இந்தியாவில் கம்யூனிச இயக்கம் ஏன் பெரியதொரு சக்தியாக வளரவில்லை என்ற ஒரு நண்பரின் கேள்வியிலிருந்தே இந்தத் தேடலைத் தொடங்கினோம். அந்தத் தேடலில், இந்தியச் சமுதாயம் எப்படி சாதிப் பாகுபாடுகள் என்ற வலிமையான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்ற ஒரு முக்கியமான விடை கிடைத்தது.
அந்தச் சாதி என்ற கட்டுமானத்தின் அடிவாரமாக பொருளாதாரச் சுரண்டலும் சமூக ஒடுக்குமுறையும் சம அளவில் கலந்து குழைத்துக் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுள், கடவுளின் பெயரால் நிறுவப்பட்டுள்ள மதம், அந்த மதத்தின் உள்ளமைப்பாக சாதி என்று கட்டமைக்கப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும், உண்மையில் இங்குள்ள சமூகக் கட்டமைப்பில் அடிப்படையாக இருப்பது சாதிதான். ஆகவேதான் இங்கே யார் வேண்டுமானாலும் மதம் மாற முடியும்; அதாவது தன்னைப் படைத்துக் காப்பவன் என்று இதுவரை நம்பிக்கொண்டிருக்கிற ஒரு கடவுளை அம்போ என்று விட்டுவிட்டு வேறொரு கடவுளை வணங்க முடியும். ஆனால் தன் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் எந்த மதத்திற்குப் போனாலும் அவர் அவரது சாதிதான்.
இதற்கும் கம்யூனிச இயக்கத்தின் நிலைக்கும் என்ன தொடர்பு? கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மையை, துணிவை, தியாகத்தை மதிக்கிறவர்கள் இவ்வளவு நல்லவர்கள் அரசியலில் ஒரு பெரும் வல்லமை பெறவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் சில நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களுக்காக முதலாளித்துவக் கட்சிகளோடு மாறி மாறிக் கூட்டு வைப்பதால்தான் அவர்கள் வளர்ச்சியடையவில்லை சிலர் கூறுகிறார்கள். நாடாளுமன்றம், தேர்தல் ஆகிய இந்திய அரசமைப்பு முறைகளை நிராகரிக்கிற ஒரு பிரிவினர், தேர்தலில் பங்கேற்கிறவர்களை போலி கம்யூனிஸ்ட்டுகள் என்று திட்டுவதுண்டு.
எந்த நாடானாலும் அதன் சமுதாய அமைப்பு, மக்களின் தயார் நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எந்வொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. பெரும்பகுதி மக்களைத் திரட்டாமல், மக்கள் பங்கேற்பில்லாமல் நடக்கிற ஒரு புரட்சிகரமான மாற்றம் விரைவில் உலர்ந்து உதிர்ந்துவிடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சோசலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததற்கு, அங்கெல்லாம் படைபலத்தை மட்டுமே முக்கியமாக நம்பி ஆட்சிமாற்றம் கொண்டுவரப்பட்டது ஒரு முக்கியமான காரணம்.
இந்தியாவில் புரட்சிக்காக மக்களைத் திரட்டத் தடையாக இருப்பது எது?
அநியாயங்களைக் கண்டு கொந்தளிக்கிற மக்கள், அக்கிரமக்காரர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும் என்று ஆத்திரத்தோடு நண்பர்களிடம் பேசுகிறார்கள்; ஆனால், ஒரு சிறு கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் கூட வர மாட்டேனென்கிறார்களே - ஏன்?
இன்றைய சுரண்டல்கள் பற்றி எடுத்துச்சொல்லி, இதற்கொரு மாற்றம் வேண்டாமா என்று கேட்டால் “இவர்களுக்கு வேற வேலையில்லை” என்பது போலப் பார்த்துவிட்டு ஒதுங்குகிறார்களே - ஏன்?
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கோரி ஒரு ஊர்வலம் நடக்கிறபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து ஏற்கெனவே ஏதோவொரு வேலையில் இருக்கிற தொழிலாளிகளும் கலந்துகொள்கிறார்கள்; ஆனால் வேலையின்றி வீட்டில் அவமானப்படுகிற இளைஞர்கள் அந்த ஊர்வலத்தைக் கண்டு “வெட்டிப்பசங்க, இவங்க கோஷம் போட்டு ஊர்வலம் போனால் வேலை கிடைச்சுடுமாக்கும்” என்று இளக்காரமாகப் பேசுகிறார்களே - ஏன்?
நாட்டின் நிலைமைகள், அவலங்கள் பற்றியெல்லாம் சொல்கிறபோது ஒப்புக்கொள்கிறவர்கள், “இதையெல்லாம் மாத்த முடியாதுங்க” என்று ஒதுங்கிவிடுகிறார்களே - ஏன்?
நம் மக்களின் இந்த பொதுவான மனநிலைக்கான காரணங்களை ஆராயாமல், தீடீர்ப்புரட்சியை நடத்திவிட முடியாது.
காரணங்கள் என்று எதையெல்லாம் கருதுகிறீர்கள்?
நண்பர்களே, உங்கள் எண்ணங்களை சுருக்கமாக இங்கே பின்னூட்டமிடுங்கள். நம் உரையாடலைத் தொடர்வோம்.
1 comment:
மக்களின் பொதுவான மன நிலையில் இப்படியான சிந்தனைதான் இருக்கிறதெனக் கூறிவிட முடியாது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், கம்யூனிஸ்டுகளை பல ஆண்டுகளாக இருந்தவர்கள், இயக்கத்தின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்பும் ஒரு சிறு பிரிவினர் மத்தியிலும் இப்படியான சிந்தனைகள் இருக்கின்றன. வெறும் விமர்சனங்களாலேயே தன்னை மேதாவியாகக் காட்டிக்கொள்ளக் கருதும் ஒரு பகுதியினரும் இப்படியாகன விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
உண்மையில் நம் தேவை இருக்கிற, ஆனால் இதுவரைக்கும் கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் கிடைக்காத ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடிச் சேர்ப்பதில் முயற்சிப்பதே நம் மீதான அர்த்தமற்ற விமர்சனங்களை ஒன்றுமில்லாமல்ச் செய்யும்.
Post a Comment