Wednesday, 9 July 2025

முழுசாகப் பாராட்டவிடாத ஒரு வலைத்தொடர்



குறிப்பிடத்தக்க சிலவற்றைத் தவிர்த்து, இந்தியாவில் வலைத் தொடர்கள் பெரும்பாலும் வறட்டுத்தனமாக இருக்கின்றன என்பதே என் கணிப்பு. கவனிக்கத்தக்க தொடர்களில் ஒன்று ஹிந்தியில் தயாராகி, தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வரும் ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’.

இந்தத் தொடரின் நான்காவது பருவம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

மையப் பாத்திரம் குற்ற வழக்குகளை எடுத்துக்கொள்ளும் ஒரு வழக்குரைஞர். ஆகவே, குற்றம் சாட்டப்பட்டு அவரைத் தேடி வருகிறவர்களைக் கடைசியில் அவர் காப்பாற்றி விடுவார் என்ற முன்னெதிர்பார்ப்பு ஒருபோதும் தோற்பதில்லை. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘தி ஃபேமிலி மேட்டர்’ என்ற இந்தத் தொடரின் நான்காவது பருவமும் அப்படித்தான் இருக்கிறது.

இதிலேயும், மகளுடன் வாழும் மருத்துவர் ராஜ் நாக்பால், செவிலியரான தனது காதலி ரோஷ்னியைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அவரைப் பிரிந்து வாழ்கிற, ஆனால் சட்டப்பூர்வமாக மணவிலக்கு பெறாத இணையர் அஞ்சு மீதும் சந்தேகம் திரும்புகிறது.
புதிர்ச்சுவை கொஞ்சமும் குறையாமல் கடைசி வரையில் பராமரிக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், உண்மை நிறுவப்பட்ட பிறகு, நீதிமன்றத்துக்கு வெளியே அதே வழக்குரைஞர் வேறொரு உண்மையை நிறுவுகிற புதிய திருப்பச் சுவை இறுதி அத்தியாயத்தில் அமைந்திருக்கிறது. அது உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது.

வழக்குரைஞர் மாதவ் மிஸ்ராவாக பங்கஜ் திரிபாதி முந்தைய பருவங்களைப் போலவே வெகு எளிதாக நம்மை ஈர்க்கிறார். இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் பங்களிப்புகள், அவர்களின் இயல்பான உணர்வு வெளிப்பாடுகள், பிசிறடிக்காத காட்சிகள் எல்லாம் கவர்கின்றன. தமிழாக்கம் செய்யப்படும் படங்களுக்கென்றே ஒரு தமிழ் வைத்திருப்பார்களே, அப்படியெல்லாம் கொடுமைப்படுத்தாமல், அதுவும் நேர்த்தியாக இருப்பதைச் சொல்லியாக வேண்டும். தொடரைப் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும், நம்ம ஊரிலும் இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்களே என்ற பாராட்டுணர்வை வடிகட்டிய ஒரு தகவலையும் சொல்லியாக வேண்டும். 2008ஆம் ஆண்டில் இதே தலைப்பில் வந்த ஒரு பிரிட்டிஷ் வலைத்தொடரின் தழுவல்தானாம் இது.

No comments: