விதவிதமான இனிப்புகள், பட்டாசுகள் என்று பொதுவாக தீபாவளிக்குத்தான் கிடைக்கும் என்பதால் அந்தப் பண்டிகையின் மீதுதான் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சின்னப்பையனான எனக்கு மோகம் இருந்தது. பொங்கல் விழாவைப் பொறுத்தவரையில் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைக்கிறதென்ற காரணத்தால் பிடித்திருந்தது, அவ்வளவுதான். ஆனாலும், பொங்கலைக் கொண்டாடுவதில்தான் பெற்றோருக்குக் கூடுதல் ஈடுபாடு இருந்ததாக உணர்வேன். உறவினர்கள், சுற்றத்தார் வீடுகளிலும் பொங்கலின்போது அந்தத் தனி ஈடுபாட்டைக் காண முடிந்தது. அப்போது அதன் காரணத்தை அறிகிற முனைப்பு இருந்ததில்லை. பின்னாட்களில் வரலாறு, பண்பாடு, அரசியல் என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கியபோதுதான் காரணம் புரிகிறது.
மார்கழி மாதம் தொடங்கிய உடனேயே, வாசலில் பெரிய கோலம் வரைந்து அதில் தன் ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்துவார் அம்மா. நம் ஊர்களில் இன்றைக்கும் பல பெண்களுக்கு அவர்களது கலைத்திறன் என்பதெல்லாம் வாசல் கோலத்தோடு நிறுத்தப்பட்டு விடுகிறது. விடிவதற்கு நேரம் இருக்கிறபோதே அவர்கள் விழித்துக்கொண்டு, பனியைத் தடுக்கக் காதுகளைப் பட்டியால் அல்லது துப்பட்டாவால் சுற்றிக்கொண்டு பலவண்ணக் கோலப் பொடிகளோடு இறங்கிவிடுகிறார்கள். புள்ளிகளும் போடுகளும் வண்ணப்பொடிகளின் பரப்பலுமாக தெருவே எழிற்கோலம் பூணுகிறது. ஒரே மாதிரியான கோலங்கள் மட்டுமல்லாமல், சில கோலங்கள் புதிய கற்பனைகளோடு உருவாகின்றன. தெருவோடு நடந்துபோகிறவர்களின் கால்களில் சிக்கி அந்தக் கோலங்கள் அழிந்துபோகும் என்று தெரிந்தும் அந்த சில மணிநேர ஓவியக்கண்காட்சியை மாதம் முழுக்க நடத்திக்கொடுக்கிறார்கள் பெண்கள்.
அம்மா அப்படிப்பட்ட புதிய படைப்பைச் செய்திருப்பார். பின்னர் நடுவில் ஒரு சாணி உருண்டையை வைப்பார். ஊர் ஊராக இடமாற்றலுக்கு உள்ளான தந்தையின் தொழில் காரணமாக, சொந்தமாக வீட்டில் மாடு கிடையாது. முதல் நாள் இரவே தெருவிலிருந்து சாணத்தைத் தேடி எடுத்துவைத்திருப்பார் அம்மா. கோலத்தின் நடுவில் வைக்கப்பட்ட சாணி உருண்டையில், ஒரு பூசணிப்பூவை செருகி வைப்பார். மாலையில் பூ வாடியிருக்கும், சாணம் முக்கால் வாசி காய்ந்திருக்கும். அதை அப்படியே எடுத்து, பூவின் இதழ்களோடு சேர்த்து வறட்டியாகத் தட்டி வைத்துவிடுவார். அடுத்த நாள் காலையில் புதிய கோலம், புதிய சாணம், புதிய பூசணிப்பூ, புதிய வறட்டி. மார்கழி முடிந்து தை முதல் நாள் காலையில் வாசலிலேயே கல் அடுப்பு வைத்து பானையில் அரிசி, பால், வெல்லம் இன்ன பிற பொருட்களைப் போட்டுப் பொங்க விடுவார். அப்போது அந்த அடுப்பின் எரிபொருளாக அந்த வறட்டிகளைத்தான் வைப்பார். பூவின் சருகுளோடு இணைந்த சாணம் நன்றாக எரியும்.
