கபடி ஆட்டத்தில் வீட்டுக்கு வீடு நாட்டம் வைத்திருக்கிற ஒரு சிற்றூர் வனத்தி. சிறுவயதிலிருந்தே உடலின் அணுக்களெல்லாம் கபடியாக இருக்கும் கிட்டன். விளையாட்டுக் களத்தில் சந்திக்க நேரிடும் பொறாமைகளையும் சூதுகளையும் அவன் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான் என்று கதை போயிருந்தால் இது வழக்கமானதொரு ஸ்போர்ட்ஸ் சினிமா.
கபடிக் களத்தில் இரு அணிகளும் ஒன்றையொன்று காலைப் பிடித்து இழுப்பதிலும் ஏறிச்சென்று அடிப்பதிலும் உள்ள மோதல் வெளிப்படையானது. ஆனால், வாழ்க்கைக் களத்தில் மூச்சைப் பிடித்து ஆடுகிற கபடியாட்டத்தில் உள்ள சமூக மோதல் நுட்பமானது, ஆனால் வன்மம் நிறைந்தது. எதற்காக என்றே தெரியாமல் தலைமுறைகளாகத் தொடரும் அந்தப் பகையில் எத்தனை பழிகள், எத்தனை பலிகள்! அவற்றை, அன்றைய நெல்லை மாவட்ட சாதிக் கலவங்களின் பின்னணியோடு காட்சிவிளைவுகளாகப் பதிவு செய்திருப்பதால் இது புதியதொரு சோசியல் சினிமா.
1990களின் முற்பகுதியில் உலக கபடிப் போட்டி மைதானத்தில் இந்திய அணியில் ஒருவனாக கிட்டன் ஆடுவதை அவனுடைய ஊர் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கிறது. நமக்கும் அந்த முதல் காட்சி கறுப்பு வெள்ளையிலேயே வருகிறது. அந்த இடத்திற்கு அவன் எப்படிப்பட்ட தடைகளையெல்லாம் தாண்டி வந்தான் என்ற முன்கதை பல வண்ணத்தில் தொடர்கிறது. பொதுவாக முன்கதை க.வெ.யிலும், பின் கதையைப் ப.வ.விலும் பார்த்து வந்திருக்கிற நிலையில் இதுவே மாறுபட்ட அனுபவத்திற்குத் தயார்ப்படுத்துவதாக இருக்கிறது.
அத்துடன், அவன் லட்சியத்தில் வெற்றிபெற்றுவிட்டது முதலிலேயே தெரிந்துவிடுவதால் என்ன ஆகுமோ என்ற பரபரப்புக்கு மாறாக, எப்படி அது ஆகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் தொற்றுகிறது.
கபடி ஆட்டம் திரும்பத் திரும்ப வருகிறது – முடிவுகளை ஊகிக்க முடிந்தாலும் அலுப்பூட்டவில்லை. பாடிவருகிறவர்களின் காலைக் கிட்டன் பிடிதது இழுப்பதும் தன்னைப் பிடிக்கிறவர்களிடமிருந்து பாய்ந்து நடுக்கோட்டைத் தொடுவதும் ஒரே மாதிரியான சித்தரிப்பாக இருக்கிறது – அது கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.
சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் பேச்சு, கதையின் இலக்கை நோக்கி இழுக்கிறது என்றாலும், கொஞ்சம் எதார்த்தக் குறைவாக இருப்பதாகவும் தோன்றுகிறது. அந்த இடங்களில் இயக்குநர் கதாபாத்திரங்களின் ஊடாக வராமல், கதாபாத்திரங்களின் மேலே அமர்ந்துகொள்கிறார்.
ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே மைய எதிரி சாதியம்தான் என்றும் சொல்லாமல் சொல்லப்படுகிறது. சில பேர், திரும்பத் திரும்ப சாதிப் பிரச்சினைதானா என்று இந்நேரம் சமூக ஊடகங்களில் ஏற்றியிருப்பார்கள். முன்பொரு விவாதத்தில், எது வரைக்கும் சாதியைப் பேசுவீர்கள் என்ற கேள்விக்கு, சாதி இருக்கும் வரை என்று நான் பதிலளித்தது நினைவுக்கு வருகிறது.
