Monday, 14 October 2024

மொழிபெயர்ப்பு மேடையில் கவிதையும் கவித்துவமும்


 





சில ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறபோது, அவற்றில் மேற்கோள் காட்டப்படுகிற கவிதைகள் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. ஒரு முழுக்கட்டுரையைத் தமிழாக்குவதற்கு நிகரான, சில நேரங்களில் அதைவிடக் கூடுதலான நேரத்தை அதில் வரும் கவிதை எடுத்துக்கொள்ளும். ஒட்டுமொத்தக் கட்டுரையைப் பற்றி “நல்ல மொழிபெயர்ப்பு” என்று பாராட்டுகள் வந்தாலும்,கவிதையைப் பொறுத்த வரையில் முழு மனநிறைவு எனக்கு ஏற்பட்டதில்லை. அண்மையில் கூட, முயன்று பார்க்கலாமே என்று மாவோ கவிதையொன்றை மொழிபெயர்த்தேன். அது மாவோ சீன மொழியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை. பணியை முடித்த பிறகு எனக்குள் எழுந்த கேள்வி: “கவிதையை மொழிபெயர்த்துவிட்டோம், ஆனால் கவித்துவத்தை?”


பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளைப் படிக்கிறபோதெல்லாம் இதே சிந்தனை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள் அந்தக் கவிதைகளைச் சிறப்பாகவே மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள், ஆனால் கவித்துவத்தை முழுமையாகத் தொட்டுவிடவில்லை. ஒருவேளை மொழிபெயர்ப்பாளரே ஒரு கவிஞராகவும் இருப்பாரானால், கவித்துவத்தை ஓரளவுக்கு வேண்டுமானால் நெருங்கக்கூடும்.


இது மொழிபெயர்ப்பாளர்களின் இயலாமையல்ல, மாறாகக் கவிதையின் வல்லமை. கவிதையையும் கவித்துவத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஆயினும் இரண்டுக்குமிடையே தெளிவான வேறுபாடுகள் இருக்கின்றன.


கவிதையும் கவித்துவமும்

கவிதை  ஒரு கலை வடிவம். சொற்களைப் பயன்படுத்தி படைப்பாளியின் உணர்வுகளை, கருத்துக்களை ஒரு வகையான லயத்தோடு வெளிப்படுத்துகிறது கவிதை. வாசிப்பவரின் எண்ண மேடையில் காட்சிகளை உருவாக்கும் ஒரு வழிமுறையான. கவிதை  ஒரு தயாரிப்பு, ஒரு பொருள். இது படிக்கப்படலாம், கேட்கப்படலாம், ஆராயப்படலாம்.

கவித்துவம் என்பதோ ஒரு குணம், ஒரு தன்மை. ஒரு கருத்தை அழகாக, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் திறனோடு ஐக்கியமாகியிருப்பது கவித்துவம். சொற்களின் தேர்வு, வாக்கிய அமைப்பு,  காட்சியின் சித்தரிப்பு ஆகிய அனைத்திலும் கலந்து ஊடாடியிருக்கும், ஆனால் தனித்துத் தெரியாது. கவிதையை வாசிக்கலாம், கேட்கலாம், ஆராயலாம் - ஆனால் கவித்துவத்தை உள்ளார்ந்து அனுபவிக்கத்தான் முடியும். அப்படி உள்ளார்ந்து அனுபவிக்க வைத்தால்தான் கவித்துவம். காற்று நம் மேனியைத் தழுவுவதைத் தொடு உணர்வால் அறியலாம், ஆனால் காற்றின் உயிர்வளியை சுவாசித்து அனுபவிக்கவே முடியும் இல்லையா?

கவித்துவம் இல்லாமல் கவிதை இருக்க முடியாது. கவித்துவம் இல்லாதது கவிதையாகாது. கவிதை போல எழுதப்பட்ட சொல்லடுக்குகளாகத்தான் இருக்கும். இதில் விந்தை என்னவெனில், கவித்துவம் இருக்கும் இடமெல்லாம் கவிதை இருக்க வேண்டும் என்பதில்லை! அழகிய ஓவியத்தில், மயக்கும் சிற்பத்தில், கிறக்கும் இசையில், இனிக்கும் உறவில் கவித்துவம் பொதிந்திருக்கும்.

லட்சத்தில் ஒன்றா, லட்சத்து ஒன்றாவதா?

இலக்கிய முகாம்களின் ஓய்வுப் பொழுதுகளில், முகாமின் உரைகளை விடவும் சுவையான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும். அப்படியொரு பொழுதில், எது கவிதை என்றொரு கலந்துரையாடல் நடந்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவை பொதுவான விளக்கங்களாகவும், அவர்களுடைய சொந்த அனுபவப் பகிர்வுகளாகவும் இருந்தன. “தேர்ந்தெடுத்த சொற்களால் காட்சியையும் கருத்தையும் கடத்துவது கவிதை,” என்றார் ஒருவர். “அப்படிக் கடத்துகிறபோது அதில் ஒரு இசை இருக்குமானால் அது கவிதை,” என்றார் இன்னொருவர். “வழக்கத்தில் இருக்கிற சொற்களை வழக்கமில்லாத வகையில் பொருத்தினால் கவிதை,” என்றார் மற்றொருவர். “மொழியின் உருவக அழகியல் வெளிப்படுவது கவிதை,” என்றொரு கருத்து வந்தது.

கடைசியில் மூத்த கவிஞர் கந்தர்வன், “எது புதுசோ அது கவிதை. ஒரு காட்சியையோ கருத்தையோ உணர்வையோ இதுவரை மாறுபட்ட சொல்லாக்கத்தில், புது உருவகத்தில் சொல்கிறபோது அது கவிதையாகிறது. உதாரணமாக, ஏழ்மை பற்றி லட்சம் கவிதைகள் வந்திருக்கலாம். உன்னுடையது லட்சத்தில் ஒன்றைப் போல இல்லாமல், லட்சத்து ஒன்றாவதாக இருக்க வேண்டும்,” என்றார். எல்லோரும் மௌனமாக அதை உள்வாங்கிக்கொண்டிருந்தபோது அவர் இப்படி முடித்தார்: “ஆனால் நான் சொல்வது கவிதைக்கான இறுதிக் கோட்பாடு அல்ல. இன்னமும் சரியான விளக்கம் எதிர்காலத்தில் வரலாம்.”

கவித்துவம் பற்றியும் பல வகையான விளக்கங்களை அவரவர் கவிதை நுகர்வு சார்ந்து அளிக்கலாம். இன்னின்ன விதங்களில் கவித்துவம் வெளிப்படும் என்று எடுத்துக் காட்டலாம். ஆனால் இதுதான் கவித்துவம் என்று இறுதியாக வரையறுத்துவிட முடியாது.

ஆனால், ஒன்றைச் சொல்லலாம். கவித்துவத்தோடு இருந்தால்தான் அது கவிதை. எத்தனையோ நிகழ்வுகளை, பிரச்சினைகளை நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். முற்போக்கான கண்ணோட்டத்துடன் எழுதுகிறேன் என்ற இறுமாப்பு கூட இருந்ததுண்டு. ஆயினும், ஒரு கட்டுரைக்கு நான் எடுத்துக்கொண்ட கருப்பொருளை ஒரு கவிஞர் எடுத்துக்கொண்டு தனக்கேயுரிய கவித்துவத்துடன் கவிதையாகப் படைப்பாரானால், அதன்  தனித்துவத்தில் ஒரு மகத்துவம் அமர்ந்துகொள்ளும்.

வலியோடும் சுவையோடும்

ஒரு துன்பமான நிகழ்வு பற்றிய கவிதையை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். கவிதையில் உள்ள அந்தத் துன்பத்தைப் பற்றிய செய்தி வாசிப்பாளருக்கும் மனவலியைத் தரும். அத்தோடு நின்றுவிடாமல், கவிதையைப் படித்ததற்கான இலக்கியச் சுவையை அது தர வேண்டும். ஒரு கொடுமையான ஒடுக்குமுறை பற்றிய கவிதை, அதற்கெதிரான ஆவேசத்தைக் கிளர்த்துவதோடு, அதை வாசித்ததற்கான இலக்கியச் சுவையை அது தர வேண்டும். 

இப்போது கவிதை மொழிபெயர்ப்புக்கு வருவோம். கட்டுரைகளையும் கதைகளையும் போல அல்லாமல் கவிதைகளை மொழிபெயர்ப்பது பெரிய சவாலாக இருப்பது ஏன்?  இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஒரு மொழியின் கவிதைகள் அதன் ஒலி இயல்போடும் இணைந்தவையாக இருக்கின்றன. ஒலியின் இனிமை, வடிவமைப்பு ஆகியவை கவிதையில் முக்கியத்துவம் பெறுகின்றன. எழுத்து இல்லாமல் ஒரு மொழி இருந்துவிட முடியும். ஆனால் ஒலி இல்லாமல் மொழி இருக்க முடியாதல்லவா? ஒரு மொழியின் ஒலியில் உள்ள தனித்துவத்தை மற்றொரு மொழிக்குப் படியெடுப்பது கடினம்.

சவால் தொடங்குமிடம்

கவிதைகளை அந்தந்த மக்களின் வாழ்வியல் சார்ந்த தனித்துவமான இலக்கியச் சொல்லாடல்களும் உருவகங்களும் அணி செய்கின்றன. ஒரே மொழி, குறிப்பிட்ட வட்டார அடையாளங்களோடு பேசப்படுவது நமக்குத் தெரியும். தமிழிலேயே மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் என்று பிரித்துப் பார்க்க முடிகிறது. சொற்களில் மட்டுமல்லாமல், அந்தச் சொற்களை உச்சரிப்பதிலும் அந்தந்த வட்டாரத்திற்கே உரிய அழகும் இனிமையும் இருக்கின்றன. வட்டாரச் சொற்களின் அந்த அழகையும் உட்பொருளையும் மொழிபெயர்ப்பது எப்படி? சவால் அங்கேதான் தொடங்குகிறது

அதே போல், கவிதைகள் குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழல், பண்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றைப் பொதிந்துகொண்டு வருகின்றன. அந்த நுணுக்கங்களை முழுமையாக வேறொரு மொழிக்கு மாற்றுவது மலையைப் பெயர்ப்பது போன்றதுதான்.

கவிதையில் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. சில கவிஞர்கள் தமது கவியாக்கங்களில் நேரடியாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதுண்டு..அது அந்தக் கவிஞரின் அல்லது யாரோ ஒருவரின் தனிப்பட்ட உணர்வாகவும் இருக்கலாம், சமூக உணர்வாகவும் இருக்கலாம். குறிப்பாக, அரசியல் சார்ந்த படைப்புகளில் சமூக உணர்வு கடத்தப்பட்டிருக்கும். அத்தகைய  உணர்வுகளை மொழிபெயர்ப்பதும் சவால் மிக்க பணிதான்

ஒரு கனிந்த படைப்பாளிக்கென்று கண்ணோட்டம் இருக்கும். வாழ்க்கையையும், சமுதாயத்தையும், அரசியலையும் பற்றிய அவரது சித்தாந்தம் சார்ந்த கண்ணோட்டமாக அது இருக்கும். அவருக்கென்று தனித்துவமான வெளிப்பாட்டு நடையும். இவற்றை இன்னொரு மொழியில் பெருமளவுக்கு மூலப் படைப்புக்கு முரணில்லாமல் கொண்டு செல்லலாம். முழுமையாக அந்த வேறொரு மொழியிலேயே எழுதப்பட்ட கவிதையாக மாற்றுவது எளிதல்ல.

சவாலே ஒரு கடமை

இப்படியான சவால்கள் இருப்பினும், திக்கெட்டும் சென்றாக  வேண்டுமே. இலக்கியத் திரவியமெல்லாம் கொண்டுவந்து சேர்த்தாக வேண்டுமே. நம் படைப்பாக்கப் பெருமையை உலகறியச் செய்தாக வேண்டுமே. மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த மாபெரும் கடமை இருக்கிறதே.

ஒரு படைப்பின் மூல மொழி, மாற்றப்படும் மொழி இவை இரண்டிலுமே ஒரு மொழிபெயர்ப்பாளர் தேர்ச்சி கொண்டிருக்க வேண்டும். இது கட்டுரை, கதை, நாடகம், திரைவடிவம் என எல்லாவற்றிற்கும் பொருநதும். கவிதைக்கோ இது மிகமிகத் தேவையான தகுதி. சும்மா அகராதியைப் பார்த்து, அல்லது சொற்களுக்கான பொருள்களை கணினியிலோ கைப்பேசியிலோ இணையத்தளத்தில் தேடிப் பார்த்துக் கவிதை மொழியாக்கத்தை முடித்துவிடலாம் என்று நினைத்தால் வாரிவிட்டுவிடும். அவை உதவிகரமாக இருக்குமேயல்லாமல், மூலப் படைப்புக்கு நெருக்கமாக வருவது மொழிபெயர்ப்பாளரின் வாசிப்பு, உள்வாங்கல், தேடல் போன்ற திறன்களைப் பொறுத்தே வெற்றிகரமாக அமையும்.

பாடல், செய்யுள், மரபு வழி, புதுக்கவிதை, சிறுபாடல், ஹைக்கூ, குறட்பா என்று கவிதைத் தோப்பில் பலவகைத் தாவரங்கள் பரவியிருக்கின்றன. அவற்றை அறிந்திருப்பது, அவற்றின் நிழலில் ஒதுங்குவது போன்ற செயல்களும் மொழிபெயர்ப்புச் செடி வளர்ப்பில் பங்களிக்கும்.

இலக்கிய ஆர்வம், ஆழ்ந்த புரிதல், பரந்த அறிவு ஆகியவை அடிப்படைத் தேவைகளாகும். முன்னரே குறிப்பிட்டது போல, மொழிபெயர்ப்பாளரே படைப்பாளியாகவும் கற்பனைத் திறன் கொண்டவராகவும் இருப்பது கூடுதல் வலிமையாகச் சேரும். பண்பாட்டுச் சொத்துக்களான சொலவடைகள், பழமொழிகள், உருவகங்கள் ஆகியற்றை அறிந்து வைத்திருத்தல் மொழிபெயர்ப்பில் துணையாக வந்து அமரும். ஒலியை மொழிபெயர்த்துவிட முடியாது என்ற புரிதலுடன், கவிதையின் பிற தன்மைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இன்னொரு மொழியின் மேடையில் ஏற்றுவதற்கு உழைக்க வேண்டும். அந்த ஈடுபாடும் உழைப்பும் இருக்குமாயின், கவிதை மொழிபெயர்ப்பின் கடினமான சவால்களைத் தாண்டி மனநிறைவைத் தரும் - படைப்பாளிக்கும் வாசகருக்கும். 

(புக்டே தளத்தில் வெளியான எனது கட்டுரை)


No comments: