காஸாவில் பட்டினிச் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. உணவு கிடைக்காமல் பல நாட்கள் பட்டினியாக இருப்பதால், எலும்பும் தோலுமாகப் படுக்கையில் மக்கள் படுத்துக்கிடப்பதைக் காணொளிகளில் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. உணவு வாங்குவதற்குச் சட்டிகளை ஏந்திக்கொண்டு வரும் மக்கள், முண்டியடித்துக்கொண்டு உணவை வாங்க முயலும் காட்சிகள் நெஞ்சை அறுக்கின்றன. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை கொல்லப்பட்ட நிலையில், தற்போது உணவுப்பஞ்சத்தாலும் குழந்தைகள் செத்துமடிகிறார்கள். இன்னொரு சோமாலியாவாக காஸா மாறியிருக்கிறது.
ஆகவேதான், “எங்களுக்குத் தேவைப்படுவது உங்களின் ஆறுதல் வார்த்தைகள் அல்ல. நடவடிக்கைகள்தான்,” என்கிறார் நூர்–அல்–ஷானா. இவர் சக்திவாய்ந்த குண்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காஸா பகுதியில் உயிருக்கு அஞ்சாமல் செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் பத்திரிகையாளர். “சுற்றி வளைக்கப்பட்டுள்ள மக்கள் உலக சமுதாயத்திடமிருந்து வருகிற வெறுமையான ஒருமைப்பாட்டு வெளிப்பாடுகளால் சோர்வடைந்திருக்கிறார்கள். உங்கள் எல்லைகளைத் திறந்துவிட விரும்புகிறோம். படுகொலைகளை நீங்கள் தடுக்க விரும்புகிறோம்,” என்று சர்வதேச சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
கண் முன்னால் (மிச்சமுள்ள) கட்டடங்கள் தகர்வதையும், (எஞ்சியுள்ள) மக்கள் படுகாயமடைவதையும் (வற்றிப்போன) குழந்தைகள் சாவதையும் பார்க்கிற ஷானா போன்ற செய்தியாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களில் அந்தச் செய்திகளைப் பார்க்கிற எவருமே இப்படித்தான் சொல்வார்கள்.
காஸாவில் உணவுப் பஞ்சம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை ஊடகங்களில் பார்க்கும்போது, செய்தித்தாள்களில் படிக்கும்போது ஏற்படும் வேதனையை விவரிக்க முடியவில்லை. பாலஸ்தீனர் ஒருவர், “என்னால் கோர்வையாகச் சிந்திக்கவோ செயல்படவோ முடியவில்லை,” என்று வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார். அவருடை ய நிலைமைக்குக் காரணம் பட்டினி. குறிப்பிட்ட நேரத்தில் காஃபி பருக முடியாமல் போனாலே சோர்ந்து சுருள்கிறோம். ஆனால், காஸாவில் நாள் கணக்கில் பட்டினிக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் கோர்வையாகச் சிந்திக்கவும் முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
வற்றி உலர்ந்த குழந்தைகள்
அதை விட குழந்தைகளின் நிலைமைதான் பெரும் துயரம். “குழந்தைகளின் உடல்கள் வற்றி உலர்ந்துவிட்டன. அவர்களின் கைகளைப் பிடித்து உயர்த்த முடியாத அளவுக்கு மணிக்கட்டும் தோள்பட்டையும் துவண்டுவிட்டன. அவர்களுடைய உடலைத் தொடும்போது நேரடியாக எலும்புகளைத் தொடுகிறேன், எலும்புக்கும் தோலுக்கும் இடையே சதையே இல்லை,” என்று. பிரிட்டனிலிருந்து காஸாவுக்கு வந்து மருத்துவமனையில் ஒரு தாயாகத் தொண்டாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவர், நண்பர்களுக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்.
ஊட்டச் சத்து கிடைக்காததால் எலும்பும் தோலுமாக இருக்கும் குழந்தைகளை அவ்வப்போது செய்திப் படங்களில் பார்த்திருக்கிறோம். நம் நாட்டிலேயே கூட அப்படிப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். காஸா குழந்தைகளின் உடல் நலிவோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், உணவுக்கு வழியில்லாத வறுமையல்ல. உணவு சென்று சேர்வதற்கான வழி தடுக்கப்படுகிற கொடுமைதான் காரணம். காஸாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் அதைச் செய்துகொண்டிருக்கிறது.
“இந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலையிலிருந்து இஸ்ரேல் தாக்குதல்களால் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். காஸா மருத்துவமனைகள் 24 மணி நேரத்தில் பட்டினியால் 9 பேர் மாண்டதாகப் பதிவு செய்துள்ளன. பட்டினியால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.” இதளை, கத்தார் நாட்டிலிருந்து செயல்படும் பன்னாட்டுச் செய்தி முகமையான அல் ஜசீரா அன்றைய இரவின் தனது கடைசித் தொகுப்பில் தெரிவிக்கிறது.
“மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயிரைத் தக்கவைப்பதற்குத் தேவையான, சிறப்பு ஊட்டமிட்ட உணவு இருப்பு குறைந்து வருகிறது. ஆகஸ்ட் நடுவில் முற்றிலுமாகக் காலியாகிவிடும்,” என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்திருக்கிறது.
உணவைத் தடுக்கும் இஸ்ரேல் ராணுவம்
இந்தச் சொற்ப உணவையும் அந்த மக்களுக்குச் செல்லவிடாமல் ராணுவத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது இஸ்ரேல் அரசு. செஞ்சிலுவைச் சங்கம், அதன் துணை அமைப்பான பாலஸ்தீன பிறைச் சங்கம், எல்லைகள் இல்லா மருத்துவர்கள், எல்லைகள் இல்லா மருந்து உதவிகள், ஆக்ஸ்ஃபாம், குழந்தைளைக் காப்போம், நார்வே அகதிகள் அவை, உலக பொதுமன்னிப்பு, அமெரிக்க அருகமை கீழை அகதிகள் உதவியகம், நேரடி நிவாரணம், மத்திய கிழக்கு குழந்தைகள் கூட்டமைப்பு, உலக இஸ்லாமிய நிவாரணம், கத்தோலிக்க நிவாரண சேவைகள், உலகப் பார்வை, காஸா மனிதநேய அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகள் இவ்வாறு உதவிகளை அனுப்புகின்றன. யாரிடமிருந்து வந்தாலும் அவை போய்ச்சேர்வது காஸா மக்களுக்கு என்பதால் இரக்கமின்றித் தடுக்கிறது இஸ்ரேல்.
செய்தியாளர்கள் கேட்டபோது, “உதவிகள் வழங்கலில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுக்குக் காரணம் அந்த அமைப்புகளின் விநியோகத் திறமையின்மைதான். எங்களைப் பொறுத்தவரையில் தேவையான அளவுக்கு உணவுகளையும் மருந்துகளையும் உதவிகளையும் அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறோம்,” என்று இஸ்ரேல் அரசு கூறியிருக்கிறது. அந்த “தேவையான அளவுக்கு” என்ற வரம்பை அதிகபட்சமாகச் சுருக்குகிற திட்டத்தோடு இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவே தொடரும் கொலைகள் கருத வைக்கின்றன. உணவு தடுக்கப்பட்டதால் சாவதும் கொலைதானே?
உணவையும் மருந்தையும் அழிக்கிறார்கள்
ஏனென்றால், காத்திருக்கும் உணவு–மருந்து வண்டிகளை காஸாவுக்குள் நுழைய விடாமல் நிறுத்தி வைத்திருப்பதோடு ராணுவத்தினர் நிறுத்திக்கொள்ளவில்லை. நீண்ட வாகன வரிசையின் முன்னால் உள்ள வண்டிகளில் உள்ள பொருள்களை வெளியே எடுத்துக் கொட்டி அழிக்கிற வேலையிலும் இறங்கியிருக்கின்றனர். நாட்கணக்காக அந்தப் பொருள்கள் தேங்கி நிற்கின்றன என்று காரணம் கூறுகின்றனர். அப்படித் தேங்குவதால் உணவும் மருந்தும் கெட்டுப்போகின்றன, அவற்றை அந்த மக்களுக்கு வழங்கக் கூடாது என்ற நல்லெண்ணம் போலும்!
இஸ்ரேலின் அனைத்து அராஜகங்களுக்கும் அமெரிக்க அரசு அப்பட்டமாக ஆதரவளிக்கிறது.. இப்போது கூட, பேச்சுவார்த்தை என்ற ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட முடிவுகளை முன்வைத்தது. அதற்கு காஸாவின் ஹமாஸ் ஆட்சியாளர்கள் உடன்படவில்லை. உடனே டொனால்டு டிரம்ப், “அவர்கள் சாக விரும்புகிறார்கள்,” என்று அறிவித்தார் (ஜூலை 26). இதன் பொருள் காஸாவில் போர்க் கொடுமைகள் மேலும் தீவிரமாகும் என்பதே என எவரும் ஊகிக்க முடியும்.
இஸ்ரேலின் மிக வலுவான ஆதரவாளர்களில் ஜெர்மனியும் ஒன்று. இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது ஜெர்மனியின் வெளியுறவுக் கொள்கை. அவ்வப்போது இஸ்ரேலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கைகளில் ஜெர்மன் அரசு பெரும்பாலும் கையெழுத்திடுவதில்லை.
பிரிட்டன் அரசு இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி. இருப்பினும் காஸாவில் மனிதநேயம் கடும் நெருக்கடிக்கு உள்ளானதாலும், உள்நாட்டு மக்களின் கண்டனங்களாலும் அண்மைக் காலமாக இஸ்ரேல் நடவடிக்கைகளை விமர்சிக்கிறது. ஆனாலும், அதன் அடிப்படை ஆதரவு தொடர்கிறது.
கனடாவும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்குத் தற்காப்பு உரிமை இருக்கிறது என்று அறிவித்தது. இருப்பினும், மனிதநேய நெருக்கடி குறித்து கவலைகளையும் வெளிப்படுத்தியது. செக், ஹங்கேரி, ஆஸ்திரேலியா அரசுகளும் இஸ்ரேலுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன. ஐ.நா. சபையில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது இந்நாடுகளின் தூதர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே வாக்களிக்கிறார்கள்.
சீன அரசு ஐ.நா. சபையில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே நிலையெடுத்து வந்திருக்கிறது. தற்போதைய சூழலில், ஹமாஸ் செயல்களை வெளிப்படையாகக் கண்டிக்கவுமில்லை, ஒவ்வொரு நாட்டுக்கும் தற்காப்பு உரிமை இருக்கிறது என்று இஸ்ரேலுக்கு ஆதரவான தொனியாக இருக்கிறதே என்று நினைக்க வைப்பது போலவும் கூறியிருக்கிறது. அதே வேளையில் அந்த உரிமையை உலகச் சட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு இன்னும் திட்டவட்டமான வடிவில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தக்க வகையிலேயே சீனா நடந்துகொள்கிறது.
உணர்வலைகளின் பிரதிபலிப்பு
மனிதநேய நெருக்கடி என்ற நிலையில், முன்பு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த பல நாடுகள் இப்போது உடனடிப் போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றன. உதவிப் பொருட்கள் தடையின்றிச் செல்வதை அனுமதிக்க வலியுறுத்துகின்றன. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே, ஜப்பான், நியூசிலாந்து உட்பட 28 நாடுகள் அண்மையில் இஸ்ரேலைக் கண்டிக்கும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
வரும் செப்டம்பரில் கூடவுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் சுதந்திரத்தை முறைப்படி அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ் அரசுத் தலைவர் எமானுவேல் மாக்ரோன் அறிவித்திருக்கிறார். பிரிட்டனில் 220 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதே போன்ற நிலைப்பாட்டை தங்களது அரசும் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர். இவையெல்லாம் உலக அளவில் அலையாக எழும் மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பேயாகும்.
இத்தகைய உணர்வுகளுக்கு முன்பு ஆதரவாக இருந்து வந்த சோவியத் யூனியன் 1990களில் தகர்ந்து போனது. அது, சோவியத்தோடு இணைந்திருந்த மக்களின் இழப்பாக மட்டும் போய்விடவில்லை. உலக அரங்கில், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு அநீதிகளைத் தடுக்க விரும்பும் மனிதநேய சக்திகளின் பேரிழப்பாகவும் உணரப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அரசின் மௌனத்தை அந்த சக்திகள் ஒரு அடியாகவே உணர்கின்றன. மௌனம் என்று கூட சொல்லமுடியாது, ஐ.நா. சபையில் இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரியும், மனிதநேய உதவிகளை அனுமதிக்க வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளைப் புறக்கணித்திருக்கிறது. ஒன்றியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நாட்டின் பெருமைக்குரிய வெளியுறவுக் கொள்கையிலும் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதை, பாலஸ்தீன மக்களோடு உணர்வார்ந்த ஒருமைப்பாடு கொண்டிருப்போர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த அளவுக்கு இஸ்ரேல் அரசு வன்மத்தைக் கொட்டுவது ஏன்? அதற்கு அமெரிக்கா தன் ஆதரவைக் கொட்டுவது ஏன்? 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தியது உண்மை. அதில் இஸ்ரேல் 1,200 பேர் கொல்லப்பட்டதும், 251 பேர் பிணைக் கைதிகளாகக் செல்லப்பட்டார்கள் என்பதும் உண்மை.
அன்று இரவே இஸ்ரேல் அரசு போர் அறிவிப்பை வெளியிட்டு வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் தரைவழி ராணுவ நடவடிக்கையாகவும் மாற்றியது. அதன் நோக்கம் அந்த நியாயமற்ற சாவுகளுக்குப் பழி வாங்குவதுதானா? பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பதுதானா?
போர் தொடங்கிய 655 நாட்களில் (ஜூலை 27 வரையில்) நேரடித் தாக்குதல்களால், இடிபாடுகளில் சிக்கியதால், சிகிச்சை கிடைக்காததால் என கிட்டத்தட்ட 1,86,000 பேர் மரணமடைந்தார்கள். காஸா மக்கள்தொகையில் 100 பேருக்கு ஒருவர் எனக் கொல்லப்பட்டுவிட்டார்கள். காஸாவில் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உலகக்கொடுமை.
காஸா நகர அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் இந்த ஜூலை 25 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அதுவரையிலான 72 மணி நேரத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் உயிரிழந்தனர். பட்டினியால் இறந்தவர்கள் 111 பேர், அவர்களில் 80 பேர் குழந்தைகள். ஊட்டமின்மையால் மேலும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியவர்களில் 85,500 பேர் குழந்தைகளில் 33,000 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவையன்றி, துல்லியமான கணக்குகள் தர இயலாத அளவுக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 22 லட்சம் குடிமக்களில் 80 சதவீதத்தினர் இடம் பெயர்ந்துவிட்டார்கள். வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், மின்சார விநியோகம், நீர் விநியோகம் என கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களும் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அழிந்துவிட்டதால் பொருளாதார உற்பத்தியும் சுழற்சியும் முழுமையாக முடங்கியிருக்கிறது. 100 சதவீத வேலையின்மை ஏற்பட்டிருக்கிறது.
உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள், காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப நூறு பில்லியன் டாலர்கள் வரை தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளன. தற்போதைய போரினால் ஏற்பட்டுள்ள இழப்புகளின் அளவு முந்தைய சண்டைகளால் ஏற்பட்டதை விடப் பல மடங்கு அதிகம். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களில் 200 பேர் நாடு திரும்பிவிட்டனர்.
ஆக, இஸ்ரேலின் வேறு நோக்கத்திற்கு ஹமாஸ் தாக்குதல் ஒரு சாக்காக அமைந்துவிட்டது. அமெரிக்காவும் ஆதரிக்கிற அந்த நோக்கம் என்ன? 1948இல் மேற்கத்திய அரசுகள் ஐ.நா. மூலமாக, பாலஸ்தீன மக்களோடு பேசாமலே அவர்களுடைய நிலப்பரப்பில் பெரும் பகுதிக்கு வேலி போட்டு அதுதான் புதிய இஸ்ரேல் என்று அறிவித்தன. ஐரோப்பாவில் வாழ முடியாமல் வெளியேற்றப்பட்ட யூத மக்கள் அங்கே குடியேற்றப்பட்டார்கள். அங்கே ஏற்கெனவே குடியிருந்த பாலஸ்தீன மக்கள் வேலிக்கு வெளியே தள்ளப்பட்டார்கள்.
உலகக் கட்டப் பஞ்சாயத்து!
இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அதுவரையில் இருந்த மொத்த நிலப்பரப்பில் 56 சதவீதம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனர்களின் மொத்த மக்கள் தொகை 13 லட்சம் – யூதர்களின் மக்கள்தொகையோ 6 லட்சம்தான். அதாவது மொத்த மக்கள்தொகையில் 33 சதவீதமாக இருந்தவர்களின் நாட்டிற்கென 56 சதவீத நிலப்பரப்பு ஒப்படைக்கப்பட்டது.
அப்போதே போர்களும் மூண்டன. சில அரேபிய நாடுகளுக்கும் அதில் பங்கிருந்தது என்றாலும், அந்த 56 சதவீத நிலப்பரப்பை மேலும் விரிவுபடுத்துகிற சண்டைகளை இஸ்ரேல் அப்போதிருந்தே நடத்திவருகிறது. அதனோடு இணைந்ததுதான் இப்போதைய காஸா முற்றுகை. இஸ்ரேலின் இந்தப் போர் வெறிக்கும், அதை அமெரிக்க அரசு ஆதரிப்பதற்கும் வேறு இலக்குகளும் இருக்கின்றன.
“மத்திய கிழக்கு வரலாற்றில் மேலெழுந்த அரேபிய தேசிய எழுச்சிகளை அடையாளமின்றி ஒடுக்குவது, அந்த வட்டாரத்தின் பெட்ரேலிய வளத்தைக் கைப்பற்றுவது ஆகிய திட்டங்கள் மறைந்திருக்கின்றன. அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாஹூவும், அவருடைய லிகுட் கட்சியும் எதிர்கொண்டுள்ள நெருக்கடியும் இதற்கொரு காரணம்,” என்கிறார் உலக அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் விஜய் பிரசாத்.
லிகுட் என்றால் ஹீப்ரு மொழியில் ஒருங்கிணைப்பு என்று பொருள். ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க முடியாத தோல்வியைத் திசைதிருப்ப, மக்களிடையே தேசிய உணர்வைக் கிளறிவிடுகிற உத்தி.
இந்த நோக்கங்களையும் உத்திகளையும் தடுத்து முறியடிக்கிற, தடுக்கப்பட்ட ஊட்ட உணவுகளையும் உயிர்காப்பு மருந்துகளையும் காஸாவுக்குள் அனுப்ப வைக்கிற பெருவலிமை உலக சமுதாயத்தின் குரலுக்கு இருக்கிறது. அந்தக் குரலை எழுப்பத் தனது மனசாட்சியைத் திறக்குமா உலகம்?
[0]
விகடன் டிஜிட்டல் (ஜூலை 28)
No comments:
Post a Comment