‘
படத்தின் கூடுதல் சிறப்பு, ஒரே சமூகத்திற்கு உள்ளேயே வேறு காரணங்களால் ஏற்படும் ஏற்பின்மையும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. “நான் எதுக்காக இதை (அரிவாளை) எடுத்தேன் என்பதையே தெரிந்துகொள்ளாமல், எல்லோருமே தூக்குறானுக,” என்று, தொடக்கக் காலத்தில் ஆயுதமேந்தி ஒதுக்கப்பட்டோர் தலைவனாக உருவெடுத்த பாண்டியராஜா கூறுவதும் ஒரு சமூகப் படப்பிடிப்புதான்.
கிட்டனின் அக்காள் ராஜியும் அவனை நேசிக்கும் ராணியும் வலிமையான பாத்திரங்களாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராணிக்கு ஏற்பாடு செய்யப்படும் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட்டதும் உறவுப் பெண்களின் முகத்தில் தெரியும் மலர்ச்சி, கபடிப் போட்டியை ஊர்ப் பெண்களும் உட்கார்ந்து ரசிப்பது – எல்லாமே அழகு.
பாண்டியராஜா மீது கொலைவெறியோடு திரியும் வேறு சமூகப் பெரிய மனிதன் கந்தசாமி, தனிப்பட்ட முறையில் விளையாட்டின் மீது கொண்டுள்ள பற்று, அதன் அடிப்படையில் கிட்டனுக்கு அளிக்கும் ஆதரவு மற்றுமொரு உண்மை நிலவரம்.
“எதுக்காக சண்டைங்கிறதை விட யாரு யாருகூட சண்டை போடுறாங்கங்கிறதுதான் முக்கியமானது,” எனும் வசனமும் கூட முக்கியமானது. நிறைய யோசிக்க வைப்பது. இருவருக்குமே மரணத்தைப் பரிசளிக்கும் அந்தச் சண்டை, கிட்டனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது திரைக்கதையின் நெருக்கமான பின்னல்.
படத்தில், பெண்ணுக்கும் ஆணுக்குமான காதலுக்கு விதிக்கப்பட்டுள்ள வயது வேறுபாட்டு விதி முறிக்கப்படுகிறது. அது மையக்கதை அல்ல, ஆனால் தமிழ் சினிமாவில் அரிதான கதை.
மகனின் கபடிக் காதலைத் தகப்பன் ஏற்க மறுப்பதன் ஆழத்தில் புதைந்திருக்கும் அச்சம் நியாயமானது. ரத்தச் சகதியில் மூழ்கும் கிராமத்திலிருந்து ஓடும் கிட்டனுக்கு காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்பது உள்ளிட்ட காட்சிகள், விரிந்த நனவாக வேண்டிய கனவுகள்.
துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா, ராஜிஷா என நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் வீடுகட்டி ஆடியிருக்கிறார்கள்.
நிகழ்வுகளின் வேகத்தையும் பதைப்பையும் நமக்குக் கடத்துவதில் உரையாடல்களுக்கு நிகராக எழிலரசு ஒளி ஓவியமும், நிவாஸ் கே. பிரசன்னா ஓங்கார இசையும், மாரி செல்வராஜ், அறிவு இருவரின் பாடல்களும், சக்தி திரு நேர்த்தித் தொகுப்பும் பங்களித்திருக்கின்றன. அந்தக் காட்டெருது (பைசன்) தலை உள்பட கிராமத்துக் குலசாமி அடையாளங்கள், ஜப்பானில் கபடிப் போட்டி என்பதால் சூழல் பொருத்தமாகவும் நிற்கிற புத்தர் சிலை… இயக்குநருக்கே உரிய முத்திரைகள்.
மொத்தத்தில் – பார்க்கவும் பரிந்துரைக்கவுமான படம்.
-
No comments:
Post a Comment