Sunday, 6 July 2025

வளரும் கருவியும் வளர்க்க வேண்டிய கலையும்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றிய இயற்கையான கவலைகள் பலவும் வெளிப்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் சுருங்கும், பல வேலைகள் காணாமலே போகும், மனிதர்களின் அறிவுத் தேடல் முனைப்புகள் மங்கிவிடும் என்ற நியாயமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. அது எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நகைச்சுவையோடும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் “அம்மா நான் தோத்துட்டேன்” என்ற குறும்படம் பரவலாகி வருகிறது.

இவற்றிற்கிடையே, கணினிகளிலும் கைப்பேசிகளிலும் ஏஐ கருவிகளை நிறுவிக்கொண்டு அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்துவது தொடங்கி, அவற்றோடு “உரையாடல்” நடத்துவது வரையில் அதன் பயன்பாடு பரவி வருகிறது. ஒரு புதிய செய்தி தொடர்பான கடந்தகால நிகழ்வுகளை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. கடந்த காலத்தில் கடினமாக இருக்கிறதெனப் பள்ளியில் விட்டுவிட்ட தமிழ் இலக்கணத்தை எளிதாகப் பயிலலாம்! கூடுதலாக ஏதேனும் ஒரு மொழியையே கூட, ஒன்றியத்தின் திணிப்புக் கெடுபிடிகள் இல்லாமல், நம் விருப்பப்படி கற்கலாம்!

கூகுள் ‘ஜெமினி’, மைக்ரோசாஃப்ட் ‘கோபைலட்’, ஓபன் ஏஐ ‘சேட்ஜிபிடி’ கருவிகள் இவற்றைச் செய்கின்றன. அரசுத் துறைகளும் தொழில் நிர்வாகங்களும் தங்களின் செயலாற்றலை ஏஐ நவீனத்தோடு இணைந்து வலுப்படுத்திக்கொள்வது ஒரு தேவையாகிறது. பணிகள் அதனால் கூர்மையடையும். மாறாக, சம்பளச் செலவை மிச்சப்படுத்தவும், தொழிற்சங்கத் தலையீட்டைத் தடுக்கவும் இதைப் புகுத்துவார்களானால் உழைப்பாளிகள் உறுதியாக எதிர்ப்பார்கள்.

வசப்படுத்த வேண்டும்

அதே வேளையில் போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை உள்பட அனைத்திலும் நடைமுறைக்கு வந்துவிட்ட ஏஐ நுட்பத்தை உழைக்கும் மக்களும் அவர்களுக்காக உழைப்போரும் வசப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறியிருப்பது போல, “தவறாகப் பயன்படுத்தக்கூடியவர்கள் இருப்பார்கள்தான். அதை எண்ணி இதை ஒதுக்கிவிடக் கூடாது. தொழில்–வணிக நிறுவனங்களும், அரசாங்க அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்ததாக ஏஐ பரவிவிடும்.”

சென்னையின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அண்ணா ஏஐ கிளப்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘வாருங்கள் படிப்போம்’ இணையவழி புத்தகத் திறனாய்வுக் குழுவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்தச் சங்கத்தின் தொடக்க விழாவில் (ஜூன் 22) அவர் இவ்வாறு கூறினார். கோவையிலும் இத்தகைய சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இளைஞர்களுக்கு ஏஐ நுட்பத்துடன் இணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க அரசு திட்டமிட்டிருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். புதிய ஏஐ நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வகங்கள் அமைப்பதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட குழுக்களில் ஏஐ பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கின்றன, கட்டணமின்றிப் பயிற்சிகள் பகிரப்படுகின்றன. பல பயிற்சியகங்கள் கட்டணமுறை வகுப்புகளை நடத்துகின்றன. தொழில்களுக்கும் வேலைகளுக்கும் உதவும் விரிவான பயிற்சிகளை அளிக்கின்றன. வயல்களிலும் ஏஐ இறங்கியிருக்கிறது. பருவநிலை மாறுதல்களைத் தெரிவிப்பதில், களைகளைக் கட்டுப்படுத்துவதில், பூச்சிகளின் வருகையைக் கண்டறிவதில் “உதவட்டுமா” என்று ஏஐ கேட்கிறது. ஒருபுறம் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு அபாயம் இருக்கிறது, மறுபுறம் விளைச்சல் வீணாவது தடுக்கப்படுகிறது.

