நீண்டகாலமாக, ஐ.நா சபை இருந்துவரும் நிலையில், அதற்கு போட்டியாக ‘அமைதிக் குழு’ என்ற பெயரில் புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்த முயலும் டொனால்டு ட்ரம்ப், அந்த அமைப்பில் சேருமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.
2026, புத்தாண்டு பிறந்த நேரத்தில், உலக மக்களுக்கு ஒரு பேரதிச்சியைக் கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இறையாண்மை கொண்ட வெனிசுலா நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த அமெரிக்கப் படையினர், வெனிசுலா நாட்டு அதிபரையும், அவருடைய மனைவியையும் துப்பாக்கிமுனையில் அமெரிக்காவுக்குத் தூக்கிச்சென்ற கொடுமையைக் கண்டு உலகமே அதிர்ந்தது. ஒருபுறம் அடாவடிகளை மேற்கொள்ளும் ட்ரம்ப், இன்னொரு புறம் ஐ.நா-வுக்குப் போட்டியாக தான் அமைத்திருக்கும் ‘அமைதிக் குழு’ (Board of Peace)-வில் பங்கேற்குமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அந்த அமைதிக் குழுவின் உண்மையான நோக்கங்கள் குறித்து, உலக நிகழ்வுகளைக் கவனித்துவரும் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார்கள். இரண்டு உலகப் போர்களுக்கு கடுமையான விலை கொடுக்க நேர்ந்ததன் படிப்பினையிலிருந்துதான், நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பட்ட மறுகட்டுமானத்தை உறுதிப்படுத்தவும் 1945 அக்டோபர் 24-ல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.
ஐ.நா-வின் பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. அதே நேரம், மூன்றாம் உலகப் போர் மூளாமல் இருப்பதற்கு ஐ.நா-வின் பங்கு முக்கியமானது. ஒரு நாட்டின் அரசு, உலக அளவிலான குற்றம் ஒன்றில் ஈடுபடுகிறது என்றால் அந்த நாட்டின் மீது ஐ.நா ஒப்புதலோடுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா சாசனத்தில் விதி இருக்கிறது.
வெனிசுலாவுக்குள் அமெரிக்காவின் படையை அனுப்பிய ட்ரம்ப், அந்த நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்க அரசே நடத்தும் என்று ஆணவத்துடன் கூறினார். அதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தவுடன், அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ‘வெனிசுலாவின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட மாட்டோம். எண்ணெய் வயல் விவகாரங்களில் மட்டும் தலையிடுவோம்’ என்று தொனியைக் குறைத்தார்.
வெனிசுலாவின் 90 சதவிகிதப் பொருளாதாரம் அந்த நாட்டிலுள்ள எண்ணெய் வயல்களைச் சார்ந்தே இருக்கிறது. அந்த எண்ணெய் வயல்கள் மீது அமெரிக்காதான் மேலாண்மை செலுத்தும் என்பதை பகிரங்கமாகவே ரூபியோ சொல்லியிருக்கிறார்
நிகோலஸ் மதுரோ, சிலியா புளோரஸ்
குறிவைக்கப்படும் கிரீன்லாந்து!
வெனிசுலாவுக்கு அடுத்தபடியாக கிரீன்லாந்து நாட்டை ட்ரம்ப் குறிவைத்திருக்கிறார். தற்போது, டென்மார்க் நாட்டிற்கு உட்பட்ட ஒரு தன்னாட்சிப் பகுதியாக கிரீன்லாந்து இருக்கிறது. புவியியல் அமைப்பில், அமெரிக்காவின் போர் வியூகங்களுக்குத் தோதான இடத்தில் அது அமைந்திருக்கிறது. ஆகவே, அதைக் கைப்பற்றுவதற்கு ட்ரம்ப் துடிக்கிறார்.
அத்துடன், உள்நாட்டு மக்களுக்கு தன் மீது இருக்கும் கோபத்தைச் சமாளிப்பதற்காக, ‘நாம் கிரீன்லாந்தைக் கைப்பற்றாவிட்டால், சீனாவோ, ரஷ்யாவோ அதைக் கைப்பற்றிவிடும்’ என்கிறார். சீனாவையும், ரஷ்யாவையும் பூச்சாண்டிகளாகக் காட்டுவது, அமெரிக்க அதிபர்கள் ஏற்கெனவே கையாண்ட உத்திதான்.
கிரீன்லாந்தை எப்படி அவர் கைப்பற்றுவாராம்? வெனிசுலாவில் புகுந்தது போல, ஏதாவது போதைப்பொருள் குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டு, கிரீன்லாந்துக்கு அவர் படையை அனுப்புவாரா என்பது தெரியவில்லை. அதற்கான உடனடித் திட்டம் இல்லை என்று தெரிகிறது. ஆனால், விலைகொடுத்து கிரீன்லாந்தை வாங்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.
குடியிருப்புப் பகுதிகளில் பெரிய வணிக வளாகம் கட்டுகிற நிறுவனங்கள் பெரும் தொகையை வீசி, மனைகளை வளைப்பார்கள். அதற்கு ஒத்துவராவிட்டால், அடியாட்களை ஏவிவிடுவார்கள் அல்லவா? அதேபோல, கிரீன்லாந்து வாழ் மக்களுக்கேகூட தலைக்கு 6 லட்சம் டாலர்கள் முதல் 50 லட்சம் டாலர்கள் வரையில் விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
கிரீன்லாந்து வளைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்காத ஐரோப்பிய நாடுகள் மீது 10 முதல் 25 சதவிதம் வரை கூடுதல் இறக்குமதி வரி யுத்தம் தொடுக்கப்படும் என்றும் மிரட்டலும் விடுத்திருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். கடந்த சனிக்கிழமையன்று (ஜன.17) கூடுதல் வரியை அவர் விதித்தார்.
ஐரோப்பிய பதிலடி!
ட்ரம்ப் மிரட்டலுக்கு டென்மார்க்கோ, இதர ஐரோப்பிய நாடுகளோ பணிந்துவிடவில்லை. தங்களின் கூட்டமைப்பாகிய ஐரோப்பிய ஒன்றியத்தைக் கூட்டவும், அதில் பதிலடி நடவடிக்கைகளை இறுதிப்படுத்தவும் முடிவு செய்துள்ளன. தங்களுடைய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கான வரியை ட்ரம்ப் அதிகரித்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களை வெகுவாகக் குறைப்பதற்கு முடிவெடுக்க அந்த நாடுகள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மிரட்டிக் கறப்பதைத் தடுப்பதற்கென்றே ஐரோப்பிய கூட்டமைப்பிற்கான சாசனத்தில் ஒரு விதி இருக்கிறது. முதல் முறையாக அந்த விதியைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்து மக்களில் ஒரு பகுதியினர் தங்களுடைய தன்னாளுமைச் சுதந்திரத்திற்காகப் போராடி வருவது உண்மை. அவர்கள் தங்களின் வட்டாரம் அமெரிக்காவின் பட்டா நிலமாக மாற்றப்படுவதை ஏற்கவில்லை. வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ போல, அங்கேயும் சிலர் இருப்பார்கள்தானே. அவர்களைத் தனது ரியல் எஸ்டேட் வணிகத்தில் இழுத்துவிடவும் ட்ரம்ப் முயல்கிறார். தற்போது, அமெரிக்க சூழ்ச்சிகளை எதிர்த்து கிரீன்லாந்து மக்கள் தெருவில் திரண்டு முழங்குகிற காட்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
உயர்ந்த விருது, தாழ்ந்த பேரம்!
தனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாகப் பேசி வந்தவர் ட்ரம்ப். ஆனால், நோபல் விருதுக் குழு அதைத் தள்ளுபடி செய்தது. வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கரினா மச்சாடோ, அந்த விருதைப் பெற்றார். அவரோ, வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோ மொரோஸ் ஆட்சியை அகற்றிவிட்டு, அரியாசனத்தில் அமரத் துடித்தவர். அதற்காக ட்ரம்ப்பின் அதிரடி அத்துமீறல்களை அங்கீகரித்தவர். அந்த நாட்டில் ‘ஜனநாயகத்தை மீட்பதற்காகப் போராடியவர்’ என்ற அடிப்படையில் அவருக்கு விருது அளிக்கப்பட்டது.
உண்மை என்னவென்றால், மதுரோவுக்கு முன் வெனிசுலா அரசுத் தலைவராக, மக்களின் பேராதரவோடு ஆட்சி செய்த ஹூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த எண்ணை வயல்களை மீட்டு அரசுடைமையாக்கப்பட்ட அமைப்பாகத் தொடர்வதை உறுதிப்படுத்தினார். மின்சாரம் உள்ளிட்ட பிற கட்டமைப்புத் துறைகளையும் அவர் அரசுடைமையாக்கினார். அதனால் அரசுக்குக் கிடைத்த நிதி வருவாயை மக்களின் கல்வி, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டார்.
மக்களிடையே 100 சதவிகிதம் கல்வி, ஏழைகளுக்கு இலவச மருத்துவம் ஆகியவற்றை சாவேஸ் நிலைநாட்டினார். அவருடைய மறைவைத் தொடர்ந்து 2013-ல் பொறுப்பேற்ற நிக்கோலஸ் மதுரோ ஆட்சியிலும், அந்தக் கொள்கைகள் தொடர்ந்தன. 2025-ல் மூன்றாவது முறையாக அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அவர் பொறுப்பேற்றார். தங்களுடைய வேட்டைக்கு குறுக்கே நிக்கோலஸ் மதுரோ இருந்ததை, சுரண்டல் கும்பல்களால் செரித்துக்கொள்ள இயலவில்லை.
அந்த கும்பல்களைச் சேர்ந்தவர்களின் மனம் குளிரும் வகையில், மதுரோ தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் செல்லாது என்று அறிவித்த ட்ரம்ப், அதிகாரத்தைக் கைப்பற்றும் தாகத்தோடு செயல்பட்டவர்களின் சீர்குலைவு முயற்சிகளுக்குத் துணை நின்றார். அவரிடம் மச்சாடோ தனது நோபல் விருதுப் பதக்கத்தை ஒப்படைத்த பின்னணி புரிகிறதா?
மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டதே சரிதானா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அவர் என்ன செய்தார் என்றால், தனக்குத் தரப்பட்ட விருதை ட்ரம்புக்குக் கொடுப்பதாக அறிவித்தார். அப்படியெல்லாம் ஒரு விருதைப் பெற்றவர் இன்னொருவருக்கு மாற்ற முடியாது. அதற்கான பதக்கத்தைக் கொடுத்தாலும், விருதுப் பதிவேட்டில் அது இடம்பெறாது என்று நோபல் நடுவர் குழு தெளிவுபடுத்திவிட்டது.
தேசபக்த முலாம்!
’அமெரிக்காவே முதலில்‘ என்ற முழக்கத்தை, தனது கொள்கையாக அறிவித்து தனது தவறான நடவடிக்கைகளுக்கு தேசபக்த முலாம் பூசுகிறார் ட்ரம்ப். அரசுத் தலைவர் ஒருவர், தனது நாட்டிற்கே முன்னுரிமை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்தில் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழலாம். அந்த முன்னுரிமையில் தவறே இல்லை.
ஆனால், அந்த முன்னுரிமை உள்நாட்டு வளங்களைப் பெருக்குவது, கல்வி–தொழில்–வேலைவாய்ப்புகளை விரிவாக்குவது, மருத்துவ சேவையை அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக மேம்படுத்துவது என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
அதை விடுத்து, மற்ற நாடுகளுக்கிடையே கட்டப் பஞ்சாயத்து செய்வது, வேறொரு நாட்டுக்குள் காலை வைப்பது, இன்னொரு நாட்டின் இடத்தை ஆக்கிரமிப்பது என்ற வழியில் இருக்கக் கூடாது. ஆனால், ட்ரம்ப் இதையெல்லாம்தான் ‘அமெரிக்காவே முதலில்‘ என்ற பட்டையை மாட்டிக்கொண்டு செய்கிறார்.
வெனிசுலாவும், கிரீன்லாந்தும் முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் என்றால், மூன்றாவது கோணம்தான் முதலில் பார்த்த ‘போர்டு ஆஃப் பீஸ்‘. இதன் தலைவர் ட்ரம்ப் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையேயான ஆபிரஹாம் அக்கார்ட்ஸ் எனப்படும் ஒப்பந்தத்தின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் (இவர் ட்ரம்ப்பின் மருமகன்), மத்திய கிழக்கு நாடுகளுக்கான ட்ரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ரோவன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் உறுப்பினர்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘பாலஸ்தீன தொழில்முறைக் குழு’ என்ற அமைப்பையும் ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கிறார். அது காசாவின் அன்றாட நிர்வாகத்தை மேற்கொள்ளுமாம். அந்தக் குழுவின் செயல்பாட்டை இந்த அமைதிக்குழு கண்காணிக்குமாம். அமைதிக்குழு உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமென நிரணயிக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
காஸா குதறப்படுவதையும் காஸா மக்கள் கொல்லப்படுவதையும் குழந்தைகள் கொலைப் பட்டினியில் கிடப்பதையும் அனுமதித்தவரின் இந்த அமைதிக்குழு ஏற்பாடு, உலகத்தின் மரியாதையைப் பெற்றுவிடவில்லை. பலரும் அதன் உள்நோக்கம் குறித்த ஐயப்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்தக் குழுவில் இணையப்போவதில்லை என்று பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது. குழு அமைக்கப்பட்டதன் நோக்கங்களுக்கு அப்பால் அறிவிப்புகள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதுகிறது என்று பிரதமரின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். உறுப்பினர்கள் நிதி வழங்க வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை என அமெரிக்க அரசு மறுத்துள்ளது என்பதாகவும் ஒரு செய்தி வருகிறது.
கனடா அரசு அவ்வாறு நிதி வழங்க மறுத்திருப்பதாக இன்னொரு செய்தி வருகிறது. இத்தாலி உள்ளிட்ட பிற நாடுகளும் திட்டவட்டமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை. ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் விற்பனையாகவில்லை என்பதையே இது காட்டுகிறது.
‘இது என்ன ட்ரம்ப் ஐ.நா சபையா‘ என்று ஐ.நா அமைப்பைச் சேர்ந்த பல நாடுகள் கேட்டுள்ளன. ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக். ‘ஐக்கிய நாடுகள் சபையின் தார்மீக, சட்டபூர்வ அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கினால், நாம் மிகவும் இருண்ட காலத்திற்குத் தள்ளப்படுவோம்‘ என்று எச்சரித்திருக்கிறார்.
காஸா
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான் காஸா. அந்த காஸாவுக்கான அமைதிக் குழுவில் பாலஸ்தீனப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை. இதனைப் பாலஸ்தீனத் தலைவர்கள் மட்டுமல்லாமல், அதன் சுதந்திரத்திற்கு ஆதரவாக இருக்கிற எல்லோருமே சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் சுதந்திரத் தன்னாட்சி உரிமையைப் பறிக்கிற இந்த ஏற்பாடு, ஒரு நவீன காலனியாதிக்க அணுகுமுறைதான் என்று மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சாடுகிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதை இஸ்ரேல் அரசுகூட விமர்சித்திருக்கிறது.ஆனால், அவர்களுடைய விமர்சனம் இந்தக் குழுவின் நோக்கம் பற்றியதல்ல. இதன் உருவாக்கத்தில் தங்களைக் கலந்தாலோசிக்கவில்லை என்றும், குறிப்பாக துருக்கி, கத்தார் போன்ற நாடுகளின் தூதர்களை இதில் சேர்த்திருப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூ அலுவலக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்தியப் பெருங்கடல் மீது கண்!
அங்கே சுற்றி இங்கே சுற்றி, இப்போது இந்தியப் பெருங்கடல் மீதும் ட்ரம்ப்பின் கண் விழுந்திருக்கிறது. இந்தப் பெருங்கடலில், பிரிட்டனின் நிர்வாகத்தில் சாகோஸ் தீவுகள் உள்ளன. டீகோகார்சியா உள்ளிட்ட அந்தத் தீவுகளை, அவற்றின் மூல உரிமையாளரான மொரீசியஸ் நாட்டிடமே ஒப்படைத்துவிடுவது என்று இப்போது கீர் ஸ்டார்மர் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘இது முட்டாள்தனமான முடிவு‘ என்ற அளவுக்குப் பதிவிட்டிருக்கிற ட்ரம்ப், வழக்கம் போல சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இது சாதகமாகிவிடும் என்று புலம்பியிருக்கிறார். டீகோ கார்சியா தீவில் ஏற்கெனவே அமெரிக்க ராணுவத் தளம் இருக்கிறது. அங்கு ராணுவத்தளம் அமைப்பதற்காகத் தீவின் பூர்வீகக்குடிகளைச் சேர்ந்த 2,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.
‘பிரிட்டன் இப்படி சாகோஸ் தீவுகளைத் தன் விருப்பப்படி மொரீசியசிடம் மாற்ற முடியும் என்றால், நான் கிரீன்லாந்தை வாங்க முயல்வது எப்படிக் குற்றமாகும்’ என்று ட்ரம்ப் கேட்டிருக்கிறார். உலக நாடுகள் என்ன பதில் சொல்லப்போகின்றன என்பது இருக்கட்டும், மோடி அரசு சொல்வது என்ன? இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரியிலிருந்து 1800 கி.மீ. தொலைவிலேயே இருக்கிற தீவுத் தொகுப்பில் கண் வைத்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளார் ட்ரம்ப்... இந்தத் தீவுகள் மொரீசியஸ்சுக்கே சொந்தமானவை என்ற சரியான நிலைப்பாட்டை முன்பே எடுத்துள்ள இந்தியா இன்று என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போகிறது?
ஐ.நா-வுக்குப் போட்டியாக தான் அமைக்கும் அமைதிக் குழுவில் இணையுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்தக் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தை வரவேற்பதாக மோடி கூறியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான இறக்குமதி வரிப் போர் பின்னணியில், அதை இக்குழுவில் இணைவதற்கான ஒரு பேரம் பேசும் கருவியாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்துவார் என்ற கருத்துகளும் பரவலாகக் எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. இது நிதானமா அல்லது குழப்பமா என்று நாடு கவனித்துக்கொண்டிருக்கிறது. ஐ.நா சபையின் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதை ஏற்காத ட்ரம்ப், கடந்த ஆண்டுகளில், ஐ.நா-வுக்கும் அதன் அமைதி காக்கும் படைக்குமான நிதியை 83 சதவிகிதம் வெட்டினார். ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) உள்ளிட்ட ஐ.நா அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக்கொண்டார்.
புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல ஒப்பந்தங்களிலிருந்து அமெரிக்காவை வெளியே வரவைத்தார் ட்ரம்ப். ஐ.நா சபையின் நிரந்தர பாதுகாப்புக் குழு நாடுகளுக்குத் தீர்மானங்களைத் தள்ளுபடி செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் இருப்பது தெரிந்ததுதான். மேற்படி காஸா அமைதிக்குழுவிலோ, தனக்கு மட்டுமே வீட்டோ அதிகாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆகவே, இது ஒரு போட்டி ஐ.நா. சபையா என்ற கேள்வியும் எழுகிறது. எதிர் காலத்தில் உலக நாடுகளைத் தன் நோக்கங்களுக்கு ஏற்ப ஆடவைக்க வேண்டும் என்பதுதான் ட்ரம்ப்பின் திட்டம். அதைப் புரிந்துகொண்டதால், அமைதிக் குழு பற்றிய கேள்விகளும், விமர்சனங்களும் எழுகின்றன. அந்த அமைப்பில் பங்கேற்க இயலாது என்ற மறுப்புகளும் வருகின்றன. அந்த நவீன புவியதிகார நோக்கத்தை அம்பலப்படுத்தி, அதன் ‘அமைதிக் குழு முகமூடியை’ கழற்றியெறிய வேண்டும்!
[0]
விகடன் ப்ளஸ் (ஜனவரி 21) இணையப் பதிப்பில் வந்துள்ள எனது கட்டுரை
No comments:
Post a Comment