Tuesday, 29 November 2011

கொலவெறி டீ கொள்ளைகொண்டது எப்புடீ?



ஒய் திஸ் கொலவெறி டீ பாட்டை இன்னுமா கேட்கலை என்று கொலவெறியோடு பல நண்பர்கள் கேட்டுவிட்டார்கள், ஆகவே அதை கணினியில் இறக்கிக் கேட்டுவிட்டேன், தொடக்கத்திலேயே என் கருத்தைத் தெரிவித்துவிடுகிறேன்: பாட்டு எனக்குப் பிடித்திருக்கிறது.

முதலில் ஒலி குறைவாக வைத்துக் கேட்டபோது கொஞ்சமாகத்தான் பிடித்தது, அப்புறம் உரத்த ஒலியில் கேட்டேன், ரொம்பவும் பிடித்துவிட்டது, பாடியவர், இயக்குநர், உடன் நடிப்பவர் எல்லோரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் (இசையமைப்பாளரும் அப்படித்தானோ?) என்பது மட்டுமே கொஞ்சம் இடிக்கிறது. கோடிக்கணக்கில் முதலீடு, ஊடக விளம்பரங்கள் (தி ஹிண்டு நாளேட்டிலேயே முதல் பக்கச் செய்தி), உயர் தொழில் நுட்ப வாய்ப்புகள் எல்லாமே எளிதாக வாய்க்கப்பெற்றவர்களின் தயாரிப்பு. எளிய நிலையிலிருந்து முயல்கிறவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் எப்போது கிடைக்கும்?

மற்றபடி. பாட்டைக் கேட்ட பின். நாள் முழுக்க, இப்போதும் கூட, அந்த வரிகளும் இசையும் காதில் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. வேலை முனைப்பிலிருந்து சற்றே விடுபடுகிற நேரங்களில் வாய் தானாகவே பப்பாப்பாப்பேங் பப்பாங்பாப்பேங் பப்பாப்பா பாபேங் என்று வாசித்துக்கொண்டிருக்கிறது, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் புதியவர், குறும்படஙகளுக்கு இசையமைத்தவருக்கு இந்த ‘3’ முதல் பெரிய திரைப்படம்.

பாடலைப் போலவே, அத்துடன் இணைந்தே பரப்பப்பட்டுவிட்ட பாடல் உருவான பின்னணி பற்றிய செய்தியும் சுவையாக இருக்கிறது. பாட்டின் கருத்து இசையமைப்பாளருக்குச் சொல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அடிப்படை இசையை அமைத்தது, அதைக் கேட்டு தனுஷ் அந்த இடத்திலேயே பத்தே நிமிடங்களில் ஒரு பாட்டை எழுதியது, உடனே பாடல் பதிவு தொடங்கி, திருத்தங்களுக்குத் தேவையின்றி எல்லாம் 45 நிமிடங்களுக்குள் சட்டுப்புட்டென்று முடிந்துபோனது... என குறுகுறுப்போடு பேசிக்கொள்ள ஏற்ற தகவல்கள் இன்றைய இணைய யுகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவிட்டன. அந்தப் பரவலும் சேர்ந்தே பாட்டின் மீது ஒரு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனுஷ் பாடுகிற அந்தக் காணொளி இணைப்பைப் பார்த்தால் அந்தக் குழுவினர் ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல், வருத்திக்கொள்ளாமல், தங்களை இறுக்கமாக்கிக்கொள்ளாமல், வெகு இயல்பாக, வெகு கலகலப்பாக ஈபட்டிருப்பது தெரிகிறது, அந்த இயல்பும் எளிமையும் பாடல் வரிகளில், இசைக் கோர்ப்பில் நன்றாகப் பதிந்துள்ளன. சிக்கலான சொற்கள், புலமை தேவைப்படுகிற உவமைகள், மிரள வைக்கும் இசை நுணுக்கங்கள் எதுவும் இல்லை. குறைந்தபட்ச இசை ஆர்வம் இருப்பவர்கள், சினிமா பாடல் கேட்கிற - பாடுகிற அளவோடு தங்கள் இசை ஞானம் நின்றுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் (இவர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை) ஆகியோரை சட்டென இந்தப் பாடல் கவ்விக்கொண்டதில் வியப்பில்லை, இணையத் தொடர்புகளிலும் பொது இடஙகளிலும் பாட்டு பற்றி கருத்துக் கூறியிருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இந்த எளிமைத்தன்மையை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான காரணம் அந்த மொழி. இன்றும் கூட, ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் பேசுவது போல் பேச முயல்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பேசுவதுதான் சரி என்று வாதிடுவார்கள். தமிழர்களோ இதர இந்திய மொழியினரோ தங்களது உச்சரிப்பு மரபுக்கேற்ப ஆங்கிலத்தைப் பேசுகிறபோது அதை மட்டமாகக் கூறி கேலி செய்வார்கள். இங்கிலீஷ்காரர்களின் நாவில் தமிழ் அரைபடுவது பற்றி இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அது அவர்களது உச்சரிப்புப் பழக்கத்திலிருந்து வருவது, அவர்கள் தமிழர்கள் போலத் தமிழைப் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. கொலவெறி டீ பாட்டு, ‘மூனு’, ‘நைட்டு’ என்று எளிய தமிழர்களின் உச்சரிப்பில் ஒலிக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் உச்சரிப்பு முறை கேலிக்கு உட்படுத்தப்படாமல் பாடலில் அங்கீகரிக்கப்படுகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் திரைப்படத்துரையில் கால் வைத்தபோது இசையமைத்த ‘சின்னச்சின்ன ஆசை’ பாட்டு இதே போல் எளிய இசை காரணமாகவே நாடு, மொழி எல்லைகளைத் தாண்டி எல்லோர் மனங்களிலும் குடியேறியது.

‘கொலவெறி டீ’ பாட்டு, ‘3’ படம் குழுவினர் தங்களது கல்லூரிக் காலத்திலிருந்தே நண்பர்கள் என்பது தெரிய வருகிறது. இளம் நண்பர்களுக்கே உரிய நெருக்கமும் கலகல குணமும் கடினப்படுத்திவிடாமல் பாடலை உருவாக்க உதவியிருக்கின்றன.

நாடு முழுக்கத் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இளையராஜா, தான் அறிமுகமான கட்டத்தில் இதே போன்ற நண்பர்கள் குழாமோடு கலகலப்பாகவே செயல்பட்டார். பின்னர் ஏனோ தன்னைத் தானே இறுக்கமாக்கிக்கொண்டார். ஆன்மிகம் அது இது என்று ஒரு சனாதன வலைக்குள் சிக்கிக்கொண்டார்.

காலத்தால் மறைந்துவிடாத திரையிசையை வழங்கிய எம்.எஸ். விஸ்வநாதன் அன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடனும் கண்ணதாசனுடனும் வாலியுடனும் இப்படிப்பட்ட கலகலப்பான உறவை வளர்த்துக்கொண்டவர்தான். அவரது முக்கியமான ஒரு குணம், இப்போதும் புதியவர்களை உச்சிமோர்ந்து ரசித்துப் பாராட்டுவது.

காதலித்த பெண் தள்ளுபடி செய்துவிட காதலன் ஆதங்கமும் ஆத்திரமுமாகப் பாடுவது போன்ற கொலவெறி பாட்டில் முற்போக்கான கருத்து ஒன்றும் இல்லைதான். அதை ஒரு குற்றச்சாட்டாகக் கூறுகிற எண்ணத்திற்கு மாறாக, முற்போக்கான சிந்தனை கொண்ட பாடல்கள் இதே போல் எப்போது கோடிக்கணக்கான மக்களை எளிதிலும் விரும்பத்தக்க வகையிலும் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு மிஞ்சுகிறது.

10 comments:

Rettaival's Blog said...

முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் புத்திஜீவிகளாக தங்களை தாங்களே அந்நியப்படுத்திக் கொள்ளும் வரை சனாதன சமாசாரங்கள் தான் முன்னிலை வகிக்கும். ராப் பாடல்களையே எடுத்துக் கொள்ளுங்கள்…மேலை நாடுகளில் .அது ஒடுக்கப்படுபர்களின் குரலாகத்தான் இன்று வரை அறியப்படுகிறது…. மாறாக நம் சூழலில் அது மேல் தட்டு நாகரிகமாக நினைக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சோமாலியாவில் பிறந்த கே’னானுடைய இந்த பாடலை கேளுங்கள்…
http://www.youtube.com/watch?v=tk_03ifD7l4&feature=related

kumaresan said...

நண்பர் ரெட்டைவால்: உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.

nnagulendran said...

very good there are lot of things to THINK

kashyapan said...

குமரேசன் அவர்களே! அமெரிக்கப் பாடகர் பால் ராப்சன் அவர்கள் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா? சொவியத் விருது வாங்கியவர்.அதன் காரணமாகவே அமெரிக்க அரசால் இம்சிக்கப்பட்டவர். கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர். விஸ்கன்சின் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாணவர் வந்திருந்தார். மிகவும் இளவயது இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை பெற்று தனிமைச்சிறையில் இருக்கிறார் .தினம் அவருடைய ஊரிலிருந்து செல்லும் ரயிலிலிருந்து இஞ்சின் வெளிச்சம் அவருடைய சிறைகொட்டடி சன்னல் வழியாக அவர் அறையில் விழும். இரவு பனிரெண்டு மணிக்கு அந்த ரயில் செல்லும்.அந்த வெளிச்சம் பட்டதும் அவர் பரவசத்தோடு அவருடைய தாய்,சகோதரி ,சகோதரர்களை நினைத்து ஆடுவார்.அந்த பல்கலை மாணவர் அந்த பாடலை பாடி ஆடுவார்.காளிதாசனின் "மேக தூதம் " கெட்டது போங்கள். எங்கள் மனமகிழ் மன்றத்தில் இந்த நிகழ்சி நடந்தது. கவிதை கற்பனை,எல்லாவற்றையும் மீறி "கொலை வெறி" பாட்டில் பதின்ம வயதின் அறியாமையும் ஈர்ப்பும் கொட்டுவதாகவே கருதுகிறேன் . வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

Vadakkupatti Raamsami said...

மேலை நாடுகளில் .அது ஒடுக்கப்படுபர்களின் குரலாகத்தான் இன்று வரை அறியப்படுகிறது…. மாறாக நம் சூழலில் அது மேல் தட்டு நாகரிகமாக நினைக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சோமாலியாவில் பிறந்த கே’னானுடைய இந்த பாடலை கேளுங்கள்…//
.
.
சரி!இப்போ கொலைவெறி பாடல் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றியது?உட்டா தனுசை பாப் மார்லி ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவீங்க போல!

Vadakkupatti Raamsami said...

இதையும் படிங்க!

http://gnani.net.in/

சுட்டபழம் said...

அண்ணே அப்போ அடுத்து இந்த படத்துக்குத்தான் விமர்சனமா..? எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துடுங்க ;-) வழக்கம்போல பாப்கார்ன் செலவும் உங்களோடதுதான் ;-)))

niraimathi said...

தோழர், இசையமைப்பாளர் ரஜினியின் மச்சினர் ராகவேந்திராவின் மகன். எனக்கும் பாட்டு ரொமா பிடித்துள்ளது.

Rettaival's Blog said...

Blogger வடக்குபட்டி ராம்சாமி said...

மேலை நாடுகளில் .அது ஒடுக்கப்படுபர்களின் குரலாகத்தான் இன்று வரை அறியப்படுகிறது…. மாறாக நம் சூழலில் அது மேல் தட்டு நாகரிகமாக நினைக்கப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற சோமாலியாவில் பிறந்த கே’னானுடைய இந்த பாடலை கேளுங்கள்…//
.
.
சரி!இப்போ கொலைவெறி பாடல் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றியது?உட்டா தனுசை பாப் மார்லி ரேஞ்சுக்கு கொண்டு போயிடுவீங்க போல!

**********************************************************************

ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் விடுதலையை பற்றி மட்டும் தான் பாட வேண்டும் என்று எந்த இலக்கணமும் இல்லை..நாம் வாழும் சூழலில் ஆங்கிலத்தை தமிழ் போல் உச்சரிப்பவனும் ஒடுக்கப்பட்டவனே...! அவனுடைய ஆதங்கம் பாட்டில் ஒலிப்பதால் தான் பலரும் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஹிட் ஆக்கியுள்ளனர்.

தவிரவும் இந்த பாடலைப் பற்றி அமிதாப் ட்வீட்டவில்லையெனில் வடக்குப்பட்டி ராமசாமிகள் கூட சீண்டியிருக்க மாட்டார்கள். இன்னொரு ஹிட் கானா பாடலாகவே வந்து காணாமல் போயிருக்கும்!
தனுஷை பாப் மார்லி ரேஞ்சுக்குக் கொண்டு போகிறேனா...? நல்ல காமெடி... மிடில் கிளாஸ் வர்க்கத்தின் மேல் தட்டு மோகத்தைத் தான் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்!

why this kolaveridi said...

இங்கேயும் கொலைவெறி டி யா ....... :)
இதை எழுததவர்களே இல்லை போலிருக்கு