Sunday, 15 March 2026

OBC இடஒதுக்கீடும் OCR ஓட்டமும்: கிரீமி லேயர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறுவதென்ன?

 👉இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; அது சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான திட்டம்; எனவே, ஓர் அலுவலரின் சமூக நிலைக்கான அடையாளம் அவர் பெறுகிற சம்பளத்தில் இல்லை என்பது வெறும் தீர்ப்பல்ல. கை தட்டி வரவேற்கத்தக்க நீதி!



ழக்கமான ஒரு தடகளத் தடையோட்டப் போட்டியில் (அப்ஸ்டகிள் ரேஸ்) குறிப்பிட்ட மைதானம், குறிப்பிட்ட தொலைவு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் உயரத்திலும் தாண்டு தடைகள் என இருக்கும். இன்னொரு வகையான “தடைக் கள ஓட்டப் போட்டி” ஒன்று இருக்கிறது. அதில், இப்படி வரையறுக்கப்பட்ட தடைகளுக்கு மாறாக எதிர்பாராத சவால்கள் எதிர்ப்படும். ஊருக்கு வெளியே ஓடும் ஆறு, அதைக் கடந்ததும் காடு, சேறும் சகதியுமான தரை, கற்கள் நிறைந்த பாதை, உயரமான சுவர், குறுகலான பொந்து… இப்படியாக.

 

கால் பாதங்களையும் முட்டிகளையும் பதம் பார்த்துவிடக்கூடிய அந்த ஓட்டத்துக்குப் பெயர் அப்ஸ்டகிள் கோர்ஸ் ரேசிங் (ஓ.சி.ஆர்). சமூகநீதியை நிலைநாட்டும் போராட்டம் அத்தகைய ஒரு தொடர் ஓ.சி.ஆர் போலவே நடக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தில் பட்டியல் சாதிகளையும் பழங்குடிகளையும் சேர்ந்தோருக்குக் கல்வி நிலையங்களிலும் அரசுப் பணிகளிலும் 22 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சேர்க்கப்பட்டபோதே ஒரு பகுதியினர் முதல் தடையைப் போட்டார்கள். அந்தத் தடைக்கு “தகுதி” என்று பெயர் சூட்டப்பட்டது.

நேரடியாக இந்த மக்களுக்கான கல்வியையும் வேலையையும் மறுக்க முடியாது என்பதால், தகுதியையும் திறமையையும் இட ஒதுக்கீடு கீழே இறக்கிவிடும் என்றார்கள். கால வரம்பின்றி நீட்டித்தால், சாதி அடிப்படையிலான பிளவுகள் மேலோங்கிவிடும் என்றார்கள். என்னவோ, சமுதாயம் அது வரையில் ”ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே” என்று பாடிக்கொண்டிருந்தது போல! உண்மையிலேயே அப்படிக் கவலைப்பட்டவர்களும் இருந்தார்கள். அரசமைப்பு சாசன வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கர் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்குப் பிறகு சட்டம் ஏற்கப்பட்டது.



 OBC மக்களின் கோரிக்கை!

இந்தியச் சமுதாய வெளியில் இவ்விரு பிரிவினரும் அல்லாத, சாதிக் கோபுரத்தின் மேல் அடுக்குகளிலும் இல்லாத, இடைநிலையில் நிறுத்தப்பட்டவர்களான, “ஓ.பி.சி” எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரும் இந்த உரிமையைக் கோரினார்கள். தமிழ்நாட்டில், விடுதலைக்கு முன்பே 1920-களிலேயே நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை (கம்யூனல் ஜி.ஓ) இதற்கொரு வலுவான முன்னுரையை எழுதியது.

விடுதலைக்குப் பின், 1970-ல் திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு. கருணாநிதி அமைத்த சட்டநாதன் குழு மற்றொரு மைல்கல் ஆனது. பீகார் (1971), கர்நாடகம் (1972) ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்ட குழுக்களும் இதில் பங்களித்தன. தேசிய அளவில், 1979-ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு, பீகாரைச் சேர்ந்த சமூக–அரசியல் செயல்பாட்டாளர் பீ.பி. மண்டல் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது. 1980-ல் அந்த ஆணையம் தனது அறிக்கையைப் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தது. முன்னதாக 1953-ம் ஆண்டிலேயே காகா காலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்குப் பரிந்துரைத்திருந்தது.

ஆயினும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தாலும், ஒரு பகுதியினரின் எதிர்ப்பாலும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. மண்டல் ஆணையத்தின் அறிக்கையும் பத்தாண்டுக் காலம் அப்படியே அலமாரியிலிருந்தது. 1990-ல் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அந்த அறிக்கையை வெளியே எடுத்தது. அரசாங்க வேலைகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தது. அதைத் தொடர்ந்துதான், அந்த அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக்கொள்ள முடிவு செய்தது.

2006-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஐ.ஐ.டி., ஐ.டி.ஐ உள்ளிட்ட உயர் கல்வி வளாகங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்குச் சட்டம் நிறைவேற்றியது. அதன் மூலம் கல்வியிலும் சமூக நீதிக்கான ஏற்பாடு முழுமையடைந்தது.

 


 ஓட்டத் தடைகள்!

மண்டல் ஆணையத்தின் இவ்விரு பரிந்துரைகளும் பயன்பாட்டுக்கு வந்தது இணக்கமான பாதையில் அல்ல. அரசியல் களத்தில் கடுமையான தாக்குதல்கள், ‘எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து செல்கிறவனுக்கு டாக்டர் பட்டம்’ என்பது போன்ற கொச்சையான விமர்சனங்கள், தீக்குளிப்பும் கலந்த கலவரங்கள் என்ற நிலவரங்களையெல்லாம் கடக்க வேண்டியிருந்தது.

‘ஓ.சி.ஆர் ஓட்டம்’!
ஓட்டத்தைத் தடுப்பதாகக் குறுக்கே போடப்பட்ட மற்றொரு பாறைதான் ‘கிரீமி லேயர்’! இந்தச் சமூகங்களிலேயே பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் விதி. பால் கொதித்து அடங்கியபின் மேலாக ஆடை மிதக்கும் அல்லவா, அதுதான் கிரீமி லேயர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பாலாடை போல மேல் நிலையில் இருப்போரைக் குறிப்பதாக இந்தச் சொல்லாடல் வந்தது.

வி.பி.சிங் அரசு கொண்டுவந்த சட்டத்தில் இந்தப் பாலாடை விதி இல்லை. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையே எதிர்த்து இந்திரா சாவ்னி என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றம் சென்றார். வேறு சிலரும் நீதிமன்றத்தை நாடினார்கள் என்றாலும், அவர் பெயராலேயே அந்த வழக்கு அடையாளம் பெற்றுவிட்டது. நீதிபதிகள் 1992-ல் அளித்த தீர்ப்பில்தான் “கிரீமி லேயர்” விதி செய்ய ஆணையிட்டார்கள்.

வந்தது பாலாடை விதி!

நீதிபதிகள் எம்.என்.வெங்கடாசலையா, ஏ.எம். அஹமதி, பி.பி. ஜீவன் ரெட்டி, கே.என். சிங், எஸ். ரத்தினவேல் பாண்டியன், டி.கே. முகர்ஜி, ஏ.எம். ரே, கே.டி. காந்தா, ஆர்.எம். சகாய் ஆகியோர் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு வரலாற்றில் இடம்பெற்ற அந்தத் தீர்ப்பை அளித்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று அந்த அமர்வு உறுதிப்படுத்தியது. அதே வேளையில், மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக்கூடாது என்று வரையறுத்தது. பொருளாதாரத்தில் மேல் நிலைக்கு வந்தவர்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கிவைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். (தமிழ்நாட்டவரான நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், சாதியக் கட்டமைப்பு பற்றியும், சமூக நீதி குறித்தும் அளித்த அறிக்கை சிறப்பு வாய்ந்தது.)

உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் மேல் தட்டினரை விலக்கிவைக்க 1993-ல் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு அலுவல் குறிப்பாணை ஒன்றை வெளியிட்டது. 2004-ல் மன்மோகன் சிங் அரசு வெளியிட்ட ஒரு விளக்கக் கடிதம், பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை ஊழியர்களின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பிள்ளைகள் கிரீமி லேயர் அடுக்கில் வருகிறார்களா இல்லையா என்று தீர்மானிக்க வழிகாட்டியது. ரூ. 8 லட்சம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.



தீர்ப்பல்ல, நீதி!

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் மனுக்களை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம். மார்ச் 11 அன்று முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா, தீபங்கர் தத்தா, மனோஜ் மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு கூறியுள்ள கருத்து இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கும், வருமான அடிப்படையிலேயே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று வாதிடுவோருக்கும் ஒரு உரத்த பாடமாக ஒலிக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; அது சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான திட்டம்; எனவே, ஓர் அலுவலரின் சமூக நிலைக்கான அடையாளம் அவர் பெறுகிற சம்பளத்தில் இல்லை என்பது வெறும் தீர்ப்பல்ல. கை தட்டி வரவேற்கத்தக்க நீதி. ஒருவர் கிரீமி லேயர் தட்டில் வருவாரா மாட்டாரா என்று தீர்மானிப்பதற்கு அவருடைய பெற்றோரின் பதவி நிலையும் பணிப் பிரிவுமே முதன்மையான அளவுகோல் என்றும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதை எளிமையாகப் புரிந்துகொள்ள – ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்கிற ஒருவரது சம்பளம், வேறொரு பொதுத்துறை நிறுவனத்தில் அவரைப் போலவே உதவியாளராக இருப்பவரின் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். அதற்காக அவருடைய சமூக நிலையோ பதவி நிலையோ உயர்ந்துவிட்டதாகக் கூற இயலாது. அப்போது, அவருடைய பிள்ளைக்கு இட ஒதுக்கீட்டு வாய்ப்பைக் கோரும் உரிமை உண்டு.

ரூ.8 லட்சம் வருமான வரம்பைக் கணக்கிடும்போது, பெற்றோரின் சம்பளத்தையோ, அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களானால் அந்த வருமானத்தையோ அதில் சேர்க்கக் கூடாது. வணிகம், வாடகை போன்ற இதர வழிகளில் வரும் வருமானத்தைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பு கூறுகிறது.

தடை நீக்கத்தின் முக்கியத்துவம்!
இதன் மூலம் ஓ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்தோர் அரசுப் பணிகளில் சேர்வதற்கு இருந்து வந்த ஓ.சி.ஆர் தடை அகற்றப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுப் பணியிடங்கள் காலியாக இருப்பது பற்றிய தகவல்கள், அந்தத் தடை அகற்றப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

 

2025 ஜூலை நிலவரப்படி, மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும் ஓ.பி.சி பிரிவினருக்கான கற்பித்தல் பணிகளில் 1,491 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்) 164 இடங்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி) கணிசமான எண்ணிக்கையிலான இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கான பேராசிரியர் பணியிடங்கள் 80 சதவிகிதம் காலியாக இருப்பதைப் பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தகுதியான விண்ணப்பதாரர்கள் இருந்தும், கிரீமி லேயர் உள்ளிட்ட தடைகளால் அவர்களுக்குக் கதவு மூடப்பட்டிருப்பதையே குறிக்கிறது.



 

 பல லட்சம் தேங்குநிலைக் காலியிடங்கள் நிரப்பப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், இன்றும் பல ஒன்றிய துறைகளில் ஆயிரக்கணக்கான ஓ.பி.சி பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன. இந்த நிலைமையை மாற்றுவதிலும், ஓ.பி.சி பணியிடங்களில் அவர்கள் நியமிக்கப்படுவதிலும், அவர்களது உழைப்பு நாட்டுக்குப் போய்ச் சேர்வதிலும் ஒன்றிய ஆட்சியாளர்கள் அக்கறை காட்டியதில்லை. அந்த இடங்கள் காலியாகவே இருப்பதால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவை பாதிக்கப்படுகிறது என்ற கவலையும் இருந்ததில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புக்குப் பிறகாவது அந்த அக்கறையும் கவலையும் ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது வரையில் என்றால்… அந்த எதிர்பார்ப்போடுதான், சமூகநீதிப் போராட்டப் பயணத்தில் தனித்தடம் பதித்திருக்கும் தமிழ்நாட்டின் சார்பில், முதலமைச்சர் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

‘ஓ.பி.சி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி’ என்றும், “சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் தகுதி பெற்றும், வருமான வரம்பு போன்ற காரணங்களால் இடங்களை இழந்த ஓ.பி.சி தேர்வாளர்களுக்கு, ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய வேண்டும்” என்றும், “இந்தத் தீர்ப்பை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு, ஒன்றிய அரசு தனது நிர்வாகக் கட்டமைப்பை அரசமைப்பு சாசனத்தின் சமத்துவ நெறிமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்,” என்றும் முதலமைச்சர் முன்மொழிந்திருப்பவை அவ்வண்ணமே வழிமொழியத் தக்கவை.

இதை விவாதிக்கிறபோது, “இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி அடிப்படையில் தகுதியைப் பின்னுக்குத் தள்ளி வாய்ப்பளித்துக்கொண்டே இருப்பது” என்ற குரலும் ஒலிக்கிறது. தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் ஆகியோருக்கான தகுதி மறுக்கப்பட்டதே சாதி அடிப்படையில்தான். இனி அந்த அநீதி தொடராது என்ற புள்ளியைச் சந்திக்கிற வரையில் இது தொடரத்தான் வேண்டும்.

[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் (மார்ச் 14, 2026) வந்துள்ள எனது கட்டுரை

 

 


No comments: