எழுத்தாக ஒரு புனைவைப் படிக்கிறபோது கதை மாந்தர்களின் உருவத்தையும் குணத்தையும் சித்தரிப்பின் வழியாகக் கற்பனை செய்துகொள்கிறோம். திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகத்தில், படைப்பாளி தன் கதை மாந்தர்களை எப்படிக் காட்ட நினைத்தாரோ அப்படியே வெளிப்படுத்த முடிகிறது.
ஆயினும், திரைப்படத்தில் ஒரு காட்சி, அது எவ்வளவு கூர்மையாக, துல்லியமாக, தெளிவாக, அழகாக இருந்தாலும் அந்தச் செவ்வகத்திற்குள் பார்வையாளர்களை நிறுத்திவிடுகிறது. வீட்டுத் தொலைக்காட்சியில் பார்க்கிறபோதாவது சுற்றுமுற்றும் பார்த்துக்கொள்ளலாம். திரையரங்கத்திலோ இருட்டில் அந்தச் செவ்வகத் திரையன்றி வேறெங்கும் பார்க்க இயலாது.
எழுத்தாக்கமோ, அப்படிப்பட்ட செவ்வகம் சதுரம் வட்டம் என எந்த எல்லையுமின்றி விரிவாகக் கற்பனை செய்ய விடுகிறது. வாசகர் ஒரு புதிய கதையே கூட உருவாகும். எழுத்தின் ஆற்றல் இது.
இலக்கியத்தில் மாற்றி யோசிப்பது அடிப்படையான ஒரு உரிமை. மறுவாசிப்பு ஒரு முக்கியமான வளர்ச்சி. ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையை அப்படியேதான் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. கதையில் இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி யோசித்து ஒரு புதிய படைப்பாக வழங்க படைப்பாளிகள் முயன்று வந்ததால்தான் புதிய புதிய இலக்கியச் செல்வங்கள் கிடைத்தன. இல்லையேல் சொன்னதையே சொல்லி இலக்கியம் தேங்கிப்போயிருக்கும்.
ஆனால், இன்று, அவ்வாறு மாற்றி யோசிப்பதையும் மறுவாசிப்பில் ஈடுபடுவதையும் எளிதாகச் செய்துவிட முடியாது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் புராண இலக்கியங்கள் என்றால், அதெப்படி மாற்றலாம் என்று கொந்தளிக்கிறார்கள். எவ்வளவு புதிய கற்பனைகள் வந்தாலும் மூலப் படைப்புகள் எந்தச் சேதமும் இல்லாமல் நிலைத்திருக்கும் என்று உணர மறுக்கிறார்கள். உலகின் பல பகுதிகளிலும், குறிப்பாக வலதுசாரி சிந்தனையாளர்கள் மறுவாசிப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள், தாக்குதலிலும் ஈடுபடுகிறார்கள்.
ஆனால், படைப்பு மனம் தாக்குதல்களால் சுருண்டுவிடாமல் படைத்தளித்துக்கொண்டேதான் இருக்கும்.
இதன் இன்னொரு வாதமாக, ஒரு இலக்கியப் புனைவைத் திரைப்படமாக எடுக்கிறபோது, எழுத்தில் படித்ததைப் போல இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. எழுத்தின் தாக்கத்தைக் காட்சியில் கொண்டுவருவது கடினம் என்றுத் திரையாக்கத்தில் ஈடுபடுவோரும் கூறுகிறார்கள்.
ஆனால், எழுத்தைப் போலவே காட்சிச் சித்தரிப்பு இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? திரைப்படமாகச் சரியாக வந்திருக்கிறதா, திரைக்குரிய அழகியலோடு கருத்தைக் கூறுகிறதா என்று பார்ப்பதுதானே முறையாக இருக்கும்? புத்தகத்தைப் படிக்காதவர்கள் திரையாக்கத்தை ரசிக்க முடிகிறதல்லவா?
இலக்கிய மரத்தில் பல கிளைகள் முளைத்தது போலவே, இலக்கியமும் திரைப்படமும் வேறு வேறு கிளைகள். ஒன்றைப் போலவே மற்றொன்று இருக்கத் தேவையில்லை. இந்தப் புரிதலுக்கு வந்துவிட்டால் இரண்டையும் துய்த்து மகிழலாம்.
[0]
–‘வாருங்கள் படைப்போம்’ குழு இணையவழிக் கூடுகையில் (ஜூலை 15) திரைக்கலைஞர் – எழுத்தாளர் இதய நிலவன், வாசகர் – திறனாய்வாளர் ஜமுனா இருவரது உரையாடலைத் தொடர்ந்து நடந்த கருத்துப் பகிர்வில் நான் சொன்னதன் சாறு.
No comments:
Post a Comment