Monday, 14 October 2024

அசைவற்றதா எதார்த்த சினிமா?

 கூழாங்கல்லையும் கொட்டுக்காளியையும் முன்வைத்து…



இலக்கியத்தில் வெகுமக்கள் ரசனைக்கான (ஜனரஞ்சக) எழுத்து என்றும், தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கான (சீரியஸ்) எழுத்து என்றும் இரண்டு வகைப்பாடுகள் இருக்கின்றன. பரவலாகச் சென்றடையும் வகையில் எழுதினால் குப்பை இலக்கியம் என்றும், சிறு வட்டங்களுக்குள் எழுதினால் மக்களிடம் வர முடியாத மேட்டிலக்கியம் என்றும் சாடுவது இரு தரப்பிலும் இன்னமும் நடக்கிறது.


இதே சண்டை திரைப்படக் களத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. எழுத்தாக்கங்கள் வாசிக்கப்படுவதை விட திரைப்படங்களைப் பார்ப்பது பல மடங்கு அதிகம். ஆகவே இலக்கிய அரங்கத்தை விட இங்கே நடைபெறும் சண்டைகள் விரிவான கவனத்தைப் பெறுகின்றன. வணிக மசாலாக்கள் என்றும், கலைப் படைப்புகள் என்றும் அணி பிரிந்திருக்கின்றன. கலைப் படங்கள் பன்னாட்டு அளவிலும் உள்நாட்டிலும்  திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகின்றன. திரையரங்குகளுக்கும் வருகின்றன என்றாலும், அதிக நாட்கள் தாக்குப்பிடிப்பதில்லை.


நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசையமைப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றில் பெரிய நட்சத்திரங்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் இவ்வகைப் படங்களுக்கு நாடப்படுவதில்லை. ஆகவே முதலீட்டுச் செலவு பெரிதும் குறைந்துவிடுகிறது. விழாக்களில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இக்காரணங்களால் பெரும்பாலும் இவ்வகைப் படங்கள் போட்ட காசை எடுத்துவிடுகின்றன எனலாம். திரையரங்கில் கூட்டம் சேராவிட்டால் முதலுக்கே மோசம் என்று தலையில் போட்டுக்கொள்வதற்குத் துண்டைத் தயாராக வைத்துக்கொண்டு நிற்பவர்கள் வணிகப் படத் தயாரிப்பாளர்கள்தான்.


அப்படித் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டவர்கள், ஏன் படம் மக்களின் வரவேற்பைப் பெறவில்லை என்று ஆராய்ந்ததாகவோ, இலையில் சோறு எங்கே இருக்கிறது என்று தேடுமளவுக்கு வெறும் மசாலாக்களாகப் போட்டுக் கிளறியது தப்பு என்று பாடம் கற்றதாகவோ தெரியவரவில்லை. சரி, அவர்களுடைய துண்டு  வேறு பிரச்சினை, அதைப் பற்றித் தனியாகப் பேசுவோம்.


வணிக வெற்றி தவறா?


எதார்த்தப் படைப்புகள், கலைப் படங்கள் என்ற முத்திரைகளுடன் விழாக்களில் பங்கேற்கிற, சில நேரங்களில் விருதுகளையும் வெல்லுகிற பல தயாரிப்புகள் திரையரங்குகளுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும், திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெறுகிற அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதில்லை. திறனாய்வாளர்களில் இப்படிப்பட்ட படங்கள் மீதுள்ள உண்மையான ஈடுபாட்டுடன் பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்,  தங்களது திறனாய்வுத் திறனே திறனாய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள்


வணிக வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே இவ்வகைப் படங்களின் தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ சந்தையில் வெற்றி கிடைக்காமல் போனால் கவலையில்லை, தங்களது படைப்பு பரவலான மக்களைச் சென்றடைய வேண்டியதில்லை என்று நினைப்பார்களா என்ன?  அப்படி நினைத்தால் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வார்களா என்ன? 


வணிக வெற்றியை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்? உண்மையில் ஒரு படம் வணிகமாகவும் வெற்றி பெறுகிறது என்றால், அது திரையரங்குகளில் லட்சக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைந்திருப்பதன் அடையாளமே. அப்படியானால் படத்தின் மையச் செய்தி அத்தனை ரசிகர்களின் சிந்தனைக்குப் போயிருக்கிறது என்றே பொருள். சமூக அக்கறை இல்லாத படங்கள் லட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறபோது, மாறுபட்ட படங்களில் உள்ள சமூகச் செய்தி, சமூகத்திற்கே வராமல் போவது சோகமானது.


சோகத்திற்குக் காரணம், இப்படிப்பட்ட படங்களில் மக்கள் ரசனை புறக்கணிக்கப்படுவதுதான். மக்கள் ரசனை என்றால் நாற்பது பேரை ஒற்றை நாயகன் பந்தாடுகிற சண்டை, உணர்ச்சிமயமான காட்சி முடிந்ததும் குத்தாட்டம், கதைக்குத் தொடர்பில்லாமல் ஒட்டப்படும் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை.. இதெல்லாம் இல்லாமலே சீரான கதையோட்டத்திலும் காட்சிகளிலும் மனசைத் தொடுகிற படங்கள் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. பாரதிராஜா, சீனு ராமசாமி,  பா. ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ராம், சுதா கொங்கரா, நித்திலன் சுவாமிநாதன் என்று இதில் வெற்றி பெற்றவர்களைப் பட்டியலிட முயல்கிறபோது, நினைவாற்றல் பற்றாக்குறை காரணமாகப் பலரது பெயர்கள் விடுபட்டுவிடக்கூடும் என்ற சங்கடம் எழுகிறது. மாறுபட்ட கதையாக்கங்களை மக்கள் ரசனையோடு கொடுக்க முன்வருகிற புதியவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறவர்கள் இவர்கள்.


காவல்நிலையக் கொடூரத்தையும், சிறை வாசலிலேயே சாதி அடிப்படையில் கைதிகள் பிரிக்கப்படுவதையும் காட்டிய ‘ஜெய்பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு, “இது திரைப்படம் அல்ல, இந்திய வரைபடம்,”  என்று எழுதினேன். அதன் இயக்குநர் ஞானவேல், இப்போது ரஜினிகாந்த்தை வைத்து இயக்குகிற ‘வேட்டையன்’ படத்தின் டீசர் காவல் அதிகாரியின் என்கவுன்டர் கொலையைப் போற்றுவதாக இருக்கிறது என்று கூறி ஒருவர் வழக்குத் தொடுத்திருக்கிறார் (சுவையான கூடுதல் தகவல், அவரும் ஒரு முன்னாள் நடத்துனர்!). படம் வந்தபின் அதை ஆராயலாம்.


கூழாங்கல்லும் கொட்டுக்காளியும்


ஓடிடி மேடைக்கு வந்த ‘கூழாங்கல்’, கொட்டுக்காளி’ படங்களைப் பார்த்தபோது கலவையான உணர்வுகள் ஏற்பட்டன. இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் தேர்வு செய்த கதைக்கருக்கள் இதுவரை யாரும் சொல்லாதவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. காட்சிப்படுத்திய விதங்கள் புதிய ஆழமான ரசனையை வழங்கின. இரண்டு படங்களுமே தனிப்பட்ட கிராம வாழ்க்கையைக் காட்டி, பொதுப்பட்ட ஆணகங்காரத்தைச் சந்திக்குக் கொண்டு வருகின்றன. 


வேலைவாய்ப்புகள் வறண்டுபோன கிராமத்தில் ஆண்கள் குடியும் பகடையாட்டமுமாகப் பொழுதைக் கழிக்க, பெண்கள் வசவுகளையும் வெயிலையும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வெளியே குடிநீர் ஊற்றின் அருகில் காத்திருக்கிறார்கள். இவர்கள் இப்படியே உழன்றுகொண்டிருக்கச் செய்வதில் நமக்கு ஏதோவொரு பங்கு இருக்கிறது என்ற உறுத்தலை ஏற்படுத்துகிறது ‘கூழாங்கல்’. பெண் ஆணின் உடைமை என அங்கீரிக்கும் சமூகப் பேயை உடுக்கடித்து விரட்டுகிற பொறுப்பு இனி நம் கையில்தான் இருக்கிறது என்ற பொறுப்பை உணர்த்துகிறது ‘கொட்டுக்காளி’.


இந்தக் கட்டுரை இவ்விரு படங்களுக்கான திறனாய்வு அல்ல.  இப்படிப்பட்ட படங்களின் பொதுவான சில போதாமைகள் என நான் கருதுவது பற்றிப் பேசுவதே நோக்கம். ஆகவே இப்படங்களின் கதைகள், கலைஞர்களின் பங்களிப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களுக்குள் போகவில்லை.


இந்தப் படங்கள் இந்தச் செய்திகளைச் சொல்கின்றன என்று, என்னுடன் அமர்ந்து  பார்த்த குடும்ப நண்பருக்கு விளக்கம் தர வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, ‘கொட்டுககாளி’ படம் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது, அவளுடைய மாமன் என்ன செய்தான் என்று குறியீடாகக் கூட முடிவைக் காட்டாமல் படீரென்று முடியும்.


நண்பர், “ஒன்று அந்தப் பெண்ணின் அவலம் தொடர்வதாக முடித்திருக்க வேண்டும். இல்லையேல் மாமன் திருந்துவதாக முடித்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் முடித்திருக்கிறார்கள். என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரிந்துகொள்ள  முடியவில்லையே,” என்றார்.


“பூசாரியிடம் மந்திரிப்பதற்கு முதலில் வந்திருந்த பெண்ணை அவன் எப்படிக் கையாள்கிறான் என்பதைப் பார்க்கிற மாமன் மனதுக்குள் புழுங்குகிறான். அதற்குப் பிறகு இந்தப் பெண்ணை மந்திரிப்பதற்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் அந்தச் சேவல் போல அவளுடைய சுதந்திரக் கழுத்து அறுபட வேண்டுமா, அல்லது பூசைச் சடங்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமா என்று நம்மை யோசிக்க வைக்கிறார்கள். படத்தின் முடிவை நம் கையில் விடுவதன் மூலம் சமூகப் பழக்கத்தை மாற்றுவதையும் நம் கையில் விடுகிறார்கள்,”     என்றேன். கதை சொல்வதில் இது ஒரு புதிய வடிவம் என்றும் கூறினேன். புரிந்து கொண்ட களிப்பு, இப்படி விளக்கம் அளித்தால்தானே புரிகிறது என்ற சலிப்பு இரண்டுமே அவர் முகத்தில் படரக் கண்டேன்.


இப்படி ஒவ்வொருவராகப் பார்த்து பதவுரை பொழிப்புரை சொல்ல வேண்டுமா? விளக்கமளித்தால்தான் புரியும் என்றால் அது படைப்பின் வெற்றியாகுமா? புரிகிறது, புரியவில்லை என்று பேசுவதே கூட ஒரு வெற்றிதான் என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். திரைப்படத் திறனாய்வு முகாம்களில் இப்படிப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. விழாக்களில் திரையிடப்படுகிற, திறனாய்வு முகாம்களில் விவாதிக்கப்படுகிற படங்களைப் பார்க்கிறவர்கள் ஒரு புதிய ரசனைக்கும் புரிதலுக்கும் பழக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், ஒட்டுமொத்த திரைப்படப் பார்வையாளர் மக்கள் தொகையில் இவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள்? விழாக்காரர்கள் ஏன் இப்படி விளக்கவுரை தேவைப்படும் தயாரிப்புகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் கேட்கத் தோன்றுகிறது.


நடக்க நடக்க


இவ்வாறு புதிர்த்தனமாக முடிப்பதால் மட்டுமே மக்களிடமிருந்து விலகியிருக்கவில்லை. காட்சிகளின் நிகழ்வுகள்  மெதுவாக, மிக மெதுவாக நகர்வதும் பெரும்பாலான பார்வையாளர்களைத் தள்ளி நிறுத்துகின்றன. ஒருவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, தெருக்களைத் தாண்டி, ஊர்முனையில் இருக்கிற கடைக்கு வருவதாக ஒரு காட்சி இருக்கிறது என்றால், வீட்டில் அவர் சுவரில் தொங்கும் சட்டையை எடுத்து மாட்டிக்கொள்வது, வாசலை நோக்கி நடப்பது, படியில் இறங்குவது, தெருவில் நடப்பது, அடுத்த தெருவுக்குத் திரும்பி நடப்பது, அதற்கடுத்த தெருவில் திரும்பி நடப்பது என அவர் பின்னாலேயே கேமரா நடக்கும். கடைசியில் கடையை அடைவார். ஏதோவொரு பொருளை  வாங்கிக்கொண்டு மறுபடி வந்த வழியே தெருவில் நடப்பது, அடுத்த தெருவில் திரும்பி நடப்பது, அதற்கடுத்த தெருவில் திரும்பி நடப்பது, படியில் ஏறுவது. வாசலைத் தாண்டி வீட்டுக்குள் நடப்பது, சட்டையைக் கழற்றிச் சுவரில் தொங்கவிடுவது என்று கேமரா பின்தொடரும்.


வீட்டிலிருந்து கிளம்புவது போல் ஒரு ஷாட் முடிந்ததும், அடுத்து கடையில் நிற்பது போல் ஒரு ஷாட்  வருமானால், அதற்குள்ளாக எப்படி கடைக்கு வந்தார்  என்று பார்வையாளர்கள் கேட்கப்போவதில்லை. இடையில் நீண்ட தொலைவு நடந்திருப்பார் என்று புரிந்துகொள்வார்கள். கட் ஷாட், குயிக் ஷாட் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தகைய வேகமான காட்சிப் பதிவுகளுக்குப் பார்வையாளர்கள் நன்றாகவே பழகியிருக்கிறார்கள். அல்லது, கலைப்பட வட்டாரத்தினர் சொல்ல விரும்புவது போல பார்வையாளர்கள் வேகக் காட்சிகளுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டார்கள்.


‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ இரண்டிலுமே சில நகர்வுக் காட்சிகள் தேவையின்றி மெதுவாக அமைக்கப்பட்டிருக்கின்றன என்று கருதுகிறேன். திறனாய்வு  முகாம்களில் திரையிடப்படும் பல நாடுகளைச் சேர்ந்த படங்களிலும் இதே போல் பார்த்திருக்கிறேன். கொட்டுக்காளிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமையை மாற்ற ஒரு சமூகமாக என்ன செய்ய வேண்டும்  என்று பார்வையாளர்களின் முடிவுக்கு விடுகிற முடிப்பு நயமானது, பொருளுள்ளது. அந்த நயமும் பொருளும் முந்தைய காட்சிகளின் பொருத்தமான வேகத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் இந்த நல்ல படைப்பு மகத்தான படைப்பாகியிருக்கும். 

 

எதார்த்தம், ரியலிசம்  எனப்படும் மெய்யியல் பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்று கேட்க வேண்டியிருக்கிறது. மசாலா  என்று ஒதுக்கப்படும் வணிகப் படங்களில் கூட, சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் நகர்வு அப்படியப்படியே காட்டப்படுவதுண்டு. குறிப்பிட்ட சூழலை, கதாபாத்திரங்களின் மன அழுத்தத்தை அந்தக் காட்சிகள் உணர்த்திவிடும். அடுத்து, கலைப்படங்கள் எல்லாமே மெதுவான காட்சி நகர்வைக் கொண்டிருப்பதாகச் சொல்லிவிட முடியாது. எடுத்துக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் பிரச்சினை, ஒரு குடும்பத்தின் சிக்கல், ஒரு சமூகத்தின் நிலைமை ஆகியவை எதார்த்தமானவையாக இருக்கும். சித்தரிப்பு என்று வருகிறபோது வேகக்காட்சிகள் தேவைக்கேற்பப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.


மூவகை நீளங்கள்


பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு வந்திருந்தார் நடிகர் ராஜேஷ். அவரைச் சந்தித்து உரையாடியபோது, படக் காட்சிகளின் வேகம், நீளம் பற்றிப் பேச்சு வந்தது. “கட் லென்த், லைவ் லென்த், டெத் லென்த் என்று மூன்று விதமான நீளக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு இடத்தையோ நடிகரையோ பொருளையோ காட்டிவிட்டு உடனே அடுத்த இடத்தைக் காட்டுவது கட் லென்த். நடந்து போவதை அப்படியே முழு நேரமும் காட்டுவது லைவ் லென்த். இதெல்லாம் தேவையைப் பொறுத்தது. தேவையே இல்லாமல் காட்சி இழுத்தடிக்கப்படுமானால் அதுதான் டெத் லென்த்,” என்றார் அவர்.


1963ல் ‘நானும் ஒரு பெண்’  என்ற படத்தை பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒரு வங்காளப் படத்தின் மறு தயாரிப்பான அந்தப் படத்தில், ஒரு மேல் தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் (எஸ்.எஸ். ராஜேந்திரன்)  கல்வியறிவற்ற ஏழையான நாயகியும் (விஜயகுமாரி) காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள். கறுப்பாக இருக்கும் அவளை அந்தக் குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குவார்கள். அவர்களின் மனங்களை அவள் தனது செயல்களால் வென்றெடுப்பதே கதை. அதில் பாதிப்படம் கடந்த பின் ஒரு காட்சி - மாடியில் தனது அறை முகப்பில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருப்பார் மாமனார் (எஸ்.வி. ரங்காராவ்). அவ்வழியாகச் செல்லும் நாயகியிடம், “ஒரு காஃபி கொண்டு வாம்மா,” என்று கேட்பார். அந்த வீட்டில் முதல் அங்கீகாரம்! உடம்பெல்லாம் உற்சாகம் தொற்றிக்கொள்ள, விறுவிறுவென்று அந்த முதல் தள நடைமேடையைத் தாண்டி, படிகளில் இறங்கி, நடுக்கூடத்தை ஓட்டமும் நடையுமாகக் கடந்து, சமையலறைக்குள் நுழைந்து, காஃபி கலந்து, மறுபடி ஹால், படிகள், நடைமேடை, அறை முகப்பு என்று போய் மாமானாரிடம் கொடுப்பாள். அந்த லைவ் லென்த் காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் அவளுடைய உற்சாகம் தொற்றிக்கொள்ளச் செய்திருப்பார் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் (வங்காளப் படத்திலும் அப்படி இருந்ததா என்று தெரியவில்லை.


இவ்வாறு கதையோட்டத்திற்குத் தேவையே இல்லாமல், குறியீடாகவும் பொருள் விளங்கச் செய்யாமல் ஒரு அசைவோ அல்லது அசைவற்ற நிலையான காட்சியோ நீண்ட நேரம் காட்டப்படுமானால் அது டெத் லென்த். நாயகன் நாயகியைப் பெயர் சொல்லி அழைக்கிறான். அவன் அழைத்து முடித்த பின் சில நொடிகள் அசைவற்ற அவனது முகத்தைக் காட்டும் கேமரா. அப்புறம் மெதுவாக நாயகியிடம் திரும்பும். அவள் அவனை ஏறிட்டுப் பார்ப்பாள். சில நொடிகள் கடந்த பின், “என்ன” என்று கேட்பாள். மறுபடி சில நொடிகள் அவள் முகத்திலேயே உறைந்து நிற்கும் கேமரா. இப்படியே அந்தக் காட்சி ஒரு பத்து நிமிட நேரத்திற்கு நீளும். இந்த மாதிரியான டெத் லென்த் காட்சிகள் பல கலைப்படங்களில் இடம் பெற்று “இதுதான் ரியலிசமா”  என்று கேட்க வைக்கின்றன. நமது நாட்டில், குறிப்பாக கிராமங்களில் கதாபாத்திரங்கள் இப்படி மெதுவாக எதிர்வினையாற்றுவதாகக் காட்டுவதில் எதார்த்தமே இல்லை. உடனுக்குடன் பதிலளிப்பதும் தொடர்ந்து பேசுவதும்தான் இந்த மண்ணின் மக்களுடைய பழக்கம்.


வணிக மசாலாப் படங்களில் கூட, கட் லென்த் ஒட்டுகள் நிறைய இருக்கிற வேகமான காட்சிகள் டெத் லென்த் விளைவை ஏற்படுத்திக்  கொட்டாவி விட வைப்பதுண்டு. ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘இந்தியன் 2’ இதற்கு சரியான எடுத்துக்காட்டு.  வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்திலும், அப்பனும் மகனும் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்க, “துப்பாக்கிதான் இருக்குதில்ல, சட்டுப் புட்டுனு சுட்டுட்டுப் போங்கப்பா” என்று அலுத்துக்கொள்ள வைத்திருப்பார்கள்.


சமூகத்தைச் சென்றடைய


மாற்று சினிமா காதலர்களின் இதயங்களில் குடியேறியவரான  சத்யஜித் ரே படங்களின் எதார்த்தக் காட்சிகள் அவரது கதைமாந்தர்களின் வாழ்வோடு நம்மை ஒன்றச் செய்வதாக இருக்கும். முகாம்களுக்கு வந்த பல மாற்று சினிமாக்களின் மக்களோடு இப்படி ஒன்ற முடிந்திருக்கிறது.


உலக அளவில் புதிய அலைப் படங்களின் முன்னோடி  ஜீன் லக் கொடார்ட். அவருடைய ‘டூ ஆர் த்ரீ திங்ஸ் ஐ நோ அபௌட் ஹெர்’ என்ற பட்ம் (1967), நகர்ப்புற வாழ்க்கையும், முதலாளித்துவத்தால் புகுத்தப்படும் நுகர்வுப் பொருள்களும், குண்டுகள் போடும் யுத்த அரசியலும் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிப் பேசும். அதன் கதைமாந்தர்கள் கதையோடு நடமாடிக்கொண்டே நம் பக்கம் திரும்பி நம்மோடு பேசுவார்கள். இத்தகைய மாற்றுப் படங்களைக் கொடுத்தவர் பிற்காலத்தில் வேகமான அசைவுகளுடன் வெகுமக்கள் ஏற்புக்கான படங்களைத் தயாரிப்பதற்குத் தயங்கவில்லை.


கருப்பொருள், கதையாக்கம், திரைக்கதை வடிவம், காட்சியமைப்புகள் இவையனைத்தும் படத்தை உருவாக்குகிறவர்களின் படைப்புரிமை. அவர்களது சுதந்திரத் தேர்வு. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த உரிமையும் சுதந்திரமும் போற்றத்தக்கவை. ஆனால், மெதுவாக அசைகிற அல்லது அசைவற்ற படிமங்கள் மட்டுமே கலை  என்று வாதிடுவதும், இப்படித்தான் எடுப்போம், அதைப் பார்க்கும் தகுதியைப் பார்வையாளர்கள் வளர்த்துக்கொள்ளட்டும் என்று தள்ளுவதும்தான் சிக்கல். இந்தக் கருத்து, இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற வேண்டும், இவற்றின் சமூகச் செய்திகள் உண்மையாகவே சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்ற ஆசையிடலிருந்தும் அக்கறையிலிருந்துமே முன்வைக்கப்படுகிறது. மக்களின் உண்மைப் பிரச்சினைகளைப் பார்க்க மறுக்கும் சந்தைப் படங்களுக்கும், மக்களின் ரசனை வளர்ச்சியை மதிக்க மறுக்கும் விழாப் படங்களுக்கும் என்ன வேறுபாடு? தேர்ந்தெடுத்த திறனாய்வாளர்களுக்கும் கருத்துடன்பாடு உள்ள பார்வையாளர்களுக்கும் மனநிறைவு தந்தால் போதுமா?


(‘மின்னம்பலம’ இணைய ஏட்டில் 12-10-2024ல் வெளியானது)


No comments: