Wednesday, 15 October 2025

பொது இடங்களின் சாதிப் பெயர் நீக்கமும் கோவை மேம்பாலமும்! - முரண்பாடுகள் மக்களின் பார்வையை மாற்றுமா?!

 


தமிழ்நாட்டில் பொது இடங்களின் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை நவம்பர் 19-க்குள் நிறைவு செய்ய வேண்டுமென்ற அரசாணை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சமூகநீதியை நோக்கித் தமிழ்ச் சமுதாயம் செல்வதில் முக்கியமான முன்னேற்றம் என அதற்காக நிற்பவர்கள் இதை வரவேற்கிறார்கள். அந்த ஆணை அனுப்பப்பட்ட அக்டோபர் 8-ம் நாளுக்கு மறுநாளே அதிகாரபூர்வமாக நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த, குறிப்பிடத்தக்க சிறப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள, மாநிலத்தின் மிக நீளமான மேம்பாலத்திற்கு “ஜி.டி.நாயுடு” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதென்ன முரண்பாடு என்ற கூர்மையான விமர்சனங்களை இது ஈர்ததிருக்கிறது.

நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அவர் மிகப்பெரிய விஞ்ஞானி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அடையாளமாக இருந்தார். பெயரில் ‘நாயுடு’ என்று இருப்பதால், வெறும் ‘ஜி.டி’ என்று மேம்பாலத்திற்குப் பெயர் வைக்க முடியுமா? இப்படி அவர் பெயரை வைத்தால்தான், அவர் இன்னார் என்று அறியப்படுவார். இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு அறியப்பாட்டார்களோ, அப்படியே பெயர் வைத்தால்தான் அவர்களைக் குறித்து வரக்கூடிய சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். இவற்றை விதிவிலக்காகக் கருத வேண்டும்" என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.


                                        அமைச்சர் தங்கம் தென்னரசு


ஜி.டி.நாயுடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ள கோபால்சாமி துரைசாமி ஒரு மாறுபட்ட அறிவியலாளர் என்று மக்கள் அறிவார்கள். அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல... குறைந்த முதலீட்டில் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கு முன்னுதாரணம் படைத்தவர் என்பதாலே மக்களால் அறியப்பட்டவர். அவருடைய அந்தப் பங்களிப்புதான் அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமேயன்றி சமூகப் பின்னணியல்ல.

அரசின் நோக்கமும் இதுதான் என்கிறபோது, பின்னொட்டு எதற்கு? அமைச்சர் கேட்பது போல “ஜி.டி மேம்பாலம்” என்று பெயர் சூட்டுகிறபோது, அது யாருடைய பெயர்ச்சுருக்கம், அவர் என்ன செய்தார் என்ற கேள்விகளைத் தலைமுறைகள் எழுப்புவார்கள். அவர்களுக்கு விளக்கமளிக்கிறபோது, அது சாதியைக் கழற்றிவிட்டு சாதனையைக் கொண்டாடுவதாகும்தானே?

மேலும், வேறு பல தலைவர்களும் சாதிப் பின்னொட்டுடன்தான் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பழக்கம்தான். புதிய முயற்சி அறிமுகமாகிறபோது தடுமாற்றம் ஏற்படும், ஆனால், காலப்போக்கில் புதிய பெயர்கள் தங்கிவிடும். ஏற்கெனவே உள்ள பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்குவது என்ற முடிவை, புதிதாக வைக்கப்படும் பெயர்களுக்கும் பொருத்தலாம். பழக்கத்தின் ஆற்றலுக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு – பெயர் மாற்றத்திற்குப் பிறகும் பல ஆண்டுகள் மெட்ராஸ் என்றே விளிக்கப்பட்டது, இன்று பேருந்துகளில் “சென்னை” என்று சொல்லிப் பயணச்சீட்டைக் கோருவது இயல்பாகிவிட்டதல்லவா?

விவாதங்களை இணைக்கும் பாலம்!

ஜி.டி பாலம் இது பற்றிய விவாதங்களை இணைத்திருக்கிறது. முதலமைச்சர் சட்டமன்றத்தில் இவ்வாண்டு ஏப்ரல் 29 அன்று, ‘காலனி’ போன்ற ஆதிக்கச் சின்னங்களை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அக்டோபர் 8 அரசாணை, மாற்றுப் பெயர் பரிந்துரைகளோடு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஜூலை 7 அன்று முதலமைச்சர் மற்றோர் அரசாணையை வெளியிட்டார். தமிழ்நாட்டில் (ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட) மாநில அரசின் பல்வேறு அங்கங்களின் கீழ் இயங்கிவரும் பள்ளி/கல்லூரி மாணவர் விடுதிகளின் சாதி அடையாளங்களை நீக்கி, “சமூகநீதி விடுதி“ என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுவதற்கு அந்த ஆணை வழிசெய்தது. மாணவர் சமூகத்தில் சாதி வேற்றுமைகளைத் தடுக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆணையத்தின் ஒரு பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

‘தமிழகத்தில் ஏறக்குறைய 1.79 லட்சம் மாணவர்கள் தங்கிப் பயிலும் 2,739 அரசு விடுதிகள் இருக்கின்றன. தலைவர்களின் பெயர்களில் இயங்கும் விடுதிகளுக்கு அந்தப் பெயர்களோடு “சமூக விடுதி” என்று சேர்ப்பதற்கும் வழி செய்யப்பட்டது. மாணவர் மனங்களில் சாதிப் பாகுபாட்டு உணர்வு புகுத்தப்படுவதைக் கவலையோடு கவனிப்பவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள்.


பொதுப் பெயர்கள்!


தற்போதைய ஆணையின்படி, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், குளங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், வருவாய் கிராமங்கள் ஆகியவற்றின் பெயர்களில் சாதி அடிப்படையில் இழிவுபடுத்தக்கூடிய சொற்கள் இருக்குமானால் அவற்றை நீக்க வேண்டும். ‘ஆதிதிராவிடர் காலனி’, ‘ஹரிஜன் குடியிருப்பு’, ‘வண்ணான் குளம்’, ‘பறையர் தெரு,’ ‘சக்கிலியர் சாலை’ என்பன போன்றவற்றைப் பொதுப் பெயர்களாக மாற்ற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் வரம்புக்கு உட்பட்ட பொது இடப்பெயர்களை ஆராய வேண்டும். ஊராட்சிகளின் கிராமசபையையும், நகராட்சி–மாநகராட்சிகளின் பகுதி சபையையும் கூட்டி பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். எடுக்கப்படும் முடிவுகளை மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும். மறுப்பு இருப்பவர்கள் 21 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கலாம். பெயர் மாற்றத்திற்குப் பிறகு ஆதார், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.




ஒருவேளை, இந்த சபைகளில் பழைய பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால்? நெடுங்காலமாக உயர் பிரிவுகள் எனப்படும் சாதிகளையும் (அய்யர், பிள்ளை, முதலியார், நாயக்கர், செட்டியார்… இன்ன பிற), இடைநிலைச் சாதிகளையும் (தேவர், நாடார், வன்னியர்… உள்ளிட்டவை) பின்னொட்டுகளாகக் கொண்ட பெயர்களை மாற்ற அந்த மக்கள் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது குறித்த திட்டவட்டமான வழிகாட்டல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இழிவுபடுத்தும் வகையிலான அடையாளங்களை நீக்குவது முதன்மையான நோக்கம் என்கிறபோது, அந்தப் பெயர்களை மாற்றிவிட்டு, மற்ற பிரிவுகளின் பெயர்கள் தொடரும் என்றால் அதுவும் ஒரு பாகுபாடாகிவிடாதா? சாதியத்தையும் அதன் மையப்புள்ளியாகிய தீண்டாமையையும் ஒழிப்பதை நோக்கி ஓரடி எடுத்துவைப்பது எளிதானதல்ல என்று புரிகிறது.


ஆதிக்கம் தொடர அனுமதியா?


ஆணையின் மற்றொரு போதாமையையும், சாதிய எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். “தீண்டாமையின் குறியீடாக இருக்கிற பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்கிற வழிகாட்டு நெறிமுறைகள், ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற பெயர்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதாக உள்ளது,” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறுகிறது.


                                           எடப்பாடி பழனிசாமி


“சென்னை மாநகராட்சி துவங்கி அனைத்து மாவட்டங்களிலும் சாதிப் பெயர் சூட்டப்பட்டுள்ள பல பொது இடங்கள் இன்றும் இருக்கின்றன. அரசு ஆவணங்களிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாதி ஆதிக்கத்தின் அப்பட்டமான அடையாளமாகும். களத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் இப்பெயர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்கிறது இந்த வழிகாட்டு நெறிமுறை. இது ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கிற சாதிப் பெயர்கள் மேலும் பல காலம் தொடர்வதற்குக் காரணமாக அமைந்துவிடும்” என்று இந்த அமைப்பின் அக்.9 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில், தனி மனிதர் யாருடைய பெயருமின்றி “பிராமணர் தெரு” என்று இருக்கிறது. மற்றொரு பகுதியில் “வன்னியர் தெரு” இருக்கிறது. பல ஊர்களில் “ரெட்டி தெரு”, “நாயக்கர் தெரு”, “ஐயர் தெரு”, “முத்துராஜா தெரு”, “பிள்ளைமார் தெரு”, “பிள்ளை குடியிருப்பு”, ‘முதலியார் தெரு”, “முதலிமார் தெரு”, “நாடார் குடியிருப்பு”, “சாணார் தெரு“, “நாட்டுக்கோட்டை செட்டியார் தெரு”, “நகரத்தார் தெரு” என்றெல்லாம் இருப்பதாக ஊடக அன்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த வட்டார ஆதிக்க சாதிகளின் பெயர்கள் என்பதால் களத்தில் பிரச்னை இருக்காதுதான். அதற்காக அத்தகைய பெயர்கள் அப்படியே தொடர்வது, அந்த அடையாளங்களையும், சாதிய மேலாதிக்க உணர்வையும் தொடரச் செய்வதாகிவிடாதா? தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான அடையாளங்களை நீக்கிவிட்டு, “உயர்சாதி” என்று சொல்லிக்கொள்ளும் பிரிவினரின் பெயர்களை அனுமதிப்பது பாகுபாடாகிவிடாதா? அது இந்தச் சிறப்பான திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை அடிபடச் செய்துவிடாதா? பெயர்ப்பலகை வைக்கப்பட்டாலும்… பல ஆண்டுகளுக்கு முன் அதிகாரபூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு சாலை இப்போதும் நடைமுறையில் பழைய பெயரிலேயே குறிப்பிடப்படுவதை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

அதற்குக் காரணம் புதிய பெயர் தலித் சமூகத் தலைவராக இருந்தவருக்கு உரியது. அவர் முன்பு ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். மாற்றப்பட்ட பெயர் “பாபு ஜெகஜீவன் ராம் சாலை”. மாற்றப்பட்ட பிறகும் வெகுவாகப் புழக்கத்தில் இருப்பது “பெல்ஸ் ரோடு”. சென்னையிலேயே “ஈ.வெ.ரா. பெரியார் சாலை” இன்னமும் “பூந்தமல்லி நெடுஞ்சாலை” என்றும், “பாரதி சாலை” இப்போதும் “பைகிராஃப்ட்ஸ் சாலை” என்றும், “காமராசர் சாலை“ தொடர்ந்து “பீச் ரோடு” என்றும் புழங்கிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது.


இவர்கள் சாதி வேற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் என்ற தற்செயல் ஒற்றுமையும் இருக்கிறது. சட்டப்பூர்வ பதிவுகளில் இவர்கள் இருந்தாலும், நடைமுறையில் பழைய பெயர்களே புழங்குவது தற்செயலானதுதானா? மாற்றப்பட்ட பெயர்களை மக்கள் மனங்களில் பதியவைக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன?


குறிப்பிட்ட சாலையின் இரு முனைகளிலும் “பாபு ஜெகஜீவன் ராம் சாலை” என்ற பெயர்ப்பலகைதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் “பெல்ஸ் ரோடு” என்றே அறிவிக்கின்றன. பெயர்ப் பலகைகளில் தமிழ் தலையாய இடம் பெற ஆணையிடப்பட்டது போல இதற்காகவும் நடவடிக்கை எடுக்கலாமே? அழைப்பிதழ்களில் புதிய பெயரையே பயன்படுத்துமாறு மக்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரையில் சொல்லிக்கொண்டே இருக்கலாமே?

வரவேற்கத்தக்க ஒரு செயலை மேற்கொள்வது, அதற்கான தொடர் வேலைகளோடும் இணைவதே வெற்றிக்கு வழி. பரிந்துரையிலும் போதாமை அரசு பரிந்துரைத்திருக்கிற மாற்றுப் பெயர்களும் விமர்சிக்கப்படுகிறது. திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், பாரதியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்ற தமிழறிஞர்கள், தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்தலாம் எனறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ள பெயர்களில் அம்பேத்கர், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் பெயர்கள்கூட இல்லாததை எப்படி ஏற்க முடியும் என்று சுவாமிநாதன் கேட்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, இது தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை எல்லா இடங்களுக்கும் சூட்டுவதற்கான தந்திரம் என்கிறார்.

ஆயினும், எடுத்துக்காட்டுக்காகத்தான் சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதேயன்றி இவைகளை மட்டுமே சூட்ட வேண்டுமென ஆணையிடப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் விளக்கியிருக்கிறார். முன்னதாக, அக்டோபர் 8 அன்று தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்ட ஆணையில். "இந்த மாற்றங்கள் சாதி நடுநிலைமையையும் சமூக ஒருமைப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்புடைய வேறு நடுநிலையான பெயர்களைச் சூட்டுவதற்கான நெகிழ்வுத்தன்மை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது" என்று இருக்கிறது.

இது ஏற்கத்தக்கதுதான் என்றாலும், அதிகாரபூர்வமான விளக்கமாகவே வெளியிட்டு, அம்பேத்கர், சிங்காரவேலர் உள்ளிட்டோரைக் குறிப்பிட்டிருக்கலாமே? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே? உதாரணமே சொல்லாமல் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருந்த தலைவர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள், நதிகள், பூக்களின் பெயர்களைச் சூட்ட வழிகாட்டியிருக்கலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வருமானால் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்படும் என்கிற அளவுக்குப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் நினைவுபடுத்திக்கொள்ள விரும்பாதது என்னவென்றால், இதற்கு முதல் அத்தியாயம் எழுதியவர் அ.தி.மு.க–வை உருவாக்கியவரான எம்.ஜி.ஆர் என்ற வரலாற்றைத்தான். அவர் முதலமைச்சராக இருந்தபோது 1978 அக்டோபர் 3 அன்று இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


                                                க. சுவாமிநாதன்

எம்.ஜி.ஆரை மறக்கலாமா எடப்பாடி?

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளையும் உட்படுத்திய அந்த ஆணை, சென்னையிலும் மதுரையிலும் வேறு சில பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், தொடங்கிய வேகத்தில் தொடராமல் போனதால், அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க அரசு அதைத் தொடர்வதற்கு முனைப்புக் காட்டாததால், பெரும்பாலான இடங்கள் சாதிப் பெயரைச் சுமந்துகொண்டே இருக்கின்றன.

அப்போதே கூட, இதற்குத் தங்களுடைய எதிர்ப்பைக் கேலியாக வெளிப்படுத்தியவர்கள் இருந்தார்கள். ஒரு பகுதியில் “குட்டி செட்டித் தெரு” என்று இருந்தது, தற்போதைய நடவடிக்கையால் அது “குட்டி தெரு” என்று மாறிவிட்டதே என்று பட்டிமன்றங்களில் கூட கிண்டலடித்தார்கள். தெருக்களின் பெயர்களில் சாதியை நீக்குவதால் மக்களின் மண்டைகளில் ஆக்கிரமித்திருக்கும் சாதி நீங்கிவிடுமா என்று ஆழ்ந்த தீவிரத்தோடும் கேள்வி கேட்கப்பட்டது.

இப்போதும் அதே கேள்வி முன்வைக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு வகைகளில் சாதியப் பாம்பின் நாக்கு தன்னை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறது, சாதி ஆணவக் கொலைகள் தொடர்கின்றன, சாதி பார்த்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன, வாடகைக்கு வீடு பார்க்கப் போனால் கூட “நீங்க என்ன ஆளுக” என்று கூச்சமே இல்லாமல் கேட்கிறார்கள்.


                எம்.ஜி.ஆர்.

 

“ஃபார் வெஜிடேரியன்ஸ் ஒன்லி” என்று அறிவிப்பை ஒட்டிவைத்து, “நான்–வெஜிடேரியன்ஸ்” குடியேறவிடாமல் கதவடைக்கிறார்கள். முக்கால் நூற்றாண்டு அனுபவம் அதையெல்லாம நிறுத்துவதற்கு வழி செய்யாமல் பெயர்களை மாற்றுவதால் என்ன பயன் என்று பதிவிடப்படுகிறது. மலர்களின் பெயர் சூட்டுவதால், சாதி நாற்றம் மறைந்துவிடுமா என்ற கேள்வியை சமூக ஊடகத்தினர் பரப்புகிறார்கள். அவர்களில் பலர் சாதி அடையாளம் கெட்டியாக இருப்பதை ஆதரிக்கிறவர்கள்.

அப்படிப்பட்ட உள்நோக்கமின்றிக் கேட்பதாகவே வைத்துக்கொள்வோம். தமிழ்நாடே அதற்குப் பதிலளிக்கும். பெரியாரியமும் பொதுவுடைமை அமைப்புகளும் இதர முற்போக்கு இயக்கங்களும் வளர்த்துவிட்ட மாண்புமிக்க மரபு ஒன்று இருக்கிறது. குறிப்பாக திராவிட இயக்கம் தனி மனிதர்களின் பெயர்களிலும் பொது இடங்களிலும் சாதிப் பட்டங்களைத் தூக்கி எறிவதை ஒரு தீவிரப் பரப்புரை இயக்கமாகவே மேற்கொண்டது.

சாதியும் கடவுளும் ஒட்டியிருந்த பழைய பெயர்களை விடுத்து, அறிவுடை நம்பி, மாறன், நன்னன், மகிழ்நன், முல்லை வேந்தன் என அழகிய தமிழ்ப்பெயர்களை விழா நடத்திச் சூட்டினார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் தங்களின் பெயர்களுக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்ளாத தலைமுறைகள் கடந்த முக்கால் நூற்றாண்டில் தலையெடுத்திருக்கின்றன. இதன் பொருள் அவர்கள் முழுமையாக சாதிப்பற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டவர்கள் என்பதல்ல.

தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டிக்கொள்வதில்லையே தவிர, திருமணப் பத்திரிகைகளில் தங்களுடைய தந்தைகள், தாத்தாக்கள் பெயர்களை சாதியோடு அச்சிட மறப்பதில்லை. மரண அறிவிப்புகளிலும் அப்படித்தான். இவ்வாறு தாங்கள் “என்ன ஆளுக” என்று தெளிவாகக் காட்டிக்கொள்கிறார்கள். (தாயோ, பாட்டியோ அப்படி அடையாளப்படுத்தப்படுவதில்லை. ஆண்தான் சாதிக்கான பாலினம்!)


                                        தலைமைச் செயலர் முருகானந்தம்

அவர்களின் பெயர்களில்…

சாதி அடையாளத்துடன் அறியப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை அப்படியே தொடர வேண்டியதில்லை என்ற கருத்தை இது பற்றிய இணையவழி விவாதத்தில் முன்வைத்தேன். அப்படியானால் இடதுசாரிகள் உட்பட பல இயக்கங்களின் தலைவர்களது பெயர்களில் அந்த அடையாளம் இருக்கிறதே என்று கேட்டார்கள் 

“ஒன்று –தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்த சாதி மறுப்பு இயக்கம் போல அதே தீவிரத்துடன் மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லை. இன்னொன்று –அப்படிக் குறிப்பிட்டால்தான் எல்லோருக்கும் தெரியும் என்ற புரிதலோடு இருந்திருக்கிறார்கள். ஆனால், மாறிவரும் சமூகச் சூழலில் இனிமேலும் அப்படி அடையாளப்படுத்த வேண்டியதில்லை. புதிய தலைமுறைத் தலைவர்கள் இந்த அணுகுமுறையோடுதான் செயல்படுகிறார்கள்” என்று பதிலளித்தேன்.

மற்ற மாநிலங்களில் இத்தகைய இயக்கங்கள் நடந்ததில்லை என்று குறிப்பிடுகிறபோது, இப்போதும் கூட, தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை போல பிற மாநிலங்களில் தொடங்கவில்லை என்ற காட்சியும் தெரிகிறது. தமிழ் மண்ணுக்கே உரிய சாதிப் பாகுபாடற்ற தொண்மைப் பண்பாட்டின் தொடர்ச்சி, இன்று இந்த மண்ணைக் குதறிப்போட முயலும் சவால்களுக்கிடையே, நாடு முழுவதற்குமான முன்னுதாரணமாகியிருக்கிறது.