குக்கர் பொங்கல் வெகு இயல்பாகிவிட்ட இந்நாளில் சாண உருண்டையும் இல்லை, பூசணிப் பூவும் இல்லை. கல் அடுப்புக்குச் செய்யப்பட்ட சந்தனம், குங்குமம் மரியாதையில் கொஞ்சம் போல, வீட்டுச் சமையலறையின் எரிவாயு அடுப்புக்குக் கிடைக்கின்றது. சாண உருண்டை தேவையற்றதாகிவிட்டது. பூசணிக் கொடி வளர்க்க இடம் ஏது?
பொங்கல் விழாவை கிராமத்தில் உறவினர் இல்லத்தில் கொண்டாடியதும் நினைவுக்கு வருகிறது. என் பெற்றோருடன் ஒப்பிடுகையில் அவர்கள் முகங்களில் கூடுதலான மகிழ்ச்சியைக் கண்டிருக்கிறேன். அவர்கள் சொந்த நிலம், வீட்டுத் தொழுவத்தில் வளரும் சொந்த மாடுகள் என்று வாழ்ந்தார்கள். என் பெற்றோரைப் பொறுத்தவரையில், ஒரு காலத்தில் நமக்கு எவ்வளவு நிலபுலன் இருந்தது தெரியுமா பழைய தேதிகளுக்குள் பயணம் செய்கிற ஏக்க வாழ்க்கைதான். உறவினர் விட்டிற்கு அவர்களது வயலின் அறுவடையிலிருந்து வந்த நெல், தோட்டத்திலிருந்து வந்த காய்கறிகள் என்ற ஒரு பாதுகாப்பான உணர்வு அந்தக் கூடுதல் மகிழ்ச்சியின் பின்னணியில் இருந்ததை இன்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் புரிதல்கள், சமூகப் பொருளாதாரம் பற்றிய ஒரு மார்க்சியக் கல்வி மனதில் படிந்ததால் ஏற்பட்டுள்ளன. இல்லையேல் மனதில் ஒரு வகைக் காழ்ப்புணர்வு படிந்திருக்கக்கூடும்.
காழ்ப்புக்கெல்லாம் தேவையின்றி இப்போது அந்தக் குடும்பத்தாரும் சென்னைவாசிகளாகிவிட்டார்கள். முன்பு, பொங்கல் கொண்டாட்டத்திற்கென்ற பல ஊர்களிலிருந்து நண்பர்கள் அந்த வீட்டிற்கு வந்துசேர்வார்கள். இன்றைக்கும் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தைப்பிறப்பின்போதும் கிராமத்திற்குச் சென்று, அங்கே பொங்கல் கொண்டாடுவதை ஒரு குடும்பப்பண்பாடாக விடாமல் கடைப்பிடிக்கிறார்கள். நண்பர்கள் இப்போதும் அங்கே வருகிறார்கள். இன்று எனக்கு வேறுவகையான காழ்ப்பு ஏற்படுவதுண்டு. வேலைகளை முடித்துக்கொண்டு ஒரு ஆண்டாவது அவர்களோடு கிராமத்திற்குச் சென்று வர இயலவில்லையே என்ற ஏக்கத்திலிருந்து முளைக்கும் காழ்ப்புணர்வு அது.
பொங்கல் முடிந்து திரும்பி வந்தபின், இந்த வருசமும் நீ ஏண்டா வரலை, என்று கேட்டு அந்த அனுபங்களை பகிர்ந்துகொள்கிறபோது ஒரு ஏக்கம் வெளிப்படுவது போல் உணர்கிறேன். அதன் பின்னணியில் சொந்த நிலத்தின் பரப்பு குறைந்து போனது, விளைச்சல் மிக மிகக் குறைந்து போனது, பொங்கலுக்கான அரிசியும் காய்கறிகளும் கடைகளிலிருந்தே வாங்க வேண்டியதாகிப்போனது ஆகிய பகிர்ந்துகொள்ளப்படாத உணர்வுகள் இருக்கக்கூடும்.
நகரத்தில் வேறு தொழில்களில் நன்றாகக் காலூன்றிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்து நிலத்தை விற்றது பலருக்கு நேர்ந்திருக்கும். அவர்களை விடவும் பலமடங்குப் பேருக்கு, வேறு வழியில்லாமல் தங்கள் சொந்தக் காணி நிலத்தையும் கிராமத்து வீட்டையும் விற்று, கந்துவட்டிக் கடன்களை அடைத்துவிட்டு, நகரத்திற்கு புலம்பெயர்ந்து, கிடைத்த வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கைதானே வாய்த்திருக்கிறது? நகரத்தில் முளைத்துக்கொண்டே இருக்கும் குடிசைப்பகுதிகளில் அவர்கள் வந்து அடைகிறார்கள். இங்கே அத்தக்கூலி ஆகாத கூலி வேலைளுக்காக, கட்டுப்படியாகாத பேருந்துக் கட்டணம் செலுத்தி நாள்போறும் மணிக்கணக்கில் பயணம் செய்து திரும்புகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோராக இருப்பது எப்படி என்பது தனியொரு விசாரணைக்கு உரியது.
ஏற்கெனவே நகரத்தில் நிலைத்துவிட்டவர்களின் வாரிசுகள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கல்வியோடு தொடர்பு கிடைத்து நவீன வேலைகளில் உட்கார்ந்துவிட்டார்கள். கிராமத்தோடு தொடர்போ இல்லாத தலைமுறைகளான இவர்களது பொங்கல் கொண்டாட்டமும் நகரத்தோடு மட்டுமே நின்று விட்டது. மடிக்கணினியை விரித்து இணையத்தின் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துச்சொல்வதாகவே அமைந்துவிட்டது.
ஆனால், முன்பு நெருங்கிய சொந்தக்காரர்கள், தெருக்காரர்கள் (வேறு சொற்களில் சொல்வதானால் சொந்த சாதிக்காரர்கள்) இவர்களோடு மட்டுமே பரிமாறப்பட்ட பொங்கல் வாழ்த்து, இப்போது உலகம் முழுவதும் எல்லாத் தெருக்காரர்களோடும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இந்த வாழ்த்துத் தொடர்புகள் எதிர்காலத்தில், நாட்டின் அரசியல் - பொருளாதாரம் - சமூகக் கொடுமைகள் தொடர்பான கோபத்தைப் பகிர்ந்துகொள்ளும் தொடர்புகளாகவும் பரிணமிக்கும், பரிணமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. கடந்த ஆண்டில் பல நாடுகளில் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் பின்னணியில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பும் செயல்பட்டிருக்கிறது. இங்கேயும் அந்த நற்செயல் விளைய வேண்டும் என்ற விருப்பம், இதே அக்கறைகொண்டோரின் தொடர்ச்சியான சமூகவலைத்தளச் செயல்பாட்டால் நிறைவேறும், நிறைவேற வேண்டும். களத்தில் இறங்கிச் செயல்படுகிற போராளிகளுக்கு அது துணையாகும், துணையாக வேண்டும்.
மக்களின் ஆவேச எழுச்சிப் பொங்கலுக்கான எரிபொருள்கள் நிறைய இருக்கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில், பழைய சுரண்டலைக் கெட்டிப்படுத்தும் வஞ்சகங்கள்; இயல்பான நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில் திணிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்; உலகச் சூழலின் மேல் பழிபோட்டு நியாயப்படுத்தப்படும் உள்நாட்டு துரோகங்கள்; இவற்றின் மீதான ஆத்திரங்களை உள்ளூர் வன்முறை மோதல்களாக மடைமாற்றம் செய்யும் சாதிய வன்மங்கள்; நவீன உடைகளையும் நவீன நகைகளையும் கொஞ்சம் நவீன வேலைகளையும் பெண்களுக்குக் கொடுத்துவிட்டுப் புராதன ஒடுக்குமுறைகளுக்குள் நவீன முறையில் சிக்கவைக்கும் ஆணாதிக்க வக்கிரங்கள்; இவை குறித்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் போராட்டமாக எழுவதைத் தடுக்க, பழைய மரபுகளை மீட்பது என்ற போர்வையில் பகைமையிலும் சோதிடம் உள்ளிட்ட மூடத்தனங்களிலும் மூழ்கடிக்கும் மதவெறிக் கயமைகள்... எரிக்கப்பட வேண்டிய போகிப்பொருள்களுக்கா பஞ்சம்?
சிதறிக்கிடக்கும் எரிபொருள்களைத் திரட்டிக் குவிக்கிற வேலையில், சமுதாய மாற்றத்திற்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட மக்கள் நேய இயக்கங்கள் ஈடுபட்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டுக் காளைகளின் கொம்புகள் போல் அந்த முனைப்பு மேலும் மேலும் கூர் தீட்டப்பட வேண்டும். கூர் மழுங்க வைப்பதற்காகப் பல்வேறு வடிவங்களில் ஏவிவிடப்படும் அடையாள அரசியல் திசைதிருப்பல்கள், கூட்டுக் கலகங்களின் வெடிப்பில் முறியடிக்கப்பட வேண்டும். தடையின்றி எரியும் போராட்டத் தீயில், சுடச்சுட மணக்க மணக்க மாற்றப் பொங்கல் விருந்தாகட்டும்.
(தீக்கதிர் 15.1.2012 இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் எனது கட்டுரை)
5 comments:
விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3
http://suraavali.blogspot.com/2011/11/3.html
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!
2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!
3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கேவழங்கு!
4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!
5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையைஏற்படுத்து.
விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2
இந்தியாவோ எப்போதுமே இப்படி ஒரு நிரந்தர சந்தையை வைத்திருந்தும் அதை தமக்கானதாக வைத்திருக்கவில்லை.20 கோடி பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தும்,அதை மேலை நாடுகளின் சந்தையாகத்தான் வைத்துள்ளன இதனால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் வாங்கும் சக்திஅற்றவர்களாகத்தான் ஆக்கப்பட்டுள்ளனர்,ஆக்கப்படுகின்றனர்.அதனால் இங்கு சந்தை நெருக்கடி என்று சொல்வதற்குஎதுவுமில்லை.
http://suraavali.blogspot.com/2011/11/2_10.html
http://suraavali.blogspot.com/2011/11/4.html
விவசாயம் லாபகரமான தொழிலாக மாற்றப்படுவதும்,தொழிற்துறை உற்பத்தி பன்மடங்கு பெருகுவதாலும்விவசாயத்தை நவீனமாக்க வேண்டியது கட்டாய தேவையாகிவிடும்.இப்படி விவசாயம் நவீனமாக்கப்படும்போது விவசாயத் தேவைக்கே பல லட்சக்கணக்கான டிராக்டர்களையும்,நடவுக்கான எந்திரம்,அறுவடைக்கானஎந்திரம் ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டும்.இதற்கு ஏற்ப விவசாயத்திற்கு தேவையானஎந்திரங்களை உற்பத்தி செய்வதற்கே, ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கியாக வேண்டும்.
விவசாயமும் ,தொழிற்துறையும் புத்துயிர் பெறுவதால், நாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரின்உழைப்பு சக்தியும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.நிலையான வேலை வாய்ப்பும், வருவாய்பெருக்கமும்,உள்நாட்டில் நிலையான உத்திரவாதமான, சந்தை உருவாவதற்குஅடிகோலுகிறது.இதனால்உள்நாட்டு சந்தைக்கான பொருளுற்பத்தி முதன்மையானதாக ஆக்கப்படுகிறது.உள்நாட்டு சந்தைக்கானதேவை பூர்த்தி அடைந்த பின்னரே ஏற்றுமதிக்கான உற்பத்தி, அதாவது முக்கியத்துவமற்ற ஒன்றாகமாற்றப்பட்டுவிடும்.இதனால் இன்றைய முதலாளித்துவ உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரநேருக்கடிகளின் சாயல் கூட நம்மை அண்டாது!
மிகவும் மென்மையாக உள்ளத்தினை தொடும் வகையில் சிந்திக்க வைக்கும் கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி!
யப்பா, என்னோட உணர்வ நீ எப்டிப்பா எழுதினே?
Post a Comment