பேசிக்கொண்டிருக்கிறபோதே, நமது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுண்டா? அதனால் பேச்சு தடைப்பட்டதுண்டா?
எனக்கு அந்த அனுபவம் உண்டு. கல்லூரிப் படிப்பை முடி(றி)த்துக்கொண்டு வேலையையும் வேறு வேறு சிந்தனைகளையும் தேடிச் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நள்ளிரவு நேரம். மதுரை ரயில்வே மைதானத்தின் மணலில் அமர்ந்து, திருச்சியிலிருந்து வந்த நண்பன் குணசேகரனும் நானும் அவரவர் காதல் நிலவரம், திரைப்பட விமர்சனம், திருவிழாக் கூட்டம், அரசியல் திருப்பம், அறிவியல் வெளிச்சம் என்று பயணித்தோம்.இயல்பாகப் பேச்சு கடவுள், பகுத்தறிவு என்ற களத்திற்கு வந்தது. எனக்கு முன்பே இறையென ஏதும் இல்லையென்ற தெளிவைப் பெற்றுவிட்டவன் அவன். நானோ, மீனாட்சி கோயில் கருவறையைச் சுற்றி வரும் உள் மண்டபப் பாதையின் ஒரு மூலையில் லிங்க அறைக்கு எதிரில் நெடுநேரம் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு, ஏதோவொரு நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த என்னுடைய வேலை விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யக்கூடாதா என்று மனமுருகி வேண்டிக்கொள்ளும் கட்டத்தில்தான் இருந்தேன்.
"இறை நம்பிக்கை பகுத்தறிவை முடக்குகிறது," என்றான் குணா.
\"பகுத்தறிவு இறையைப் புரிந்துகொள்ள மறுக்கிறது," என்றேன் நான்.
ஒரு கட்டத்தை அடைந்தபோது அவன், “தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை நம்புகிறார்கள்,” என்றான்.
“இல்லை, தன்னம்பிக்கையின் உயர்ந்த வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்று சொன்னேன்.
அந்தக் கணத்தில் என் பேச்சு தடைப்பட்டது – எண்ணத்திற்கும் சொல்லுக்கும் இடையேயான உள் சண்டையாக மாறியது, எனது வாதம் இடிக்கிறதே என்று தோன்றியது. அதை அவனும் உணர்ந்தானோ? ஒரு சிறு புன்னகையை மட்டும் அவன் பதிலாக அளித்தான்.
மைதானத்திற்குள் வந்த காவலர், ‘என்ன தம்பிகளா இவ்வளவு நேரம்… போங்க போங்க,” என்று அந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தார்.
காலையில் அம்மா கொடுத்த காபியைப் பருகிவிட்டு குணா ஊருக்குப் புறப்பட்டான். இந்தப் பொருள் பற்றிய எங்கள் உரையாடல் கடிதங்களில் தொடர்ந்தது. இதே வாதத்தை, “தன்னம்பிக்கையின் உயர்ந்த வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்ற கருத்தை எழுதிய என்னால் அடுத்த வாக்கியத்துக்குச் செல்ல முடியவில்லை.
நாங்கள் இருவரும் அடுத்த முறை பகுத்தறிவாளர்களாகவே சந்தித்தோம். உரையாடல் பொதுவுடைமைச் சமுதாய மாற்றத்தைப் பற்றியதாகப் பரிணமித்தது. அந்தச் சமுதாயத்தில்தான் இறை நம்பிக்கை மறையும் என்றான். இறை நம்பிக்கை அந்தச் சமுதாயத்தை அடையவிடாமல் தடுக்கும் என்றேன். அப்போதும் புன்னகைத்தான்.
ஒரு குறிப்பிட்ட பின்னணியில் அவரவர் வேலை நிலைமைகளும், அரசியல் வழிமுறை மாறுபாடுகளும் சேர்ந்துகொள்ள எங்களிடையே கடிதப் போக்குவரத்தும் நின்றது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வீதியில் சந்தித்த அவனுடைய உறவினர் ஒருவர், ஆறு மாதங்களுக்கு முன் அவன் மாரடப்பால் காலமாகிவிட்டான் என்ற தகவலைத் தெரிவித்தபோது, என் இதயம் ஒரு நொடி நின்றது.
மனித நேய, பகுத்தறிவு சார்ந்த, சமத்துவ நோக்கம் கொண்ட உரைகளை நிகழ்த்துகிற, எழுதுகிற நேரமெல்லாம் குணாவை இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். இப்போதெல்லாம் எண்ணங்களுக்கும் சொற்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதில்லை.
—---------[0]------------
கிளப்ஹெஸ் தளத்தில் ‘தமிழ் தேசம்’ குழு கூடுகையில் (ஜனவரி 11), திருக்குறள் தொடர்பான கலந்துரையாடல் நிறைவில் சிந்தனைக்கும் சொற்களுக்கும் முரண்பாடு ஏற்படுவது குறித்த கேள்வி வந்தபோது இதனைப் பகிர்ந்துகொண்டேன்.
No comments:
Post a Comment