Tuesday, 15 October 2024

உங்க ஒய்ஃப் கர்ப்பமா இருக்காங்கன்னு...

பெரிய கார்ப்பரேட் நிறுவனம் அது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் அந்த வழியாகப் போகிற  வருகிற போதெல்லாம் இங்கே வேலை கிடைக்காதா  என்று  ஏங்கிய இளைஞர்களில் நானும் ஒருவன். ஒரு சிறு தொழிலகத்தில் வேலை கிடைத்து, அதன் சார்பாக அந்தப் பெரிய நிறுவனத்திற்கு இயந்திரத் துணை உறுப்புகள் தயாரித்து வழங்குவதற்கான பணியாணை கேட்பதற்காகச் சென்றிருந்தேன். உள்ளே நவீனமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்தேன். உணவு இடைவேளையில் இனிமையான கருவியிசை ஒலிபரப்பப்பட்டதைக் கேட்டு ரசித்தேன். இங்கே வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற    எண்ணம் அப்போதும் ஏற்பட்டது.


பல்வேறு அனுபவங்களைத் தந்த நாட்களின் விரைவோட்டத்தில் நான் பின்னர் ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் இணைந்தேன். மதுரை எல்லிஸ் நகரிலிருந்த வீட்டிலிருந்து தினமும் சைக்கிளில் அலுவலகம் சென்று வருவேன். பக்கத்து வீட்டுக்குக் குடிவந்தார் கலை. அவர் அந்த நிறுவனத்தின் தொழிலாளி என அறிந்து கூடுதல் நெருக்கம் ஏற்பட்டது.


ஒருநாள் என்னை தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார் கலை.  தனது நிறுவனத்தில் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று விவரித்தார். “சார், கம்பெனியில சிஐடியு யூனியன் ஆரம்பிக்கணும், அதுக்கு உங்க  ஆலோசனை தேவை. என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்னு சொல்லுங்க,” என்றார்..


“எனக்கு நேரடியா யூனியன் அனுபவம் கிடையாது. ஆனா சங்கத் தலைவர்களைத் தெரியும். அவங்களைச் சந்திக்கலாம். அவங்க என்னென் செய்யணுங்கிறதைச் சொல்லுவாங்க,” என்று  நான் சொன்னேன்.


அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் திடீர் நகரில் இருந்த சிஐடியு அலுவலகத்திற்கு அழைத்துப் போனேன். எனது சைக்கிளின் முன்புறம் பொருத்தியிருந்த குழந்தைகளுக்கான கூடை இருக்கையில் ஒரு வயது மகனை அமர வைத்துக்  கொண்டு சென்றேன். சைக்கிள்களை சங்க அலுவலக வாயிலோரம் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். அங்கே ஒரு பொறுப்பாளர் தோழர் இருந்தார் (மணி அல்லது பழனி என்று நினைக்கிறேன்).


அவரிடம் கலையை அறிமுகப்படுத்தி வந்த நோக்கத்தைச் சொன்னேன். அவரிடம் கூடுதல் விவரங்களைக் கேட்டறிந்தார் தோழர். “சார், இந்த வாரத்திலேயே யூனியனை ஆரம்பிச்சிடுவோம்,” என்றார் கலை.


தோளில் தட்டிக்கொடுத்துப் புன்னகைத்த தோழர், “அவசரப்படாதீங்க தோழரே. உங்க .ஃபேக்டரியில யூனியன் ஆரம்பிக்கிறது அவ்வளவு சுலபமில்லை. ஈஸியா உடைச்சிருவாங்க. நிறையப் பேரு ஜாதி அடிப்படையிலே சேர்க்கப்பட்டிருக்காங்க, அவங்க எல்லாரும் உடனடியா சங்கத்துக்கு வர மாட்டாங்க. அதனால நீங்களும் இப்ப உங்க கூட வரத் தயாரா இருக்கறவங்களும் மத்த ஒர்க்கர்ஸ்கிட்ட பேசுங்க. அவங்க சஃபர் பண்ற பிரச்சினைகளைச் சொல்லிக்காட்டி அதுக்கு முடிவு கட்ட யூனியன் வேணும்கிறதை உணர வைங்க. ஓரளவுக்கு ஆதரவு சேர்ந்ததும் யூனியனை ஃபார்ம் பண்ணிடுவோம்,” என்று கூறினார்.


புரிந்துகொண்டவராகவும் கொஞ்சம் ஏமாற்றத்துடனும் தலையசைத்தார் கலை. இருவரும் புறப்பட்டோம். நான் ஒரு நண்பரின் கடைக்குப் போய்விட்டு வருவதாகக் கூறிவிட்டு மகனை சைக்கிளில் உட்கார வைத்து நகரத்துக்குள் சென்றேன். அவர் வீட்டுக்குப் போனார்.


மறுநாள் மாலை 3 மணயளவில், ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் செய்தி எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொலைபேசி அழைப்பு வந்தது. தலைமைத் துணையாசிரியர் மேசைக்குச் சென்று தொலைபேசியை எடுத்து யாரென விசாரித்தேன். “சார், நான் கலை பேசுறேன்,” என்றவரின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது. “சார், அந்த யூனியன்காரங்க மேனேஜ்மென்ட்ல போட்டுக் கொடுத்துட்டாங்க,” என்றார்.


“என்ன நடந்தது? பொறுமையா சொல்லுங்க,” என்றேன். நடந்ததைச் சொன்னார். அதிர்ச்சியிலும் வியப்பிலும் கண்களை மூடிக்கொண்டேன்.


நிறுவனத்தில் அவர் தனது பணிக்கூடத்தில் வேலையில் இருந்தபோது உதவிப் பணியாளர் வந்து, அவரை மனித வளத் துறை மேலாளர் அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்த அறைக்குச் சென்றவரிடம் மேலாளர் நேரடியாக, “என்னங்க, நேத்து ஈவ்னிங் திடீர் நகர் சிஐடியு ஆஃபிஸ்க்குப் போயிருந்தீங்க போல இருக்கு? இங்கே ஏதாவது யூனியன் ஆரம்பிக்க உத்தேசம் பண்ணியிருக்கீங்களா,” என்று கேட்டிருக்கிறார். அங்கே வேறு சில அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள்.


“எனக்கு ரொம்பவும் ஷாக்கிங்கா இருந்துச்சு. யூனியன் ஆஃபிஸ்லயிருந்து யாரும் சொல்லாம அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிருக்க முடியும்,” என்றார் கலை.


“அது என்னான்னு பார்க்கலாம். மேனேஜர் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க,” என்று கேட்டேன்.


“நான் சிஐடியு ஆஃபிஸ் பக்கமே போனதில்லை. வேற யாராவது இருக்கலாம்னேன்,” என்றார்.


“அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. சரி, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”


“அது நீங்கதான் மிஸ்டர் கலை. உங்க கூட இன்னொருத்தர் ஒரு குழந்தையோட வந்தாரு. சைக்கிளை வெளியே நிறுத்திட்டு உள்ளே போனீங்க. ஒரு மணி நேரம் உள்ளேயே இருந்திருக்கீங்கன்னு மேனேஜர் டீடெய்லா சொன்னார்.”


“நீங்க திடீர் நகர் ஆஃபிஸ்க்குப் போனது உண்மைதான்னு ஒப்புக்கிட்டு, ஆனா எனக்காகப் போகலை,  பக்கத்து வீட்டுக்காரருக்கு அங்கே ஏதோ வேலை இருந்துச்சு அதனால அவரோட டவுனுக்குள்ள போனப்ப அந்த ஆஃபிஸ்க்கும் போயிருந்தேங்கிற மாதிரி ஏதாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்லை, அப்புறம் என்ன ஆச்சு?”


“நான் அங்கே போகலைன்னு சொன்னதிலே ஸ்ட்ராங்கா நின்னுட்டேன். கடைசியில மேனேஜர் சரி உங்க ஒர்க்‘ஷாப்புக்குப் போங்கன்னுட்டாரு. ரூம் டோர் கிட்டப் போனப்ப, “மிஸ்டர் கலை, உங்க ஒய்ஃப் கர்ப்பமா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். டெலிவரிக்கு அவங்க பேரன்ட்ஸ் வீட்டுக்கு அனுப்புறீங்களா, இல்லாட்டி மதுரையிலேயேதானா? நிறைய செலவாகும்ல… இந்த நேரத்தில கவனமா இருக்கணும். ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கேளுங்க.  டெலிவரி நல்லபடியா நடக்க விஷ் பண்றேன்”னு மேனேஜர் சொன்னாரு. அவரு அப்படிச் சொன்னதில என்னை பயமுறுத்துற டோன் இருந்த மாதிரி தோணுச்சு,” என்றார் கலை.


“சரி. நான் யூனியன்ல விசாரிச்சுட்டு நைட் வீட்டுக்கு வர்றப்ப விவரமா சொல்றேன்,” என்று கூறிய நான், வேலை முடிந்ததும் நேராக சிஐடியு அலுவலகம் சென்றேன். அந்தத் தோழரும் வேறொரு நிறுவனப் பேச்சுவார்த்தை முடிந்து அப்போதுதான் வந்திருந்தார். கலை சொன்னதைத் தெரிவித்துவிட்டு, அவருடைய சந்தேகத்தைப் பற்றியும் சொன்னேன்.


“அவர் சந்தேகப்பட்டதுல ஆச்சரியமில்லை,” என்று சொன்னவர், அது போன்ற பெரிய கார்ப்பரேட் நிர்வாகங்கள் எப்படி இது போலத் தொழிலாளர்களை வேவு பார்ப்பதற்கென்றே தனியார் துப்பறியும் குழுமங்களை மாதாந்திரக் கட்டணம் கொடுத்து ஈடுபடுத்துகின்றன  எனத் தெரிவித்தார். “இப்ப கூட நம்ம ஆஃபிஸ்க்கு வெளியே இருக்கிற அந்த டீ கடையிலேயோ, ரசிகர் மன்றத்திலேயோ, கோயில் வாசலிலேயோ, பாலச் சுவரிலோ அந்த டிடெக்டிவ்ஸ் கலந்து உட்கார்ந்திருப்பாங்க. யார் இங்கே வர்றாங்கன்னு கவனிச்சு ரிப்போர்ட் பண்ணிருவாங்க. தகவலுக்கு ஏத்த மாதிரி போனஸ் பேமென்ட் கிடைக்கும்…”


நான் அசந்துபோய் கேட்டுக்கொண்டிருக்க, “அவரு இங்க வந்துட்டுப் போனதை மேனேஜ்மென்ட் தெரிஞ்சிக்கிட்டது நல்லதுதான். இனிமே நாங்க அவரோட நேரடியா பேச முடியும்,” என்றார். வீடு திரும்பியதும் காத்திருந்த கலையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டேன்.


இந்தியாவில் உள்ள தனியார் துப்பறியும் குழுமங்களின்  பணிகளில் 40 சதவீதம் இப்படிப்பட்ட  கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளர்களை வேவு பார்ப்பதுதான் என்று பின்னர் படித்தறிந்தேன்.


அடுத்தடுத்த சில மாதங்கள் சங்கத் தலைவர்கள் நேரடியாகக் கலையிடமும் அவருடனிருந்தவர்களிடமும் பேசினார்கள். கலையும் சகாக்களும் சிஐடியு அலுவலகத்திற்குச் சென்றார்கள்.மற்ற தொழிலாளர்களுடன் பேசினார்கள்.


ஒரு நாள், நிறுவன வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில், சங்கத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. கலைதான் செயலாளர். “தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக,” என்ற முழக்கங்கள், அந்தப் பகுதியின் சாலையோர  மரங்களில் அமர்ந்திருந்த பறவைகளுக்குப் புதிதாக ஒலிக்க,  ஒரு மூத்த தொழிலாளி சங்கக் கொடியேற்றினார். சிஐடியு கொடிகளுடன் தலைவர்களும் தோழமைகளும் வந்திருந்து வாழ்த்தினார்கள். நட்பின் அடிப்படையிலும்  விழாவில் கலந்துகொண்ட நான் செய்தியாக எழுதினேன்.


பல தொழிலாளர்கள் சாதிய உணர்வுடன் நிர்வாகத்துடன் முரண்படத் தயங்கி வர மறுத்துவிட்ட நிலையிலும் அந்த வாயிலில் சங்கக் கொடி உயர்த்தப்பட்டது. பெருவாரியான தொழிலாளர்கள் திரண்டிருக்கும் சாம்சங் நிறுவன வாயிலிலும் அது நிகழாமல் விட்டுவிடுமா வரலாறு?


No comments: