தமிழ் மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெற்ற மதம் என்ற அரியனையைக் கைப்பற்ற அன்று சைவ சமயத்திற்கும் சமண மதத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கோவில்களில் உழவாரப் பணிகளைச் செய்த சைவத் தலைவர்களும் தொண்டர்களும் அரசர்களை மதம் மாறச் செய்தார்கள். அதைச் சாதிப்பதற்காகக் கருத்தியல் வாதங்களில் ஈடுபடுவதற்கு மாறாக அவர்கள் அனல் வாதத்திற்கும் புனல் வாதத்திற்கும் அழைத்தார்களாம்.
சமணக் கருத்துகள் எழுதப்பட்ட ஏடுகளையும் சைவக் கருத்துகள் கொண்ட ஏடுகளையும் தீயில் போடுவார்களாம். எந்த ஏடுகள் தீயில் எரிந்து கருகிப் போகாமல் தாக்குப் பிடிக்கின்றனவோ அவைகள்தான் சரியான தத்துவங்கள் என்று அறிவிப்பார்களாம். இது அனல் வாதம்.
அதே போல, இரு சமயங்களின் ஏடுகளை வைகையாற்று வெள்ளத்தில் வீசுவார்களாம். எந்த ஏடுகள் நீரோட்டத்தை எதிர்த்து வருகின்றனவோ அவைகள்தான் நல்ல சித்தாந்தங்கள் என்று அறிவிப்பார்களாம். இது புனல் வாதம் (இவ்வாறு ஏடுகள் ஆற்றில் போடப்பட்ட இடத்திற்கு திரு ஏடகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் அந்தத் திருவேடகம் என்ற ஊர் இருக்கிறது).
அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் அன்று வெற்றி பெற்றவை சைவ சமய ஏடுகள்தான். சமண ஏடுகள் தவறானவை என்பதால் எரிந்துபோய்விட்டனவாம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனவாம். சைவத்தின் வெற்றியைக் கூற இப்படியொரு கதை வழக்கில் உண்டு. எந்தச் சமயமானாலும், பனையோலையில் எழுதப்பட்ட ஏடுகள் உண்மையிலேயே தீயில் கருகிப்போகாமல் இருக்க முடியுமா? ஆற்று வெள்ளத்தில் எதிர்த்து வர முடியுமா? தலையில் மதம் ஏறிவிட்டால் பகுத்தறிவுக்கு இடமிருக்காதுதானே.
ஆனால் இந்தக் கதை வேறொன்றை உணர்த்துகிறது. அன்றைக்கு மாற்றுக் கருத்துகளைப் பேசிய ஏடுகள் மக்களின் கவனத்திற்கு வராமல் தடுக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு அன்றைய அரசுகள் உடந்தையாக இருந்தன என்றும் தெரிய வருகிறது. அரசாட்சியில் இருப்பவர்களுக்கும் ஆதிக்கவாதிகளுக்கும் ஒத்துவராத எழுத்தாக்கங்களுக்குத் தடை விதிப்பது அப்போதே இருந்திருக்கிறது என்று தெளிவாகிறது.
புத்தகங்களுக்குத் தடை விதிப்பது பல நாடுகளிலும் – அநேகமாக எல்லா நாடுகளிலும் – நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கிறது. அப்படித் தடை போடப்பட்ட சில புத்தகங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும், 1933ல் புத்தகங்களை எரிப்பது ஒரு கொண்டாட்டமாகவே நடந்திருக்கிறது. குறிப்பாக நாஜி மாணவர் அமைப்புகள் பல நகரங்களிலும் அந்தக் கொண்டாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஜெர்மன் நலன்களுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்ட புத்தகங்களைத் திரட்டி ஊர் நடுவில் குவித்து சொக்கப்பனை கொளுத்தியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஹிட்லரின் படைகள் நூலகங்களுக்கும், புத்தகக் கடைகளுக்கும் படையெடுத்து நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கதையாகவோ கவிதைகளாகவோ கட்டுரைகளாகவோ கூறும் புத்தகங்களைக் கைப்பற்றி எரித்தார்கள் (யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் அறிவு விளக்காக இருந்து வந்த நூலகம் எரிக்கப்பட்டதை மறந்துவிட முடியாது).
