Sunday, 6 July 2025

விடை தெரியாமல் கடந்துபோகும் அஜித்குமார் கொலை விவகாரம் - காக்கிச் சீருடைக்குக் கடிவாளம் எப்போது?

 


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிகழ்ந்த அஜித்குமார் காவல் மரணம் தொடர்பான புலன் விசாரணை, நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்தபடி சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதில், பல முக்கிய கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டும். உண்மையிலேயே நகை திருடு போனதா... எஃப்.ஐ.ஆர் போடாமல் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தது யார்... தாக்குதலில் தொடர்புள்ளவர்கள் மேலிடக் கட்டாயத்தால் செய்தார்களா, அல்லது நகை மதிப்பில் இவ்வளவு சதவிகிதமென ஏதேனும் ஒப்பந்தமா… இப்படியான பல முடிச்சுகள் சி.பி.ஐ விசாரணையில் அவிழ்க்கப்பட வேண்டும்.

மிரளவைக்கும் வியப்புக்குறிகள்!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மடப்புரம் கோவிலில் நிகிதாவின் காரிலிருந்து காணாமல் போனதாகச் சொல்லப்படும் நகையை மீட்டுத்தருமாறு சிவகங்கை மாவட்ட எஸ்.பி-க்கு உத்தரவிட்ட அந்த உயரதிகாரி யார்? அங்குதான், இந்த குற்றத்துக்கான தொடக்கப்புள்ளி இருக்கிறது. அந்த உயர் அதிகாரி யார் என்ற வினாக்குறிக்கு பதில் கிடைக்காத நிலையில், நகை காணவில்லை என்று புகார் அளித்த நிகிதாவின் பின்னணிகள் வியப்புக்குறிகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி, திருமண மோசடி, தான் பணியாற்றிய அரசுக் கல்லூரியில் பெண் மாணவர்களின் புகார் மீது விசாரணை, அந்த அறிக்கையின் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது… உச்சமாக அவருக்கும் ஒன்றிய ஆளுங்கட்சிக்குமான தொடர்பு, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சியுடன் முன்னாள் தொடர்பு என்ற தகவல்கள் மிரட்சியை ஏற்படுத்துகின்றன.

அஜித்குமாரின் தாயாருடனும் தம்பியுடனும் முதல்வர் தொலைபேசியில் பேசியதும், மன்னிப்பு கோரியதும், கறார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததும் இதில் முக்கியமானது. இல்லையேல், இது மாரடைப்பால் நேர்ந்த மரணம் என்று தொடக்கத்தில் சொன்னதை உறுதிப்படுத்துவதற்கான மாய்மாலங்களைச் செய்திருப்பார்கள்! முதல்வரின் இந்த அணுகுமுறைக்குப் பிறகு, தாக்கியவர்களுக்காக வாதாட அரசு வழக்குரைஞர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் கூறுகிறார்.

ஆளுங்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து!

முதல்வரின் தலையீடும், அணுகுமுறையும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல காவல் மரணங்கள் நிகழ்ந்தபோது, இத்தகைய அணுகுமுறையை முதல்வர் ஏன் காண்பிக்கவில்லை? நிகிதா குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட அளவுக்கு தி.மு.க–வின் மாவட்ட நிர்வாகிகள் சிலர், அஜித்குமார் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாயைக் கொடுப்பதாக ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்த விவகாரம் பேசப்படவில்லை. சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்ட தன் கட்சிக்காரர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? அப்படி நடவடிக்கை எடுத்தால், ‘முதல்வர் மன்னிப்புக் கேட்டது ஒரு நாடகம்’ என்று விமர்சிக்கிறவர்களுக்குப் பதிலடியாக அது அமையும்.


அ.தி.மு.க ஆட்சியின்போது, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையும் மகனும் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்டார்கள். அதுபோல, பல காவல் மரணங்கள் அந்த ஆட்சியில் நிகழ்ந்தன, இந்த ஆட்சியிலும் காவல் மரணங்கள் தொடர்கின்றன. இப்போது காவல் மரணங்கள் தொடர்வதற்கு என்ன காரணம் என்பதை ‘சமூகநீதியை நிலைநாட்டுவதே லட்சியம்’ என்று கூறும் தி.மு.க அரசு ஆராய வேண்டும். தி.மு.க அரசு அதை உணர்ந்திருக்கிறதா என்று கடந்த நான்காண்டு செய்திகள் நம்மை யோசிக்க வைக்கின்றன.

தொடர்கதையாகும் காவல் மரணங்கள்!


021 முதல் 2025 வரையில் தமிழ்நாட்டில் 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேன் கூறுகிறார். 2021 ஜூலை 20 அன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சேட்டு இந்திர பிரசாத் (45), ஆகஸ்ட் 24-ல் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் சத்தியவாணன் (35), செப்டம்பர் 4-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் (42) ஆகியோர் இறந்தனர். டிசம்பர் 5 அன்று ராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் 19 வயது மணிகண்டன், காவல்துறையினரின் சித்திரவதைகளைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


2022 ஜனவரி 13 அன்று நாமக்கல் சிறையில் பிரபாகரன் (45), பிப்ரவரி 5-ல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுலைமான் (44), பிப்ரவரி 14-ல் திருநெல்வேலி காவல் நிலையத்தில் தடிவீரன் (38), ஏப்ரல் 18-ல் சென்னை தலைமைச் செயலக வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் (25), ஏப்ரல் 27-ல் திருவண்ணாமலை சிறையில் தங்கமணி (48), ஜூன் 12 சென்னையின் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராஜசேகர் (31), ஆகஸ்ட் 21 புதுக்கோட்டைச் சிறையில் சின்னதுரை (53), செப்டம்பர் 14 விருதுநகர்– அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் தங்கபாண்டி (33), அதே மாதம் 26-ல் சமயபுரம் காவல் நிலையத்தில் முருகானந்தம் (38), அடுத்த 3 நாட்களில் சென்னையின் ஓட்டேரி காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் (21), டிசம்பர் 31-ல் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல் ஸ்ரீ (17) மரணமடைந்தனர்.


023-ல், ஒரு காவல் மரணம்தான். பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலிலிருந்த, புளியங்குடியைச் சேர்ந்த தங்கசாமி (26) மரணமடைந்தார். 2024 ஜனவரி 2-ல் பாலகிருஷ்ணன் (36) ஈரோடு தனிப்படை காவலர்களால் தாக்கப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் இறந்தார்.


ஏப்ரல் 5-ல் மதுரைச் சிறையில் நீதிமன்றக் காவலிலிருந்த கார்த்தி (30), ஐந்து நாட்களில் விழுப்புரம் காவல் நிலையத்தில் ராஜா (42), மேலும் மூன்று நாட்களில் திருவள்ளூரின் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சாந்தகுமார் (35), அடுத்த மூன்று நாட்களில் பாளையங்கோட்டையில் நீதிமன்றக் காவலிலிருந்த சிவகுமார், ஆகஸ்ட் 9-ல் விழுப்புரத்தில் அற்புதராஜ் (31), 22-ம் தேதியில் கடலூர் சிறையில் பாஸ்கர் (39), செப்டம்பர் 14-ல் ராமநாதபுரம் உச்சிப்பிலி காவல் நிலையத்தில் பாலகுமார் (26), 30-ம் தேதியன்று திருச்சியில் முத்தரசநல்லூரைச் சேர்ந்த திராவிடமணி (40), நவம்பர் 23-ல் புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் (36) ஆகியோர் மரணமடைந்தார்கள்.


சிறைகளில் இறந்தவர்கள் நீதிமன்றக் காவலில் இருந்தவர்கள். நடப்பு ஆண்டில் பிப்ரவரி 13-ல் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கரூர் சங்கர், இப்போது அஜித்குமார்…


மோதல் சாவுகள்!

இவை தவிர, காவலர்களே நீதிபதிகளாகவும், தண்டனையை நிறைவேற்றுகிறார்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் ’மோதல் நடவடிக்கை’யில் 16 பேர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். 2021 அக்டோபர் 10-ல் காஞ்சிபுரத்தின் முர்தசா (25), 15-ம் தேதியில் தூத்துக்குடியின் துரைமுருகன் (34), 2022-ம் ஆண்டு ஜனவரி 7-ல் செங்கல்பட்டில் தினேஷ் (24), மொய்தீன் (25), மார்ச் 16-ல் திருநெல்வேலியில் நீராவி முருகன், 2023 ஆகஸ்ட் 1 அன்று செங்கல்பட்டில் சோட்டா வினோத் (35), ரமேஷ் (32), செப்டம்பர் 16-ல் திருப்பெரும்புதூரில் விஷ்வா (38), அக்டோபர் 12-ல் திருவள்ளூரின் பொன்னேரியில் முத்து சரவணன் (28), சண்டே சதீஷ் (24) ஆகியோர் மோதல் மோதலில் கொல்லப்பட்டனர்‘அதேபோல, அக்டோபர் 29-ல் தேனி மாவட்டம் குள்ளப்பக்கவுண்டன்பட்டி பகுதியில் ஈஸ்வரன் (55), நவம்பர் 22-ல் திருச்சியில் ஜெகன் (30), டிசம்பர் 27-ல் காஞ்சிபுரத்தில் ரகுவரன், அசேன், 2024 ஜூலை 11-ல் புதுக்கோட்டையில் துரைசாமி (42), மூன்றே நாட்களில் சென்னையில் திருவேங்கடம் (33), செப்டம்பர் 18-ல் சென்னையில் காக்காதோப்பு பாலாஜி (36), ஐந்து நாட்களில் சீசிங் ராஜா, அடுத்த நான்கு நாட்களில் நாமக்கல்லில் ஜீமான்டின் (37) ஆகியோர் “என்கவுன்டர்” ஆனார்கள்.

இவ்வாண்டு மார்ச் 26-ல் சென்னையில் ஜாபர் குலாம் உசேன் (28), மார்ச் 31-ல் மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் (28), ஏப்ரல் 2-ல் கடலூரில் விஜய் (19) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர் (தகவல்கள்: மக்கள் கண்காணிப்பகம்).


காவல் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு. இதற்கொரு நீண்ட வரலாறே இருக்கிறது. இந்திய அளவில் 2016–17 முதல் 2021–22 வரையில் காவலிலிருந்தபோது நிகழ்ந்த மரணங்கள் 11,656. இதில், உத்தரப் பிரதேசத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்பது போல் 2,630 மரணங்கள் நிகழ்ந்தன. தென் மாநிலங்களில் தமிழ்நாடு முந்தியிருக்கிறது – 490.

அஜித்குமார் கொலை உள்பட நாடு முழுவதுமே அந்த ஐந்தாண்டுகளில் காவல் மரணங்கள் தொடர்பாக உயரதிகாரிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த மரணங்கள் தொடர்பாக 345 நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆணையிடப்பட்டது. 123 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். 79 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தண்டிக்கப்பட்டவர் யாருமில்லை.


பாதிக்கப்படும் பட்டியலின மக்கள்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்த வழக்கிலும் மாநில காவல்துறையினர் தண்டிக்கப்பட்டதில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுதும் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனை அளிக்கப்பட்டது மூன்று பேருக்குத்தான். இந்த விவரங்களை அளித்துள்ள சாம்பவி பார்த்தசாரதி, தேவ்யான்ஷி பிஹானி, விக்னேஷ் ராதாகிருஷ்ணன் ஆகிய பத்திரிகையாளர்கள் சமுதாயத்தின் கோர முகத்தைக் காட்டுகிற இன்னொரு தகவலையும் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைகளுக்கு மிக அதிகமாக இலக்காகிறவர்கள் பட்டியலின மக்கள்தான். 2022-ல் மொத்த விசாரணைக் கைதிகளில் 38.5% பட்டியல் சாதியினர் (தி ஹிண்டு, 3 ஜூலை 2025). இது தனியாகவே எழுதப்பட வேண்டிய பிரச்னை.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் குற்றங்கள் செய்தால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று என்கவுன்ட்டர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழகத்தில் அப்படிப் பேசப்படவில்லை. ஆனால், சட்டத்தை மீறிய காவல்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் பாயவில்லை. காவல்துறையினர் கண்டிப்பாகக் கடைப்பிடித்தாக வேண்டிய நடைமுறைகள் வகுக்கப்படவில்லை.

காக்கிச் சீருடைக்குக் கடிவாளம்?

குற்றம் சாட்டப்படுவோரைத் தாக்குவது, துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்களிடையே ஒரு நன்மதிப்பைப் பெற்றுத்தரும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறதா? கையில் லத்திக்கம்பை எடுத்ததும், சிக்கியவர்களை அடிக்கிற மனநிலை காவலர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

பொதுமக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும், அது தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால்தான், "அவர்கள் தப்பு செய்திருப்பார்கள்… அதற்குத் தண்டனை தேவைதானே…" என்ற சமூக மனப்போக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதுதான், அத்துமீறலில் ஈடுபடுவோருக்குச் சாதகமாக அமைகிறது. திரைப்படங்களில் ‘என்கவுன்ட்டர் நாயகர்’களைக் கொண்டாடும் காட்சிகள், நடைமுறையில் அவர்களுக்குப் பதவி உயர்வு, பதக்கம் உள்ளிட்ட அங்கீகாரங்கள்… இவையெல்லாம் இத்தகைய வன்முறையைக் கூர்தீட்டுகின்றன.

காக்கிச் சீருடையினர் கேள்வியின்றி இப்படிச் செய்ய முடியாத அளவுக்குக் கடிவாளம் போட வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, காவல் சித்திரவதைகள் சட்டவிரோதமெனத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் குற்றங்கள் நடைபெற்ற பிறகு நடவடிக்கைகள் எடுப்பதற்கானவையாகவே இருக்கின்றன.

அதற்கான சட்டத்தை உலக நாடுகள் இயற்றுவதற்கு, ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, அதைத் தள்ளிப்போடக் கூடாது. நாட்டில் பல்வேறு களங்களில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தானே ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, மற்றொரு முன்னுதாரணத்தைப் படைக்க வேண்டும். அது காவல்துறைக்குள்ளேயும் சமுதாயத்திலும் நியாயப் புரிதலைத் தொடங்கி வைக்கட்டும். அஜித்குமார்களுக்கு எதிரான அநியாயங்கள் முடிந்துபோகட்டும்!


[0] [0] [0]


-‘விகடன் டிஜிட்டல்’ பதிப்பில் எனது கடடுரை


No comments: