Tuesday, 17 February 2026

இந்துப் பெண்கள் எத்தனை குழந்தைகள் பெற வேண்டும்?: மோகன் பகவத்துகள் உபதேசமும் மூண்டெழும் கோபாவேசமும்


“இந்துக்களே, குடும்பத்திற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதுமென்று முடிவெடுப்பீர்களானால், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாகி விடுவார்கள், நாம் சிறுபான்மையாகிவிடுவோம். ஆகவே, இந்துப் பெண்கள் அதிகமாகப் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும்.”

-மூளைச்சலவை ஏற்பாடாக இப்படி  மத ஆதிக்கவாதத் தலைகள் அவ்வப்போது பேசுகின்றன. “ஒவ்வொரு இந்துப் பெண்ணும்  10 குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,” என்று ஒருவர் குறைந்தபட்ச எண்ணிக்கையை நிர்ணயித்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இம்மாதம் 8ஆம் தேதி மும்பையில் நடந்த அதன் நூற்றாண்டு விழாவில், கொஞ்சம் கருணையோடு அந்த எண்ணிக்கையைக் குறைத்தார்.

அறிவியல் ஆராய்ச்சிகளின்படி ஒரு சமூகம் அழியாமல் இருக்க வேண்டுமானால் குடும்பங்களில் சராசரியாக மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும்” என்கிறார் அவர். சில பேர் தங்களுடைய அபத்தமான கருத்துகளை நிறுவுவதற்கு, “விஞ்ஞானிகளே சொல்லியிருக்கிறார்கள்,” என்று அடித்துவிடுவார்கள். எந்த விஞ்ஞானி, எந்த ஆராய்ச்சி என்று கேட்டால் பதுங்கிவிடுவார்கள். அப்படித்தான் சர்சங்சாலக் பேச்சும் வருகிறது.

ஒரு தலையங்கம்

இது தொடர்பாக, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (பிப்ரவரி 10) “டோண்ட் கிட் யுவர்செல்வ்ஸ்” (உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்) என்ற  தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. “பகவத்தோ மற்ற பிரமுகர்களோ விரும்புகிறார்கள் என்பதற்காக இந்தியர்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால்” எனக் கேட்டு  அந்தத் தலையங்கம் முன்வைக்கிற சுவையான வாதங்கள் முக்கியமானவை.  “ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, போலந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் எந்தக் காரணங்களால் இது நடக்கவில்லையோ, அதே காரணங்களால் இங்கேயும் நடக்காது,” என்கி றது அந்தத் தலையங்கம். அமெரிக்க அரசின் துணைத்  தலைவர் ஜே.டி. வான்ஸ், பெருந்தொழிலதிபர் எலான் மஸ்க் போன்றோர் பிறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறி வருவதையும், அந்நாட்டு மக்கள் அதை ஏற்காததையும் குறிப்பிட்டிருக்கிறது.

குழந்தைகள் இருப்பது இனிமையானதுதான். ஆனால் அவர்களை வளர்ப்பது கடினமானது. அவர்களைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டும். இந்தியாவில் கல்விச் செலவு ஆண்டுக்கு சராசரியாக 11–12 சதவீதம்  அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு ஈடாக அம்மாக்களின், அப்பாக்களின் வருமானம் அதிகரித்துவிடவில்லை. ஒரு குழந்தையானால் உங்களுக்கு வயதாவதற்கு முன்பே தலைமுடி நரைக்க வைத்துவிடும், இரண்டு குழந்தைகளானால் நிதி இருப்பைச் சூறையாடிவிடும். மூன்றாவது குழந்தையை யார் விரும்பு வார்கள்?” -இவ்வாறு கேட்டிருக்கிறார் தலையங்க ஆசிரியர்.

“அப்புறம், அவர்களின் தலைகளுக்கு மேல் கூரை இருக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி 10 நகரங்களில் வீட்டு விலைகள் ஆண்டுக்கு 9 சதவீதம் அதிகரித்து வருகிறது. எல்லோரும் குடியேற விரும்பிடும் தில்லி நகரில் 24 சதவீதம் அதிகரித்திருக்கிறது. குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் குன்றுமானால், மருத்துவச் செலவு10 முதல் 12 சதவீதம் வரை அதிகரித்திருப்பது வலுத்த குத்தாக விழுகிறது. எனவே, தம்பதிகளின் கண்ணோட்டப்படி குழந்தைகள் ஒரு செலவு மிகுந்த ஆடம்பரம்தான்,” என்கிறது அந்த ஏடு. இன்றைய ஏஐ யுகத்தில் வேலைவாய்ப்புகள் வெகுவாகச் சுருங்கிக்கொண்டிருக்கும்போது,  ஒவ்வொரு குழந்தையும் பெண்ணின் தன்னாளுமைக்கு ஒரு தடைதான். ஏனென்றால் குழந்தைப் பேற்றின் உடல் சார்ந்தும் வேலை சார்ந்தும் விலை கொடுப்பது பெண்தான்.

இதனைச் சுட்டிக்காட்டுகிற அந்தத் தலையங்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் உலகின் பல நாடு களிலும் மக்கள்தொகை வீழ்ச்சி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. அதை ஈடுகட்ட “தம்பதிகள் அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள  அறிவுறுத்துவது, ஒரு தொழிற்சாலையின் உலைக்குத் தேவையான எரிபொருளைத் தொழிலாளர்களே வாங்கிவர எதிர்பார்ப்பது போல இருக்கிறது. அது நியாயமுமல்ல, அது நடக்கவும் நடக்காது,” என்று  முடிகிறது.

மாறுபடும் நோக்கங்கள்

நிச்சயமாக, மேற்படி கனவான்கள் அதிகக் குழந்தைகள் பெறுமாறு சொற்பொழிந்து கொண்டி ருப்பதற்கு இதுவொரு நல்ல எதிர்வினைதான். ஆயினும், அவர்களுடைய பேச்சுகள், தலையங்கத்திற்கு அப்பால் செல்கின்றன. முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் அரசாங்கங்களே கூடுதலாகக் குழந்தைகள் பெற ஊக்கமளிப்பது உண்மை. ஆனால், அவர்களின் நோக்கம் அந்தந்த நாடுகளின் மக்கள்தொகையை அதிகரிப்பதேயாகும் (அதுவே  கூட ஏற்கத்தக்கதுதானா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது). இந்தியாவில் இந்தக் கூட்டத்தினரின் நோக்கமோ,  இந்தியாவுக்கு உள்ளேயே இந்து மக்களின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவதுதான்.

மதப்பற்று உள்ளவர்கள் தங்கள் மதத்தை வளர்க்க எண்ணுவதில் என்ன தவறு? ஒரு தவறு மில்லை. ஆனால், இவர்களுடைய இலக்கு, மதத்தை வளர்ப்பதல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதிரான பகைமையை வளர்ப்பதுதான். நல்லிணக்க மாண்பைச் சிதைத்து மதம் பிடிக்கச் செய்வதுதான். ஆகவேதான், இஸ்லாமும் கிறிஸ்தவமும் பெரும் பான்மையாகிவிடும், இந்துக்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள் என்று நெருப்புக் கங்கில் சாம்பிராணி தூவுகிறார்கள்.

1951இல் முஸ்லிம் மக்கள்தொகை 9.8 சதவீதமாக இருந்தது, 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 14.2 சதவீதமானது உண்மைதான். ஆனால் இது ஆண்டுதோறும் அதிகரித்து வந்த  விகிதம் அல்ல. மாறாக, இந்தியா–பாகிஸ்தான் பிரி வினையின்போது ஏராளமானோர் பாகிஸ்தானுக்குச் சென்ற நிலையில் 1951 கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் மக்கள்தொகை குறைவாகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் இயல்பு நிலை மீண்டதையொட்டி அவர்களின் மக்கள்தொகை கூடுதலாகப் பதிவானது.

உண்மை நிலைமைகள்

பொதுவாக மற்ற மதத்தினரை விட அவர்களது பிறப்பு விகிதம் சற்றுக் கூடுதலாக இருந்ததும் உண்மையே. அதன் பின்னணி மதத்தை வளர்க்கும் நோக்கமல்ல, கல்வியின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களேயாகும். மேலும், முஸ்லிம் பிறப்பு விகிதம் 4.4 ஆக இருந்தது, தற்போது 2.3 ஆகச் சரிந்து விட்டது. அதற்குக் காரணம் கல்வியும் பொருளாதார வாய்ப்புகளுமே. இந்த விகிதம் வேகமாகக் கீழிறங்கி வருவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப் எச்எஸ்) அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து  தெரிய வருகிறது. இந்துக்களின் பிறப்பு விகிதம் 1.9  கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் 1.88.