மெய்ன் கேம்ப்
அதே ஹிட்லர் எழுதிய ‘மெய்ன் கேம்ப்’ (எனது போராட்டம்) என்ற புத்தகம், இரண்டாம் உலகப்போரில் நாஜி அரசு வீழ்ச்சியடைந்த பிறகு ஜெர்மனியிலும் இந்தியா உள்பட பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அத்தியாயமும் உண்டு. அந்தப் புத்தகத்தை இங்கே சவர்க்கார் கொண்டாடினார். “மெய்ன் கேம்ப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதில் யூதர் என்ற சொல்லை எடுத்துவிட்டு முஸ்லிம் என்ற சொல்லைப் போட்டுக்கொண்டால் அதுதான் நான் நம்புவது,” 1949ல் எழுதினார் சவர்க்கார்.
ஜெர்மனியில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது. இந்தியாவிலும் அந்தப் புத்தகம் கடைகளுக்கு வந்தது. பல்வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டது. 2014ல் நரேந்தர் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைத்த பிறகு, ‘‘சுய முன்னேற்றத்திற்கு வழி காட்டும் புத்தகம்,’’ என்று பட்டை கட்டப்பட்டது.
ரங்கீலா ரசூல்
1924ல் உருது மொழியிலும் பின்னர் இந்தியிலும் வெளியான புத்தகம் ‘ரங்கீலா ரசூல்’. ‘வண்ணமயமான இறைத்தூதர்’ என்ற பொருள் தரும் அந்தப் புத்தகத்தை ஆர்ய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எழுதியிருந்தார். ஆனால் உண்மைப் பெயரை மறைத்து பண்டிட் சம்புபதி என்ற புனைப்பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்து மதத்தின் வேத நூல்களில் குறிப்பிடப்படும் கடவுள் மட்டுமே உண்மைக் கடவுள் என்று கூறி, பிற மதங்களுக்கு எதிரான பகைமைக் கருத்துகளைப் பரப்பிய ஆர்ய சமாஜ் அமைப்பு, இந்து மதத்திலேயே இருக்கிற மற்ற மறைநூல்களையும் நம்பிக்கைகளையும் ஏற்றதில்லை. இந்த மனப்போக்குடன் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைக் கடுமையாகச் சாடினார் மகாத்மா காந்தி. வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவித்தார்.
முகமது நபியின் குடும்ப வாழ்க்கையை இழிவுபடுத்திச் சித்தரித்ததாகக் கூறப்படும் அந்தப் புத்தகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைக் கலவரங்களும் இருதரப்பு மோதல்களும் ஏற்படக் காரணமானது. புத்தகத்தின் பதிப்பாளர் மஹாசே ராஜ்பால் கொலை செய்யப்பட்டார். கொலையாளிக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு, புத்தகத்திற்குத் தடை விதித்தது. அத்துடன், மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் எனக்கூறும் சட்டத்தை 1927ல் கொண்டுவந்தது. விடுதலைக்குப் பிறகு இன்னமும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிலும் அந்தத் தடை தொடர்கிறது, அந்தச் சட்டமும் நீடிக்கிறது. பதிப்பாளர் இறந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 1997ல் தில்லியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இந்தியப் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பதிப்புச் சுதந்திர விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. 2010ல் பன்னாட்டுப் பதிப்பாளர் சங்கம் அவருக்கு வெளியீட்டுத் துணிவுக்காக விருது அறிவித்தது.
1934ல் வெளியான ‘தி ஹிண்டு ஹெவன்’ (இந்து சொர்க்கம்) என்ற புத்தகத்திற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. மேக்ஸ் வில்லி எழுதிய அந்தப் புத்தகம் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததற்காக விதிக்கப்பட்ட அந்தத் தடை விலக்கிக்கொள்ளப்படவே இல்லை. 1936ல் கேத்ரின் மேயோ எழுதிய ‘தி ஃபேஸ் ஆஃப் மதர் இந்தியா’ (அன்னை இந்தியாவின் முகம்) என்ற புத்தகம், காந்தியைத் தவறாகச் சித்தரித்ததாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு அதற்குத் தடை விதித்தது. அதே ஆண்டில் ‘தி லேண்ட் ஆஃப் லிங்கம்’ (லிங்க பூமி) என்ற புத்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆர்தர் மில்ஸ் எழுதிய அந்தப் புத்தகம் இந்துக்களின் லிங்க வழிபாட்டைக் கொச்சைப்படுத்துவதாக இருந்ததால் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாடு விடுதலையடைந்த பிறகு, ஆபுரே மேனன் எழுதிய, ராமாயண இதிகாசத்தைப் பகடி செய்யும் ‘ராமா ரீடோல்டு’ (ராமனின் மறுகதை, 1955), அலெக்ஸாண்டர் கேம்பெல் அதிகாரமையங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சித்து எழுதிய ‘ஹார்ட் ஆஃப் இந்தியா’(இந்தியாவின் இதயம், 1959), பயண அனுபவங்களோடு சேர்த்து காந்தியை விமர்சித்து ஆர்தல் கோஸ்ட்லர் எழுதிய ‘தி லோட்டஸ் அண்ட் தி ரோபோ’ (தாமரையும் ரோபோவும், 1960), இந்திய-சீனப் போர் சார்ந்து பெட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ‘அன் ஆர்ம்டு விக்டரி’ (ஓர் ஆயுதத்தாங்கிய வெற்றி, 1963), இந்திய மக்களின் வாழ்க்கை முறையை விமர்சித்து அடையாளப் பிரச்சினை பற்றிப் பேசும் வகையில் நய்ப்பால் எழுதிய ‘அன் ஏரியா ஆஃப் டார்க்னெஸ்‘ (இருளடைந்த ஒரு பகுதி, 1964) உள்ளிட்ட புத்தகங்கள் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டன.
ஹூ கில்டு காந்தி
பிரேசில் நாட்டு எழுத்தாளர் லொரினோ டீ சால்வடார் 1964ல் எழுதிய புத்தகம் ‘ஹூ கில்டு காந்தி?’ (காந்தியைக் கொன்றது யார்?). பலர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவதூறு பொழிவதாகவும் இருப்பதாக அந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்தப் புத்தகம் முறையான ஆய்வின் அடிப்படையில் எழுதப்படவில்லை என்று கூறி 1979ல் இந்தியாவில் அதற்குத் தடை விதித்தது ஜனதா கட்சி அரசு.
காந்தி கொலை தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் எனக் கூறி அந்தப் புத்தகத்தின் மீதான தடை விலக்கப்பட வேண்டும் என்று சிலர் இப்போது கோரத் தொடங்கியிருக்கிறார்கள்.
தி பாலிஸ்டர் பிரின்ஸ்
இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி பற்றிய அதிகாரப்பூர்வமற்ற வாழ்க்கை வரலாற்று நூல் ‘தி பாலிஸ்டர் பிரின்ஸ்’ (பாலிஸ்டர் இளவரசர்). ஆஸ்திரேலியாவின் ஹாமிஷ் மெக்டொனால்ட் எழுதிய இந்தப் புத்தகம் அவருடைய தொழில் வளர்ச்சியையும் பேசியது. வணிக வெற்றிக்காக அரசியல்வாதிகளுடனான தொடர்பைப் பயன்படுத்திக்கொண்டது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட விமர்சனங்களையும் முன்வைத்தது. ஆஸ்திரேலியாவில் அந்தப் புத்தகத்தை ஆலன் அன் அன்வின் பதிப்பகம் 1998ல் வெளியிட்டது. இந்தியாவில் அதன் பதிப்புரிமையை ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் வாங்கியிருந்தது.
