“கொஞ்ச நாளா அடங்கியிருந்துச்சு. இப்ப மறுபடி பிரச்சினை கிளப்புறாங்களே…?” –காலை நடை நேர நிறைவில் வழக்கமாக அமரும் இருக்கையை அடைந்ததும் ஆதங்கத்தோடு நண்பர் கேட்டார்.
“என்னென்னமோ பிரச்சினைகளைக் கிளப்புறாங்க, நீங்க எதைச் சொல்றீங்க?” புதியது கேட்கும் ஆர்வத்தோடு நான் கேட்டேன்.
“கவர்னர் ஆஃபீசுல திருவள்ளுவர் காவி டிரஸ்ஸில் இருக்கிற மாதிரி பேனர் வெச்சிருந்திருக்காங்க. போதாக்குறைக்கு நெத்தியில பட்டை வேற. இதுக்கு முன்னாடியும் ரவி பீரியட்ல நடந்துச்சு, இப்பவும் நடக்குது.” கைப்பேசித் திரையில் செய்தியைக் காட்டியபடி சொன்னார் நண்பர்.
“மதச்சார்பு வரிகளையும் சேர்த்து வந்தே மாதரம் பாடுறதுக்கு, ஒன்றிய அரசாங்கத்தோட சுற்றறிக்கையைக் காரணம் காட்டினாங்க. வள்ளுவருக்கு காவி உடை மாட்டி விடணுன்னும் மேலேயிருந்து ஆணை வந்துச்சான்னு தெரியலை…”
“இல்லை. இது இப்பத்திய கவர்னரே எடுத்த முடிவுதான் போல இருக்கு. எல்லாக் காலத்துக்கும் பொதுவான வள்ளுவர் ஒரு சனாதனிதான்னு அவர் பேசினதா ஒரு நியூஸ் வருது பாருங்க.” –அதற்குள் தன்னுடைய கைப்பேசித் திரையையும் உயிர்ப்பித்த மற்றொரு நண்பர் அதையும் காட்டினார்.
“சார், உங்களுக்கே தெரியும், நான் ஹிண்டுதான். ஹிண்டுவா இருக்கிறதுல பெருமைப்படுறவன்தான். ஆனா இப்படியெல்லாம் செய்றதை என்னால ஏத்துக்க முடியலை. இப்படியெல்லாம் செஞ்சு எல்லா ஹிண்டூஸ் பத்தியும் தப்பான கருத்தை ஏற்படுத்துறாங்க.”
“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவிச்சிருக்காரு. வேற பல தலைவர்களும் விமர்சனம் பண்ணியிருக்காங்க. ஆனா சீஃப் மினிஸ்டர் விஜய் கம்முனு இருக்காரே…”
“அமைச்சர் அருண்ராஜ் இப்படியெல்லாம் திருவள்ளுவரைக் களங்கப்படுத்தாதீங்கன்னு பதிவு போட்டிருக்கிறாரு, நல்ல விசயம். ஆனா, இது அவரோட சொந்தக் கருத்துங்கிற மாதிரி போயிடக் கூடாது. முதலமைச்சரே சொன்னால் அதிகாரப்பூர்வமாவும் இருக்கும். அவங்க கட்சிக்கு மரியாதையாவும் இருக்கும்.”
“அவங்க ஆட்சிக்கும் கம்பீரமா இருக்கும். ஆனா, அதைப் பத்தியெல்லாம் அவரு கேர் பண்றாரான்னே தெரியலையலையே...”
“இன்னும் இது மாதிரி நிறைய வரத்தானே போகுது. அப்ப என்ன செய்றாருன்னு பார்க்கலாம். ஆனா ஒண்ணு…”
“முழுசா சொல்லி முடிங்க சார். என்னாது அது?”
“வள்ளுவரோட அங்கிக்கு வேற வண்ணம் பூசுறதும் சரி, அதைக் கண்டுக்காம விடுறதும் சரி, ரெண்டுமே அவரை ஆடையே இல்லாம நிறுத்துற வேலைதான். ஆனா, திருக்குறளே அவருக்கு வலுவான அங்கிதான்றதை மறந்துடுறாங்க.”
அந்தக் கணத்தில் கவ்விய மௌனம், வழக்கமான தேநீர்க்கடையை அடைந்து டீ, காஃபி என்று கேட்கிற வரையில் நீடித்தது.

No comments:
Post a Comment