2026 ஜனவரி 13 அன்று வெளியான செய்திகளும் அதைத் தொடர்ந்து நிகழும் காட்சிகளும், சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2016 ஜனவரி 17 அன்று நம் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலையையும், அதனைத் தொடர்ந்த துயரமான நிகழ்வுகளையும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
அம்பேத்கர் மாணவர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட காரணத்தால், அதிகார அழுத்தங்களுக்கு ஆளாகி விடுதியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித், நூலகம் மற்றும் வகுப்பறை தவிர மற்ற இடங்களுக்கு வரக்கூடாது என்ற சமூகப் புறக்கணிப்புக்கு நிகரான கெடுபிடிகளால் மனமுடைந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
அவரது பத்தாமாண்டு நினைவின் பின்னணியில், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) தற்போது “உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவ மேம்பாடு ஒழுங்குமுறை விதிகள் – 2026” என்ற புதிய விதிகளை அறிவித்துள்ளது.
சமத்துவக் குழுவும் புதிய விதிகளும்
இந்த புதிய விதிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாடுகளைத் தடுப்பதற்குச் சமத்துவக் குழுக்களை அமைக்க வலியுறுத்துகின்றன. இக்குழு புகார்கள் மீது 24 மணி நேரத்தில் விசாரணையைத் தொடங்கி, 15 நாட்களுக்குள் அறிக்கையளிக்க வேண்டும்.
அதனடிப்படையில் நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகச் சாதிய இழிவு, உடல் மீதான தாக்குதல் அல்லது கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குதல் போன்ற குற்றங்கள் நடந்திருந்தால், பாதிக்கப் பட்டவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்ய இக்குழு துணையாக இருக்க வேண்டும்.
இருப்பினும், இந்த விதிகள் போதுமானதாக இல்லை எனக் கருதும் ரோஹித்தின் தாயார் ராதிகா வெமுலா, குற்றத்திற்குக் கடும் தண்டனை மற்றும் தன்னாட்சியை வலியுறுத்தும் ‘ரோஹித் சட்டம்’ என்ற முன்வரைவை வெளியிட்டுள்ளார். மோடி அரசு தனிச்சட்டம் கொண்டு வரத் தயங்குவதால், நிர்வாக நடவடிக்கைகளை மட்டுமே முன்மொழியும் யுஜிசி விதிகள், குற்ற வாளிகள் மென்மையான தண்டனைகளோடு தப்பிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுமோ என்ற ஐயம் எழுகிறது.
எதிர்ப்புகளும் நீதிமன்றத் தடையும்
இந்தக் குறைந்தபட்ச ஏற்பாட்டைக் கூட ஏற்க மறுக்கும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலை வர்கள் பதவி விலகல் போன்ற அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். உத்தரப் பிரதே சத்தில் தொடங்கிய இந்த எதிர்ப்பலை இப்போது பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.
இந்த எதிர்ப்புகளின் தொடர்ச்சியாக, உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு சமத்துவ விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்கா ளர் பட்டியல் திருத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், சமூகநீதி சார்ந்த இந்த விதிகளுக்கு உடனடித் தடை விதித்திருப்பது கவலையளிக்கிறது.
“சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்திவிடும்” என்றும் “சாதியற்ற சமுதாய இலக்கை பாதிக்கும்” என்றும் நீதிபதிகள் கூறி யுள்ள கருத்துகள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஆழப்படுத்துகின்றன.
பெருகிவரும் பாகுபாட்டுப் புகார்கள்
உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு புகார்கள் 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத் தரவுகள் கூறுகின்றன. சாதி மட்டுமல்லாது, மொழி மற்றும் வட்டார ரீதியான பாகுபாடுகளும் மாணவர்களை வாட்டுகின்றன. தில்லி போன்ற நகரங்களில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்களில் சுமார் 54 சதவீதத்தினர் தங்களின் தோற்றம் காரணமாகப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல, இந்தி தெரி யாத காரணத்தால் தென்னிந்திய மாணவர்கள் குழு விவாதங்களில் புறக்கணிக்கப்படுவதும், விடுதி அறைகள் மறுக்கப்படுவதும், உணவுப் பழக்கங்களுக்காக இழிவுபடுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது. ஆங்கிலத் தொடர்புத் திறன் குறைவெனக் கூறி அரசுப் பள்ளி மாணவர்கள் நேர்முகத் தேர்வுகளில் பின்னடைவைச் சந்திக்கின்றனர். இத்தகைய பாகுபாடுகளால் முதலாம் ஆண்டு மாணவர்களில் 40 சதவீதத்தினர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகக் கல்விக்களச் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமூகநீதி காக்கப்பட வேண்டும்
இத்தகைய சூழலில், சமத்துவக் குழுக்களின் தலைவர்களாகத் துணைவேந்தர்களே இருப்பது ஒருதலைச் சார்புக்கு வழிவகுக்கும் என்பதால், நடுநிலையாளர்களையும் பல்வேறு தரப்புப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இக்குழுக்கள் அமைய வேண்டும்.
பொய்ப் புகார் கொடுத்தால் தண்டனை என்ற பழைய விதி நீக்கப்பட்டதை எதிர்ப்பாளர்கள் சாடுகின்ற னர். ஆனால், உண்மையான சாதிப் பாகு பாட்டுக் குற்றங்கள் அதிகார பலத்தால் தட்டிக் கழிக்கப்படுவதே இங்கு எதார்த்தமாக உள்ளது.
1990-களிலும் 2006-களிலும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தபோது தூண்டப்பட்ட கலவரங்களைப் போன்றதொரு பதற்றச் சூழல் தற்போதும் உருவாக்கப்படலாம். அந்தச் சூழல் கலைக்கப்பட வேண்டும். யுஜிசி புதிய விதிகள் தடையின்றிச் செயல்படுத்தப்படுவதையும், அதில் உரிய திருத்தங்கள் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துவது சமூகநீதியில் அக்கறையுள்ள மக்களின் கைகளிலும் இயக்கங்களின் தோள்களிலும் இருக்கிறது.
[0]
தீக்கதிர் நாளேட்டின் பிப்ரவரி 3 இதழில் எனது கட்டுரை
No comments:
Post a Comment