காலை நடையில், பூங்கா நிழலில்…
காலை நடையின் கடைசிக்கட்டப் பூங்காப் பேச்சில் ஒருவரின் ஆதங்கம்.
“என்ன அநியாயம்! யார் கொடுத்த அதிகாரம்? இதுக்குப் பழி வாங்குறதுக்குன்னு சில பேரு கிளம்புவாங்க. அவங்க கோபத்துல நியாயம் இருக்கும், ஆனா வழிதான் வன்முறையா இருக்கும்.”
இன்னொருவரின் கவலை.
“ஆமா, சில குரூப்புகள் ஆர்மியோட மோதுறதுக்குப் பதிலா, பப்ளிக் பிளேஸ்கள்ல அட்டாக் பண்ணுவாங்க. பாதிக்கப்படுறவங்க என்னவோ ஆர்டினரி பீப்பிள்தான்… என்ன சார் நாங்கதான் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க சைலன்ட்டா இருக்கீங்களே?”
மூன்றாமவரின் விசாரிப்பு.
“என்ன பேசுறது போங்க. அப்பட்டமா ஒரு பொய்யைக் கிளப்பிவிடுறாங்க… அதையே காரணமாச் சொல்லி உலகத்தைக் காப்பாத்துறதுக்கு இதுதான் வழின்னு போர் தொடுக்கிறாங்க. ஆனா உலகத்தால அதைத் தடுக்க முடியலை. இந்த லட்சணத்துல மத்த நாடுகளுக்கு இடையிலே போர் நடந்தா சமரசத்தை ஏற்படுத்துறேன், நடுநிலைப் பேச்சு நடத்துறேன்னு பஞ்சாயத்து பண்ணுற வேடிக்கை வேற. அதுக்காக நோபல் பரிசு கொடுக்கணும்னு கூச்சமில்லாமக் கேட்டது வேற.”
“அரசியல்னாலே அருவருப்புதான். அதிலேயும் உலக அரசியல்னா அது ஆபத்தானதாவும் இருக்கு. இதுக்கெல்லாம் யார்தான் காரணம்? வழக்கம்போல கேபிட்டலிசம்தான் காரணம்னு சொல்லாதீங்க சார்.”
“பாதி பதிலை நீங்களே சொல்லிட்டீங்க. அதனால அதை நான் மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை…”
“மீதி பதில் என்ன சார்? உள்நாட்டிலேயும் இதுதான் நிலைமை, உலகத்துலேயும் இதுதான் நிலவரம். இதுல யாருக்கெல்லாம் பொறுப்பு இருக்குங்கிறீங்க?”
“யார் யாருக்கோ பொறுப்பு இருக்குதுங்க நண்பரே… நாம நம்ம மட்டத்திலேயே பேசுவோம். அரசியல்னாலே அருவருப்புன்னு அதிலே ஈடுபட மறுக்கிறவங்க, ஓட்டுப்போடுறதோட அரசியல் கடமை முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறவங்க… இவங்களுக்கும் பொறுப்பு இருக்கு. இன்னிக்குக் கூட சாயங்காலம், ஈரான்ல அமெரிக்கப் படையோட அத்துமீறலைக் கண்டிச்சு பல ஊர்கள்ல இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஏதோ அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவங்கதான் இதுக்கெல்லாம் கடமைப்பட்டவங்கங்கிற மாதிரி மத்தவங்க அதைக் கண்டுக்கிடறதே இல்லையே… தேசத்தோட குரலா ஒலிக்கணும்னா ஆகப் பெரும்பாலானவங்க அதிலே கலந்துக்கிடணும்ல…”
“சுத்தி சுத்தி நம்மகிட்டயே வந்துட்டாரு பாருங்க.”
“இவரு கிடக்கிறாரு… நீங்க சொல்லுங்க சார், நம்ம ஊர்ல எங்கே நடக்குதுன்னு, நானும் வர்றேன.”
சபை கலைந்த பின் வழக்கமான தேநீர்க் கடை காஃபி கூடுதல் சுவையுடன் இருந்ததாகப் பட்டது.

No comments:
Post a Comment