‘பராசக்தி’ (2026) வெளியானபோது உடனடியாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை, படத்தைப் பற்றிய விமர்சனங்களும் விளக்கங்களும் வந்து கொண்டிருக்கும் பின்னணியில் திரையரங்கம் செல்லாமல் இருக்க முடியவில்லை.
முழுமையாகப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் சிந்தனை: இந்த 2020களில் கூட வாசல் வழியாகவும் புறவாசல் வழியாகவும் ஜன்னல் கம்பிகளின் ஊடாகவும், இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் மீது அந்த மொழியைத் திணிக்கிற வன்மர்கள் பற்றிய எச்சரிக்கையை, 1950–60களில் நடந்த போராட்டங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைகளுக்குத் தேவையான ஒரு வரலாற்று வகுப்பு.
அரசியல் விழிப்போடு இருப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்தான் என்றாலும், இக்காலத்து நிகழ்விலிருந்து கடந்த அந்தக் காலத்துக்கு இட்டுச் செல்கிற ஓர் அறிமுகக் காட்சியை வைத்திருக்கலாமே என்று தோன்றியது.
ஜவஹர்லால் நேருவை வாக்குறுதி அளிக்க வைத்த முதல் கட்டப் போராட்டத்தில் கல்லூரி மாணவனாகக் களம் இறங்கிய செழியன், ரயில்வே தொழிலாளியான பிறகு, அந்த வாக்குறுதி தொடரும் என்று லால் பகதூர் சாஸ்திரியை அறிவிக்க வைத்த இரண்டாம் கட்டப் போராட்டத்தின்போது, தன் நண்பனுக்கு நேர்ந்ததை எண்ணித் தம்பியைத் தடுப்பதில் உணர்வு இருக்கிறது என்றாலும், அரசியல் உறுதி வெளிப்படவில்லை. கதாபாத்திரத்தைத் தெளிவாக வார்க்க, அல்லது அந்த உணர்வை நியாயப்படுத்தும் வலுவான கோர்ப்புகளை அமைக்கத் தவறியிருக்கிறார்கள்.
அண்ணா, நேரு, இந்திரா, பக்தவச்சலம் ஆகியோரைப் பொருத்தமான தோற்றமுள்ள நடிகர்களால் சித்தரித்திருப்பது உண்மைத்தன்மையைக் கூட்டுகிறது. நேருவின் வாக்குறுதி தொடரும் என்று அறிவித்த லால்பகதூர் சாஸ்திரியையும், அப்போது இளையவர்களைத் திரட்டிய கலைஞரையும் அதே போல் தோற்றப் பொருத்தத்துடன் சித்தரித்திருக்கலாமே?
மொழித் திணிப்பு செழியனுக்கான ஒன்றிய அரசு வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிப்பது, உறவுக்காரியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகளுமான காதலிக்குப் போராட்டத்தில் ஈடுபாடு, மக்களிடையே கையெழுத்து இயக்கம், அன்றைய ஒன்றிய தகவல்–ஒலிபரப்புத்துறை அமைச்சர் இந்திராகாந்தி வருகை, அவருக்கு மக்களின் உண்மை உணர்வைப் புரியவைக்க எடுக்கப்படும் முயற்சிகள், அவற்றைச் சீர்குலைப்பதற்கு அரசியல் மட்டத்திலும் அதிகார வட்டத்திலும் எடுக்கப்படுகிற தடையாணை உள்ளிட்ட நடவடிக்கைகள்… என அடர்த்தியான சித்தரிப்புகள் நிரம்பியிருக்கின்றன. பொள்ளாச்சியில் காவல்துறையும் ராணுவமும் நடத்திய மனிதவேட்டையைச் சித்தரிக்கும் பிற்பகுதி உள்ளத்தை உறைய வைக்கிறது.
“மொழி உரிமைக்காக ஒருவன் போராடுகிறான் என்றால் அவன் என் தம்பிதான்,” என்று அந்நாள் களநாயகரான அண்ணா சொல்கிறார். “நாங்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தியைத் திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்… தேவையைப் பொறுத்து எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்… நாடு ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழி உரிமையை வலியுறுத்துகிறோம்….” என்று அந்தப் போராட்டத்தின் நியாய வலிமையை நாயகன் உரைக்கிறான். தமிழர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி என பல்வேறு மொழிகளைச் சார்ந்தோறும் தங்களின் உரிமைக்காக ஒன்றிய அமைச்சர் முன் அணி வகுக்கிறார்கள். இவையெல்லாம் படத்திற்கு ஆழமான அரசியல்/வரலாற்று அடித்தளத்தை அமைக்கின்றன.
பல மாநிலங்களையும் சேர்ந்த மாணவர்கள், ‘புறநானூற்றுப் படை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த குழுவாகக் கூடுகிறார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வேறு பல மாநிலங்களிலும் மொழி உரிமைக்காகவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும் குரல்கள் ஒலித்திருக்கின்றன. அவ்வப்போது ஒருமைப்பாடுகள் பகிரப்பட்டிருக்கின்றன. இப்போதும் அவை தொடர்கின்றன. அவையெல்லாம் ஒரே அமைப்பாக அல்லது ஒரே இயக்கமாகத் திரண்டு வெளிப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. படத்தில் அப்படிப்பட்ட ஒரே இயக்கத்தின் உறுப்பினர்களாகக் காட்டப்படுகிறார்கள். பல மொழியினருக்குமான அமைப்பில், ஒரு மொழியின் இலக்கியச் சொல்லை அடையாளப் பெயராக்கியிருப்பார்களா? இப்படியான கேள்விகள் இருப்பினும், நாடுதழுவிய ஒருங்கிணைந்த முழக்கமாக எழ வேண்டியதன் தற்காலச் சூழலின் தேவை இந்த வடிவில் வலியுறுத்தப்படுவதாக எடுத்துக்கொள்ள முடிகிறது.
ஆயினும், இவையனைத்தும் துண்டு துண்டு வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன; நேர்த்தியான கதையாகக் கோர்ப்பதற்குத் தேவையான கூடுதல் மெனக்கிடல்களில் ஒரு போதாமை தெரிகிறது. அதே போல, மற்ற மொழியினரின் பங்கேற்பு பற்றிய அக்கறையை வெளிப்படுத்தியவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துக் களத்திலும் நாடாளுமன்றத்திலும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு பற்றிப் பதிவு செய்யத் தவறியிருப்பதும் போதாமைதான் (மக்களுக்காகக் களம் கண்டு தியாகத் தழும்பேறியிருந்தாலம் இப்படிப்பட்ட கண்டுகொள்ளாமைகள் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதா என்ன?).
திரையின் விறுவிறுப்பை உறுதிப்படுத்துவது செழியனைக் கண்டுபிடித்து வேட்டையாட ஒன்றிய புலனாய்வு அதிகாரி திருநாடன் துடிப்பதுதான். ஆனால், அந்த வெறிக்கான பின்புலம் சன்னமாக இருக்கிறது.
1952இல் கலைஞர் கதை-வசனத்திலும் சிவாஜி கணேசன் அறிமுகத்திலும் வெளியான ‘பராசக்தி’ தமிழ்ச் சமூகத்திலும், அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. அதே பெயரை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இப்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு என்ன வந்தது?
இந்தப் போதாமைகளை இட்டு நிரப்பியிருக்கின்றன சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோரின் நடிப்பும், கால உணர்வைத் தரும் ஜி.வி. பிரகாஷ் இசையும், ரவி. கே. சந்திரன் ஒளிப்பதிவும். சுதா கொங்கரா. அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, சான் கருப்புசாமி உரையாடல்களும் சிறப்பிடம் பெறுகின்றன. அப்போதைய ரயில் நிலையங்கள், நிலக்கரி எஞ்சின்கள் என கலை, உடை ஏற்பாடுகள் 60 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்களுக்கு இட்டுச் செல்கின்றன.
அரசியலாக மனதில் தடம் பதிக்கிற ஆக்கம், சினிமாவாக ஒட்டுவதில் தடுமாறுகிறதுதான். ஆனாலும் இந்தப் படத்தை வலுவாகப் பரிந்துரைப்பேன் – ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டக் களத்தைக் காட்டுவதால், இன்றைக்கும் உரக்கச் சொல்ல வேண்டிய கருத்தை முன்வைப்பதால்.
No comments:
Post a Comment