ஆனால், புத்தகம் இங்கு வெளியாவதற்கு முன்பே அதற்குத் தடை கோரி ரிலையன்ஸ் நிறுவனம் தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. திருபாய் அம்பானியின் புகழுக்கும் நிறுவனத்திற்கும் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று வழக்கில் காரணம் கூறப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றம் புத்தகத்தை வெளியிடத் தற்காலிகத் தடை விதித்தது. தற்காலிகத் தடைதான் என்றாலும் ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் அச்சிடப்பட்டிருந்த பக்கங்களை விலக்கிக்கொண்டது, வெளியீட்டை நிறுத்திக்கொண்டது. வழக்குகளை நடத்தும் செலவுகள் கடுமையாக இருந்ததாலும், இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்போவதாக ரிலையன்ஸ் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தியதாலும் இந்த முடிவுக்கு அந்த நிறுவனம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் புத்தகம் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
நைன் அவர்ஸ் டு ராமா
அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் ஸ்டான்லி உல்பெர்ட் எழுதியது ‘நைன் அவர்ஸ் டு ராமா’ (ராமனுக்கு ஒன்பது மணி நேரம்). காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தைய ஒன்பது மணி நேர நிகழ்வுகளைக் கற்பனை கலந்து சொல்கிற நாவல் அது. காந்தி, கோட்ஸே, அவரது நண்பர் ஆப்தே ஆகியவர்களைத் தவிர்த்து, கதையில் வருகிற அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் கற்பனையான பெயர்கள்தான் தரப்பட்டிருந்தன. 1962ல் இந்தப் புத்தகமும், 1963ல் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு அதே பெயரில் வந்த திரைப்படமும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸே பற்றி பரிவாகச் சித்தரிக்கிறது, காந்தியைப் பற்றி சரியாகச் சித்தரிக்கவில்லை, பலர் மீது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. கோட்ஸே மதுபோதையில் இருப்பதாகவும், பாலியல் விடுதிக்குச் செல்வதாகவும், மதவெறி சித்தாந்த விசுவாசத்தைப் பின்னுக்குத் தள்ளுவது போல சித்தரிக்கப்பட்டிருந்ததாம். இந்திய அரசு காந்தியைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்ற விமர்சனமும் நாவலில் இருந்தது. லண்டனில் வெளியிடப்பட்ட அந்தப் பத்தகத்தை வைத்திருப்பதோ, வாங்குவதோ, விற்பனை செய்வதோ குற்றம் என்று தடையாணையில் கூறப்பட்டிருந்தது. தடை குறித்து அதிர்ச்சி தெரிவித்த உல்பெர்ட், “மக்கள் புத்தகத்தைப் படித்துவிட்டு முடிவு செய்யட்டும். தவறான புத்தகம் என்றால் குப்பையில் வீசியெறியட்டும்,” என்றார். தடை விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றாலும், இணைய வழியில் தரவிறக்கம் செய்து படிக்க முடிகிற இன்றைய சூழலில் தடையால் எதுவும் செய்ய முடியவில்லை.
தி சாட்டனிக் வெர்ஸஸ்
இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்காரரான அகமது சல்மான் ருஷ்டி எழுதி 1988ல் லண்டனில் வெளியிடப்பட்ட நாவல் ‘தி சாட்டனிக் வெர்ஸஸ்’ (சாத்தானின் வசனங்கள்). குரான் நூலில் முகமது நபி சாத்தான் சொன்ன கருத்துகளையும் சேர்த்துவிட்டார் என்று நாவலில் வருவதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாக்குவதாகக் குற்றம் சாட்டி, இந்தப் புத்தகத்திற்குப் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. வேறு பல நாடுகளிலும் மத அடிப்படைவாதிகள் கலவரங்களில் இறங்கினார்கள். வன்முறை பரவிய பின்னணியில் 1989ல் ராஜீவ் காந்தி அரசு புத்தகத்தின் இறக்குமதிக்குத் தடை விதித்தது. ஈரான் நாட்டின் அரசுத் தலைவராக இருந்த அயதுல்லா கோமேனி, ருஷ்டியையும் புத்தகப் பதிப்பாளர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டார் (ஃபட்வா). நாவலை ஜப்பானியில் மொழிபெயர்த்தவர் கொல்லப்பட்டார். ருஷ்டி பல கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து இப்போதும் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில்தான் இருக்கிறார்.
சில திறனாய்வாளர்கள், “புத்தகத்தில் ருஷ்டி யாருக்காக வாதாடுகிறாரோ அவர்களே அவரைக் கொல்லத் துடிப்பதுதான் முரணாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள். தடையும் ஃபட்வா ஆணையும் இன்னமும் தொடர்கிற நிலையில், இப்போது புத்தகத்தை மறுவெளியீடு செய்வதற்கு உகந்த சூழல் இல்லை என்று ருஷ்டி அண்மையில் கூறியிருக்கிறார்.
லஜ்ஜா
‘வெட்கம்’ எனப் பொருள் தரும் ‘லஜ்ஜா’, வங்கதேச நாட்டைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ருதின் எழுதி 1993ல் வந்த நாவலாகும். இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு அநீதி வங்கதேசத்தில் எதிரொலித்ததைக் கூறும் நாவல் அது. 1992ல் இங்கே அயோத்தியில் பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடிக்கப்பட்டதல்லவா? அதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இஸ்லாமிய மதவெறியர்களால் சிறுபான்மையினரான இந்து மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளை சில கதாபாத்திரங்களின் அனுபவங்களாகச் சொல்கிறது அந்த நாவல். “மதம் என்பதன் மறுபெயராக மனிதம் இருக்கட்டும்,” என்றுதான் அந்த நாவல் தொடங்கும். மதத்திற்குள்ளேயே நிலவும் சில பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டும்.
புத்தகத்தை எதிர்த்துக் கலவரங்கள் மூண்ட நிலையில் அதற்குத் தடை விதித்தது வங்கதேச அரசு. எல்லையையொட்டி இங்கேயும் கொந்தளிப்பான சூழல் உருவாகிய பின்னணியில் மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவில் மேற்கு வங்கத்திலும், வேறு சில மாநிலங்களிலும் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. 1995ல் கொல்கத்தா நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தடை விலக்கப்பட்டது. அதன் பின் தமிழ், ஆங்கிலம் உட்பட 25க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது.
தி ஹிண்டூஸ்: அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி
இந்திய சமுதாயவியல் ஆய்வாளரான வெண்டி டோனிகர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஆய்வு நூலான ‘தி ஹிண்டூஸ்: அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ (இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு) 2009ல் அமெரிக்காவின் வைக்கிங் பெங்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அதன் துணை நிறுவனமான பெங்குயின் இந்தியா புத்தகத்தை வெளியிட்டது. இந்து மதத்தின் வரலாறு இதுவரையில் ஆணாதிக்க பிராணியக் கண்ணோட்டத்திலும், வெள்ளைக் கீழையுலகவாதக் கண்ணோட்டத்திலுமே சொல்லப்பட்டு வந்துள்ளது என்று அந்தப் புத்தகம் வாதிட்டது. இதற்கு மாற்றாகப் பெண்களின் கண்ணோட்டத்திலும், ஒதுக்கப்படட் சாதிகளின் கண்ணோட்டத்திலும், விலங்குகளின் கண்ணோட்டத்திலும் மதத்தின் வரலாற்றைச் சொல்ல முயல்வதாகவும் கூறியது.
திறனாய்வாளர்களிடையேயும் சமூநீதிக்காக வாதாடுவோரிடையேயும் வரவேற்பைப் பெறத் தொடங்கியிருந்து அந்தப் புத்தகம் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது எனக்கூறி ஷிக்‘ஷா பச்சாவோ அண்டோலன் சமிதி (கல்விப் பாதுகாப்புப் போராட்டக் குழு) என்ற அமைப்பு நீதிமன்றத்திற்குச் சென்றது. எந்த மதப்பிரிவினரின் உணர்வுகளையும் சீண்டுவதற்குத் தடை விதிக்கும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 295ஏ பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்னொரு புறம் புத்தகத்தை எதிர்த்துப் பல இடங்களில் பிரச்சினைகள் கிளப்பப்பட்டன. பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2014ல் புத்தகத்தை விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்த பெங்குயின் இந்தியா, தன்னிடமிருந்த புத்தகங்களைக் கிழித்து அரைத்துக் காகிதக் கூழாக்கியது. நிறுவனம் இவ்வாறு பின்வாங்கியதை அருந்ததி ராய் உள்ளிட்ட பல சிந்தனையாளர்களும் விமர்சித்தார்கள். பிரிட்டிஷ் காலத்துச் சட்டப்பிரிவு 295ஏ நடைமுறையில் இருக்கிறபோது உலகளாவிய கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவது கடினம் என்று நிறுவனம் கூறியது.
இஸ்லாம் சமயத்தை விமர்சித்து இந்துத்துவாதியான ராம் ஸ்வரூப் எழுதி 1982ல் அமெரிக்காவில் வெளியான ‘அண்டர்ஸ்டேண்டிங் இஸ்லாம் த்ரூ ஹதீஸ்’ (மறைமொழிகள் வாயிலாக இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்), பாகிஸ்தான் தலைவர் ஜின்னா பற்றி விமர்சித்து மத்திய அமைச்சராக இருந்தவரான ஜஸ்வந்த் சிங் எழுதி 2009ல் வெளியான ‘ஜின்னா பார்ட்டிஸான் இண்டிபெண்டன்ஸ்’ (ஜின்னா பிரிவினை சுதந்திரம்), அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் பற்றிய நூலில் இந்தியாவின் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒரு உளவாளி என்பதாக அமெரிக்கப் பத்திரிகையாளர் சீமர் ஹெர்ஷ் 2013ல் எழுதி வெளியான ‘தி பிரைஸ் ஆஃப் பவர்’ (அதிகாரத்தின் விலை) ஆகிய புத்தகங்களும் தடைசெய்யப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவை.
தமிழகத்தில்
பாரதி எழுதிய ஒரு கதையின் தலைப்பைச் சூடிக்கொண்டு 1910ல் வந்த புத்தகம் ‘ஆறில் ஒரு பங்கு’. அதுதான் தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்று கூறப்படுகிறது. அன்றைய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்காக இருந்த சமூகங்களை மற்ற சாதியினர் ஒதுக்கிவைத்திருந்தது பற்றிப் பேசிய அந்தக் கதையைச் சுதந்திரப் போராட்டச் சிந்தனைகளோடு சேர்த்து எழுதியிருந்தார் பாரதி. ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தூண்டுகிறது எனக்கூறி அந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தது பிரிட்டிஷ் அரசு. இந்தியாவில் புத்தகங்களுக்குத் தடைவிதிப்பது அந்தப் புத்தகத்திலிருந்துதான் தொடங்கியது என்று கூறப்படுகிறது. பின்னர் 1928ல் பாரதியின் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பாடல் தொகுப்பும் தடை செய்யப்பட்டது. முதல் புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடை எப்போது விலக்கப்பட்டது என்று தெரியவில்லை, அடுத்த புத்தகத்திற்கு அடுத்த ஆண்டிலேயே தடை நீக்கப்பட்டது.
பாரதிதாசனின் ‘இரணியன்’ அல்லது ‘இணையற்ற வீரன்’ முதலில் நாடகமாக மேடையேற்றப்பட்டது. பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிரிட்டிஷ் அரசு புத்தகத்திற்குத் தடை விதித்தது. பின்னர் புத்தகம் தடையின்றிக் கிடைக்கலானது.
ஆரிய மாயை
சுதந்திர இந்தியாவில் அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ புத்தகத்திற்கு 1950ல் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். முன்னதாக அது பற்றி எழுதிய அண்ணா, “ஆரிய மாயை வழக்குக்காக பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத்தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரிய மாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரிய மாயை, இலட்சிய வரலாறு, இராவண காவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று எழுதினார். அதே போல் அவரது ‘கம்பரசம்’ நூலுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த இரண்டு நூல்களுக்கும் தடை விலக்கப்பட்டது.
‘கம்பரசம்’ நூலால் ஈர்க்கப்பட்டு என்.வி. கலைமணி எழுதிய ‘திருப்புகழ் ரசம்’ நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது 1947ல் இலங்கையில் வெளியிடப்பட்டது. 2010ல் அவரது புத்தகங்கள் இங்கு நாட்டுடைமையாக்கப்பட்டன.
திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவரான புலவர் குழந்தை எழுதிய நூல் ராவண காவியம். ராவணனைக் கதையின் நாயகனாக வைத்துப் போற்றும் வகையில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்திற்கு 1948ல் தடை விதிக்கப்பட்டது. 1971ல்தான் தடை நீக்கப்பட்டது. 2006ல் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தனது எழுத்துகள் வழியாக மார்க்சிய சிந்தனை விதைகளைத் தூவிய தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல் ‘முதலிரவு‘. காந்தி தனது சுய கட்டுப்பாட்டைச் சோதனைக்கு உட்படுத்த இளம் பெண்களுடன் படுத்ததை மையமாகக் கொண்டு, பாலுறவு தொடர்பான சமூகக் கருத்தாக்கங்களை விமர்சனத்திற்கு உட்படுத்திய நாவல் அது. விவாதங்களுக்கு இட்டுச் சென்ற அந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கடந்தபின் அவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த நூல்களில் இதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
மதுரைவீரனும் பாண்டியரும்
2013ல் குழந்தை ராயப்பன் எழுதிய நூல், ‘மதுரை வீரனின் உண்மை வரலாறு’. அந்தப் புத்தகம் சில சமூகங்களைத் தாக்குகிறது என்று கூறி சிலர் பிரச்சினை கிளப்பினர். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் விருப்பப்படி புத்தக வெளியீட்டிற்கு 2015ல் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். தடையை எதிர்த்து நூலாசிரியர் வழக்குத் தொடுத்தார். புத்தகம் வெளியாகி 2,000 படிகள் விற்றுள்ள நிலையில் பொது ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவில்லை, சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படவில்லை, மதுரை வீரனின் வீரத்தைப் போற்றுகிற இந்த நூல் எந்தச் சாதியையும் தாக்கவில்லை என்று அவர் வாதிட்டார். ஆனால், சென்ற ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தடையை விலக்க மறுத்துவிட்டது.
அதே ஆண்டில், கே. செந்தில் மள்ளர் எழுதிய புத்தகம் ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’. பள்ளர் எனப்படும் மள்ளர் சமூகத்தினரே பாண்டியர்கள் என்றும், வடுக மன்னர்கள் படையெடுப்பால் நிலத்தையும் அதிகார நிலையையும் இழந்தார்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. இதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க, சில சாதிகளைப் பற்றித் தவறான தகவல்களைத் தந்து காழ்ப்புணர்வைத் தூண்டுவதாக இருக்கிறது எனக்கூறி நூலுக்கு தடை விதித்தது தமிழக அரசு. 2017ல் உயர்நீதிமன்றம் தடையை நீக்கித் தீர்ப்பளித்தது.
மாதொரு பாகன்
பெருமாள் முருகன் எழுதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2010ல் வந்த நாவல் ‘மாதொரு பாகன்‘. பல ஆண்டுகளாகக் குழந்தை பிறக்காத நிலையில், சில குடும்பங்களின் பெண்கள் கருவுறுவதற்காகக் கோவில் திருவிழாவையொட்டிப் பிற ஆண்களுடன் உ றவு கொள்வது நடைமுறையில் இருந்த சூழலைக் கதையாகக் கூறுகிற கதை இது. ஆனால் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துகிறது என்று ஒரு அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. அரசு அதிகாரிகள் அந்த அமைப்பினருக்கும் எழுத்தாளருக்கும் இடையே ”பேச்சுவார்த்தை” நடத்தி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்தனர். புத்தகத்தை விலக்கிக்கொள்ளவும், அடுத்த பதிப்பில் சில பகுதிகளை நீக்கிவிடவும் அவர் ஒப்புக் கொண்டதாக அந்த ஒப்பந்தத்தில் இருந்தது.
‘‘பெருமாள் முருகன் செத்துப்போனான்” என்று தனது முகநூலில் வேதனையைப் பதிவு செய்தார் அவர். பலரும் அவருக்குத் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தானாக முன்வந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் கருத்துரிமைக்கு எதிரானது என்று வாதிட்டது. மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன் வாதிட்ட அந்த வழக்கில் நீதிமன்றம் அந்த ஒப்பந்தம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. புத்தகம் வாசகர்கள் கரங்களுக்கு வந்தது.
பழ. நெடுமாறன் எழுதிய ‘தமிழீழம் சிவக்கிறது’ புத்தகத்திற்கும் 2018ல் தடை விதிக்கப்பட்டது, தடையை விலக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தடை, மிரட்டல், ஒப்பந்தம் என்றெல்லாம் இல்லாமலே கெடுபிடி செய்து ஒரு புத்தகத்தை முடக்க முயன்றதும் இங்கே நடந்திருக்கிறது. 2019ல் வெளியான ‘ரஃபேல் ஊழல்’ என்ற அந்தப் புத்தகத்தை எழுதியவர் எஸ். விஜயன். வெளியிட்டது பாரதி புத்தகாலயம். மோடி அரசு பிரான்ஸ் அரசுடன் செய்துகொண்ட ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் உடன்பாட்டின், அதிக விலை, அம்பானி நிறுவனத் தொடர்பு உள்ளிட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தும் நூல் அது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நிர்வாகம் தொடங்கியது.
பாரதி புத்தகாலய விற்பனைக் கூடத்திற்குள் திடீரென்று நுழைந்த காவல் துறையினர் அந்தப் புத்தகத்தைத் தேடியெடுத்துக் கைப்பற்றினர். அதை விற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால். அந்த நடவடிக்கை எல்லோருக்கும் தெரியவர, எங்கும் எதிர்ப்புக் குரல் ஒலித்தது. புத்தகம் மேலும் அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டதுடன், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது!
எழுத்தாளர் பதிப்பாளர் பிரச்சினையல்ல
“ஒரு நல்ல புத்தகத்தை அழிக்கிறவன் நியாயத்தை அழிக்கிறான்,” என்றார் ஆங்கிலக் கவி ஜான் மில்டன். யாருடைய மனதையும் காயப்படுத்திவிடாத புத்தகமாகத்தான் எழுத வேண்டும், வெளியிட வேண்டும் என்றால் ஒரு புத்தகம் கூட வெளிவர முடியாது. பூமி கோள வடிவமானது, அது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைக் குழந்தைகளுக்குக் கூறும் பள்ளிக்கூட அறிவியல் புத்தகம் கூட யாரையாவது காயப்படுத்தவே செய்யும்.
தடை செய்யப்பட்ட சில புத்தகங்கள் தொடர்பாக அன்றிருந்த கவலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், சமுதாயச் சூழல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சில புத்தகங்களின் உள்நோக்கங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. எந்தவொரு புத்தகமானாலும் அதன் உள்ளடக்கத்தை எதிர்க்கலாம், கருத்துகளைத் தாக்கலாம். எழுதுவதற்கான உரிமை போலவே அதை விமர்சிப்பதற்கான உரிமையும் அடிப்படையானது. ஆனால், புத்தகத்தையே எரிக்கப் புறப்படுவதும், எழுதியவரைத் தாக்குவதும், அரசாங்கம் தடை விதிப்பதும் நாகரிக வளர்ச்சியோடு ஒட்டாத போக்குகள்தான்.
இது புத்தகங்களை எழுதுகிறவர்கள், பதிப்பிக்கிறவர்களின் உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல. படிக்கிறவர்களின் உரிமைப் பிரச்சினையுமாகும். ஒரு புத்தகத்தை ஒருவர் வாசித்து, அது பற்றிய தனது சொந்த முடிவுக்கு வருவதைத் தடுக்கிற முரட்டுத் தனம் இதில் இருக்கிறது. குடிமக்கள் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக்கூடாது என்று அதிகார பீடங்களோ ஆதிக்க அமைப்புகளோ தீர்மானிக்க உலகின் நாகரிக சமுதாயம் அனுமதிக்கக்கூடாது.
(தகவல்கள் ஆதாரம்: ஸ்டார்ஸ் இன்சைடர் தொகுப்பு, விக்கிபீடியா, தினமணி - கார்த்திகா வாசுதேவன் கட்டுரை, முகநூல் பதிவு)
[புக் டே இணைய ஏட்டின் அக்டோபர் 3 பதிப்பில் வந்த எனது கட்டுரை]
No comments:
Post a Comment