இஸ்ரேல் கையில் ’மைக்ரோசாஃப்ட் அஜூர்’!
தகவல்களுக்காகவும் கருத்துப் பகிர்வுகளுக்காகவும் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில், நாம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு பொருள் பற்றிய விவரமும் விலையும் எத்தனை நாட்களில் கிடைக்குமென்ற குறிப்பும் முன்னால் வந்து நிற்கும். நமக்கு இந்தப் பொருள் தேவையென்பது எப்படி இவர்களுக்குத் தெரியும் என்று வியப்பாக இருக்கும். குறிப்பிட்ட தரவுத் தளம் நாம் அதிலே தேடிப்பார்த்த தரவுகளைத் தொடர்புள்ள விற்பனை நிறுவனத்திற்குத் தெரிவிக்கிறது, ஆகவேதான் நம் அனுமதியைக் கேளாமலே “என்னை வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்கும் விளம்பரம் வருகிறது என்று தெரிந்தபோது வியப்பிலிருந்து விடுபட்டோம்.
இது வணிக நோக்கத்திற்காக நம்மை வேவு பார்க்கிற வேலையல்லவா
என்று விமர்சித்தோம். தரவுகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் வேறு
யாருக்கும் பகிரப்படுவதில்லை என்று சமூக ஊடகத் தளங்களில்
அறிவிப்புகள் வந்தன.
நம் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் செயல்படும் உலகின் முன்னணி
தரவு மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட். அது பல நாடுகளின்
அரசுகளுடன், அவர்களது பல்வேறு துறைகளுக்கான செயற்கை
நுண்ணறிவு (ஏஐ) ஏற்பாடுகள் உள்ளிட்ட தனது சேவைகளுக்கு வணிக
ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது. இப்போது, இஸ்ரேல் பாதுகாப்புத் துறைக்கு
அளித்து வந்த சில சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறது.
சேவைகளை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்த விதிககளை
இஸ்ரேல் ராணுவம் மீறக்கூடும் என்ற “கவலையுடன்” இந்த முடிவை அந்த
நிறுவனம் அறிவித்திருக்கிறது.
புலனாய்வுச் செய்தியால் எடுத்த முடிவு
‘தி கார்டியன்’, ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ ஆகிய ஊடகத் தளங்கள்
கூட்டாக நடத்திய ஒரு புலனாய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள
செய்திகளைத் தொடர்ந்து கடந்த வியாழனன்று (செப்.25) இந்த அறிவிப்பை
மைக்ரோசாஃப்ட் வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ‘தி கார்டியன்’
பிரிட்டனிலிருந்து வெளியாகும் சுதந்திர ஊடகமாகும் (தனிப்பட்ட
உரிமையாளர்கள் என்றில்லாமல் வாசகர்களின் நன்கொடைகளைக்
கொண்டு இயங்குவது). ‘+972 மேகசின்’, ‘லோக்கல் கால்’ இரண்டும்
இஸ்ரேல் நாட்டிலிருந்தே வெளியாகின்றன.
மைக்ரோசாஃப்ட்டின் ‘அஜூர்’ என்ற தகவல் சேகரிப்பு – சேமிப்புக்கான ‘கிளவுட்’ தளத்தை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தி, பாலஸ்தீன மக்களைக் கண்காணிக்கிறது என்ற உண்மையை அந்தக் கூட்டுப் புலனாய்வு அம்பலப்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்ட 65,000 பேர்களில் அந்த ‘அஜூர்’ கண்காணிப்புக்கு உள்ளானவர்களும் இருந்திருப்பார்கள்.
எதிர்ப்பும் மறுப்பும்
"பெருமளவில் பொதுமக்களைக் கண்காணிக்க எங்கள் சேவைகள்
பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி,
எங்கள் சேவை நிபந்தனைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை
உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்துடனான
இந்த முடிவையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்," என்ற
அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் நிர்வாகக்குழு
துணைத் தலைவருமான பிராட் ஸ்மித் வெளியிட்டிருக்கிறார். நிறுவன
ஊழியர்களுக்கு வலைப்பூ பதிவாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பிராட் ஸ்மித்
இதை ஏன் ஊழியர்களுக்கான வலைப்பூ பதிவாக அனுப்ப வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அது அவர்களது நிர்வாக ஏற்பாடுகளில் ஒன்றாக இருக்கலாம். நிறுவனத்தின் இந்த முடிவின்படி ஊழியர்கள் செயல்பட வேண்டும், குறிப்பிட்ட சேவைகளை இனி இஸ்ரேல் ராணுவத்துக்கு வழங்கக்கூடாது என்று ஆணையிடுவதற்காகவும் செய்திருக்கலாம். இவற்றை விட முக்கியமான வெறொரு பின்னணியும் இருக்கிறது. கடந்த காலத்தில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பலர் நிறுவனத்திற்கு உள்ளேயே ஒரு குற்றச்சாட்டாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
அப்படியெல்லாம் அஜூர் கிளவுட் பொதுமக்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தவில்லை என்று நிர்வாகம் மறுத்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறிய பல ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கியது. நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக அவர்கள் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்தது. தங்களுடைய பணிகள் அப்பாவி மக்களைப் பலியிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதை ஏற்க மறுத்துப் பல ஊழியர்கள் தாங்களாக வேலையிலிருந்து விலகினார்கள்.
இந்த ஊழியர்களில் பாலஸ்தீனப் பின்னணி கொண்டவர்களும், பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களுடன் தொடர்புடையவர்களும் உண்டு. நிறுவனத்திற்கு உள்ளேயே இத்தகைய கருத்துக் கொண்ட ஊழியர்களை ஒருங்கிணைப்பதற்காக, ‘நோ அஜூர் டு அபார்த்தீட்’ (இனத் தீண்டாமைக்கு அஜூர் கூடாது) என்ற பெயரில் ஒரு குழுவே செயல்பட்டு வருகிறது. ஆகவேதான் ஊழியர்களுக்கு வலைப்பூ தகவல்.
ஊடகப் புலனாய்வைத் தொடர்ந்து இப்போது, வாஷிங்டன் நகரைச் சேர்ந்த
கோவிங்டன் & பர்லிங் எல்எல்பி என்ற சட்ட நிறுவன நிறுவனத்தையும், பெயர்
அறிவிக்கப்படாத ஒரு தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தையும்
சேவைகள் பயன்பாடு தொடர்பான வெளித் தணிக்கையில்
மைக்ரோசாஃப்ட் ஈடுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
முந்தைய கதைகள்
இதற்கு முன்பு, அமெரிக்காவைச் சேந்த கூட்டுறவு நிறுவனமான ‘அசோசியேட்
பிரஸ்’ (ஏ.பி.) கடந்த மே மாதம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலிய
ராணுவத்தின் ‘அலகு 8200’ என்ற உளவுப் பிரிவு காஸாவில் கண்காணிப்புக்கு
மைக்ரோசாஃப்ட் சேவைகளைப் பெரிய அளவில் பயன்படுத்துகிறது என்று
தெரிவித்திருந்தது. அப்போது, அந்தத் தகவல் குறித்து நிறுவன உள் தணிக்கை
நடத்தப்பட்டதாக மைக்ரோசாஃப்ட் கூறியது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ
2023 அக்டோபரில் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகக்
கொண்டுசெல்லப்பட்ட இஸ்ரேலியர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான
முயற்சிகளுக்கு உதவ இஸ்ரேலிய இராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட
ஏஐ கருவிகளும் தரவுச் சேகரிப்பு–சேமிப்பு சேவைகளும் விற்கப்பட்டன.
ஆனால் காஸா மக்களைக் குறிவைக்கவோ, துன்புறுத்தவோ தனது
சேவைகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அந்த
உள்தணிக்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று,
அந்த ஏ.பி. செய்திக்கான பதிலாக மைக்ரோசாஃப்ட் அப்போது கூறியது.
இப்போது மூன்று ஊடகங்களின் புலனாய்வுச் செய்தியைத் தொடர்ந்து
குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.
பிராட் ஸ்மித் அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புத்துறைக்கான தனது
சேவைகள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று
கூறியிருக்கிறார். “நிறுவனத்தின் சேவை நிபந்தனைகள் பொதுமக்களைப்
பெருமளவில் கண்காணிப்பதற்கு எமது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்கின்றன. அதன்படி சில சேவைகளைக்
கட்டுப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
எதற்கெனத் தெரியாதாம்
இஸ்ரேலிய ராணுவம் தனது சேவைகளை எதற்காகப் பயன்படுத்துகிறது
என்று தனக்குத் தெரியாது என்று மைக்ரோசாஃப்ட் கூறி வந்திருக்கிறது.
ஒப்பந்தங்களில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை பாதுகாப்பு விதிகள்
காரணமாக, மூன்று ஊடகங்களின் ஆகஸ்ட் செய்தியறிக்கையில்
வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் நிறுவனத்திற்குத் தெரியாது என்று
ஸ்மித் கூறினார். இந்த விதிகள் காரணமாக தனது தொழில்நுட்பத்தை
இஸ்ரேலிய இராணுவம் எதற்குப் பயன்படுத்துகிறது என்று கண்டறிய
வழியில்லை என்றும் பலமுறை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
காஸா இனப் படுகொலைகளைக் கண்டு உலகமே பதறுகிறது, உரத்த குரலில் கண்டிக்கிறது. இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் இப்படி நழுவலான விளக்கங்களைத் தரலாமா என்ற விமர்சனமும் உலக அரங்கில் ஒலித்து வந்தது. இந்த நிலையில்தான் மைக்ரோசாஃப்ட் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து சற்றே விலகி, இப்போது சில சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது.
ஆனால் இந்த முடிவு, தற்போது டொனால்டு டிரம்ப் ஒரு காஸா போர்நிறுத்தத்
திட்டத்தை வெளியிட்டு ஹமாஸ் அமைப்புக்குக் கெடு நிர்ணயித்திருக்கிற
நிலையில், இஸ்ரேலிய ராணுவ வழிமுறைகளில் என்ன தாக்கத்தை
ஏற்படுத்திவிடும்? அப்படியொன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது.
ஏனென்றால். குறிப்பிட்ட சில மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கான சந்தாக்கள்
மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இஸ்ரேல் அரசும் பாதுகாப்புத் துறையும்
நாட்டின் சொந்த இணையப் பாதுகாப்புக்காக மற்ற அனைத்து
மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
இதனை ஸ்மித் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
முடக்கப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்புகள் எவை? இஸ்ரேலிய ராணுவத்தின் எந்தக் குறிப்பிட்ட பிரிவுகள் அவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருக்கிறது? இவற்றை அவர் தெளிவுபடுத்தவில்லை. நெதர்லாந்து நாட்டில் நிறுவனத்தின் அஜூர் தரவுச் சேமிப்பகங்கள் இருக்கின்றன. அவற்றையும் ஏஐ சேவைகளையும் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பயன்படுத்துவது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்துவந்துள்ளன என்று மட்டும் அவர் பதிவிட்டிருக்கிறார்.
அஜூர சாகசங்கள்
‘அஜூர்’ (இந்தப் பெயரே பண்டைக் கதைகளின் ஒரு போராயுதம் போல
ஒலிக்கவில்லை?) பற்றித் தெரிந்துகொள்வது இதைப் புரிந்துகொள்ள உதவும்.
இது பலதரப்பட்ட ‘கிளவுட்’ சேவைகளை வழங்குகிறது. இவற்றில் கிட்டத்தட்ட
வரம்பே இல்லாத டிஜிட்டல் சேமிப்பகம், திறன் மிகுந்த ஏஐ செயல்களும்
குறிப்பிடத்தக்கவை. இவற்றைக் கொண்டு கணக்கற்ற தொலைபேசித்
தொடர்புகளைத் தொகுக்லாம், படியெடுக்கலாம், எந்த மொழியில்
பேசியிருந்தாலும் வேண்டிய மொழிக்குப் பெயர்க்கலாம்,
பகுப்பாய்வு செய்யலாம்.
மைக்ரோசாஃப்ட்டின் அஜூர் கிளவுட் சேவைகள் பல நாடுகளின் பாதுகாப்புத்
துறைகளிலும், ராணுவப் பணிகளிலும் ஏராளமான முக்கியச்
செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அஜூரின் விரிவடையும்
நுட்பமும், பன்முகத் தன்மையும், பாதுகாப்பான கூறுகளும், எல்லையில்லா
ஏஐ திறன்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
காஸா
ராணுவத்திற்கு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இடம்–காலம் என்ற
வரம்புகள் இல்லாமல் அந்தத் தரவுகளைச் சேமிப்பதும் முக்கியமான தேவை.
அந்தத் தேவையை அஜூரன் நன்றாகவே நிறைவேற்றுகிறான். சேகரித்து,
சேமித்து வைத்த தகவல்களை எப்போது வேண்டுமானாலும்
நொடிப்பொழுதில் கண்டெடுத்துப் பகுப்பாய்வு செய்வதற்கும்
(அதற்காகத்தானே சேமிக்கிறார்கள்), அச்சுறுத்தல்களைக் கணிப்பதற்கும்,
அதிலிருந்து திட்டங்களை வகுப்பதற்கும் அஜூரனை ஒரு வியூக
ஆலோசகனாக்கிக்கொள்ள முடியும்.
ஒரு நாடு இப்படிப்பட்ட தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வதோடு, பிற நாடுகளின் பாதுகாப்புத் துறைகளோடும், முப்படைத் தலைவர்களோடும் ஒரே கிளவுட் தளம் வழியாகப் பாதுகாப்பாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். போர் மேலாண்மையோடு இணைந்ததாக, படையினரின் பயிற்சிகளுக்குத் துணையாக மெய்நிலை சண்டைக்களச் சூழல்களை உருவாக்க முடியும். கணினிப் பறவையை (ட்ரோன்) இயக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்ய வைக்க முடியும். இவற்றை ஒருங்கிணைத்து அனைத்துப் படைகளுக்கும் அனுப்ப முடியும்.
கொள்கை (என்பதாக) இருக்கிறது
இப்பபடிப்பட்ட கிளவுட் சேவைகளை வழங்கும் உலகளாவிய பெரும்
கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்கள் வெகுமக்கள் கண்காணிப்புக்கும்
அது போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான பிற செயல்களுக்குப்
பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கைகளை வைத்துள்ளன. ஒரு நாட்டு
அரசுடன் அல்லது ராணுவத்துடன் வணிகப் பேச்சு இறுதியாகி, விற்பனை
ஒப்பந்தம் போடப்படும்போது, இந்தக் கொள்கையை ஒரு விதியாகச்
சேர்க்கின்றன. ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த மென்பொருள்களைப்
பெருந்தொகை கொடுத்து வாங்குகிற நாடுகளின் அரசுகள் அல்லது
ராணுவங்கள் நடைமுறையில் என்ன செய்வார்கள், எந்த அளவுக்கு
அந்த விதிகளை மதிப்பார்கள் என்று விளக்காமலே புரியும்.
பெகாசஸ்
’பெகாசஸ்’ நினைவிருக்கிறதா? ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கி உலகம்
முழுதும் விற்றிருக்கிற உளவு மென்பொருள் அது. இணையத்தின் வழியாக
ஊடுருவி நம்மைக் கேட்காமலே நம் கைப்பேசியில் தானாகவே ‘டவுன்லோடு’
ஆகி, தன்னைத்தானே ‘இன்ஸ்டால்’ செய்துகொள்ளக் கூடியது அது.
நான் நலம், நீங்கள் நலமா என்ற குசல விசாரிப்புகள் முதல்
முக்கிகியமான தகவல் பரிமாற்றங்கள் வரையில் ஒற்றறிந்து
மேலிடத்திற்குத் தெரிவிக்கிற செயலி. அதைத் தயாரிக்கும் என்எஸ்ஓ குழுமம்
என்ற கணினியியல் ஆயுத நிறுவனம் கூட, மக்களைக் கண்காணிப்பதற்கு
அது பயன்படுத்தப்பட மாட்டாது என்ற விதி தனது ஒப்பந்தங்களில்
இருப்பதாகத்தான் சொல்லிக்கொண்டது.
ஆனால், உலகம் முழுதும் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூகப்
போராளிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என கிட்டத்தட்ட 50,000
பேர், இந்தியாவில் சுமார் 300 பேர், பெகாசஸ் கண்காணிப்புப் பட்டியலில்
இடம்பெற்றிருந்தார்கள். பல நாடுகளின் ஊடகவியலாளர்கள் இதற்கென
இணைந்து உருவாக்கிய ‘நாடுகளிடை ஊடகக் கூட்டமைப்பு’ இதைக்
கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்தியாவில் இது
தொடர்பான வழக்கு இன்னமும் முடிவடையவில்லை. இதற்காக
அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை அறிக்கையும் குடிமக்கள்
கவனத்திற்கு வெளியிடப்படவில்லை. இதில் கவனிக்க வேண்டிய ஒரு கூடுதல்
தகவல், என்எஸ்ஓ குழுமம் ஒரு இஸ்ரேலிய நிறுவனம்!
ஒண்ணும் செய்யாது!
ஆஜூர் விவகாரத்துக்கு வருவோம். சில சேவைகளை முடக்கிய மைக்ரோசாஃப்ட் நடவடிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த, பெயர் வெளியிடப்படாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “இந்த முடிவு இஸ்ரேலிய இராணுவத்தின் செயல்பாட்டுத் திறன்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது" என்று கூறினாராம். ஏ.பி. செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசு தனது நாட்டில் தயாராகி பிற நாடுகளுக்கு விற்பனையாகும்
உளவு மென்பொருள்களையும், பிற நாட்டு நிறுவனங்களிடமிருந்து
வாங்குகிற செயலிகளையும் சோதித்துப் பார்ப்பதற்கு, பாலஸ்தீன
மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துகிறது என்று பாலஸ்தீனர்கள்
நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்திருக்கிறார்கள் என அல்ஜசீரா செய்தி
நிறுவனம் தெரிவிக்கிறது.
அஜூர்
இப்போது ஒரு மைக்ரோசாஃப்டின் அஜூர், ஒரு போராயுதமாகவே பயன்படுத்தப்பட்ட செய்தி கசிந்திருக்கிறது. வேறு எத்தனை கணினியல் கார்ப்பரேட் கனவான்கள் எந்தெந்த நாடுகளுக்குக் கண்காணப்பு ஆயுதங்களைச் செய்துகொடுத்தார்களோ? அவற்றில் எத்தனை மென்பொருள்கள் பிற நாட்டு மக்களையும், எத்தனை மென்பொருள்கள் சொந்த நாட்டுக் குடிகளையும் கண்காணிக்கிற வன்பொருள்களாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனவோ?
இஸ்ரேல் பற்றிப் பேசும் வேளையில் இந்தியாவிலும் வில்லங்கமான ஒரு விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் ‘வாட்ஸ்அப்’ தகவல் பகிர்வுத் தளத்திற்குப் போட்டியாக ‘அரட்டை’ என்ற சுதேசி செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் தனியார் நிறுவனமான ‘ஸோஹோ’ (ZOHO) கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய அரசு அலுவலர்களின் மின்னஞ்சல் சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசமைப்பு சாசனத்திலிருந்து சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களை வெளிப்படுத்தியவரான ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஸோஹோ நிறுவனத்திடம் அரசுத் தகவல்களைக் கையாளும் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. இது, தரவுப் பாதுகாப்புக்கும் அமைப்பு சார்ந்த நடுநிலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்று எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனம் எழுந்திருக்கிறது. இங்கேயும் ஒருவகைக் கண்காணிப்பு மென்பொருள் முடுக்கிவிடப்படுகிறதோ என்ற கவலை இயல்பாகவே எழுகிறது!
[0][0][0]
விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பு (அக்டோபர் 2) கட்டுரை