ஆக, பிறப்பு விகிதத்தின்படி இஸ்லாமோ கிறிஸ்த வமோ சில நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட பெரும் பான்மை மதங்களாகப் பெருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று, மதம் சாராத ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

பெண்களின் குரல்

பிறப்பு விகிதங்களைத் தாண்டி, பெண்களின் உடல் நிலை, மகப்பேறு உரிமை, முடிவெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாக  இது இருக்கிறது. தலைக்குள் மதம் ஏறியவர்கள் தங்களுடைய வகுப்புவாத அரசியலுக்காகப் பாஞ்சாலிகளின் உடலையும் உணர்வையும் மறுபடி மறுபடி பகடைக்காய்களாக உருட்டுகிறார்கள். அதை நாகரிக சமுதாயம்  ஏற்க முடியுமா?

உலகத்தில் பெண்கள் இன்று எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி  முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இந்தக் கூட்டங்கள் மறுபடியும் பின்னுக்குத் தள்ளி, வீட்டோடு முடக்குவதற்கு முயல்கின்றன. மனிதப் பிறவியாகவே மதிக்காமல், போகப் பொருளாகவும் பிள்ளை பெறும் எந்திரமாகவும் கருதுகிறார்கள். அதற்காகப் பெரும்பான்மை, சிறுபான்மை என்று மத உணர்வைக் கிளறுகிறார்கள்,” என்று அந்தப் பெண்களின் குரலாக ஒலிக்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் ராதிகா.  

“சாதிய, மதவாதத்தோடு பெண்ணை ஒடுக்கி வைப்பதும் இதற்குள் இருக்கிறது. பெண்களின் உடல்நிலை பற்றிய எந்த மனிதநேய அக்கறையும் இல்லை. போதுமான ஊட்டச்சத்து உள்ள பெண்கள் குறைவாகவும், ரத்த சோகை உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள நாடுகளில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு பிரசவமும் பெரும்பாலான பெண்களுக்கு ஒரு மறுவாழ்வுப் போராட்டம்தான். இந்த நிலைமையில், அறிவியலுக்குப் புறம்பாக இப்படிப் பேசுகிறார்கள். பெண்ணின் உடல் ஆரோக்கி யத்தையும், மன நலத்தையும் விட இவர்களுக்கு மக்கள் ஒற்றுமையைக் குலைப்பதே முக்கியமாக இருக்கிறது. அதனால்தான் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கச் சொல்கிறார்கள். இந்தப் பேச்சுகளைத் தள்ளுபடி செய்கிறோம், எதிர்க்கிறோம்,” என்றும் ராதிகா கூறுகிறார்.

குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பக் கடமைகளை நிறைவேற்ற மறுக்கிறார்கள் என்று இந்தக் குரல்களைக் கூசாமல் கொச்சைப்படுத்துவார்கள் கலாச்சாரக் காவலர்கள். ஆனால், குழந்தைகளை மறுப்பதல்ல, எப்போது குழந்தை, எத்தனை குழந்தை என முடிவெடுக்கிற உரிமையை, சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்கும் சுதந்திரத்தை வலியுறுத்துகிற பெண்களின் ஜனநாயக குரல்களே இவை. காதுகளை அடைத்துள்ள மதவெறிப் பஞ்சை அகற்றினால்தான் இந்தக் குரல்கள் கேட்கும்.

[0]

தீக்கதிர்’ (பிப்ரவரி 17) இதழில் எனது கட்டுரை

Thursday, 12 February 2026

எந்த டிவி என்ன சொன்னாலும்…

தொழிலாளி வர்க்க உணர்வோடு மட்டுமல்லாமல் தேசப்பற்றோடும் வாழ்த்துகிறேன்: நாடுதழுவிய அளவில் இன்று (பிப்ரவரி 12) நடந்துகொண்டிருக்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்க. அனைத்துத் துறைகளின் தொழிலாளர்கள் தங்களுடைய தொடர் இயக்கங்களால் பெற்ற உரிமைகளை உறுதிப்படுத்திய 29 சட்டங்களைச் சிதைத்துக் கொண்டுவரப்பட்டுள்ள 4 தொகுப்புகளைத் திரும்பப்பெற வலியுறுத்தியே இந்தப் பொது வேலைநிறுத்தம்.


பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒன்றிய ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாக இருப்பது புதிய தகவலல்ல. இருந்தாலும் கூட,  “நடுநிலையோடு” (!), இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஓரிரு வார்த்தைகளுடன் செய்தியாவது சொல்கின்றன.


ஆனால், தமிழ்நாட்டில் “அந்த டிவி” சில நாட்களுக்கு முன், புகுத்தப்படும் சட்டத் தொகுப்புகளில் தொழிலாளர்களுக்கு “நன்மை“ அளிக்கிற அம்ஜங்கள் என்னென்ன இருக்கின்றன என்று ஒரு தனிக் கோர்ப்பை ஒளிபரப்பியது. மொத்தம் 12 நிமிடங்கள் ஓடுகிற அந்தக் கோர்ப்பில் முதல் 11 நிமிடங்கள்,  தொழிலாளர்களுக்கு அந்தரத்தில் ஒரு சொர்க்கம் உருவாக்கப்படுவதாக ஒரு கனவை விதைக்க ஒதுக்கப்பட்டுள்ளன. கடைசி ஒரு நிமிடம் இருக்கிறபோது, “அய்யய்யோ நம்ம நடுநிலை ஒப்பனை என்னாவது” என்ற கவலை ஏற்பட்டிருக்கும் போல, ஒன்றிரண்டு விதிகள் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருப்பதாகக் ”கூறப்படுகிறது” என்றும், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டார்கள்.


இனிப்பான கிரீம் தடவப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்ன சட்டத் தொகுப்புக்குள் கெட்டுப்போன கேக் இருப்பதைச் சொல்லவில்லை. முன்பு 100 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு நிர்வாகம் முன்னறிவிப்பின்றி, அரசிடம் அனுமதி பெறாமல் வேலை நீக்கம் செய்யவோ, நிறுவனத்தை மூடவோ முடியும் என்றிருந்த விதி  அழிக்கப்பட்டிருக்கிறது. 300 தொழிலாளர்கள் வரையில் இருந்தால் கூட அப்படி வெளியேற்றவும் கதவை மூடவும் முடியும் என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கேக்கைக் குப்பைத் தொட்டியில் போட வைப்பதற்காகத்தான் வேலைநிறுத்தம்.


8 மணி நேர வேலை என்ற வரம்பை விலக்கி, 12 மணிநேரம் வரையில் நீட்டிப்பதற்கான சட்டங்களை மாநில அரசுகள் கொண்டுவர வழிசெய்யப்பட்டிருக்கிறது. உழைப்பாளிகள் வேலைப் பொழுதும், ஓய்வுப் பொழுதும் போக, வாழ்வதற்கான பொழுதில் இரண்டு மணி நேரம் வெட்டுப்படுவதைத் தடுப்பதற்காகத்தான் இந்த வேலைநிறுத்தம்.


ஊழியர்களை எப்போது வேண்டுமானாலும் தெருவில் நிறுத்தலாம் என்ற கார்ப்பரேட் ஆசைக்கு ஏற்ப, காண்டிராக்ட் முறை, வெளியாட்கள் பணிமுறை ஆகிய, ஏற்கெனவே பல நிறுவனங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கிற, விதிகள் வரையப்பட்டிருக்கின்றன. அவற்றை அழிக்க வைப்பதற்காகவும் இந்த வேலைநிறுத்தம்.


நாட்டில் உழைக்கும் படையாக இருப்பவர்கள் 60 கோடிப்பேர். அவர்களில் வெறும் 6 சதவீதம் பேர்தான், நிறுவனப்பூர்வ அமைப்பாக அணிதிரட்டப்பட்டவர்கள். மற்றவர்களின் சமூகப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களுக்காகவும்தான், அந்த 6 சதவீதத்தைச் சேர்ந்தவர்களும் நடத்துகிற இந்த வேலைநிறுத்தம்.


பட்டுவாடா பார்ட்னர்கள் (அப்படித்தான் நிர்வாங்கள் குறிப்பிடுகின்றன) உள்ளிட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களும், திட்டங்கள் சார்ந்த பணியாளர்களும் கைவிடப்படுகிறார்கள். அவர்களுக்கு, அமைப்பாய்த் திரண்ட தொழிலாளர்கள் கைகொடுப்பதுதான் இந்த வேலைநிறுத்தம்.


நிலையான வேலை என்பதே எதிர்காலத்தில் கடந்தகாலக் கதையாகிவிடும். அப்படி நிகழாமல் தடுப்பதற்காகத்தான் நிகழ்காலத்திய நிலையான வேலைகளில் இருப்போரின் சகோதர உணர்வுடனான இந்த வேலைநிறுத்தம்.


இயற்கைச் சீற்றங்கள் முதல் செயற்கையான இறக்குமதி வரித் தள்ளுபடிகள் வரையில் இழப்புகளுக்கு உள்ளாக்கப்படும் விவசாயிகளுக்கும், குறைந்தளவுப் பாதுகாப்புகளும் பறிக்கப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளி வர்க்கம் தோள்கொடுக்கும் தோழமையோடு இந்த வேலைநிறுத்தம்.


செய்திகளைத் திறமையோடு தயாரிக்கும் உழைப்பாளிகளின் தலைகள் மீதும் இந்தக் கத்திகள் தொங்குவதை உணரட்டும். நிர்வாகக் கட்டளையை நிறைவேற்றியாக வேண்டுமென்றாலும், தங்களுக்காகவும் கூடப் போராட்டக் களம் காண்போருடன் அறம் சார்ந்த ஒருமைப்பாட்டை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்தட்டும்.


போராட்டங்களில் பங்கேற்காமல், அவற்றின் பலன்களை அனுபவிக்கத் தயங்காதவர்களுக்கும் இன்றைய இயக்கம் வர்க்க உணர்வை ஏற்படுத்தும். அது,  சுரண்டல் பெருநிறுவனஙகள் முதல் அவர்களுக்குத் துணைபோகும் அதிகார பீடங்களுக்கும் ஒரு சேதியைச் சொல்லும்.


Monday, 9 February 2026

எப்ஸ்டீன் தீவிலிருந்து புறப்பட்டு அனைவரையும் அச்சுறுத்தும் ஆவண ஆவி!

 



உல்லாச விடுதி அமைப்பது, உயர்பீடத்தினரை வரவழைப்பது, அவர்களின் வக்கிரப் பசிகளுக்கு இரை போடுவது, அவர்கள் மூலம் எண்ணற்ற சலுகைகளை அனுபவிப்பது, இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி அதிகாரத் தரகர்களாகப் பலருக்கும் பல வேலைகள் நிறைவேற வைப்பது…இப்படியாகப்பட்ட பெரும்புள்ளிகள் பற்றிக் கேள்விப்படுகிறோம். உள்நாட்டிலும் உலக அளவிலும் ஆன்மிகம், அரசியல், தொழில், கலாசாரம் என வெவ்வேறு முகங்களில் அவர்கள் வலம் வருகிறார்கள்.

அவ்வகையினரின் ஒரு தற்காலத்தியப் பிம்பம்தான் அமெரிக்காவின் ஜெஃப்ரி எப்ஸ்டீன். ஆறு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் தெற்கு மாவட்டச் சிறையில் ஒரு கைதியாக, தனது 66-வது வயதில் மர்மமான முறையில் செத்துக்கிடந்த எப்ஸ்டீனின் ஆவி, இன்று பல்வேறு நாடுகளைச் சுற்றி வந்து பிரமுகர்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் அது ஆவி வடிவத்தில் இல்லாமல், ஆவண வடிவத்தில் அலைகிறது.

“எப்ஸ்டீன் கோப்புகள்” எனப்படும் அந்த ஆவி எங்கெல்லாமோ சுற்றி, இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் எட்டிப் பார்த்திருக்கிறது. இந்தக் கோப்புகள் எங்கிருந்து வந்தன? ‘ஃபைனான்சியல் டிரஸ்ட் கம்பெனி‘ என்ற மிகப்பெரிய நிதி மாற்று நிறுவனத்தை நடத்தி வந்தவர் எப்ஸ்டீன். 1982-ல் “ஜே. எப்ஸ்டீன் அண்டு கம்பெனி” என்று தொடங்கியவர், 1996-ல் அதன் பெயரை மாற்றினார். அமெரிக்காவிலும் பல்வேறு நாடுகளிலும் உள்ள பெரும் பணக்காரர்கள்தான் வாடிக்கையாளர்கள்.


தொடக்கத்தில் சாதாரண பணக்காரர்களையும் தன் வாடிக்கையாளர்களாகச் சேர்த்துக்கொண்ட அவர், பிற்காலத்தில் மிகப்பெரும் செல்வந்தர்களுக்கானதாக மட்டும் நிறுவனத்தை மாற்றினார். ஒரு பில்லியன் டாலர் (சுமார் 8,000 கோடி ரூபாய்) சொத்து வைத்திருப்பவர்கள்தான் அதில் இணைய முடியும்.

பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல் பெருந்தலைகள், பல துறை நட்சத்திரங்கள் இணைந்தார்கள். அவர்கள் செலுத்திய சேவைக் கட்டணங்களால்தான் எப்ஸ்டீனிடம் கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் (5,000 கோடி ரூபாய்) சொத்து சேர்ந்தது.


 வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்றில் கணித ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தவர் எப்ஸ்டீன். ஒரு கட்டத்தில் நிதிக் கணக்குகளைக் கையாளும் சூட்சமங்களைக் கற்றார். அப்படிக் கற்றபின் அதற்குத் தக நிற்பதற்கென்று, அவர்களின் கணக்குகளில் தில்லுமுல்லுகள் செய்வதற்கு உதவினார். கணக்கில் வராத வருமானத்தை வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க வைப்பது, பணம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்காத, வரிச் சட்டங்களுக்கு உட்படாத வங்கிகளுக்கு மாற்றுவது, வரவு செலவுக் கணக்கை எப்படி எழுதிவைத்தால் அரசாங்கங்களுக்கு வரி கொடுக்காமல் முழுசாக அனுபவிக்கலாம் என்றெல்லாம் நிதி நிர்வாக ஆலோசனைகளை அளித்தார்.

அந்தக் கம்பெனி செயல்பட்டதே, வரிவிலக்கு சொர்க்கம் என்று சித்திரிக்கப்படும் வர்ஜீனிய தீவுகளில்தான். இந்தத் தீவுகளில் அமெரிக்காவுக்குச் சொந்தமானவையும் பிரிட்டனுக்கு உடைமையானவையும் இருக்கின்றன. இரு நாடுகளின் தீவுகளிலும், வருமானத்திற்கு “0” சதவிகித வரிதான். தொழில் நிறுவனங்கள் என்ற பெயரில், உலகில் எந்த மூலையிலும் தொழிற்சாலையோ வணிக வளாகமோ இல்லாமல் சும்மா ஒரு அறையை மட்டும் அலுவலகமாக வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர்களின் பணத்தை இப்படிப்பட்ட வங்கிகளுக்கு மாற்றுவதையே தொழிலாக நடத்துகிறவர்கள் அத்தீவுகளில் இருக்கிறார்கள். அவர்களால் எட்ட முடியாத உயரத்துக்குப் போனவர் எப்ஸ்டீன்!

பல பெரிய முதலாளிகள் செய்கிற இன்னொரு ஏற்பாட்டையும் அவர் செய்திருந்தார். தனது நிறுவனத்திற்கு ஒரு கௌரவத்தை ஏற்றும் வகையில், ஆராய்ச்சிக் கருத்தரங்குகள், சுற்றுச் சூழல் மாநாடுகள், கலை இலக்கிய மேடைகள் என்றெல்லாம் நடத்தி, பல பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பொது அக்கறையாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல தரப்பினரையும் வரவழைத்தார். அவர்களின் சொந்தப் பயணங்களுக்குத் தனது சொந்த விமானத்தைக் கொடுத்தார். இம்மாதிரியான உத்திகளோடு நின்றிருந்தால் கூட, “பிசினஸ்ல இதெல்லாம் சகஜமப்பா” என்பதாகப் போயிருக்கும்.

ஆனால்…

வேட்டை சேவை
பெருந்தன வாடிக்கையாளர்கள் அனுபவித்த மற்றொரு சேவையும் அவருக்குப் பணம் பாயும் வாய்க்காலானது. அவர்களுடைய பாலியல் வேட்கைக்கான சேவை அது. அதற்கென்றே அனைத்து சொகுசு வசதிகளுடனும் ஓர் உல்லாச மாளிகையைக் கட்டியிருந்தார். வேட்டைக்கு இரையானவர்கள் சிறுமிகள், இளம் பெண்கள். பல்வேறு நாடுகளிலிருந்தும் கடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள்.


 ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பலர், உயர் கல்வி பெற எப்ஸ்டீன் தன் அறக்கட்டளை மூலம் உதவி நல்குவார், விளம்பர நட்சத்திரங்களாக ஆவதற்கு நிறுவனங்களிடம் பரிந்துரைப்பார், ஊதியமாகப் பெரும் பணத்தைப் பெற்றோர்களுக்கு அனுப்பி வைப்பார் என்றெல்லாம் ஆசை காட்டிக் கொண்டுவரப்பட்டார்கள்.

அவர்களுக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்காக, எப்ஸ்டீனுக்கு மட்டும் கைகால் பிடித்துவிடுகிற, முதுகு மிதித்துவிடுகிற வேலைகள் தரப்படும். பிறகு படிப்படியாக விருந்தினர்களுக்கு அதே வேலைகளைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு விருந்தாக வேண்டும். அதற்காகப் பணத்தை வீசுவது, கட்டாயப்படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது என எல்லா வழிகளும் கையாளப்படும். “இங்கே நடப்பதை வெளியே சொன்னால் ஊரில் இருக்கிற உங்கள் குடும்பங்களுக்குச் சிக்கல் ஏற்படுத்துவோம்…”, “எங்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது… அதிகாரிகள் எங்கள் கையில்…” என மிரட்டப்படும்.

கூட்டாளியாக மாறிய காதலி

அவர்களால் தப்பித்து ஓட முடியாது. அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும் கல்விச் சான்றிதழ்களையும் நிர்வாகம் கைப்பற்றி வைத்திருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தவர் ஜிஸ்லேன் மேக்ஸ்வெல். பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் ஊடக நிறுவன முதலாளியுமான ராபர்ட் மேக்ஸ்வெல் என்பவரின் மகள். எப்ஸ்டீனின் முன்னாள் காதலி. அந்தக் காதல் உறவை முறித்துக்கொண்டாலும், தொழில் உறவு தொடர்ந்தது. எப்ஸ்டீனின் உயிலில் இவர் முக்கியமான ஒருவராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த முக்கியத்துவம், பெண் என்பதால் நம்பிக்கையோடு பழகியவர்களை விடுதியின் சேவைகளில் தள்ளிவிட்டதால் மட்டும் வந்ததல்ல, எப்ஸ்டீனுக்கே அறிமுகமாகாத பலநாட்டுப் பெரும்புள்ளிகளைத் தீவுக்குக் கொண்டுவந்ததாலும் ஏற்பட்டது. பிரிட்டன் அரண்மனைக் குடும்பத்தின் இளவரசர் ஆண்ட்ரூ உட்படப் பலரும் ஜிஸ்லேன் மூலமாகவே எப்ஸ்டீன் வாடிக்கையாளர்களானார்கள்.

வழக்கின் அதிர்வலை
எல்லாம் இவர்கள் வரைந்த கோடுகளிலேயே போய்க்கொண்டிருக்க அதைத் தடுத்து நிறுத்தியவர், இவர்களால் பாலியல் வக்கிரப் படுக்கையில் தள்ளப்பட்டவரான வர்ஜீனியா ஜிஃப்ரே. 2015-ம் ஆண்டில் அவர், “என்னை மேக்ஸ்வெல் ஒரு பாலியல் அடிமையாக எப்ஸ்டீனுக்கும் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோருக்கும் விற்பனை செய்தார்,” என வெளிப்படையாக அறிவித்தார். இதை மறுத்த மேக்ஸ்வெல், “வர்ஜீனியா ஒரு பொய்யர்,” என்றார். தன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி அவமதித்ததாக மேக்ஸ்வெல் மீது வர்ஜீனியா வழக்குத் தொடுத்தார். ஒரு சாதாரணமான மான நட்ட வழக்காகத் தொடங்கியதுதான் இன்று உலக அளவில் அதிர்வலைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், தனது குற்றச்சாட்டு உண்மை என்று நிறுவுவதற்கான ஆதாரங்களாக வர்ஜீனியா சில ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அந்த ஆவணங்கள் பல பெரும்புள்ளிகள் வந்துபோயிருப்பதை அம்பலப்படுத்தின. எப்ஸ்டீன் 2019 ஜூலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். அதற்கு முந்தைய ஆண்டிலும் அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும் பகல் நேரங்களில் மட்டும் அலுவலகம் சென்று வர அனுமதிக்கப்பட்டார். சட்டத்தைக் கேலி செய்வதாக அந்தத் தண்டனை இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தபோதிலும், 13 மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டார். அவ்வளவு செல்வாக்கு!

ஆனால், மறுபடியும் விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்குப் பிணையில் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. மேலும் ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஒரே மாதத்தில், 2019 ஆகஸ்ட் 10-ல், அவர் இறந்துகிடந்தார். அது இயற்கையான மரணமா, தற்கொலையா, உண்மைகளைப் புதைப்பதற்காகச் செய்யப்பட்ட சிறைக்கொடுமைக் கொலையா?

அந்தத் தேதியில் சிறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது, காவலர்கள் உறங்கிக்கொண்டிருந்தது என்ற துணைப் புதிர்களுடன் மர்மம் நீடிக்கிறது. எப்ஸ்டீன் மரணத்தைத் தொடர்ந்து தலைமறைவானார் மேக்ஸ்வெல். 2020 ஜூலையில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்த புலனாய்வுத் துறையினர் அவரைக் கைது செய்தனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த விசாரணையில் நீதிமன்றம் 2021 டிசம்பரில் “தூண்டுதல், ஆட்கடத்தல்” உள்ளிட்ட 5 புகார்களில் அவர் குற்றவாளி என்று அறிவித்தது. மேல்முறையீடுகள், விசாரணைகளுக்குப் பிறகு, 2022 ஜூன் மாதம், அவருக்கு இருபதாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போதும் அவர் சிறையில்தான் இருக்கிறார் – எப்ஸ்டீன் கதி தனக்கும் நேருமோ என்ற அச்சத்துடன்.

மூடிவைக்கப்பட்ட கோப்புகள்

இதில் இன்னொரு பரபரப்பும் நிகழ்ந்தது. ஆவணங்களில் வழக்குக்கு அப்பாற்பட்டவர்களது பெயர்கள் இருப்பதால், அவற்றை வேறு யாரும் பார்க்கக் கூடாது என்ற சட்டத்தைக் காட்டி, அவற்றை முத்திரையிட்ட உறைகளில் மூடி வைத்தது நீதிமன்றம். பலர் தங்களுடைய பெயர்களை வெளியிடக்கூடாது என்று கோரும் மனுக்களையும் அளித்திருந்தனர். சட்டக் காரணங்கள் இருந்தபோதிலும், செல்வாக்குப் பேர்வழிகளைப் பாதுகாப்பதற்காகவே நீதிமன்றம் ஆவணங்களை நிறுத்திவைத்திருக்கிறது என்று சமூகச் செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களாலும் கடுமையாக விமர்சித்தனர்.




 தொடர்ந்த போராட்டங்களின் வெற்றியாக, 2023-ம் ஆண்டில், நீதிபதி லோரெட்டா ப்ரெஸ்கா அதிரடியாக ஓர் ஆணையைப் பிறப்பித்தார். ஆவணங்களின் பல தகவல்கள் ஏற்கெனவே பொதுவெளிக்கு வந்துவிட்டதாலும், சமூக நலன் தொடர்பானதாக இருப்பதாலும் அனைத்து ஆவணங்களையும் வெளியிட 2023 டிசம்பர் 18-ல் ஆணையிட்டார். அடுத்த ஜனவரி முதல் வாரத்தில் 950 பக்கங்கள் கொண்ட முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அவற்றில் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும், குற்றங்களைச் செய்தோர்களுமாக 170 பேரின் பெயர்கள் உள்ளன.

இப்படி ஆயிரத்துக்குக் கொஞ்சம் குறைவாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 30 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்னமும் இதே எண்ணிக்கையிலான ஆவணங்கள் வெளிவர வேண்டியுள்ளது. இத்தனை லட்சம் ஆவணங்கள் என்றால் மின்னஞ்சல் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள், காணொளிப் பதிவுகள், புகைப்படங்கள், கடிதங்கள் எனப் பல வகையாக இருக்கின்றன.
ட்ரம்ப் சவடால்

இதில் இன்னொரு விளையாட்டும் நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்பு எப்ஸ்டீனின் உற்ற நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார். பின்னர் அந்த நட்பைத் துண்டித்துக்கொண்டார். வர்ஜீனியா தீவு உல்லாச மாளிகைக்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் கூறினார். ஆவணங்களில் அவருடைய பெயரும் இருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில், “மறைப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. அவற்றை வெளியிடுவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை,” என்று அறிவித்தார்.

ஆயினும், அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட நீதித்துறை அலுவலர்கள் அவற்றை முடக்கினார்கள். உள்நாட்டுப் பாதுகாப்புக்காக, ரகசியக் காப்புக்காக என்று காரணங்களைக் கூறிக்கொண்டார்கள். உரத்த கண்டனங்களுக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றம், “எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டம்” என்ற ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. வேறுவழியின்றி அந்த ஆவணங்களையும் வெளியிட வேண்டியதாயிற்று.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்க முன்னாள் அரசுத் தலைவர் பில் கிளின்டன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் பராக், அமெரிக்காவின் மிகப்பெரிய வழக்குரைஞர் ஆலன் டெர்ஷோவிட்டீஸ் உட்படப் பல்வேறு துறைகளைச் சார்ந்த, உலகின் பல பெரும் பணக்காரர்களின் பெயர்கள் அதில் வந்துள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்ட பல பெண்கள், தங்களுடைய பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது என்ற நீதிமன்ற உறுதிமொழி மீறப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.


 பிரதமரும், அறிவியலாளரும்…

இப்படி வெளியான ஆவணங்களில், புகழ்பெற்ற பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் போன்றோரின் பெயர்களும் இருப்பது இயல்பான கவலையை ஏற்படுத்துகிறது. அதே போல், இந்திய மக்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி பெயர் இருப்பதாக வந்துள்ள செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல ஆன்மிகம் முதல் அரசியல் வரையில் சித்து விளையாட்டுகளைச் செய்கிறவர்கள், தங்களுக்கு உள்ள மேலிடச் செல்வாக்கைக் காட்டிக்கொள்வதற்காக அப்படிப்பட்ட மேலிடத்தவர்களைச் சந்திப்பது, படம் எடுத்துக்கொள்வது, அந்தப் படங்களை வெளியிடுவது என்ற தந்திரங்களைக் கையாளுவார்கள். அப்படித்தான், கருத்தரங்குகளுக்காக ஹாக்கிங் போன்றோரை அழைத்துப் பேச வைத்தார். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைப்பை ஏற்றுச் சென்றவர்களுக்கு எப்ஸ்டீனின் நிழலுக சாம்ராஜ்ஜியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதே போன்று, பிரதமர் மோடி அந்தத் தீவுக்குச் சென்றதாக அந்தக் கோப்புகளில் குறிப்பு ஏதும் இல்லை. மாறாக, ஒரு மின்னஞ்சல் தகவலில் அவருடைய பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் பொதுவாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படியாகப் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே, அவர்கள் எல்லோருமே எப்ஸ்டீனின் சேவைகளைப் பெற்றவர்கள்தான் என்று முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. அப்படி வந்துவிட முடியாது என்பதாலேயே, யாருக்குமே அப்படிப்பட்ட தொடர்புகள் இருக்காது என்ற தீர்மானத்துக்கும் சென்றுவிட முடியாது. இதில் அனுமானங்களுக்கு இடமில்லை. ஆவணங்களே அதைத் தீர்மானிக்கும்!

இந்தியக் குடிமக்களைப் பொறுத்தவரையில், இந்தப் பிரச்னை கிளப்பப்படுகிறதென்றால் பிரதமர் நாடாளுமன்றத்தில் நேரடியாகத் திட்டவட்டமாக மறுத்துக் கம்பீரமாக நடை போடலாமே என்றுதான் கருதுகிறார்கள். கேள்வி கேட்பவர்களை எதிர்க்கட்சியினர் என்று பார்க்காமல், மக்களின் பிரதிநிதிகள் என்று மதிக்கிற அரசியல் பண்பு எப்போது இங்கே நிலைபெறுமோ?


 எங்கிருந்து வருகிறார்கள்?

இன்னும் யார் யாருடைய பெயர்கள் வரும், எந்தெந்த நாடுகளில் எப்படிப்பட்ட எதிர்வினைகள் எழும் என்ற வினாக்கள் பின்தொடர்கின்றன. அவற்றை விட முக்கியமான இரண்டு வினாக்கள் இருக்கின்றன. எப்ஸ்டீன்கள் எப்படித் தலையெடுக்கிறார்கள்? அவர்களால் அரசியலிலும் சமுதாயத்திலும் எத்தகைய தாக்கங்கள் விளையும்?

முந்தைய சமுதாய அமைப்புகளிலும் அந்தப்புற மாளிகைகள் இருந்திருக்கின்றன. மன்னர்கள் தங்களின் களியாட்டத்திற்காகவும், விருந்தினர்களை மகிழ்விப்பதற்காகவும் அந்த மாளிகைகளில் பெண்களை அடிமைகளாக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், முதலாளித்துவச் சமுதாயம் உருவெடுத்த பிறகு, எல்லாமே விற்பனைப் பண்டமாகிவிட்டது. பண்பாடும் கூட! உழைப்பாளிகள் ஒரு வகைப் பண்டம். எளிய மனிதர்கள் – குறிப்பாகப் பெண்கள் – பண்டங்கள்தான். இதில் கார்ப்பரேட்–அரசியல்–குற்றவியல் என்ற நச்சுக் கூட்டும் இருக்கிறது. ஆகவே இதைத் தனிமனிதப் பேராசைக் குற்றமாக மட்டும் பார்ப்பதற்கில்லை, இதில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைத் தட்டிக்கழிப்பதற்கில்லை.

இதன் தாக்கங்கள் எப்படி அமையும் என்றால், அரசியலைப் பொறுத்தவரையில், பல இடங்களில் தவறு நடக்காமல் இருப்பதற்கான – அதாவது பெயர்கள் கசிந்துவிடாமல் இருப்பதற்கான எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம். முதலாளித்துவத்தில் தப்பு செய்வது தப்பல்ல, மாட்டிக்கொள்வதுதான் தப்பு! சுரண்டல் அமைப்பு தொடரும் வரையில் எப்ஸ்டீன்கள் வந்துகொண்டே இருப்பார்கள். மக்களைப் பொறுத்தவரையில், அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். அவற்றால் இப்படிப்பட்டவர்களைத் தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்கும்.



அது, புரட்சிகரமான மாற்றத்திற்காகச் செயல்படத் தூண்டுமானால் வரலாற்றுக்கு நல்லது. இல்லையெனில், சமூக வாழ்க்கைக்குக் கேடாகிவிடும். எதைச் செய்தாவது பெரும்பணம் சேர்த்துவிட வேண்டும் என்ற வெறி ஊன்றப்படுமானால், அது எளியோரை, குறிப்பாகப் பெண்களை நுகர்பொருட்களாக மட்டுமே நடத்துகிற வக்கிரத்தையும் வன்மத்தையுமே வளர்த்துவிடும் – பொள்ளாச்சி முதல் வர்ஜீனியா வரை இதற்குச் சாட்சி. ஆம் – எப்ஸ்டீன் தீவு ஆவணங்களை ஒரு விறுவிறுப்பான, சுவையான செய்தியாக மட்டும் கடந்துவிட முடியாது.


[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் எனது கட்டுரை


Tuesday, 3 February 2026

ரோஹித் வெமுலா மரணத்திற்கு நீதி முடக்கப்படுகிறதா?


2026 ஜனவரி 13 அன்று வெளியான செய்திகளும் அதைத் தொடர்ந்து நிகழும் காட்சிகளும், சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2016 ஜனவரி 17 அன்று நம் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையையும், அதனைத் தொடர்ந்த துயரமான நிகழ்வுகளையும் மீண்டும் நினைவூட்டுகின்றன.

அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட காரணத்தால், அதிகார அழுத்தங்களுக்கு ஆளாகி விடுதியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித், நூலகம் மற்றும் வகுப்பறை தவிர மற்ற இடங்களுக்கு வரக்கூடாது என்ற சமூகப் புறக்கணிப்புக்கு நிகரான கெடுபிடிகளால் மனமுடைந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.

அவரது பத்தாமாண்டு நினைவின் பின்னணியில், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) தற்போது “உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவ மேம்பாடு ஒழுங்குமுறை விதிகள் – 2026” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது.  

சமத்துவக் குழுவும் புதிய விதிகளும்

இந்த புதிய விதிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாடுகளைத் தடுப்பதற்குச் சமத்துவக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றன. இக்குழு புகார்கள் மீது 24 மணி நேரத்தில் விசாரணையைத் தொடங்கி, 15 நாட்களுக்குள் அறிக்கையளிக்க வேண்டும்.

அதனடிப்படையில் நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகச் சாதிய இழிவு, உடல் மீதான தாக்குதல் அல்லது கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குதல் போன்ற குற்றங்கள் நடந்திருந்தால், பாதிக்கப் பட்டவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்ய இக்குழு துணையாக இருக்க வேண்டும்.

இருப்பினும், இந்த விதிகள் போதுமானதாக இல்லை எனக் கருதும் ரோஹித்தின் தாயார் ராதிகா வெமுலா, குற்றத்திற்குக் கடும்  தண்டனை மற்றும் தன்னாட்சியை வலியுறுத்தும் ‘ரோஹித் சட்டம்’ என்ற முன்வரைவை வெளியிட்டுள்ளார். மோடி அரசு தனிச்சட்டம் கொண்டு வரத் தயங்குவதால், நிர்வாக நடவடிக்கைகளை மட்டுமே முன்மொழியும் யுஜிசி விதிகள், குற்ற வாளிகள் மென்மையான தண்டனைகளோடு தப்பிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

எதிர்ப்புகளும் நீதிமன்றத் தடையும்

இந்தக் குறைந்தபட்ச ஏற்பாட்டைக் கூட  ஏற்க மறுக்கும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலை வர்கள் பதவி விலகல் போன்ற அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். உத்தரப் பிரதே சத்தில் தொடங்கிய இந்த எதிர்ப்பலை இப்போது பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

இந்த எதிர்ப்புகளின் தொடர்ச்சியாக, உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு சமத்துவ விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்கா ளர் பட்டியல் திருத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், சமூகநீதி சார்ந்த இந்த விதிகளுக்கு உடனடித் தடை விதித்திருப்பது கவலையளிக்கிறது. 

“சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்திவிடும்” என்றும் “சாதியற்ற சமுதாய இலக்கை பாதிக்கும்” என்றும் நீதிபதிகள் கூறி யுள்ள கருத்துகள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஆழப்படுத்துகின்றன.

பெருகிவரும் பாகுபாட்டுப் புகார்கள்

உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு புகார்கள் 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத் தரவுகள் கூறுகின்றன. சாதி மட்டுமல்லாது, மொழி மற்றும் வட்டார ரீதியான பாகுபாடுகளும் மாணவர்களை வாட்டுகின்றன. தில்லி போன்ற நகரங்களில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்களில் சுமார் 54 சதவீதத்தினர் தங்களின் தோற்றம் காரணமாகப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

அதேபோல, இந்தி தெரி யாத காரணத்தால் தென்னிந்திய மாணவர்கள் குழு விவாதங்களில் புறக்கணிக்கப்படுவதும், விடுதி அறைகள் மறுக்கப்படுவதும், உணவுப் பழக்கங்களுக்காக இழிவுபடுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது. ஆங்கிலத் தொடர்புத் திறன் குறைவெனக் கூறி அரசுப் பள்ளி மாணவர்கள் நேர்முகத் தேர்வுகளில் பின்னடைவைச் சந்திக்கின்றனர். இத்தகைய பாகுபாடுகளால் முதலாம் ஆண்டு மாணவர்களில் 40 சதவீதத்தினர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கல்விக்களச் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூகநீதி காக்கப்பட வேண்டும்

இத்தகைய சூழலில், சமத்துவக் குழுக்களின் தலைவர்களாகத் துணைவேந்தர்களே இருப்பது ஒருதலைச் சார்புக்கு வழிவகுக்கும் என்பதால், நடுநிலையாளர்களையும் பல்வேறு தரப்புப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இக்குழுக்கள் அமைய வேண்டும்.

பொய்ப் புகார் கொடுத்தால் தண்டனை என்ற பழைய விதி நீக்கப்பட்டதை எதிர்ப்பாளர்கள் சாடுகின்ற னர். ஆனால், உண்மையான சாதிப் பாகு பாட்டுக் குற்றங்கள் அதிகார பலத்தால் தட்டிக் கழிக்கப்படுவதே இங்கு எதார்த்தமாக உள்ளது.

1990-களிலும் 2006-களிலும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தபோது தூண்டப்பட்ட கலவரங்களைப் போன்றதொரு பதற்றச் சூழல் தற்போதும் உருவாக்கப்படலாம். அந்தச் சூழல் கலைக்கப்பட வேண்டும். யுஜிசி புதிய விதிகள் தடையின்றிச் செயல்படுத்தப்படுவதையும், அதில் உரிய திருத்தங்கள் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துவது சமூகநீதியில் அக்கறையுள்ள மக்களின் கைகளிலும் இயக்கங்களின் தோள்களிலும் இருக்கிறது.

[0]

தீக்கதிர் நாளேட்டின் பிப்ரவரி 3 இதழில் எனது கட்டுரை

Monday, 2 February 2026

ஹோம்பவுண்ட்: விரட்டப்பட்டு வீடு திரும்பிய சாலையில்…




ந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பப்பட்டிருந்த அனுப்பப்படடிருந்த படம் ‘ஹோம் பவுண்ட்’ (வீட்டை நோக்கி). புலம்பெயர்கிறவர்கள், வீட்டுக்குத் திரும்பவும் பெயர்வதில் உள்ள பாதுகாப்பு, அடையாளம், சொந்தத்தன்மை ஆகிய உணர்வுகளைக் கதையாக்கியிருக்கிறது. அத்துடன் இந்தியச் சமுதாயத்தில் வேரோடு புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்று உரமிட்டு வளர்க்கப்படும் மதவாதம் ஆகியவற்றைப் பற்றியும் பேச வைக்கிறார் இயக்குநர் நீரஜ் கேவன்.

சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தலித் குடும்பத்தைச் சேர்ந்த சந்தன் குமார் வால்மீகி, முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த முஹமத் சொயிப் அலி. காவல்துறை தேர்வு எழுதி சீருடை அணியும் கனவோடு புறப்பட்டவர்கள். உலகத்தையே உருக்கிய கோவிட் தொற்றினால் நகரத்திலிருந்து வெளியேறி, தேசிய நெடுஞ்சாலையில் கால்நடையாகவே வீடு திரும்பும் கட்டாயத்தில் தள்ளப்பட்டவர்கள். பயணத்தில் ஒரே இலக்கு, ஒரே பாதை –ஆனால் சுமந்து செல்லும் அடையாளங்கள் வேறு.

கதையில் வெளிப்படையான பெரும் சம்பவங்கள் இல்லை; ஆனால் உள்ளார்ந்த சமூக நிலைமையை உரையாடல்களும் மௌனங்களும் பரப்பி வைக்கின்றன. நாம் யார், நம் நட்பு யார், நம் பகை யார் என்ற கேள்விகள் நம்மோடு பயணிக்கின்றன.

இருவரில் ஒருவனுக்குத்தான் தேர்வில் வெற்றி கிடைக்கிறது. இயல்பான காழ்ப்புணர்வுக்கு உள்ளாகிறான் இன்னொருவன். இந்நிலையில் நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட, பொதுப்போக்குவரத்து இல்லாத நிலையில், இருவரும் சொந்த ஊருக்கு, ஒரு லாரியில் மற்றவர்களோடு சேர்ந்து போகிறார்கள். கர்ப்பிணியான ஒரு பெண் இருமுகிறாள், சக பயணிகள் அச்சமடைய, அவளையும் கணவனையும் கீழிறக்கிவிடுகிறான் ஓட்டுநர். இக்காட்சி அடுத்து ஒலிக்கப்போகும் இருமலுக்கு நம்மைத் தயார் செய்கிறது.

உண்மையாகவே 2020 மே 14 அன்று நடந்த நிகழ்வு இது. ராம்புகார் பண்டிட், அவரது நண்பர் முஹமது சப்யுல்லா இருவரும் பிகார் மாநிலத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்குப் போய்க்கொண்டிருந்தபோது, தில்லி - காசியாபாத் எல்லையில் காசிப்பூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் இதே போல நடந்தது. நோய் முற்றிய சப்யுல்லாவை மடியில் வைத்து ராம்புகார் கதறி அழுதுகொண்டிருந்ததை, பிடிஐ செய்தியாளர் அதித் கோஷ் தன் கேமராவில் பதிவு செய்தார். பத்திரிகைகளில் வெளியாகி மனிதநேயர்களை உலுக்கிய அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தில், ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேட்டில் பத்திரிகையாளர் பஷரத் பீர் ‘நெடுஞ்சாலையோரம் ஒரு நட்பு, பெருந்தொற்று மற்றுமொரு மரணம்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியதாகத் தெரிவிக்கிறார் நீரஜ் கேவன்.


கொரோனா தாண்டவத்தாலும், அரசாங்கப் புறக்கணிப்பாலும் புலம்பெயர்ந்தவர்களின் அவலத்தை மட்டும் பேசியிருந்தால் இந்தப் படம் வழக்கமான ஒன்றாகியிருக்கும். ஆனால் அந்தச் சாலையின் வழியாகப் பயணிக்கையில் கொரானாவினும் கொடிய சாதிய, மதவாதக் காட்சிகளைக் காண வைத்திருக்கிறார்கள் இயக்குநரும், அவரோடு இணைந்து திரைக்கதையை உருவாக்கிய பஷரத் பீர், சுமித் ராய், உரையாடலை எழுதிய வருண் குரோவர், ஸ்ரீதர் துபே ஆகியோரும்.

சாதியாகவும் மதமாகவும் சந்தித்த அவமதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கு காவல்துறை வேலை கைகொடுக்கும் என்பதே நண்பர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதன் அதிகாரக் கழிகள் எளிய மக்களைத் தாக்குவதற்குத்தான் சுழல்கின்றன என்று அவர்கள் உணர்கிற இடமும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கியவன் அதன் பசிக்கு இரையாகிறான். அவனுடைய உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரும் நண்பன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கிறான். அதைத் தொடர்ந்து அவன் என்ன செய்கிறான் என்ற புதிர் மிகுந்த திருப்பம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் சுயநலத்தோடு செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படக்கூடிய நிலையில், கம்பி மீது சமநிலை செய்து நடக்கிற சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். அந்த சாகசம், அன்பின் பிணைப்பாக அல்லாமல் வாழ்க்கையோடு கலந்த உணர்வார்ந்த உறவாக நட்பை உயர்த்திப் பிடிக்கிறது.

கதை கடந்த காலத்துக்கும் தற்காலத்துக்குமாக பயணிப்பதால் திரையனுபவமாக அந்தப் புதிரில் கூடுதல் சுவையேறுகிறது. மகனின் சடலத்தைப் பார்த்து உறைந்து போகிற தாய், பின்னர் அந்த நண்பனின் மார்பில் சாய்ந்து அழுகிறார். நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இத்தகைய சதையும் உயிர்ப்புமான இடங்கள் படம் நெடுகிலும் அமைந்திருக்கின்றன. இயக்குநரின் முதல் படம் ‘மசான்’ –அதுவும் வாரணாசி பின்னணியில் மரணம், சாதியம் பற்றிப் பேசியது.

முற்போக்கான எண்ணங்கள் கொண்ட, அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவளாக நண்பர்களில் ஒருவனின் காதல் இணை சித்தரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இஷான் கட்டர், விஷால் ஜேத்வா, ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிப்புக் கலைஞர்கள் நிச்சயமாக கடுமையான பயிற்சிகளை எடுத்திருக்க வேண்டும் – இல்லையேல் அவர்களின் நடிப்பு இவ்வளவு இயல்பாக இருந்திருக்காது. தனித்துப் பிரித்துச் சொல்ல முடியாதபடி ஒருங்கிணைகின்றன பிரதிக் ஷா ஒளிப்பதிவு, நரேன் சந்திரவாக்கர், அமித் திரிவேதி இசை, நிதின் பெய்ட் படத்தொகுப்பு.

இறுதியாக அறநெறி சார்ந்த ஒரு வினா எழுகிறது. அதற்கான விடை பார்வையாளர்களின் விவாதத்திற்கு விடப்படுகிறது. அந்த விவாதம், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், தமிழ் உள்ளிட்ட குரல்பதிவுகளோடுகுரல் பதிவுகளோடு வெளியாகியுள்ள இந்த இந்தி மொழிப் படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு முந்தைய கட்டம் வரையில் வந்து உலகத்தின் கவனத்தைப், உலக அளவில் கவனம் பெற்றதில் வியப்பில்லை என்ற முடிவுக்குத்தான் வரும்.

[0]

‘செம்மலர்‘ பிப்ரவரி 2026 இதழில் ‘ஓடிடி மேடையில் உலக சினிமா பக்கத்தில் எனது கட்டுரை.

Sunday, 1 February 2026

பராசக்தி முதல் ஜன கண மன வரை: திரையில் ஒலித்த நீதியின் குரல்கள்

 




நாட்டின் சட்டங்களில் உள்ள போதாமைகளை விமர்சிக்கிற திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சட்டங்களை மதிக்காமல் மீறுகிறவர்களைச் சாடுகிற படங்களும் வந்திருக்கின்றன. கதைகளில் மட்டுமல்லாமல், நடைமுறையில் பல படங்கள் சட்டங்களோடு மோதியிருக்கின்றன.


“சட்டம் ஒரு இருட்டறை“, “சட்டம் என் கையில்” என்றெல்லாம் தமிழில் படங்கள் வந்திருக்கின்றன. அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அதைக் கட்டுப்படுத்தும் தணிக்கை அதிகாரம்  என சட்டமும் சினிமாவும் குறித்துப் பேசுவதற்கு நிறையவே இருக்கின்றன.


குடியரசு தினத்தன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா‘ நாளேட்டின் ’சென்னை டைம்ஸ்‘ இணைப்பில் ‘சினிமா‘ஸ டிரைஸ்ட் வித் கான்ஸ்டிடியூஷன்’ (அரசமைப்புடன் சினிமாவின் சந்திப்பு) என்ற தொகுப்பு இதைப் பற்றிப் பேசுகிறது. “அரசமைப்பு சாசனம் குறித்த அனைத்து உரையாடல்களுமே நீதிமன்ற அறைகளில் அல்லது நாடாளுமன்றத்தில் மட்டும் நிகழ்வதில்லை -  நிலைத்து நிற்கக்கூடிய சில உரையாடல்கள் இந்தியத் திரைகளிலும் அரங்கேறியுள்ளன,” என்றுதான் அந்தத் தொகுப்பு தொடங்குகிறது.


நீதிபதி கே. சந்துரு எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழக்கின் அடிப்படையில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’  அரசமைப்பு சாசனத்திற்கு ஒரு வாழ்த்துரையாக வந்தது. எளிய மக்களும் சட்ட ஆயுதத்தை எடுத்துப் போராடி நாயகர்களாக முடியும் என அந்தப் புத்தகத்தை வாசித்துப் புரிந்துகொண்டதாக, ஒரு நீதிமன்றப் போராட்டத்தையே கதையாக்கி இயக்கிய ஞானவேல் அந்தத் தொகுப்பில் கூறியிருக்கிறார்.


சட்டம் பேசிய படங்கள்


அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் சம வாயப்புக்கு எதிரான சமூகத் தடைகள் பற்றி, மும்பையில் தலித் மக்களுக்கான ஒரு குடியிருப்பை மையமாக வைத்து ரஜினிகாந்த் நடிப்புடன் பா. ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’, சட்டப்படியான பேருந்து நிறுத்த உரிமைக்காகப் போராடிய ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை வெளிப்படுத்தி மாரி செல்வராஜ் படைத்து தனுஷ் நடித்த ‘கர்ணன்’, சட்டங்கள் மக்களை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாக்கப்படுவதைச் சித்தரித்து ராம் ஜெகதீஷ் தெலுங்கில் இயக்கிய ‘ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ (அரசு எதிர் அடையாளமற்ற ஒருவன்), கல்லூரியில் பயிலும் பழங்குடிப் பெண் தன் தந்தையுடன் சேர்ந்து தனிமனிதச் சுதந்திரத்திற்காகப் போராடும் கதையாக மன்சோரே இயக்கிய கன்னடப் படம் ‘19.20.21’, சாதிப் பாகுபாடுகளை எதிர்த்து ஒரு காவல்துறை அதிகாரி பணியாற்றுவதை அனுபவ் சின்ஹா இந்தியில் சித்தரித்த ‘ஆர்ட்டிகிள் 15’, சாதி மறுப்புக் காதல் உரிமையை சட்டம் உறுதிப்படுத்தினாலும் சாதிய–ஆணாதிக்கச் சங்கிலிகளோடு சமூகம் ஏற்க மறுப்பதை புச்சி பாபு சனா விமர்சிக்கும் ‘உப்பேனா’ (தெலுங்கு), நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி உள்ள உடைமை உரிமைக்கான சவால் பற்றிய ‘காட்டெரா’ (கன்னடம், தருண் கதிர்), ‘லேண்ட்லார்ட்’ (தெலுங்கு, சிவா பய்யய்யா) ஆகிய படங்களை அந்தத் தொகுப்பு எடுத்துக்காட்டியிருக்கிறது.


இதே போல் பேசிய,  பேசப்பட வேண்டிய வேறு பல படங்களும் நினைவுத் திரையில் ஓடுகின்றன. சில படங்கள் எதார்த்தத்திலிருந்து வெகுதொலைவு விலகி, கதாபாத்திரங்களின் வெறும் உணர்ச்சி நாடக அரங்குகளாக நீதிமன்றக் கூடங்களைக் காட்டியிருக்கின்றன. டி. ராஜேந்தர் படம் ஒன்றில், நீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞர், விஷம் என்று கூறப்பட்ட பாட்டிலில் உள்ள திரவத்தைத் தானே குடித்து, உயிரோடு நிற்பார், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டதும் விரைவாகத் தனது வீட்டுக்குத் திரும்பி விஷத்தை வாந்தியெடுப்பார்! இப்படியான படங்களை நம் விவாத மேடையிலிருந்து இறக்கிவிடலாம்.


வரலாற்று ஆவணம்


நீதிமன்றத்தில் வழக்காடுவதை மையப்படுத்திய கதை என்றால் ஒரு வரலாற்று ஆவணம் என்றே சொல்லத்தக்கதாக 1952இல் வந்த ’பராசக்தி’  படத்தைத் தவிர்க்கவே முடியாது. இந்திய அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்த இரண்டாவது ஆண்டில் வெளியான இப்படத்தின் நீதிமன்றக் காட்சியில், கருத்து வெளிப்பாட்டு உரிமை முதல், சமூகச் சீர்குலைவுகள் வரையில் விவாதப் பொருளாக்கப்பட்டிருக்கும். திமுக தலைவர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டிருந்த கலைஞர் கருணாநிதி கதை உரையாடல் எழுதிய அந்தப் படத்தில்தான், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது,” என்று கூண்டில் நின்று  வாக்குமூலத்தைத் தொடங்குகிற நாயகனாக சிவாஜி கணேசன் அறிமுகமானார். 


தீண்டாமை, போலி ஆன்மிகம் மற்றும் ஏழ்மை குறித்துப் ‘பராசக்தி’ எழுப்பிய கேள்விகள், அரசமைப்பு சாசனம் வலியுறுத்தும் சமத்துவக் கொள்கைகளுக்கு அன்றைய ஒரு கலை வடிவமாக அமைந்தன எனலாம். அக் கேள்விகளின் கூர்மை எந்த அளவுக்கு இருந்தன என்றால், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு பகுதியினர் வற்புறுத்தினர். தணிக்கை வாரியக் கெடுபிடிகளைத் தாண்டியே படம் திரைக்கு வந்தது.


2020இல் வெளியான, ஜே.ஜே. பெட்ரிக் இயக்கிய ‘பொன்மகள் வந்தாள்’ ஒரு பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கும் சட்ட நடைமுறையைக் காட்டியது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (போக்சோ)  தொடர்பான விழிப்புணர்வை இது நீதிமன்ற வாதங்களின் மூலம் முன்வைத்தது.


தந்தைக்காக மகளின் போராட்டம்


கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் 2022இல் வந்த படம் ‘கார்கி’. பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற சட்ட விதிகளோடு மகள் போராடுகிற கதையை இந்தப் படம் சொன்னது. சிறிய சாட்சியங்கள் கூட வழக்கின் போக்கை மாற்றிவிட முடியும் என்றும் அந்தப் படம் காட்டியது. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன் மிதிலா நாட்டில் (இன்றைய பிகார்) வாழ்ந்தவர் கார்கி வாசக்னவி. ஒரு தத்துவ அறிஞராக ஆண்களுக்கு சமமாக மன்னன் சபையில் இடம் பெற்றவர். திரைப்படத்தில் சட்ட அறிவின் துணையோடு போராடுகிற பெண்ணுக்கு ஒரு பண்டைக்கால முன்னோடியின் பெயர் வைக்கப்பட்டதில் ஓர் ஆழமும், பெண்ணின் இந்த அறிவாளுமைத் தொடர்ச்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற செய்தியும் இருக்கிறது.


‘நேர்கொண்ட பார்வை’ (2019) அரசமைப்பு சாசனம் வலியுறுத்தும் தனிமனிதத் தன்னுரிமை, உடல் சார்ந்த தன்னாளுமை ஆகியவற்றை முன்னுக்குக் கொண்டுவந்தது. “உறவுகொள்வதில் ஒரு பெண் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம்”  என்று நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்குரைஞர் நிறுவுவது ஆண் மையச் சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொன்னது. தமிழில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் உள்ளிட்டோரின் நடிப்புப் பங்கேற்புடன் வந்த இந்தப் படம், 2016இல் இந்தியில் வெளியான, அமிதாப் பச்சன் நடித்த, அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கிய ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ்த் தயாரிப்பு. தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.


மலையாளத்தில், மோகன்லால் வழக்குரைஞராக நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது 2023இல் ஜித்து ஜோசப் இயக்கத்தில் வந்த ‘நெரு’. பார்வைத் திறன் சவால் உள்ள ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். குற்றவாளி யாரெனத் தெரிந்தும் அவனுடைய செல்வாக்கின் காரணமாகத் தப்பிக்க விடப்படுகிறான். நீதிமன்றப் போராட்ம், வலிமையான சாட்சிகள், சட்டத்தின் துணையோடு அந்தப் பெண்ணின் துணிவு, நீதியை நிலைநாட்ட வழக்குரைஞர் தன் சொந்தக் கசப்புகளைக் கடந்து ஒப்படைத்துக்கொள்வது என நெரு படம், சட்டத் திரைப்படங்கள் பற்றிய நம் உரையாடலுக்கு நெருக்கமாக வருகிறது.


உணர்ச்சியா ஆதாரமா?


பிருத்விராஜ் வழக்குரைஞராக நடித்து, டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி 2022இல் வந்தது ‘ஜன கண மன’. இந்த மலையாளப் படத்தின் கதையோட்டம் நிகழ்வது கர்நாடக மாநிலத்தில். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார் ஒரு பேராசிரியர். பெரும் கொந்தளிப்பு ஏற்படும் நிலையில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழும் சூழலில் அவர்கள் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள். சமூகம் அமைதியாகிறது. வழக்குரைஞர் இதை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, அந்த 4 பேரைக் கொல்வதற்கான அரசியல் சதியாகத்தான் அந்த பாலியல் குற்றமே நடத்தப்பட்டது என்று நிரூபிக்கிறார். உண்மையான ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப்பட வேண்டுமேயன்றி, பொது உணர்ச்சிகளுக்காக சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனை அளிக்கப்படக் கூடாது என்ற கருத்தை அந்தப் படம் பேசியது. ஒரு மாநிலத்து வழக்குரைஞர் வேறு மாநிலங்களில் வாதாட முடியும் என்பதையும் எடுத்துச் சொன்னது.


சமூநீதிக்கு எதிராகவும்…


ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சமூகநீதி ஏற்பாடாகிய இட ஒதுக்கீடு சட்டங்களைக் கொச்சைப்படுத்தும் படங்களும் வந்திருக்கின்றன. கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘வானமே எல்லை’  போன்ற சில படங்களின் கதைகள் போகிற போக்கில் இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு பறிபோனதான புலம்பல் இடம்பெற்றிருக்கிறது. ஜோதி பாண்டியன் இயக்கத்தில் 1987ல் வந்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ நேரடியாகவே இட ஒதுக்கீட்டைக் குற்றம் சாட்டும் கதையாக, நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியையும் வைத்திருந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று அப்போது எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யதேவ் அமர்வு தணிக்கைக் குழுவின் சான்றிதழை விலக்கி ஆணையிட்டதும், உச்சநீதிமன்றம் அந்தத் தடையை விலக்கியதும், அந்தப் படத்துக்கும் அதில் நடித்த லட்சுமிக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டதும் தனிக்கதை..


தொழிலாளர் எழுச்சிகள் பற்றிய படங்கள் வந்திருந்தாலும், நீதிமன்றத்தில் தொழிலாளர் சட்டம் சார்ந்த போராட்டங்கள், விவசாயிகளின் சட்ட உரிமைப் குரல்கள், குழந்தைகளின் உரிமைகளுக்கான வாதங்கள் கதைகளாக்கப்பட்டிருப்பதாக பெருமளவுக்குத் தெரியவரவில்லை. தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த ‘தெய்வத் திருமகள்’ அறிவுசார் மாற்றுத் திறனாளிக்கும் ஒரு குழந்தைக்குமான உணர்வார்ந்த உறவை நீதிமன்றம் கொண்டுசென்று நிறுவியது. ஹன்சல் மேத்தா இயக்கிய ‘ஷாஹித்’ என்ற இந்திப் படம், பயங்கரவாதச் செயல்கள் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஏழைத் தொழிலாளர்களை மீட்க நடந்த நீதிமன்றப் போராட்டத்தைப் பேசியது.  ஷாஹித் ஆஸ்மி என்ற மனித உரிமை வழக்குரைஞரின் உண்மைக் கதை அது. தேடி விசாரித்தால் இத்தகைய மேலும் பல படங்களின் விவரங்கள் கிடைக்கக்கூடும்.


வீடுகளுக்கும் கைப்பேசிகளுக்கும் ஓடிடி மேடைகளில்  வரும் ஹாலிவுட் தயாரிப்புகள் உட்பட பல வெளிநாட்டுத் திரைப்படங்கள், நீதிமன்ற நிகழ்வுகளை நம்பகத்தன்மையோடு காட்டுகின்றன. சட்ட நுணுக்கங்களிலும், மனித உரிமைகளிலும் வெளிச்சம் பாய்ச்சும் வகையில் இருக்கின்றன. பொது அக்கறையோடு ரசனைச்சுவையும் கலையழகியலும் இணைகிறபோது சமூகப் பொறுப்புள்ள படைப்புகளாகப் பரிணமிக்கின்றன. என்றென்றும் தொடர வேண்டிய பரிணமிப்பு.

[0]

கீக்கதிர் (பிப்.1) ஞாயிறு இணைப்பாகிய வண்ணக்கதிர் இதழில் எனது கட்டுரை