Saturday 20 November 2010

நாளும் கடத்தலாகும் 240 கோடி!

ஏழைகளின் நிலைமைகள் குறித்துப் பேசச் சொன்னால் மனமுருகப் பேசுவார்கள். இவர்களுக்காக எதுவும் செய்யக்கூடாதா என்று கேட்டால், கருவூலத்தில் நிதி இல்லையே என்பார்கள். பெட்ரோல் விலையை ஏற்றி ஏழைகள் மீது மேலும் சுமைகளை ஏற்றுகிறீர்களே என்று கேட்டால் அரசு திட்டங்களுக்கான நிதிக்கு எங்கே போவது என்று திருப்பிக் கேட்பார்கள். மத்திய ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் இப்படிப்பட்ட சொல்வித்தைகளை நிறையவே பார்த்திருக்கிறோம். "நிதி இல்லை என்கிறபோது அரசாங்கத்தால்தான் என்ன செய்துவிட முடியும்," என்று நினைக்கிற அப்பாவிகளும் இருக்கிறார்கள்.

"பணம் இல்லை என்ற பிரச்சனையே இல்லை. பணம் வேறு வேறு பைகளுக்கு இடம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை." - இது ஒரு ஆங்கில நகைச்சுவைத் துணுக்கு. நமது நாட்டிலும் நிதி இல்லை என்கிற பிரச்சனையே இல்லை. அது யாரிடம் இருக்கிறது, எங்கே போகிறது என்பதுதான் பிரச்சனை.

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சுமார் 240 கோடி ரூபாய் நாட்டைவிட்டு சட்ட விரோதமாக வெளியேறுகிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. 1948 முதல் 2008 வரையிலான 60 ஆண்டு காலத்தில் இப்படி நாட்டைவிட்டு சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சட்டத்தின் கண்களில் படாமல் கடத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவுதான் என்று நினைத்துவிடாதீர்கள், 2000 முதல் 2008 வரையிலான எட்டே ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தொகை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்!

உலக நிதி ஒழுங்குநிலை (ஜிஎப்ஐ) என்ற ஆய்வமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மருட்சியை ஏற்படுத்தும் இந்தப் புள்ளி விபரம் தரப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பன்னாட்டு கொள்கை மையம் என்ற நிறுவனத்தின் நிதி ஆராய்ச்சிப் பிரிவுதான் இந்த ஜிஎப்ஐ.

சட்டவிரோதமாகப் பணம் கடத்தப்படுகிறது என்றால் அது ஏதோ கள்ளக் கடத்தலில் கொண்டுபோகப்படுவதல்ல; சுவி வங்கிகளில் போடப்படும் கணக்கில் வராத பணமும் அல்ல. "ஊழல், லஞ்சம், கமிஷன், குற்ற நடவடிக்கைகள், வரி ஏய்ப்பு போன்ற முறைகளில் பணம் வெளியேறுகிறது" என்று ஜிஎப்ஐ அறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத வாய்க்கால்கள் மூலம் 2004 - 08 ஆகிய நான்காண்டு காலத்தில் இங்கேயிருந்து கண்ணுக்குத் தெரியாமலே மறைந்த பணம் நான்கு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்! இன்றைக்கு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிற, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடிபடும் தொகையை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என்று, இந்த ஆய்வறிக்கை விவரங்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார் பத்திரிகையாளர் பி. சாய்நாத். (தி ஹிண்டு 18-11-2010)

இந்த ஆய்வில் ஈடுபட்டவரான தேவ் கார்,"ஆண்டுக்கு சுமார் 19.3 பில்லியன் டாலர் வேகத்தில் நிதி இழப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு பெரிய இழப்பை இந்தியா நிச்சயமாகத் தாங்கிக்கொள்ள முடியாது," என்று கூறுகிறார்.

"இந்த அளவிற்கு பணம் சட்டவிரோதமாக வெளியேறுவதை தடுத்திருந்தால், 2008ம் ஆண்டு நிலவரப்படி நாட்டிற்கு உள்ள 230.6 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை அடைத்திருக்க முடியும். எஞ்சுகிற தொகையில் பாதியை வறுமை ஒழிப்புக்குப் பயன்படுத்த முடியும்",என்று அதே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

"இந்த ஆய்வில் கள்ளக்கடத்தல், சில வகை வர்த்தக மோசடிகள், சில புள்ளி விவரங்களின் பற்றக்குறை ஆகிய விவரங்கள் சேர்க்கப்படவில்லை. விடுதலைக்கு பிறகு இந்தியா சுமார் அரை டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலர் தொகையை பறிகொடுத்து வந்திருக்கிறது என தோராயமாக மதிப்பிடலாம்", என்று ஜிஎப்ஐ இயக்குநர் டபிள்யு. பேக்கர் கூறுகிறார். இந்த விவரங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிடைக்கிற தொகை மாரடைப்பையே ஏற்படுத்தக்கூடும்.

"இந்தியாவின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் சுமார் 16.6 விழுக்காடு அளவிற்கு, 2008ம் ஆண்டு இறுதியில் நிதி வெளியேறியிருக்கிறது. ஏற்கெனவே 2009ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஊடங்களில் 1.4 டிரில்லியன் டாலர் கடத்தப்படுவதாக செய்திகள் வந்தன. இந்த அறிக்கை அந்த அளவிற்கு சுட்டிக்காட்டவில்லை என்றாலும் கடத்தப்படும் தொகையின்அளவு நிச்சயமாக மிரட்டலானதுதான்," என்கிறார் பேக்கர்.

இதனால் என்ன கெட்டுவிட்டது? “நாட்டின் வளம் விநியோகிக்கப்படுவது மோசமாகிறது. வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய நிதி உதவிகளின் பலன்கள் நீர்த்துப்போகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி முடங்குகிறது.”

இந்தியாவில் சுமார் 83 கோடியே 60 லட்சம் பேர் ஒரு நாளில் 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யக் கூடியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று முறைசாரா துறைகளுக்கான தேசிய தொழில் ஆணையம் (என்சிஇயுஎஸ்) கூறியுள்ள பின்னணியோடு, நாள்தோறும் கடத்தப்படுகிற 240 கோடி ரூபாயை ஒப்பிட்டுக் காட்டுகிறார் சாய்நாத்.

நாட்டின் பொருளாதாரத்தைத் தாக்குகிற போட்டிப் பொருளாதாரத்தில் இந்த வெளியேற்ற நிதிதான் பெரும்பான்மை. இந்த வழிகளில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்திய சொத்துகளின் மதிப்பு, ஒட்டுமொத்த கருப்புச் சந்தையில் 72 விழுக்காடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 விழுக்காடாகும். நாட்டின் கருப்புச் சந்தை பணத்தில் 28 விழுக்காடு மட்டுமே நாட்டிற்குள்ளேயே சுற்றிவருகிறது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிற தகவல் உண்மையிலேயே மலைப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன? சிலரது பேராசை, சட்டத்திற்குக் கட்டுப்படாத போக்கிரித்தனம் என்றெல்லாம் எளிதான பதில்களைச் சொல்லிவிடலாம். என்ன வேண்டுமானாலும் செய், லாபம் குவிப்பது மட்டுமே உன்னத லட்சியம் என்ற முதலாளித்துவக் கோட்பாடு கோலோச்சுகிற வரையில் இப்படிப்பட்ட கடத்தல்கள் தொடரவே செய்யும். அண்மைக் காலத்தில் கடத்தப்படும் தொகை இவ்வளவு பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பதை இன்றைய உலகமய, தாராளமய, தனியார்மய மூர்க்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

காமன்வெல்த், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் என்று என்னென்னவோ நோய்கள் வந்து தாக்கினாலும் உலகமய மோகத்திலிருந்து விடுபட மாட்டேன் என்று பிடிவாதமாகத் தவமிருக்கிற மன்மோகன் சிங்குகள் இதை உணர்வார்களா? மாட்டார்கள், உண்மையை மக்களிடம் கொண்டுசெல்வதே மாற்றுவழி.

(‘தீக்கதிர்’ 19.11.2010 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

1 comment:

Unknown said...

நல்ல கட்டுரை தோழர்!