும்?

நடுநிலையாளர், மிதவாதி, நிதானமானவர், மென்மையாகப் பேசுகிறவர், ஊழல் கரை படியாதவர் என்பதாகவெல்லாம் கட்டிவிட்டு பைரோன் சிங் ஷெகாவத்தை நிறுத்தித் தனது காய்களை நகர்த்துகிறது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல். அவரது உண்மையான லட்சணம் என்ன என்பதற்கு சில சோற்றுப் பதம்தான் மேற்கண்ட விவரங்கள். நம் கிராமங்களில் புழங்கும் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது: ‘‘யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை.’’

No comments: