நினைவில் வாழ்கிற ஒரு தலைவர் அல்லது கலைஞர் பற்றிப் பேசுகிறபோது சிலர், ‘அவர் என்னிடம் தனியாக அப்படிச் சொன்னார். தனிப்பட்ட முறையில் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்’ என்று கூறுவதுண்டு. அவர்கள் சொல்வது உண்மையா இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வழியின்றி நமக்குத் திகைப்பாக இருக்கும். கிட்டத்தட்ட அதே திகைப்பு இப்போது நமக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பைக் கேட்கிறபோது ஏற்படுகிறது.
தீபாவளியையொட்டி ட்ரம்ப்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த செவ்வாயன்று (அக்.21) தொலைபேசியில் உரையாடினார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். வெள்ளை மாளிகையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
‘மேகா’ என்ற ஓர் இயக்கம்!
மக்கள் வகைப்பாடு தொடர்பாக பியூ ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்திய வம்சாவளியினர் 52 லட்சம் பேர் அமெரிக்கக் குடிமக்களாகவே வாழ்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறை கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களையும் (என்.ஆர்.ஐ) சேர்த்து மொத்தம் 56.9 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் ஆசியர்களில் இரண்டாவது பெரிய குழுவாக இந்தியர்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டில் இந்தியர் மக்கள்தொகை இந்த அளவுக்குக் கணிசமாக இருப்பதன் வெளிப்பாடுதான் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்.
இங்கே கூடுதலாக ஓர் இணைப்புத் தகவல்: ‘‘அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்குவீர்’’ என்ற முழக்கத்தை எழுப்பிவரும் இயக்கத்தினர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இனத்தூய்மைவாதம் பேசுகிற இந்த இயக்கம், பூர்வீக அமெரிக்கர்கள் தவிர்த்து மற்ற இனத்தவர்கள் வெளியேற வேண்டுமென்று வற்புறுத்துகிறது.
குடியேறி வந்தவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான பகையுணர்வை அந்த இயக்கம் வளர்க்கிறது. அமெரிக்காவின் அரசமைப்பு சாசனத்தைத் திருத்தி, ஒரு கிறிஸ்துவ நாடாக அறிவிக்க வேண்டுமெனப் பரப்புரைக்கிறது. இந்த முழக்கம் 1980-களிலேயே ரொனால்டு ரீகன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கிளப்பியதுண்டு என்றாலும், ‘மேகா’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்த இயக்கத்தை 2020-ம் ஆண்டுத் தேர்தலின்போது பெரிய அளவில் வளர்த்துவிட்டவர் – வேறு யாருமல்ல, திருவாளர் ட்ரம்ப்தான்.
தீபாவளிப் பட்டாசுகளுக்குப் பின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், மோடியுடன் பேசியது பற்றிக் கூறினார். “இருவரும் பண்டிகை வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாகப் பேசினோம்” என்றும் கூறினார்.
மேலும், “சில சிறந்த உடன்பாடுகளின் கீழ் இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லை என மோடி எனக்கு உறுதியளித்தார். ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை மோடியும் விரும்புகிறார்” என்று, ஏற்கெனவே சொல்லி வருவதை மறுபடியும் குறிப்பிட்டார். வர்த்தக அடிப்படையில் பேசித்தான் இந்தியா–பாகிஸ்தான் போரைத் தன்னால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் ட்ரம்ப் கூறினார்.
கடந்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த மூன்றாவது தொலைபேசி உரையாடல் இது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது தன்னுடைய தலையீட்டால்தான் என்று ட்ரம்ப் கூறியிருப்பது எத்தனையாவது தடவை என்று கேட்டால் ஊடகங்களுக்கே சற்றுத் தடுமாற்றம் ஏற்படும். அத்தனை தடவை திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு தடவை கூட பிரதமர் மோடி நேரடியாக இது பற்றி எதுவும் சொன்னதில்லை. இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள்தான் அதெல்லாம் இல்லை என்று மறுத்து வந்திருக்கிறார்கள்.
இப்போதும் தீபாவளி உரையாடலை மோடி உறுதிப்படுத்தியிருக்கிறார். தனது ‘எக்ஸ்’ பதிவில் ட்ரம்ப் அழைத்துப் பேசியதற்கு மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். “இரு நாடுகளின் ஜனநாயகம் உலகத்திற்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கிறோம்,” எனப் பொதுவான, அரசுறவு சார்ந்த பகிர்வுதான் அந்தப் பதிவில் இருக்கிறது. வர்த்தகம் தொடர்பாகவோ, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது பற்றியோ ஏதேனும் பேசியதற்கான குறிப்பு ஏதுமில்லை.
ஆயினும், இருவருக்கும் இடையே அத்தகைய உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்திருக்கிறார். ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி எந்தவொரு உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். “நிலையற்ற எரிசக்திச் சூழ்நிலையில் இந்தியாவின் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதே நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இறக்குமதிக் கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன’’ என்று அவர் விளக்கமளித்தார்.
ஆனால், மௌனத்தின் குரலாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வர்த்தகம் பற்றியும், ரஷ்ய எண்ணெய் பற்றியும் வெளிப்படையாகப் பேசாமல், பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றை மட்டும் வெளிப்படுத்துகிறது. இது, ட்ரம்ப்பின் தன்னிச்சையான, எல்லாமே தன்னால்தான் நடக்கிறது என உரிமை கோரும் பாணியிலான அறிவிப்புகளுக்கு நேரடி பதில் அளிப்பதைத் தவிர்க்கிற இந்தியாவின் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காட்டுகிறது என்று உலக அரசியல் நடப்புகளைக் கவனிப்போர் கூறுகிறார்கள்.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25+25 சதவிகிதம் வரி விதிப்பு யுத்தத்தை ட்ரம்ப் தொடங்கியது தெரிந்ததுதான். அந்தப் போரை நிறுத்திக்கொள்ள வேண்டுமானால் ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.
எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியா கொடுக்கும் பணத்தைக் கொண்டுதான் உக்ரைன் மக்களைக் கொன்றொழிக்கும் ஆயுதங்களை ரஷ்யா வாங்குகிறது, அதைத் தடுப்பதற்காகவே டாரிஃப் கெடுபிடி என்று காரணம் கூறினார் ட்ரம்ப். ஆனால், அடுத்தடுத்த செய்திகள், அவருடைய உண்மையான நோக்கம் அமெரிக்காவிடமிருந்து அதிக எண்ணையை இந்தியா வாங்க வைப்பதுதான், அமெரிக்க எண்ணை நிறுவனங்களின் முதலாளிகளை மனம் மகிழச் செய்வதுதான் என்று காட்டிவிட்டன.
அத்துடன் அமெரிக்காவில் அடுத்தடுத்து நாடாளுமன்ற (காங்கிரஸ்) அவைகளுக்கான உறுப்பினர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் வரவுள்ளன. டாரிஃப் கிடுக்கிப் பிடிகளால் மற்ற நாடுகளை இணங்கிப்போக வைத்துவிட்டால், அதனால் பெருகக்கூடிய செல்வாக்கு வாக்கு வங்கியில் வரவுகளை அதிகரிக்கச் செய்கிற அரசியலுக்குப் பயன்படும் என்ற கணக்கு ட்ரம்ப்புக்கும் அவரது குடியரசுக் கட்சிக்கும் இருக்கிறது.
டாரிஃப் குண்டுவீச்சால் கடும் இடிபாடுகளை, அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ள இந்தியத் தொழில்கள் சந்திக்கின்றன. இந்நிலையில்தான், உள்நாட்டுத் தயாரிப்புகளையே மக்கள் வாங்கவும், வணிகர்கள் விற்பனை செய்யவும் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர்.
அதற்குத் தோதாக, முன்பு இந்தியாவின் வளர்ச்சிக்கே இதுவொரு முக்கியத் தேவை என்று நியாயப்படுத்தப்பட்ட ஜ.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. பெரும்பாலான பொருள்களுக்கு 5%, 12%, 18%, 28% என்ற நான்கடுக்குக் கட்டமைப்பிலிருந்து 5%, 18% என்று இரண்டடுக்காக மாற்றப்பட்டன.
இதை மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குழந்தையிடமிருந்து பறித்து வைத்துக்கொண்ட ஒரு விளையாட்டுப் பொருளை ஒரு நெருக்கடியை சமாளிப்பதற்காக மறுபடியும் கொடுத்து, இது உனக்குப் பரிசு என்று சொல்வது போல் இல்லையா இது?
இருந்தபோதிலும், இந்தத் தீபாவளிக்கு நாடு முழுவதும் பல்வேறு பொருள்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகியிருக்கிறது, அதற்கு ஒரு முக்கியமான காரணம் ஜி.எஸ்.டி குறைப்புதான் என்று வர்த்தகர் சங்கங்கள் கூறுகின்றன. அதை மறுப்பதற்கில்லை. இத்தனை நாட்கள் அப்படிப்பட்ட பொருளாதார சுழற்சியை முடக்கியதற்கு யார் பொறுப்பேற்பது?
எவ்வாறாயினும், பண்டிகைக் கால விற்பனையை மட்டும் வைத்து ஆண்டு முழுக்க உள்நாட்டுச் சந்தை நிலவரம் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது. மேலும், டாரிஃப் கெடுபிடியால் தேங்கிடும் பொருள்களையும் பொருளாதாரத்தையும் இதனால் ஈடுகட்டிவிட முடியாது என்று வணிகவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
உள்நாட்டில் ஒரு பேரலையாக வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, பெரும்பான்மையான எளிய–நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்துவது, அவர்கள் கையில் தாராளமாகப் பணப் புழங்கச் செய்வது, இதற்கெல்லாம் வழிவிடும் வகையில் கார்ப்பரேட்டுகளின் வேலைநீக்க மோகத்தை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளோடு இணைய வேண்டும்.
ஒரு பேச்சுக்காக, உண்மையாகவே இவற்றுக்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்துக்கொண்டால், நோக்கம் நிறைவேறுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆகவே, அமெரிக்காவுடனான வணிகத்தை மீட்பதும், ஏற்றுமதிகளை மறுபடி உறுதிப்படுத்துவதும் ஒரு நடைமுறைத் தேவையாகவும் இருக்கிறது. இன்றைய உலகமய வணிகக் களத்தைப் பொறுத்தவரையில் இந்த மீட்பு முயற்சியில் தவறில்லை.
வர்த்தகப் பேச்சும் உச்சிமாநாடும்!
வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டின்போது மோடியும் ட்ரம்ப்பும் சந்திக்கிற வாய்ப்பு அமையும் என்றும், அது வர்த்தகப் பேச்சுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மாநாட்டிற்கு மோடி நேரில் வரவில்லை என்றும், இணையவழி காணொளியில் அவர் உரையாற்றுவார் என்றும் ஆசியான் தலைவரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் தீபாவளி சார்ந்த விழாக்களில் மோடி கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே, அவரால் மாநாட்டிற்கு நேரில் வர இயலவில்லை என்று தனக்குக் கூறப்பட்டிருப்பதாகவும் அன்வர் தெரிவித்திருக்கிறார். ஊடகங்களும் அரசியல் பார்வையாளர்களும் சுட்டிக்காட்டுவது, இரு நாட்டுப் பேச்சுவார்த்தை இறுதி வடிவத்தை அடைவதற்கு முன் அரசுத் தலைவர்கள் சந்திப்பதில்லை என்ற. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கப்படியே ட்ரம்ப்புடனான சந்திப்பை மோடி தவிர்க்கிறார் என்பதாகும்.
அத்துடன், சும்மாவே, அதைப் பேசினேன் இதைப் பேசினேன் என்று விளம்பரப்படுத்தத் தயங்காதவரான ட்ரம்ப், மாநாட்டுக்குப் பிறகும் அவ்வாறு நடந்துகொள்ள அதிக வாய்ப்பிருப்பதாலும் சந்திப்பு தவிர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது, உள்நாட்டில் கட்டியிருக்கும் பிம்பத்திற்கு இடையூறாகிவிடும் என்ற எச்சரிக்கையும் இருக்கக்கூடும்.
என்ன நிபந்தனைகள்?
இதனிடையே, பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஏற்படும் உடன்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மரபணு நீக்கப்படாத சோளம், சோயாபீன்ஸ் உள்ளிட்ட வேளாண் விளைச்சல்கள், பாலாடைக் கட்டி முதலான பால் தயாரிப்புகள், பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய எரிசக்தி மூலங்கள் என அமெரிக்காவிலிருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் “பரிசாக” டாரிஃப் விகிதங்கள் பழைய நிலைமைக்கு இறக்கப்படும்.
குறிப்பாக வேளாண் மற்றும் பால் பொருள்களுக்கு இந்தியச் சந்தையை அகலமாகத் திறந்துவிடுவது, உள்நாட்டு விவசாயத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது விவசாயிகளை மறுபடியும் போராட்டக் களத்தில் திரளச் செய்துவிடும்.
இன்னொரு பக்கம், உலகக் களத்தில், பாலஸ்தீன மக்களுக்கு அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் அரசு இழைத்துவரும் அநீதிகளுக்கு மோடி அரசு “அதிகாகாரப்பூர்வமாக“ எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை. சமநிலைப்படுத்தும் அணுகுமுறையுடன், பொதுமக்கள் உயிரிழப்பையும் மனிதநேய நெருக்கடியையும் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறது, உதவிப் பொருள்கள் அனுப்பி வருகிறது. ஐ.நா பொதுச்சபையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோருதல், பாலஸ்தீனம்–இஸ்ரேல் என இரு நாடுகளையும் அங்கீகரித்தல் ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாகவே இந்திய தூதர் வாக்களித்திருக்கிறார்.
இவை வரவேற்கத்தக்கவையே என்ற போதிலும், அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் வெளிப்படையான கண்டனம் அறம் சார்ந்த வலிமையை பாலஸ்தீனத்திற்கு வழங்கும். அதை வழங்குவதில் என்ன தயக்கம்? எதற்காகத் தயக்கம்? அமெரிக்காவிடமிருந்து டாரிஃப் தாக்குதல் வருவதற்கு முன், அதன் உலக அரசியலுடன் ஒத்துப் போகிற நிலைப்பாட்டை மேற்கொண்டதுதான் காரணமா?
இவையெல்லாம் கற்பனையான கேள்விகள், வீண் குற்றச்சாட்டுகள் என்றால், ட்ரம்ப் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று புறந்தள்ளிவிட்டு, இவற்றைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுங்களேன் பிரதமர் அவர்களே?
[0]
விகடன் ப்ளஸ் (அக்.24) கட்டுரை
No comments:
Post a Comment