Friday 24 February 2012

என்கவுன்டர் வரிசையில் தொடரும் கேள்விகள்


"இப்படி பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கிகளில் இருந்து கொள்ளையடிக்கிறவர்களை நிற்க வைத்தே சுட வேண்டும்."
"வங்கி ஊழியர்கள் எதிர்க்க முயன்றிருந்தால் அவர்களைக் கொள்ளையர்கள் போட்டுத் தள்ளியிருப்பார்கள். ஆகவே கொள்ளையர்களைப் போட்டுத் தள்ளுவதில் தவறில்லை."
"பீஹாரிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் நிறையப் பேர் வேலைக்காக என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள்தான் திருட்டுகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபடுகிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை இனிமேல் இங்கே வரவிடாமல் தடுத்தால் குற்றங்கள் குறைந்துவிடும்."

-இவையெல்லாம் அண்மையில் நடந்த வங்கிக் கொள்ளைகளையும், இன்னும் துப்புக் கிடைக்கவில்லை என்ற செய்திகளையும் தொடர்ந்து பொதுமக்களில் பலரும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டபோது வெளியிட்ட கருத்துகள். இப்படிப்பட்ட பேச்சுகளை, பிப்ரவரி 22-23 நள்ளிரவில் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பில் நடந்ததாகக் கூறப்படும் மோதல் நிகழ்வில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்ட நிகழ்வு நியாயப்படுத்துகிறதா?

அந்த வீட்டின் சுவர்களிலோ, வெளிப்புற கம்பிக்கதவுகளிலோ துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளமே இல்லையாமே? காவலர்கள் உடைத்ததாகக் கூறப்படும் சன்னல் கதவில் மட்டும் இரண்டே இரண்டு தோட்டா பாய்ந்த அடையாளங்கள், கச்சிதமாக ஒரே உயரத்தில் அமைந்திருக்கின்றனவாமே? காவலர்களை நோக்கிச் சுட்டவர்களும், திருப்பிச் சுட்ட காவலர்களும் அவ்வளவு நேர்த்தியாக, குறிவைத்த ஆட்கள் மீது மட்டுமே சுட முடிந்தது எப்படி?

ஒரே ஒருவரைக்கூட உயிரோடு பிடிக்க முடியவில்லையா? தகவலறிந்து செல்கிற காவலர்கள் ஒரே ஒரு சாட்சியைக் கூட வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது ஏன்? கொள்ளைகள் நடந்து இத்தனை நாட்களாகியும் துப்புத்துலக்குவதில் ஒரு முன்னேற்றமும் இல்லை என்ற விமர்சனங்களைத் துடைக்க நடத்தப்பட்ட தாக்குதலே இது என்று சிலர் சொல்வது ஏற்கத்தக்கதுதானா?

நள்ளிரவில்தான் தகவலே கிடைத்து அந்த வீட்டின் முன் காவலர்கள் போய் சூழ்ந்துகொண்டதாக ஆணையர் கூறுகிறார், ஆனால் இரவு 10.30 மணியளவிலேயே காவலர்கள் வந்து இறங்கிவிட்டார்கள், கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்குள் போக ஆணையிட்டார்கள் என்று அண்டை வீடுகளில் குடியிருப்போர் சொல்வது மறுக்கத்தக்கதுதானா?

இப்படியொரு பெரும்போடாகப் போட்டுவைத்தால்தான், கொள்ளையர்கள் மிரண்டுபோய் சும்மா இருப்பார்கள் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற நோக்கத்துடன் இது நடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறுவது வெறும் கற்பனைதானா?

யார் என்றே தெரியவராத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் நாள் ஊடகங்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் அளித்த பேட்டியில் கொள்ளையர்கள் இந்த இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடிந்தது எப்படி?

கொள்ளையர்களின் கதையை முடிக்க வேண்டும் என்ற, பொதுமக்களில் சிலரது சினிமாக் கதைத்தனமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் காவல்துறையின் வேலையா? நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று குற்றங்களை நிரூபித்துத் தண்டனை பெற்றுத்தருவதில் நம்பிக்கை இழக்கச் செய்கிற வேலையைக் காவல்துறையே செய்யலாமா?
ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்ற விமர்சனங்கள் இதனால் அடங்கிவிடுமா?
காவல்துறையின் செயலின்மை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை எனில், இது காவல்துறையின் செயல்திறன் பற்றிய மரியாதையை ஏற்படுத்துமா?

மக்களின் பணத்தை (இப்படி நேரடியாகவும், அரசின் உரிமங்கள் - ஒப்பந்தங்கள் வழியில் மறைமுகமாகவும்) கொள்ளையடிக்கிற பேர்வழிகள் பரிவுக்கு உரியவர்கள் அல்ல. ஆனால், காவல்துறை என்ன சொல்கிறதோ அதை அப்படியே மக்கள் நம்பிவிட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது சட்டத்தின் ஆட்சி எனப்படுவதற்கு உகந்ததுதானா?

தொடரும் என்கவுன்டர் கொலைகள் போலவே கேள்விகளும் தொடர்கின்றன...

6 comments:

arshiyaas said...

நியாயமான கேள்விகள் தோழா! இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. அப்போதும் இதுபோன்ற கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன. பதில்தான் இதுவரை இல்லை. அந்தவகையில் இதுவும் தொடரும் கேள்விகளாகத்தான் இருக்கப்போகின்றன.

Anonymous said...

இதையொட்டிய பல கருத்துக்கள் தமிழக மக்கள் பெரும்பாலோரிடமும் உள்ளது. தக்க நேரத்தில் உங்களின் வெளிப்பாடு...

LEAN KING said...

உங்களின் வெளிப்பாடு... தமிழக மக்கள் பலரின் உளக் கிடக்கை..

LEAN KING said...

இவர்களிடமிருந்து அப்பாவிகளை யார் பாதுகாப்பது...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் ,உங்களது பதிவுஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நண்பரே நேரம் இருக்கும்போது பார்த்துச் செல்லவும் .நன்றி

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_28.html