                                                 அவருடைய பங்களிப்பை நினைவூட்டும்

                                                 தொழில்துறை அருங்காட்சியகம்


பெயரை நீக்குவதால் மட்டும் சாதியம் ஒழிந்துவிடுமா என்ற இறுதிக் கேள்விக்கு வருவோம். நாடு தழுவிய சட்டபூர்வ நடவடிக்கைகள், சமூக விழிப்புணர்வு இயக்கங்கள், மக்களின் வாழ்நிலையை உயர்த்திடும் கல்வி–பொருளாதாரச் செயல்பாடுகள் என்று பல முனைகளில் இடையறாத லட்சிய முயற்சிகள் மேற்கொண்டால்தான் இலக்கை அடைய முடியும்.


பயணத்தைத் தொடங்கினால்தானே அது நடக்கும்? அப்படியொரு பயணத் தொடக்கம்தான் இந்த அரசாணை. போதாமைகளையும் தெளிவின்மைகளையும் களைந்து, தயக்கங்களையும் சமரசங்களையும் தகர்த்து மாற்று முயற்சிகளை முடுக்கிவிட்டால் பயணத்தின் வெற்றி நிச்சயம்.

[0]

விகடன் ப்ளஸ் (அக்டோபர் 14) கட்டுரை











Friday, 3 October 2025

Azure: மிரளவைக்கும் ‘அஜூரன்’ - பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் தளம்!

 


மைக்ரோசாஃப்ட் அஜூரைப் பயன்படுத்தி கணக்கற்ற தொலைபேசித் தொடர்புகளைத் தொகுக்கலாம், படியெடுக்கலாம், எந்த மொழியில் பேசியிருந்தாலும் வேண்டிய மொழிக்குப் பெயர்க்கலாம், பகுப்பாய்வு செய்யலாம்!

இஸ்ரேல் கையில் ’மைக்ரோசாஃப்ட் அஜூர்’!

தகவல்களுக்காகவும் கருத்துப் பகிர்வுகளுக்காகவும் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில், நாம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு பொருள் பற்றிய விவரமும் விலையும் எத்தனை நாட்களில் கிடைக்குமென்ற குறிப்பும் முன்னால் வந்து நிற்கும். நமக்கு இந்தப் பொருள் தேவையென்பது எப்படி இவர்களுக்குத் தெரியும் என்று வியப்பாக இருக்கும். குறிப்பிட்ட தரவுத் தளம்   நாம் அதிலே தேடிப்பார்த்த தரவுகளைத் தொடர்புள்ள விற்பனை நிறுவனத்திற்குத் தெரிவிக்கிறது, ஆகவேதான் நம் அனுமதியைக் கேளாமலே “என்னை வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்கும் விளம்பரம் வருகிறது என்று தெரிந்தபோது வியப்பிலிருந்து விடுபட்டோம். 


இது வணிக நோக்கத்திற்காக நம்மை வேவு பார்க்கிற வேலையல்லவா

என்று விமர்சித்தோம். தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் வேறு

யாருக்கும் பகிரப்படுவதில்லை என்று சமூக ஊடகத் தளங்களில்

அறிவிப்புகள் வந்தன.


நம் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் செயல்படும் உலகின் முன்னணி

தரவு மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட். அது பல நாடுகளின்

அரசுகளுடன், அவர்களது பல்வேறு துறைகளுக்கான செயற்கை

நுண்ணறிவு (ஏஐ) ஏற்பாடுகள் உள்ளிட்ட தனது சேவைகளுக்கு வணிக

ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இப்போது, இஸ்ரேல் பாதுகாப்புத் துறைக்கு

அளித்து வந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.

சேவைகளை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்த விதிககளை

இஸ்ரேல் ராணுவம் மீறக்கூடும் என்ற  “கவலையுடன்” இந்த முடிவை அந்த

நிறுவனம் அறிவித்திருக்கிறது.


புலனாய்வுச் செய்தியால் எடுத்த முடிவு

‘தி கார்டியன்’, ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ ஆகிய ஊடகத் தளங்கள்

கூட்டாக நடத்திய ஒரு புலனாய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள

செய்திகளைத் தொடர்ந்து கடந்த வியாழனன்று (செப்.25) இந்த அறிவிப்பை

மைக்ரோசாஃப்ட் வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ‘தி கார்டியன்’

பிரிட்டனிலிருந்து வெளியாகும் சுதந்திர ஊடகமாகும் (தனிப்பட்ட

உரிமையாளர்கள் என்றில்லாமல் வாசகர்களின் நன்கொடைகளைக்

கொண்டு இயங்குவது). ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ இரண்டும்

இஸ்ரேல் நாட்டிலிருந்தே வெளியாகின்றன.


மைக்ரோசாஃப்ட்டின் ‘அஜூர்’ என்ற தகவல் சேகரிப்பு – சேமிப்புக்கான ‘கிளவுட்’ தளத்தை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தி, பாலஸ்தீன மக்களைக் கண்காணிக்கிறது என்ற உண்மையை அந்தக் கூட்டுப் புலனாய்வு அம்பலப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 65,000 பேர்களில் அந்த ‘அஜூர்’ கண்காணிப்புக்கு உள்ளானவர்களும் இருந்திருப்பார்கள்.

எதிர்ப்பும் மறுப்பும்

"பெருமளவில் பொதுமக்களைக் கண்காணிக்க எங்கள் சேவைகள்

பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி,

எங்கள் சேவை நிபந்தனைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை

உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்துடனான

இந்த முடிவையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்," என்ற

அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் நிர்வாகக்குழு

துணைத் தலைவருமான பிராட் ஸ்மித் வெளியிட்டிருக்கிறார். நிறுவன

ஊழியர்களுக்கு  வலைப்பூ பதிவாக அனுப்பப்பட்டிருக்கிறது.

                                                பிராட் ஸ்மித்

இதை ஏன் ஊழியர்களுக்கான வலைப்பூ பதிவாக அனுப்ப வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அது அவர்களது நிர்வாக ஏற்பாடுகளில் ஒன்றாக இருக்கலாம். நிறுவனத்தின் இந்த முடிவின்படி ஊழியர்கள் செயல்பட வேண்டும், குறிப்பிட்ட சேவைகளை இனி இஸ்ரேல் ராணுவத்துக்கு வழங்கக்கூடாது என்று ஆணையிடுவதற்காகவும் செய்திருக்கலாம். இவற்றை விட முக்கியமான வெறொரு பின்னணியும் இருக்கிறது. கடந்த காலத்தில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பலர் நிறுவனத்திற்கு உள்ளேயே ஒரு குற்றச்சாட்டாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.


அப்படியெல்லாம் அஜூர் கிளவுட் பொதுமக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தவில்லை என்று நிர்வாகம் மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய பல ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கியது. நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக அவர்கள் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்தது. தங்களுடைய பணிகள் அப்பாவி மக்களைப் பலியிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதை ஏற்க மறுத்துப் பல ஊழியர்கள் தாங்களாக வேலையிலிருந்து விலகினார்கள்.


இந்த ஊழியர்களில் பாலஸ்தீனப் பின்னணி கொண்டவர்களும், பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களுடன் தொடர்புடையவர்களும் உண்டு. நிறுவனத்திற்கு உள்ளேயே இத்தகைய கருத்துக் கொண்ட ஊழியர்களை ஒருங்கிணைப்பதற்காக, ‘நோ அஜூர் டு அபார்த்தீட்’ (இனத் தீண்டாமைக்கு அஜூர் கூடாது) என்ற பெயரில் ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது. ஆகவேதான் ஊழியர்களுக்கு வலைப்பூ தகவல்.


ஊடகப் புலனாய்வைத் தொடர்ந்து இப்போது, வாஷிங்டன் நகரைச் சேர்ந்த

கோவிங்டன் & பர்லிங் எல்எல்பி  என்ற சட்ட நிறுவன நிறுவனத்தையும், பெயர்

அறிவிக்கப்படாத ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும்

சேவைகள் பயன்பாடு தொடர்பான வெளித் தணிக்கையில்

மைக்ரோசாஃப்ட் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.


முந்தைய கதைகள்


இதற்கு முன்பு, அமெரிக்காவைச் சேந்த கூட்டுறவு நிறுவனமான ‘அசோசியேட்

பிரஸ்’ (ஏ.பி.) கடந்த மே மாதம் வெளியிட்ட  செய்தியில், இஸ்ரேலிய

ராணுவத்தின் ‘அலகு 8200’ என்ற உளவுப் பிரிவு காஸாவில் கண்காணிப்புக்கு

மைக்ரோசாஃப்ட் சேவைகளைப் பெரிய அளவில் பயன்படுத்துகிறது என்று

தெரிவித்திருந்தது. அப்போது, அந்தத் தகவல் குறித்து நிறுவன உள் தணிக்கை

நடத்தப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் கூறியது.


                                                இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ


2023 அக்டோபரில் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகக்

கொண்டுசெல்லப்பட்ட  இஸ்ரேலியர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான

முயற்சிகளுக்கு உதவ இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட

ஏஐ கருவிகளும் தரவுச் சேகரிப்பு–சேமிப்பு சேவைகளும் விற்கப்பட்டன.

ஆனால் காஸா மக்களைக் குறிவைக்கவோ, துன்புறுத்தவோ தனது

சேவைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அந்த

உள்தணிக்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று,

அந்த ஏ.பி.  செய்திக்கான பதிலாக மைக்ரோசாஃப்ட் அப்போது கூறியது.

இப்போது மூன்று ஊடகங்களின் புலனாய்வுச் செய்தியைத் தொடர்ந்து

குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.


பிராட் ஸ்மித் அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறைக்கான தனது

சேவைகள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று

கூறியிருக்கிறார். “நிறுவனத்தின் சேவை நிபந்தனைகள் பொதுமக்களைப்

பெருமளவில் கண்காணிப்பதற்கு எமது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்கின்றன. அதன்படி சில சேவைகளைக்

கட்டுப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது,” என்று அவர் கூறியிருக்கிறார்.


எதற்கெனத் தெரியாதாம்


இஸ்ரேலிய ராணுவம் தனது சேவைகளை எதற்காகப் பயன்படுத்துகிறது

என்று தனக்குத் தெரியாது என்று மைக்ரோசாஃப்ட் கூறி வந்திருக்கிறது.

ஒப்பந்தங்களில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை பாதுகாப்பு விதிகள்

காரணமாக, மூன்று ஊடகங்களின் ஆகஸ்ட் செய்தியறிக்கையில்

வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் நிறுவனத்திற்குத் தெரியாது என்று

ஸ்மித் கூறினார். இந்த விதிகள் காரணமாக தனது தொழில்நுட்பத்தை

இஸ்ரேலிய இராணுவம் எதற்குப் பயன்படுத்துகிறது என்று கண்டறிய

வழியில்லை என்றும் பலமுறை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.


காஸா இனப் படுகொலைகளைக் கண்டு உலகமே பதறுகிறது, உரத்த குரலில் கண்டிக்கிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் இப்படி நழுவலான விளக்கங்களைத் தரலாமா என்ற விமர்சனமும் உலக அரங்கில் ஒலித்து வந்தது. இந்த நிலையில்தான் மைக்ரோசாஃப்ட்  முந்தைய நிலைப்பாட்டிலிருந்து சற்றே விலகி, இப்போது சில சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது.


ஆனால் இந்த முடிவு, தற்போது டொனால்டு டிரம்ப் ஒரு காஸா போர்நிறுத்தத்

திட்டத்தை வெளியிட்டு ஹமாஸ் அமைப்புக்குக் கெடு நிர்ணயித்திருக்கிற

நிலையில், இஸ்ரேலிய ராணுவ வழிமுறைகளில் என்ன தாக்கத்தை

ஏற்படுத்திவிடும்? அப்படியொன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது.

ஏனென்றால்.  குறிப்பிட்ட சில மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கான சந்தாக்கள்

மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் அரசும் பாதுகாப்புத் துறையும்

நாட்டின் சொந்த இணையப் பாதுகாப்புக்காக மற்ற அனைத்து

மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இதனை ஸ்மித் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


முடக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகள் எவை?  இஸ்ரேலிய ராணுவத்தின் எந்தக் குறிப்பிட்ட பிரிவுகள் அவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருக்கிறது? இவற்றை அவர் தெளிவுபடுத்தவில்லை. நெதர்லாந்து நாட்டில் நிறுவனத்தின் அஜூர் தரவுச் சேமிப்பகங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஏஐ சேவைகளையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பயன்படுத்துவது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்துவந்துள்ளன என்று மட்டும் அவர் பதிவிட்டிருக்கிறார்.


அஜூர சாகசங்கள்


 ‘அஜூர்’ (இந்தப் பெயரே பண்டைக் கதைகளின் ஒரு போராயுதம் போல

ஒலிக்கவில்லை?) பற்றித் தெரிந்துகொள்வது இதைப் புரிந்துகொள்ள உதவும்.

இது பலதரப்பட்ட ‘கிளவுட்’ சேவைகளை வழங்குகிறது. இவற்றில் கிட்டத்தட்ட

வரம்பே இல்லாத டிஜிட்டல் சேமிப்பகம், திறன் மிகுந்த ஏஐ செயல்களும்

குறிப்பிடத்தக்கவை. இவற்றைக் கொண்டு கணக்கற்ற தொலைபேசித்

தொடர்புகளைத் தொகுக்லாம், படியெடுக்கலாம், எந்த மொழியில்

பேசியிருந்தாலும் வேண்டிய மொழிக்குப் பெயர்க்கலாம்,

பகுப்பாய்வு செய்யலாம்.


மைக்ரோசாஃப்ட்டின் அஜூர் கிளவுட் சேவைகள் பல நாடுகளின் பாதுகாப்புத்

துறைகளிலும், ராணுவப் பணிகளிலும் ஏராளமான முக்கியச்

செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அஜூரின் விரிவடையும்

நுட்பமும், பன்முகத் தன்மையும், பாதுகாப்பான கூறுகளும், எல்லையில்லா

ஏஐ திறன்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.


                                                காஸா


ராணுவத்திற்கு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இடம்–காலம் என்ற

வரம்புகள் இல்லாமல்  அந்தத் தரவுகளைச் சேமிப்பதும் முக்கியமான தேவை.

அந்தத் தேவையை அஜூரன் நன்றாகவே நிறைவேற்றுகிறான். சேகரித்து,

சேமித்து வைத்த தகவல்களை எப்போது வேண்டுமானாலும்

நொடிப்பொழுதில் கண்டெடுத்துப் பகுப்பாய்வு செய்வதற்கும்

(அதற்காகத்தானே சேமிக்கிறார்கள்), அச்சுறுத்தல்களைக் கணிப்பதற்கும்,

அதிலிருந்து திட்டங்களை வகுப்பதற்கும் அஜூரனை ஒரு வியூக

ஆலோசகனாக்கிக்கொள்ள முடியும்.


ஒரு நாடு இப்படிப்பட்ட தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வதோடு, பிற நாடுகளின் பாதுகாப்புத் துறைகளோடும், முப்படைத் தலைவர்களோடும் ஒரே கிளவுட் தளம் வழியாகப் பாதுகாப்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். போர் மேலாண்மையோடு இணைந்ததாக, படையினரின் பயிற்சிகளுக்குத் துணையாக  மெய்நிலை சண்டைக்களச் சூழல்களை உருவாக்க முடியும். கணினிப் பறவையை (ட்ரோன்) இயக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்ய வைக்க முடியும். இவற்றை ஒருங்கிணைத்து அனைத்துப் படைகளுக்கும் அனுப்ப முடியும்.


கொள்கை (என்பதாக) இருக்கிறது


இப்பபடிப்பட்ட கிளவுட் சேவைகளை வழங்கும் உலகளாவிய பெரும்

கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்கள் வெகுமக்கள் கண்காணிப்புக்கும்

அது போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான பிற செயல்களுக்குப்

பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கைகளை வைத்துள்ளன. ஒரு நாட்டு

அரசுடன் அல்லது ராணுவத்துடன் வணிகப் பேச்சு இறுதியாகி, விற்பனை

ஒப்பந்தம் போடப்படும்போது, இந்தக் கொள்கையை ஒரு விதியாகச்

சேர்க்கின்றன. ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த மென்பொருள்களைப்

பெருந்தொகை கொடுத்து வாங்குகிற நாடுகளின் அரசுகள் அல்லது

ராணுவங்கள் நடைமுறையில் என்ன செய்வார்கள், எந்த அளவுக்கு

அந்த விதிகளை மதிப்பார்கள் என்று விளக்காமலே புரியும்.


                                                பெகாசஸ்


’பெகாசஸ்’ நினைவிருக்கிறதா?  ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கி உலகம்

முழுதும் விற்றிருக்கிற உளவு மென்பொருள் அது. இணையத்தின் வழியாக 

ஊடுருவி நம்மைக் கேட்காமலே நம் கைப்பேசியில் தானாகவே ‘டவுன்லோடு’

ஆகி, தன்னைத்தானே ‘இன்ஸ்டால்’ செய்துகொள்ளக் கூடியது அது.

நான் நலம், நீங்கள் நலமா என்ற குசல விசாரிப்புகள் முதல்

முக்கிகியமான தகவல் பரிமாற்றங்கள் வரையில் ஒற்றறிந்து

மேலிடத்திற்குத் தெரிவிக்கிற செயலி. அதைத் தயாரிக்கும் என்எஸ்ஓ குழுமம்

என்ற கணினியியல் ஆயுத நிறுவனம் கூட, மக்களைக் கண்காணிப்பதற்கு

அது பயன்படுத்தப்பட மாட்டாது என்ற விதி தனது ஒப்பந்தங்களில்

இருப்பதாகத்தான் சொல்லிக்கொண்டது.


ஆனால், உலகம் முழுதும் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூகப்

போராளிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என கிட்டத்தட்ட 50,000

பேர், இந்தியாவில் சுமார் 300  பேர்,  பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில்

இடம்பெற்றிருந்தார்கள். பல நாடுகளின் ஊடகவியலாளர்கள் இதற்கென

இணைந்து உருவாக்கிய ‘நாடுகளிடை ஊடகக் கூட்டமைப்பு’ இதைக்

கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்தியாவில் இது

தொடர்பான வழக்கு இன்னமும் முடிவடையவில்லை. இதற்காக

அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை அறிக்கையும் குடிமக்கள்

கவனத்திற்கு வெளியிடப்படவில்லை. இதில் கவனிக்க வேண்டிய ஒரு கூடுதல்

தகவல், என்எஸ்ஓ குழுமம் ஒரு இஸ்ரேலிய நிறுவனம்!


ஒண்ணும் செய்யாது!


ஆஜூர் விவகாரத்துக்கு வருவோம். சில சேவைகளை முடக்கிய மைக்ரோசாஃப்ட் நடவடிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த, பெயர் வெளியிடப்படாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “இந்த முடிவு இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்பாட்டுத் திறன்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறினாராம். ஏ.பி. செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல் அரசு தனது நாட்டில் தயாராகி பிற நாடுகளுக்கு விற்பனையாகும்

உளவு மென்பொருள்களையும், பிற நாட்டு நிறுவனங்களிடமிருந்து

வாங்குகிற செயலிகளையும் சோதித்துப் பார்ப்பதற்கு, பாலஸ்தீன

மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறது என்று பாலஸ்தீனர்கள்

நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள் என அல்ஜசீரா செய்தி

நிறுவனம் தெரிவிக்கிறது.


                                                                    அஜூர்


இப்போது ஒரு மைக்ரோசாஃப்டின் அஜூர், ஒரு போராயுதமாகவே பயன்படுத்தப்பட்ட செய்தி கசிந்திருக்கிறது. வேறு எத்தனை கணினியல் கார்ப்பரேட் கனவான்கள்  எந்தெந்த நாடுகளுக்குக் கண்காணப்பு ஆயுதங்களைச் செய்துகொடுத்தார்களோ? அவற்றில் எத்தனை மென்பொருள்கள் பிற நாட்டு மக்களையும், எத்தனை மென்பொருள்கள் சொந்த நாட்டுக் குடிகளையும் கண்காணிக்கிற வன்பொருள்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனவோ?

இஸ்ரேல் பற்றிப் பேசும் வேளையில் இந்தியாவிலும் வில்லங்கமான ஒரு விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ‘வாட்ஸ்அப்’ தகவல் பகிர்வுத் தளத்திற்குப் போட்டியாக ‘அரட்டை’ என்ற சுதேசி செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் தனியார் நிறுவனமான ‘ஸோஹோ’ (ZOHO) கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அரசு அலுவலர்களின் மின்னஞ்சல் சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.

அரசமைப்பு சாசனத்திலிருந்து சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களை வெளிப்படுத்தியவரான ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஸோஹோ நிறுவனத்திடம் அரசுத் தகவல்களைக் கையாளும் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இது, தரவுப் பாதுகாப்புக்கும் அமைப்பு சார்ந்த நடுநிலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனம் எழுந்திருக்கிறது. இங்கேயும் ஒருவகைக் கண்காணிப்பு மென்பொருள் முடுக்கிவிடப்படுகிறதோ என்ற கவலை இயல்பாகவே எழுகிறது!

[0][0][0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பு (அக்டோபர் 2) கட்டுரை