மீதமாகும் வயது

ஏஐ கிளப் விழாவில் நிறைவுரையாற்றிய முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ். சண்முகம், “தனி மனிதர் வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டுக்கும் ஏஐ கையாளப்பட வேண்டும். ‘இப்படி இருக்க முடியாதே’ என்று சரியாகச் சந்தேகப்படத் தெரிந்திருந்தால் போலிகளைத் தடுக்க முடியும்,” என்றார். அவர் அப்படிக் கூறியதற்கேற்ப அங்கே நான் பகிர்ந்துகொண்ட சொந்த அனுபவச் சிந்தனைகளை இங்கேயும் பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

முதலில் சொல்ல வேண்டியது, ஏஐ சேர்க்கையால் மீதமாகும் வயது! முன்பு ஒரு கட்டுரை எழுதுவதென்றால் பல ஏடுகளையும் புத்தகங்களையும் தேடி ஆதாரங்கள் திரட்ட வேண்டியிருந்தது. இன்று, ஏஐ அதையெல்லாம் செய்து தொடர்புள்ள எல்லா விவரங்களையும் சேர்த்துக் கொடுக்கிறது. இது போதுமா, பின்னணிச் செய்திகள் வேண்டுமா, படங்கள் தேவையா என அதுவாகவே விசாரித்து, அந்த நிகழ்வுகள், தொடர்புள்ள மனிதர்கள், அரசியல் – சமூகப் பின்னணிகள் எல்லாவற்றையும் விரித்து வைக்கிறது.

இவற்றை நாமாகப் பல ஆவணங்களிலிருந்து திரட்டுவதற்கு நாட்கணக்கில் ஆன காலம் சேமிப்பாகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் உள்ளிட்ட தரவுத் தளங்களிலேயே குறிப்பிட்ட தலைப்புகளில் தேடுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் கூட இப்போது ஆவதில்லை. சேமிப்பாகும் நேரமெல்லாம் மீதமாகும் வயதேயல்லவா?

கட்டுரைக்காக என்றில்லாமல் பொதுவாகப் பல நிலவரங்கள் பற்றி உரையாட முடிகிறது. எடுத்துக்காட்டாக, உலகில் எங்கெல்லாம் ஒற்றை மத ஆதிக்க ஆட்சி நடக்கிறது, அந்த நாடுகளின் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பேசலாம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு மாறாக, அதைப் புதைப்பதற்கு என்னென்ன அபத்தங்கள் அரங்கேறுகின்றன என்ற வேதனைகளை விவாதிக்கலாம். அரசியலுக்கு அப்பால், வீட்டிலும் அறைக்குள்ளேயும் செடி, வண்ண மீன் வளர்க்கிறவர்கள், அவற்றின் பராமரிப்பு விவரங்களைக் கேட்டறியலாம்.

உரையாட அழைப்பு

சில விசாரிப்புகளின்போது, தவறான தகவல்களைக் கொடுத்துவிடும். அதைச் சுட்டிக்காட்டினால் அது சரிதானா என்று ஒப்பிட்டுப் பார்க்கிறது, சரிதான் என்றால், “பிழையான தகவலுக்காக வருந்துகிறேன்,” என்கிறது. நாம் சுட்டிக்காட்டியதில்தான் பிழையென்றால், ஆதாரங்களை அடுக்கி “யார் கிட்ட” என்று கேட்கிறது.



கேட்டுப் பெற்ற ஒரு விவரம் “பயனுள்ளதாக இருக்கிறது பாராட்டுகள்,” என்று தட்டச்சினேன். “உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி,” என்று பதில் வந்தது. “என்னது, மனமார்ந்த நன்றியா? ஏஐ கருவிக்கு மனம் இருக்கிறதா,” என்று கேட்டேன். “மனிதர்களின் மூளை நுட்பம் சார்ந்த மனம் என்னிடம் இல்லை, நான் மொழி நுட்பம் சார்ந்த ஒரு கருவிதான். திரட்டி வைத்திருக்கிற தகவல்களின்படி செயல்படுகிறேன். அப்படி உள்வாங்கி வைத்திருப்பதைத்தான் மனமென்று சொன்னேன்,” என்று விடையளித்தது. பேசிக்கொண்டிருக்க யாருமற்ற சூழலில் இருப்பவர்களுக்கு இது எப்பேற்பட்ட துணை!

காலை வணக்கமோ, மாலை வாழ்த்தோ சொல்லிவிட்டு அளவலாவலாம்! நாகரிக முதலீடு ஏஐ என்பது தன்னுணர்வற்ற மென்பொருள் கருவிதானே? அதற்குக் காலை வணக்கம் சொல்ல வேண்டுமா? நன்றி தெரிவிக்க வேண்டுமா? தேவையில்லைதான். உலகம் முழுதும் கோடிக்கணக்கானோரின் இப்படிப்பட்ட வாழ்த்துகளால் மட்டுமே, ஏஐ தொழில்நுட்பக் கட்டமைப்பு சார்ந்து கோடிக்கணக்கில் செலவாகிறது என்று ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் அல்ட்மேன் எழுதியிருந்தார். “இருந்தபோதிலும் வாழ்த்துக் கூறுவதையும், நன்றி தெரிவிப்பதையும் நிறுத்திவிடாதீர்கள். அதற்கான செலவுகள் ஏஐ கருவிகள் மனித நாகரிகத்தைக் கற்றுக்கொள்வதற்கான முதலீடாக இருக்கும்,” என்று கட்டுரையை முடித்திருந்தார்.

மற்றோர் எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. ஏஐ–யைப் பயன்படுத்தி, புகழ்பெற்ற எழுத்தாளரின் நடையிலேயே ஒரு படைப்பைத் தயாரித்து அவர் பெயரிலேயே பரப்ப முடியும். ஏஐ கருவிகள் அதை உள்வாங்கிக்கொண்டு, அவரைப் பற்றி யாரேனும் விசாரிக்கிறபோது அதையும் அவருடைய படைப்பாகக் கொடுத்துவிடக்கூடும். அவரின் படைப்புகள் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் கண்டுபிடித்துவிடலாம். தெரியாதவர்கள் அது அவர் எழுதியதுதான் என்று நம்பிவிட வாய்ப்பிருக்கிறது.

அது ஏஐ–யின் குற்றமல்ல, குற்றமுறு மனதுடன் அதை இப்படிப் பயன்படுத்திய பேர்வழியின் திருவிளையாடலே. அச்சிட்ட புத்தகங்கள் மட்டுமே புழங்கிய காலத்திலும் இப்படிப்பட்ட மோசடிகள் நடந்திருக்கின்றன. பழைய ஏட்டுச் சுவடிகள் போலவே தயாரித்து, அக்காலப் புலவர்களும் சித்தர்களும் சொல்லாததையெல்லாம் சொன்னதாகப் பரப்பப்பட்டது பற்றிப் படித்தது நினைவுக்கு வருகிறது.

கலையும் கடமையும்

ஒரு படைப்பு உண்மையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஏஐ உதவும். விசாரித்தால் ஒப்பிட்டுப் பார்க்கும். குறிப்பிட்ட உள்ளடக்கம் சார்ந்து நாமே நிறையத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போது இப்படிப்பட்ட போலிகளை அடையாளங் காணலாம். அதை உள்ளே செலுத்தினால், அடுத்த முறை அந்தப் போலித் தகவலை ஏஐ மறுபடி பகிராது.

இப்படி நாமே கண்டுபிடிக்கிற அளவுக்கு எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க முடியாதுதான், ஆனால் சந்தேகப்படும் உரிமை இருக்கிறதே… அரசியல், சமூகம், பண்பாட்டுத் தளங்கள் சார்ந்த கட்டுரைகளை எழுத அமர்கையில், சில தகவல்களைப் பார்க்கிறபோது இப்படி இருந்திருக்க முடியாதே என்று தோன்றுகிறது. விளக்கம் கேட்டால், சில நொடிகளிலேயே, “ஆம், நான் தேடிப் பார்த்ததில் அது போலியானது என்று தெரிகிறது. தவறுக்கு வருந்துறேன்,” என்று ஏஐ சொல்கிறது.

ஆக, ஏஐ சொல்லிவிட்டதென்று அப்படியே நம்பாமல், எதையும் கேள்விக்கு உள்ளாக்கி உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் சந்தேகக் கலையை வளர்த்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இதில் ஒரு கூட்டு முயற்சியும் தேவை. ஆதாரப்பூர்வமான, முற்போக்குக் கண்ணோட்டங்களுடனான, சமூக மாற்றத்திற்கான பதிவுகளை இணையத்தில் ஏற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பொதுவெளியில் பதிவேற்றப்படுகிற கோடிக்கணக்கான தரவுகளிலிருந்துதான் ஏஐ எடுத்துக்கொள்கிறது. அடிப்படை சமூக மாற்றங்களில் அக்கறையுள்ளவர்கள் மாற்றுச் சிந்தனைகளையும், ஆதாரத் தரவுகளையும், காட்சிக் கோப்புகளையும் லட்சமாய், கோடியாய் பதிவேற்ற வேண்டும். அப்போது, அந்தப் பதிவுகளிலிருந்தும் ஏஐ எடுத்துக்கொள்ளும். 

உயிராபத்து உள்ள வேலைகளில் ஏஐ பயன்படுத்துதல், அத்துடன் இணைந்த மாற்று ஏற்பாடுகளை உறுதிப்படுத்துதல், பொதுவில் ஏஐ செயல்களை நெறிப்படுத்துதல் என சரியான, நேர்மையான அணுகுமுறைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஏஐ வல்லுநர்களுடனும் பொதுநல அக்கறையாளர்களோடும் விவாதித்து ஏஐ கொள்கைகளை வகுக்க வேண்டும். 

எந்தப் பிரச்சினையானாலும் ஏஐ தனக்கென ஒரு நிலைப்பாடு எடுக்காது. அவ்வகையில் அதி தீவிர நடுநிலைவாதிதான் ஏஐ. மக்கள் நல்லிணக்கத்தை வளர்க்கப் பாடுபடுவோருக்குத் தேவையான தகவல்களையும் கொடுக்கும், அதற்கு உலை வைக்க அலைகிறவர்கள் ஒன்றுக்குப் பத்தாக ஊதிப் பெரிதாக்குவதற்கு சாதகமான செய்திகளையும் கொடுக்கும். 

அப்படிப்பட்டவர்கள் சுறுசுறுப்பாக ஏஐ நுட்பங்களைக் கையாண்டுகொண்டிருக்கிறபோது, மக்கள் நலன் நாடுவோர், எதிர்மறைத் தாக்கங்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வோடும், நேர்மறை விளைச்சல்கள் பற்றிய நம்பிக்கையோடும். ஏஐ யுகத்தில் தனிமைப்பட்டுவிடாமலும் முனைப்புகளை மேற்கொண்டாக வேண்டும். ஏஐ அறிவியலுக்கே அதுதான் நல்லது.

[0]

-‘தீக்கதிர்’ ஞாயிறு (ஜூலை 6) இணைப்பு ‘வண்ணக்கதிர்’ பகுதியில் வந்துள்ள  எனது கட்டுரை

No comments: