Sunday, 28 November 2010

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

திரைப்படம் அல்ல... வரலாற்றுப் பாடம்


இந்தியாவின் தனித்துவம் என்னவென்றால் இந்திய சமுதாய அமைப்புதான் என்று பெருமிதத்துடன் கூறுவோர் உண்டு. வேலைப்பிரிவினை அடிப்படையில் கட்டப்பட்ட இந்திய சமுதாய அமைப்பு போல் உலகில் வேறெங்கும் காண இயலாது எனப் புளகாங்கிதம் அடைவோர் உண்டு. ஆனால், சிந்திக்க விடாமல் தடுக்கிற இப்படிப்பட்ட பெருமைத் திரைகளின் பின்னால் இருப்பது, பிறப்பால் மனிதர்களுக்குத் தாழ்ச்சியும் உயர்ச்சியும் கற்பித்த சாதிப் பாகுபாடுதான்.

அறிவு சார்ந்த வன்முறை, உடல் சார்ந்த வன்முறை இரண்டு வகையாலும் சாதி அடுக்கின் மேல் தட்டுகளில் அமர்ந்துகொண்டவர்கள், அவர்களுக்குக் கீழேதான் மிதிபட வேண்டும் என்றாலும் தங்களிடமும் மிதிபடுவதற்கு என சில பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டவர்கள், இந்த மேல்தட்டினர் அனைவரிடமும் மிதிபடுவதற்கென்றே அடித்தட்டிற்குத் தள்ளப்பட்டவர்கள்... இதையெல்லாம் தத்துவமாக்கியதே வர்ணாசிரம (அ)தர்மம். இது இந்த நாட்டின் மிகப்பெரிய அவமானமேயன்றி, பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலகமறிய இந்த உண்மையை உரக்கக்கூறியவர், சாதி-வர்க்க பேதம் ஒழிப்பதற்கான அரசியல் இயக்கத்தை வழிநடத்தி அதற்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். அவரைப் பற்றிய ஒரு திரைப்படம் ஆங்கிலத்தில் 2000வது வெளியானது. சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய தேசிய விருதுகளையும் பெற்ற இந்தப் படம் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மற்ற பல இந்திய மொழிகளில் மறுபதிப்புச் செய்யப்பட்டு அந்த மாநிலங்களின் மக்களையும் சென்றடைந்தது. தமிழிலும் வருகிறது என்ற தகவல் வந்தது, ஆனால் படம் திரையரங்கிற்கு வராமலே இருந்தது. இப்போது அதிலிருந்த சட்டச் சிக்கல்கள் களையப்பட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நேரடி விநியோகத்தில் தமிழக மக்களிடமும் வருகிறது.

மழைக்காகக் கோவில் மண்டபத்தில் ஒதுங்குகிற தலித் இளைஞனை அடித்து நொறுக்குகிற ஒரு ஆதிக்க சாதிக்கூட்டம், உன் மனசில் என்ன அம்பேத்கர்னு நினைப்பா என்று கேட்பதுடன் படம் தொடங்குகிறது. ரத்தச்சேற்றில் அந்த இளைஞனின் உடல் கோயில் வாசலில் நந்தி சிலையருகே கிடப்பதாகக் காட்டப்படுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள காட்சி.

மன்னரின் நிதியுதவியோடு மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் செல்கிறார் அம்பேத்கர். படிப்பு முடிந்து வந்தபின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தம். தந்தையின் எதிர்ப்பை மீறி வெளிநாடு புறப்படுகிற அம்பேத்கரின் நோக்கம் அரண்மனை வேலைக்காகப் பட்டம் பெறுவதல்ல. சிறு வயது முதல் அவர் அனுபவித்த சாதிப் பாகுபாட்டு இழிவுகளுக்கான வரலாற்று மூலங்களைக் கண்டுபிடிக்கிற ஆராய்ச்சியே நோக்கம். அப்படி அவர் கண்டுபிடித்த உண்மைகள்தான், சமுதாய விடுதலையை இணைக்காமல் இந்தியாவின் அரசியல் விடுதலை என்பதில் அர்த்தமில்லை என்ற உறுதியான எண்ணத்தை அவருக்குள் விதைக்கிறது. அந்த எண்ணத்தின் தாக்கத்தில், தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைகளுக்கும் எதிரான போராளியாக அவர் பரிணாம வளர்ச்சி கொள்ளகிறார்.

இதே அடிப்படையில்தான் அவர் காந்தியிடம் மோதுகிறார். பிரிட்டிஷ் அரசுடனான பேச்சுவார்த்தையில் தலித் மக்களுக்கு என தேர்தல்களில் தனித்தொகுதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அது மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தில் பிளவு ஏற்படுத்திவிடும் என்று கூறுகிற காந்தியுடன் வாதாடுகிறார். அம்பேத்கரின் இக்கோரிக்கையை எதிர்த்து ஆதிக்கசாதியினர் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள். பிரிட்டிஷ் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வலியுறுத்தி தனது உண்ணாவிரதப் போராட்ட ஆயுதத்தை கையில் எடுக்கிறார் காந்தி. அவரது நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என மருத்துவர்கள் எச்சரிக்க காந்தியின் மகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். "என்னுடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வற்புறுத்துகிறவர்கள் காந்தியைப் பார்த்து அவருடைய நிலைபாட்டை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்," என்று அம்பேத்கர் கேட்பதில் எத்தனை நியாயம்! எனினும் காந்தியை சந்திக்கிறார், ஒரு உடன்பாடு ஏற்படுகிறது. அப்போது உண்ணாவிரத ஆயுதத்தை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள் காந்திஜி, என்று அம்பேத்கர் கூறுகிறபோது திரையரங்கில் எழுகிற கைதட்டல் ஒளி, ஒரு நுட்பமான அரசியல் புரிதலை வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கர் ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற பிராமணர் என்று நினைத்த காந்தி அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து வியக்கிறார். பின்னர் சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருக்கத் தகுதி வாய்ந்தவர் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பெயரை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் காந்தி பரிந்துரைக்கிறார். அன்றைய அரசியலின் உயர்ந்த தரத்தை இப்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் பருகும் போராட்டம் என அடுத்துதடுத்த ஓட்டம் அன்றைய உண்மைச் சூழலை உணர்த்துகிறது. இந்தப் போராட்டங்களுக்கான தேவைகள் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்ற இன்றைய உண்மைச் சூழலோ உறுத்துகிறது.சட்ட வல்லுநராக மட்டுமல்ல, குடியரசாக ஆகிவிட்ட இந்தியாவின் சட்டங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்த அரசமைப்பு சாசன நிர்ணயக் குழுவின் தலைவராகவும் வரலாற்றுப் பங்களித்தவர் அம்பேத்கர். குழுவின் மற்ற உறுப்பினர்களில் பலர் ஒத்துழைக்காத பின்னணியில் மற்ற பல நாடுகளில் இருந்து மாறுபட்ட, பெருமைக்குரிய ஒரு அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த தலைமகனாகத் திகழ்ந்தவர் அம்பேத்கர்தான் என்ற உண்மையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிற இடம், படத்தைப் பார்ப்பவர்களுக்கும் அதனைத் தெளிவு படுத்துகிறது.

சட்ட அமைச்சராக, ஒரு முக்கியமான சட்டத்தைக் கொண்டுவர முனைகிறார் அம்பேத்கர். இந்து திருமணச் சட்டம், விதவைச் சட்டம் ஆகியவற்றில் முற்போக்கான மாற்றங்களைச் செய்கிற இந்தியப் பெண்ணுக்கு புதிய உரிமையை வழங்குகிற அந்தத் திருத்தத்தை ஆணாதிக்க இந்துக்கள் எதிர்க்கிறார்கள். பெண் அடங்கியிருப்பதே தர்மம் என்ற போதிக்கப்பட்ட ஆயிரமாண்டுகால போதனையில் மயங்கிய இந்துப் பெண்களும் கூட எதிர்க்கிறார்கள். முற்போக்காளரான நேரு இந்த எதிர்ப்பைக் கண்டு பணிகிறபோது, அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்...

சாதி, பாலின பாகுபாட்டு இழிவுகளுக்கெல்லாம் அடிப்படை இந்து மதக் கோட்பாடுதான் என்ற முடிவுக்கு வருகிற அம்பேத்கர், இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன், என்று அறிவிக்கிறார். மற்ற மதங்களிலும் இந்துத்துவ சாதிய அழுக்கு ஒட்டியிருப்பதைக் கண்டு இறுதியில், அதற்கு இடமில்லாத புத்த மதத்தைத் தேர்வு செய்கிறார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு புத்தமதத்தைத் தழுவுகிறார். இறை நம்பிக்கையோ மத நம்பிக்கையோ இல்லாதவர்களும், அம்பேத்கரின் இந்த முடிவில் இருந்த அறச்சீற்றத்தை அங்கீகரிப்பார்கள்.

தன் மக்களின் காயங்களையும் வலிகளையும் துடைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட அவரது உடலில் நோய்களும் வலிகளும் குடியேறுகின்றன. தன் உடலை மட்டுமல்ல குடும்பத்தையும் கூட கவனிக்க இயலாதவராகவே அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ஆயினும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் அன்பு மனைவி ரமாபாய். அவரது மரணப்படுக்கையில் அம்பேத்கரின் துயரம் பார்வையாளர்கள் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. மனதை உறைய வைக்கிற இப்படிப்பட்ட காட்சிகள் பல இடங்களில் அமைந்திருக்கின்றன.

அம்பேத்கரின் சமுதாயத் தொண்டு தொடர வேண்டும் என்பதற்காகவே அவரது வாழ்க்கைத் துணையாகிறார் டாக்டர் சவிதா இதனையும் இப்படம் பண்பு நேர்த்தியுடன் சொல்கிறது.

மூன்று மணிநேரப் படத்தில் ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் நடந்து வந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் டாக்டர் ஜப்பார் பட்டேல். நேருக்கு நேர் அந்த நிகழ்வுகளோடு கலந்து நிற்கிற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா. உரையாடல் இல்லாத தருணங்களில் உணர்வுகளைத் தக்க வைக்கிறது ஆனந்த் மோடக் இசை.

பட்டப்படிப்புக்காக செல்கிறவர், தங்குவதற்கு இடம் மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறவர், அதிகாரியாக இருந்தாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த கீழ்நிலை ஊழியரால் அவமதிக்கப்படுகிறவர், துன்பம் நேர்கையில் வயலினெடுத்து மீட்டுகிறவர், குடும்பத்தின் மீது பாசம் மிக்கவர், லட்சியத்தில் உறுதிமிக்கவர் என ஒவ்வொரு கட்டமும், அம்பேத்கராய் நடிப்பதற்கு இவரைவிட்டால் வேறு யாரும் பொருத்தமல்ல என்று மெய்ப்பித்திருக்கிறார் மம்முட்டி. மோகன் கோகலே, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோரும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஆம், இந்தப் படம் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை; அவரது வாழ்க்கையின் செய்தியைச் சொல்கிறது - வலுவாக.

ஒரு திரைப்படத்தின் விடுதலைக்கே இப்படிக் காத்துக்கிடக்க வேண்டியிருந்திருக்கிறது என்றால், இந்தப் படத்தின் செய்தியாகிய சாதி-வர்க்க பேதம் ஒழிப்பு என்ற லட்சியம் நிறைவேற இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்? இனியும் காத்திருப்பதற்கில்லை என்ற உள்வேகத்தை ஒவ்வொருவர் மனதிலும் விளைவிக்கிற வரலாற்று வித்துதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.

டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் நினைவு நாள் வருகிறது. அதையொட்டி டிசம்பர் 3 அன்று வெளியாகிற இந்தப் படத்திற்கு தமிழக மக்களும் முற்போக்கு இயக்கங்களும் பேராதரவு அளித்து அந்த வரலாற்று வித்து பெரும் காடாக வளர வழிவகுத்திட வேண்டும்.

(தீக்கதிர் 29.11.2010 இதழில் எனது கட்டுரை)

No comments: